Sunday, 1 December 2013

மனதோடு மனதாய்... - பதிப்புரை


பொதுவாக மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சோர்வு என அனைத்துமே மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இப்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கையில் ‘மனச் சோர்வு’ என்பது மனிதர்களை விடாமல் துரத்தி வருகின்றது.

அதுவும், சமூகப் பணிக்காக பொது வாழ்வில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் “சமூக உரிமைப் போராளிகளையும்” இந்த மனச் சோர்வு விட்டு வைப்பதில்லை.

மொத்தத்தில் மனச்சோர்வு என்ற இந்த பிரம்மை அல்லது மனிதர்களை பலஹீனப்படுத்தி பாதை மாறச் செய்யும் ஷைத்தானிய வேலை என எப்படி எடுத்துக் கொண்டாலும் மனித உள்ளங்கள் இந்த மனச் சோர்விலிருந்து விடுபட்டு தொய்வில்லாமல் தங்களது பணிகளிலும், பொதுநலப் பணிகளிலும் ஈடுபாடு காட்டுவதற்கு ஒரு உந்து சக்தி தன்னைப் போன்ற சக மனிதர்களிடமிருந்தும் கிடைக்கப் பெறலாம். அல்லது உலகின் போக்கை மாற்றிய வரலாற்று நிகழ்வுகளிலிருந்தும் கிடைக்கப் பெறலாம்.

அந்த நிகழ்வுகளிலிருந்து கிடைக்கப் பெறும் படிப்பினைகளைக் கொண்டு நம்பிக்கை வரப் பெற்றவர்களாக நம்முடைய மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்துடன் ஓய்வில்லாமல் உழைத்தோமென்றால், நாமும் வரலாறு படைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் வரலாறுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.

மேற்கூறிய மனச் சோர்வைப் போக்கி வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி தெளிவுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை ஆன்மீகத்துடன் இரண்டறக் கலந்து “தேஜஸ்” என்ற மலையாள நாளிதழின் ஞாயிறு மலரில் ஆன்மீக சிந்தனையாளர் ஏ. சயீத் அவர்களால் பதிவு செய்யப்பட்டதுதான் ‘மனதோடு மனதாய்’ என்ற இந்த நூல்.

மலையாள மொழியில் வெளிவந்த அந்தத் தொடர்களை விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தன்னுடைய பணிச்சுமைகளுக்கு மத்தியில் அழகுத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததை விடியல் வெள்ளி  மாத இதழில் கடைசிப் பக்கத்தில் வெளியிட்டோம்.

பொதுவாக, ஒரு புத்தகத்தை மக்கள் வாங்கினால் முதல் பக்கத்திலிருந்துதான் படிக்கத் துவங்குவார்கள் அல்லது தனக்குப் பிடித்தமான பகுதியை முதலில் வாசிப்பார்கள்.

நாம் விடியல் வெள்ளியில்  ‘மனதோடு மனதாய்’ என்ற இந்த வரலாற்று நிகழ்வுகளைத் தொடராக வெளியிடத் துவங்கியவுடன், விடியலை வாங்கும் பெரும்பாலான வாசகர்கள் முதலில் கடைசிப் பக்கத்தைப் படிக்கக் கூடிய அளவிற்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது இது.

அதோடல்லாமல், இத்தொடர்களை அவசியம் நூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வாசகர்களிடமிருந்து வலுப் பெற்று வந்தது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மனித வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படக்கூடிய மனச் சோர்வுகள் நீங்கி நம்பிக்கையுடன் வீறு நடை போடக்கூடிய புதிய தலைமுறை உருவாக வேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் இந்நூலை வெளியிடுகின்றோம்.

பல சமூகப் பணிகளுக்கிடையில் நேரத்தை ஒதுக்கி வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்தளித்து நமக்குள் ஆர்வத்தை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்மீக சிந்தனையாளர் ஏ. சயீத் அவர்களுக்கும், அதனை மொழிபெயர்த்துத் தந்த துணை ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலியை வழங்கிடுவானாக!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. குறைகள் எங்களைச் சாரும். நிறைகள் எல்லாம் நிறைந்த இறைவனைச் சாரும்.

இவண்,

மு.முஹம்மத் இஸ்மாயீல்
காப்பாளர்
இலக்கியச்சோலை சாரிடபிள் டிரஸ்ட்

நூல்         : மனதோடு மனதாய்...
மூலம்     : ஏ. ஸயீத்
தமிழில்   : M.S. அப்துல் ஹமீது
விலை    : ரூ. 45/-
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

No comments:

Post a Comment