கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது.
இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாகச் சொல்கின்றன. பின்னால் நடக்கவிருப்பவற்றையும் யூகித்துக் கூறுகின்றன.
முந்தைய காலங்களில் நடந்த போர்கள் சில வேளை மாதக் கணக்கில் கூட இழுக்கும், போர்த் தளபதிகளுக்கு செய்திகள் உரிய நேரத்தில் சென்று கிடைக்காததால்.
ஆனால் இன்று அப்படியல்ல. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நமது வாசற்படிகளில், நமது காலடியில் கொண்டு வந்து சேர்க்கின்றன. அதுவும் ஒரு கணத்தில் – படங்களோடு, சப்தங்களோடு, விளக்கங்களோடு.
இந்த அதிவேகத்துடன் செய்தி ஊடங்கள் இன்னொன்றையும் தருகின்றன. அதுதான் பொழுதுபோக்கு. ஆம்! இந்தச் செய்தி ஊடக உபகரணங்களில் ஒரு நிமிடம் கூட ‘போர்’ அடிப்பதில்லை. ஒரு நிமிடம் கூட மந்த நிலை இருந்ததில்லை. 24 மணி நேரமும் செய்திகள், விமர்சனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்... என்று அவை எப்பொழுதும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
செய்திகள் சொல்லப்படும் விதம்.. அப்பப்பா.. கேட்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், வசீகரிக்கும் குரலில், செய்திகள் சொல்லப்படுகின்றன.
மொத்தத்தில், நமது அன்றாட வாழ்க்கையில் செய்தி ஊடகங்கள் நடுநாயகமாக, ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
அவை எது முக்கியம், எது முக்கியம் இல்லை, எது நல்லது, எது கெட்டது என்று வரையறுக்கின்றன. அவை நமது கருத்துகளுக்கு, நமது சிந்தனைகளுக்கு, நமது பார்வைக்கு வடிவம் கொடுக்கின்றன.
இந்தப் பரபரப்பில் நாமும் மூழ்கிப் போனோம். அத்தோடு அடிப்படையான ஒரு கேள்வியையும் நமக்குள் கேட்க மறந்து விட்டோம். “செய்தி ஊடகங்களோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற கேள்விதான் அது.
இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், எந்த இயந்திரம் எப்பொழுதும் நமது கண்களையும், காதுகளையும், சிந்தனைகளையும் ஆக்கிரமித்து இருக்கின்றதோ, அது நம்முடையது அல்ல, நாம் தயாரித்தது அல்ல.
நாம் அந்த இயந்திரத்தை வடிவமைக்கவும் இல்லை, அந்த இயந்திரத்தை ஓட்டவும் இல்லை. அந்த இயந்திரம் நம்மோடு பேசுகின்றது. நம்மைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதற்கென்று தனி செயல்திட்டம் உள்ளது.
இந்தச் செய்தி ஊடகங்கள் தங்களை அறிவுபூர்வமானவை என்று சொல்லிக் கொள்கின்றன. கண்ணியமானவை, நடுநிலையானவை என்று சொல்லிக் கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் இது ஒன்றையும் காணோம். பொறாமையும், விரோதமும், குரோதமும் இருக்கக் காண்கின்றோம். நடுநிலை தவறிய ஒரு சார்பு நிலை இருப்பதைக் காண்கிறோம்.
அவற்றிற்குச் சாதகமான விஷயங்கள், பிடித்தமான விஷயங்கள் மடு போல் இருந்தாலும் அதனை மலை போல் பெரிதாக்கிக் காட்டுகின்றன இந்தச் செய்தி ஊடகங்கள்.
அவற்றிற்குச் சாதகமில்லாத விஷயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அவற்றை அலட்சியம் செய்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஒரு சார்பு மீடியாதான் நமது அறிவின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இது உலக அறிவு என்பதோடு மட்டும் நின்று விடவில்லை. நம்மைப் பற்றி நாம் அறிவதற்கும் இந்த மீடியாக்களை நாடித்தான் ஓடிப் போக வேண்டியிருக்கின்றது.
மேற்சொன்னவையெல்லாம் நமக்கு – இந்த உம்மத்திற்கு எதை உணர்த்துகின்றன? நாம் நமது செய்தி ஊடகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அந்தச் செய்தி ஊடகம், இப்பொழுதிருக்கும் அழுக்கு நிறைந்த, அழுகிப் போயிருக்கும் செய்தி ஊடகத்தின் குறைபாடுகள் அற்றதாய் இருக்க வேண்டும்.
தனது சொந்தக் கண்கள், காதுகள், சிந்தனையோடு இந்த இஸ்லாமிய மீடியா இருக்கும். அது அழகிய செய்திகளை அள்ளித் தரும். யாருடைய தூண்டுதலுடனும் அது செயல்படாது. ஒரு பக்கச் சார்பு என்ற பேச்சே அங்கு இல்லை. இன்றைய மீடியாவைப் போல் பொய்களை மூலதனமாக வைத்து அது செயல்படாது. எப்பொழுதும் அது உண்மைச் செய்திகளையே உலகுக்கு அளிக்கும்.
இது ஏற்படும் வரைக்கும், நம்மவர்கள் இப்பொழுதிருக்கும் மீடியாவையே சார்ந்து வாழ வேண்டியிருக்கும். நாம் இந்த மீடியாவை நமது வாசற்படிக்குள் வராமல் தடுக்க முடியாது. அதே போல் இந்த மீடியா இல்லாமல் நமது அன்றாட அலுவல்களைக் கொண்டு செல்லவும் முடியாது.
இஸ்லாமிய மீடியாவை உருவாக்கும் வரைக்குமுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் மிகவும் புத்திபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த மீடியாவை அது வரைக்கும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.
இஸ்லாம் இங்கு நமக்கு அழகிய வழியைக் காட்டுகிறது. அது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு மார்க்கமல்லவா... நாம் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை உறுதியோடு பின்பற்றலாம். இது சம்பந்தமாக மூன்று முக்கிய பாடங்களை திருக் குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அவையாவன:
நீங்கள் பதிலளிக்கும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
இந்தக் குர்ஆன் வசனம் நம்பகமில்லாத புறத்திலிருந்து வரும் தகவல்களையும், உண்மைதானா என்று ஆய்ந்து அறிந்திடாத செய்திகளையும் நம்பி நமது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது, பதிலளிக்கக் கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றது.
‘பெருமை மிக்க சர்வதேசச் செய்தி நிறுவனங்களெல்லாம்’ என்னவாயிற்று? அவை தரும் செய்திகள் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டுமா? இல்லை. உண்மையில் அப்படி இல்லை. அவை தரும் செய்திகளைப் பகுத்தறியும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும். தீய நோக்கத்துடன், தீய விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பரப்பப்படும் செய்திகளை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
இந்தப் ‘பெருமைமிகு’ செய்தி நிறுவனங்கள் தங்கள் உண்மையான செய்திகளையே தருவதாகப் பீற்றிக் கொள்கின்றன. ஆனால் அவை செய்திகள் என்றில்லாமல் தவறான பிரச்சாரத்தையே செய்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொய்யை இந்தச் செய்தி நிறுவனங்கள் அவிழ்த்து விடுகின்றன.
முஸ்லிம் உலகம் இந்தப் பொய்ச் செய்திகளை அப்படியே வாங்கி காதில் போட்டுக் கொள்கின்றன. பின்னர் அந்தப் பொய்ச் செய்திகளை அடிப்படையாக வைத்து, அந்தச் செய்திகளெல்லாம் உண்மை என்று நம்பி அதற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கின்றன. இது தவறு. செய்தி உண்மையா, பொய்யா என்று ஆராயாமல், அதனை உண்மை என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.
உங்கள் பொறுப்பை நினைவு கூருங்கள்
திருக் குர்ஆன் கூறுகிறது:
நபியே! எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல் குர்ஆன் 17:36)
மௌலானா ஷப்பீர் அஹமது உஸ்மானி அவர்கள் தங்கள் விரிவுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
‘‘ஒரு விஷயத்தில் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராயாமல் அதனைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அல்லது அதன்படி நடக்காதீர்கள். இதில் செய்திகளை ஆராயாமல் ஒருவர் மீது பொய் சாட்சி சொல்லுதல், பொய்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுதல், வெறுப்புணர்வையும், பகைமையையும் ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.”
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் இன்னொரு விசயத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் ஆபாசத்தைக் காணாமல் தவிர்ந்திருத்தல். இன்றைய நவீன மீடியாவில் ஆபாசக் காட்சிகள் என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது.
பொய்ப் பிரச்சாரத்தைப் புறம் தள்ளுங்கள்
இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்கெதிரான பிரச்சாரத்தைத் தாக்குதலாகத் தொடுக்கும் பொழுது நம்மில் நிறைய பேருக்கு எவ்வித உணர்வும் ஏற்படுவதில்லை, எருமை மாடு மீது மழை பெய்தது மாதிரி.
இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது நமது கடமை. அத்தோடு சரியான பிம்பத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டியதும் நமது கடமை. ஆனால் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டு நாம் பீதியடையத் தேவையில்லை. நாம் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. அது எவ்வளவு கொடூரமான செய்தியாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ்வை இறைநம்பிக்கையாளர்கள் நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அல்லாஹ்வின் பாதையில் பொய்ப் பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்யும். இது நமக்கொரு சோதனை.
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன் 3:186)
இந்தச் சோதனைகளை வென்று சாதனைகளாக்கி இஸ்லாமிய மீடியாவை உருவாக்குமோவாக.
ஃகாலித் பெய்க்
தமிழில் : MSAH
விடியல் வெள்ளி மார்ச் 2002 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை.