Tuesday, 31 December 2013

நமக்கும் மீடியாவிற்கும் என்ன தொடர்பு?


கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது.

இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாகச் சொல்கின்றன. பின்னால் நடக்கவிருப்பவற்றையும் யூகித்துக் கூறுகின்றன.

முந்தைய காலங்களில் நடந்த போர்கள் சில வேளை மாதக் கணக்கில் கூட இழுக்கும், போர்த் தளபதிகளுக்கு செய்திகள் உரிய நேரத்தில் சென்று கிடைக்காததால்.

ஆனால் இன்று அப்படியல்ல. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நமது வாசற்படிகளில், நமது காலடியில் கொண்டு வந்து சேர்க்கின்றன. அதுவும் ஒரு கணத்தில் – படங்களோடு, சப்தங்களோடு, விளக்கங்களோடு.

இந்த அதிவேகத்துடன் செய்தி ஊடங்கள் இன்னொன்றையும் தருகின்றன. அதுதான் பொழுதுபோக்கு. ஆம்! இந்தச் செய்தி ஊடக உபகரணங்களில் ஒரு நிமிடம் கூட ‘போர்’ அடிப்பதில்லை. ஒரு நிமிடம் கூட மந்த நிலை இருந்ததில்லை. 24 மணி நேரமும் செய்திகள், விமர்சனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்... என்று அவை எப்பொழுதும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

செய்திகள் சொல்லப்படும் விதம்.. அப்பப்பா.. கேட்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், வசீகரிக்கும் குரலில், செய்திகள் சொல்லப்படுகின்றன.

மொத்தத்தில், நமது அன்றாட வாழ்க்கையில் செய்தி ஊடகங்கள் நடுநாயகமாக, ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

அவை எது முக்கியம், எது முக்கியம் இல்லை, எது நல்லது, எது கெட்டது என்று வரையறுக்கின்றன. அவை நமது கருத்துகளுக்கு, நமது சிந்தனைகளுக்கு, நமது பார்வைக்கு வடிவம் கொடுக்கின்றன.

இந்தப் பரபரப்பில் நாமும் மூழ்கிப் போனோம். அத்தோடு அடிப்படையான ஒரு கேள்வியையும் நமக்குள் கேட்க மறந்து விட்டோம். “செய்தி ஊடகங்களோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற கேள்விதான் அது.

இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், எந்த இயந்திரம் எப்பொழுதும் நமது கண்களையும், காதுகளையும், சிந்தனைகளையும் ஆக்கிரமித்து இருக்கின்றதோ, அது நம்முடையது அல்ல, நாம் தயாரித்தது அல்ல.

நாம் அந்த இயந்திரத்தை வடிவமைக்கவும் இல்லை, அந்த இயந்திரத்தை ஓட்டவும் இல்லை. அந்த இயந்திரம் நம்மோடு பேசுகின்றது. நம்மைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதற்கென்று தனி செயல்திட்டம் உள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்கள் தங்களை அறிவுபூர்வமானவை என்று சொல்லிக் கொள்கின்றன. கண்ணியமானவை, நடுநிலையானவை என்று சொல்லிக் கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் இது ஒன்றையும் காணோம். பொறாமையும், விரோதமும், குரோதமும் இருக்கக் காண்கின்றோம். நடுநிலை தவறிய ஒரு சார்பு நிலை இருப்பதைக் காண்கிறோம்.

அவற்றிற்குச் சாதகமான விஷயங்கள், பிடித்தமான விஷயங்கள் மடு போல் இருந்தாலும் அதனை மலை போல் பெரிதாக்கிக் காட்டுகின்றன இந்தச் செய்தி ஊடகங்கள்.

அவற்றிற்குச் சாதகமில்லாத விஷயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அவற்றை அலட்சியம் செய்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஒரு சார்பு மீடியாதான் நமது அறிவின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

இது உலக அறிவு என்பதோடு மட்டும் நின்று விடவில்லை. நம்மைப் பற்றி நாம் அறிவதற்கும் இந்த மீடியாக்களை நாடித்தான் ஓடிப் போக வேண்டியிருக்கின்றது.

மேற்சொன்னவையெல்லாம் நமக்கு – இந்த உம்மத்திற்கு எதை உணர்த்துகின்றன? நாம் நமது செய்தி ஊடகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அந்தச் செய்தி ஊடகம், இப்பொழுதிருக்கும் அழுக்கு நிறைந்த, அழுகிப் போயிருக்கும் செய்தி ஊடகத்தின் குறைபாடுகள் அற்றதாய் இருக்க வேண்டும்.

தனது சொந்தக் கண்கள், காதுகள், சிந்தனையோடு இந்த இஸ்லாமிய மீடியா இருக்கும். அது அழகிய செய்திகளை அள்ளித் தரும். யாருடைய தூண்டுதலுடனும் அது செயல்படாது. ஒரு பக்கச் சார்பு என்ற பேச்சே அங்கு இல்லை. இன்றைய மீடியாவைப் போல் பொய்களை மூலதனமாக வைத்து அது செயல்படாது. எப்பொழுதும் அது உண்மைச் செய்திகளையே உலகுக்கு அளிக்கும்.

இது ஏற்படும் வரைக்கும், நம்மவர்கள் இப்பொழுதிருக்கும் மீடியாவையே சார்ந்து வாழ வேண்டியிருக்கும். நாம் இந்த மீடியாவை நமது வாசற்படிக்குள் வராமல் தடுக்க முடியாது. அதே போல் இந்த மீடியா இல்லாமல் நமது அன்றாட அலுவல்களைக் கொண்டு செல்லவும் முடியாது.

இஸ்லாமிய மீடியாவை உருவாக்கும் வரைக்குமுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் மிகவும் புத்திபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த மீடியாவை அது வரைக்கும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.

இஸ்லாம் இங்கு நமக்கு அழகிய வழியைக் காட்டுகிறது. அது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு மார்க்கமல்லவா... நாம் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை உறுதியோடு பின்பற்றலாம். இது சம்பந்தமாக மூன்று முக்கிய பாடங்களை திருக் குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அவையாவன:

நீங்கள் பதிலளிக்கும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

இந்தக் குர்ஆன் வசனம் நம்பகமில்லாத புறத்திலிருந்து வரும் தகவல்களையும், உண்மைதானா என்று ஆய்ந்து அறிந்திடாத செய்திகளையும் நம்பி நமது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது, பதிலளிக்கக் கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றது.

‘பெருமை மிக்க சர்வதேசச் செய்தி நிறுவனங்களெல்லாம்’ என்னவாயிற்று? அவை தரும் செய்திகள் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டுமா? இல்லை. உண்மையில் அப்படி இல்லை. அவை தரும் செய்திகளைப் பகுத்தறியும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும். தீய நோக்கத்துடன், தீய விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பரப்பப்படும் செய்திகளை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

இந்தப் ‘பெருமைமிகு’ செய்தி நிறுவனங்கள் தங்கள் உண்மையான செய்திகளையே தருவதாகப் பீற்றிக் கொள்கின்றன. ஆனால் அவை செய்திகள் என்றில்லாமல் தவறான பிரச்சாரத்தையே செய்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொய்யை  இந்தச் செய்தி நிறுவனங்கள் அவிழ்த்து விடுகின்றன.

முஸ்லிம் உலகம் இந்தப் பொய்ச் செய்திகளை அப்படியே வாங்கி காதில் போட்டுக் கொள்கின்றன. பின்னர் அந்தப் பொய்ச் செய்திகளை அடிப்படையாக வைத்து, அந்தச் செய்திகளெல்லாம் உண்மை என்று நம்பி அதற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கின்றன. இது தவறு. செய்தி உண்மையா, பொய்யா என்று ஆராயாமல், அதனை உண்மை என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.

உங்கள் பொறுப்பை நினைவு கூருங்கள்

திருக் குர்ஆன் கூறுகிறது:
நபியே! எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

மௌலானா ஷப்பீர் அஹமது உஸ்மானி அவர்கள் தங்கள் விரிவுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

‘‘ஒரு விஷயத்தில் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராயாமல் அதனைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அல்லது அதன்படி நடக்காதீர்கள். இதில் செய்திகளை ஆராயாமல் ஒருவர் மீது பொய் சாட்சி சொல்லுதல், பொய்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுதல், வெறுப்புணர்வையும், பகைமையையும் ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.”

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் இன்னொரு விசயத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் ஆபாசத்தைக் காணாமல் தவிர்ந்திருத்தல். இன்றைய நவீன மீடியாவில் ஆபாசக் காட்சிகள் என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது.

பொய்ப் பிரச்சாரத்தைப் புறம் தள்ளுங்கள்

இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்கெதிரான பிரச்சாரத்தைத் தாக்குதலாகத் தொடுக்கும் பொழுது நம்மில் நிறைய பேருக்கு எவ்வித உணர்வும் ஏற்படுவதில்லை, எருமை மாடு மீது மழை பெய்தது மாதிரி.

இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது நமது கடமை. அத்தோடு சரியான பிம்பத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டியதும் நமது கடமை. ஆனால் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டு நாம் பீதியடையத் தேவையில்லை. நாம் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. அது எவ்வளவு கொடூரமான செய்தியாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வை இறைநம்பிக்கையாளர்கள் நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அல்லாஹ்வின் பாதையில் பொய்ப் பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்யும். இது நமக்கொரு சோதனை.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன் 3:186)

இந்தச் சோதனைகளை வென்று சாதனைகளாக்கி இஸ்லாமிய மீடியாவை உருவாக்குமோவாக.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH


விடியல் வெள்ளி  மார்ச் 2002 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை.

2013 : இன்னொரு இன்னல் வருடம் கடக்கிறது!


சிறுபான்மை  மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக துயரம் தந்து இன்னொரு வருடம் கழிகிறது. ஆம்! இந்திய வரலாற்றின் பல கறுப்புப் பக்கங்களை தாங்கி 2013 நம்மிடமிருந்து விடை பெறுகிறது.

இந்திய நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அவலமாகக் கருதப்படுவது நரேந்திர மோடி தலையெடுத்தது. அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததுதான் 2013ன் உச்சகட்ட கொடூரம்!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் எப்படி இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து நின்றதோ, அதே மாதிரி இந்தியாவை இன்னொரு தடவை தலை குனிய வாய்த்த நிகழ்வுதான் குஜராத் 2002 இனப்படுகொலை. இதனை முன்னின்று நடத்தி இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்ப்படுத்திய மோடி நாட்டின் பிரதமரானால் நாடு என்னவாகும்? நினைக்கும்போதே குலை நடுங்குகிறது.

சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒட்டுமொத இந்திய மக்களுக்கும் கேடு விளைவிக்கும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்குபோழுதே நாட்டில் நீதியின் கரங்கள் முறிய ஆரம்பித்திருக்கின்றன. ஆம்! கடந்த டிசம்பர் 13ம் தேதி வந்த தீர்ப்பு இதனை உறுதிப்படுத்துகிறது.

நரோடா பாட்டியா வழக்கிலிருந்து மோடியும், இன்னும் 59 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் காவிக் கயவர்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இஹ்சான் ஜாப்ரி.

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizen's Tribunal) வெளியிட்டுள்ள "மனித இனத்திற்கெதிரான குற்றம்" (Crime Against Humanity) என்ற நூலில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருடன் தப்பிய நேரடி சாட்சிகள் சொல்லும் செய்தி மிகத் தெளிவாக ஒன்றைச்  சொல்கிறது. அது, நரேந்திர மோடிக்கு நரோடா பாட்டியாவில் நடந்த கொடூரம் அத்தனையும் தெரியும் என்பதுதான்!

கூப்பிடு தூரத்தில் அஹ்மதாபாதில் இருந்த மோடியை பல முறை இஹ்சான் ஜாப்ரி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த மக்களைப் பாதுகாப்பதற்காக தன்னையே தந்தார். ரத்தக் கறை படிந்த காவிகள் கண்டம் துண்டமாக வெட்டினார்கள் அவரை.

இன்னும் 4, 5 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அடுத்து இந்த வருடத்தின் மிகப் பெரிய சோகம் முஸஃபர்நகர் கலவரம். இன்று வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பிப் போக முடியாமல் அக்கிரமக்காரர்களுக்கு அஞ்சி அகதிகள் முகாமில் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றால், அங்கேயும் நிம்மதி இல்லை அவர்களுக்கு.

ஒரு பக்கம் அகிலேஷ் யாதவ் அரசின் அலட்சியப் போக்கு. மறுபுறம் கடும் குளிர். இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் அவர்களின் குழந்தைகள் மடிந்து வருகின்றன. இதுவரை 40 குழந்தைகள் மரணமடைந்து விட்டன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளூர் அதிகாரிகள் அவர்களை லோய் போன்ற பகுதிகளிலிருந்து விரட்டி வருகிறார்கள்.

முஸஃபர் நகரில் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து தேசிய சிறுபான்மை கமிஷன் கவலை தெரிவித்தது.

முஸஃபர் நகரில் உள்ள நிவாரண முகாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கு அரசு எந்த உதவியையும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

கடந்த நவம்பர் மாதம் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட ஃபாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் நிகழ்ந்தது.

அதே நவம்பர் மாதம் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணியில் குண்டு வெடித்தது. வழக்கம் போல பழியை முஸ்லிம்கள் மேல் போட்டார்கள். பின்னர் ஹிந்து கயவர்களை பிடித்தார்கள். இது நரேந்திர மோடியின் சூழ்ச்சியே என்பது அம்பலமானது. முதலில் குய்யோ முறையோ என்று கத்திய ஊடகங்கள் பிடிபட்டது ஹிந்துக்கள், மோடியின் சூழ்ச்சி அம்பலம் என்றதும் அடக்கி வாசித்து, அப்படியே அதனை அமுக்கி விட்டன.

முஸஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசினார். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த அக்டோபர் மாதம் வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த  அரசு தயாராகி வருவதாக மத்திய  உள்துறை  அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆனால் பாசிஸ்டுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து 2013 இச்சட்டத்திற்கு சாட்சியாக முடியவில்லை.

இந்தியாவில் இவ்வாண்டு நடந்த வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இவ்வாண்டு நிகழ்ந்த வகுப்புக் கலவரங்களில் 107 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 66 பேர் முஸ்லிம்கள்!

இப்படி பல கொடுமைகளை சந்தித்து 2013 நம்மை விட்டு கடந்து செல்கிறது. புதிதாகப் பிறக்கும் 2014வது மக்களுக்கு  பாதுகாப்பையும், சுபிட்சத்தையும் தரட்டும்.

இன்னும் 4, 5 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல்  வரவிருக்கிறது. இதில் நல்லாட்சி மலரவும், நாட்டுக்கு சுபிட்சம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக.

2014ம் வருடம் வளம் மிக்க வருடமாக, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் வருடமாக மலரட்டும்.

MSAH

Wednesday, 25 December 2013

முதியோர் இல்லங்கள் தேவைதானா?


ஒரு வயதான முதியவர் அவரது இல்லத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். அவரோடு அவரின் மகனும் அமர்ந்திருந்தான். அந்த முதியவர் தன் மகனைப் பல சிரமங்களுக்கிடையில் உயர் கல்வி வரை படிக்க வைத்திருந்தார்.

எங்கிருந்தோ வந்த ஒரு காகம் அந்த வீட்டின் மதிற் சுவரில் வந்து அமர்ந்தது. இப்பொழுது அந்த முதிய வயது தந்தை தன் மகனிடம் கேட்டார்: “என்ன இது?” மகன் பதிலளித்தான்: “இது ஒரு காகம்.”

சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் தந்தை கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “இது ஒரு காகம்.”

சிறிது மணித்துளிகள் உருண்டோடின. மூன்றாவது முறையாக தந்தை கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “தந்தையே, இது ஒரு காகம் என்று இப்பொழுதுதானே சொன்னேன்.”
சில நிமிடங்கள் கரைந்தோடின. தந்தை தன் மகனிடம் நான்காவது முறையாகக் கேட்டார்: “என்ன இது?” மகன் சொன்னான் : “தந்தையே, இது ஒரு காகம்!” இம்முறை மகனின் குரலில் சற்று எரிச்சல் தொனித்தது.

தந்தை விடவில்லை. சிறிது நேரங்கழித்து மீண்டும் வினவினார்: “என்ன இது?” இம்முறை மகனின் குரலில் சற்று கோபம் கொப்பளித்தது. மகன் சொன்னான்: “தந்தையே, நீங்கள் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியையே கேட்கின்றீர்கள். நான் அது ஒரு காகம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதைக் கூட உங்களுக்குப் புரிய முடியவில்லையா?” அவனது முகத்தில் கோபக் கனல் தெறித்தோடியது.

தந்தை அமைதியாக இருந்தார். சிறிது நேரங்கழித்து அவர் தனது அறைக்குச் சென்றார். பழைய டைரி ஒன்றோடு திரும்பி வந்தார். டைரியின் ஒரு பக்கத்தைப் புரட்டினார். தனது மகனிடம் அதனைப் படிக்கச் சொன்னார். மகன் அதனைப் படிக்க ஆரம்பித்தான். கீழ்க்கண்ட வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன:

“இன்று என் சின்னக் குழந்தை என்னோடு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தது. ஒரு காகம் வந்தது. என் மகன் என்னிடம் 25  முறை இது என்ன என்று கேட்டான். நானும் சளைக்காமல் 25 முறை அவனுக்கு இது ஒரு காகம் என்று பதில் சொன்னேன். நான் எரிச்சல் படவுமில்லை; கோபப்படவுமில்லை. மாறாக, ஒன்றுமறியா அந்தக் குழந்தை மீது எனக்கிருந்த அன்பு கூடியது.”

இதனைப் படித்த மகன் வாயடைத்துப் போய் நின்றான். அந்தச் சிறிய குழந்தை இவன்தான். தன் முதிய வயது தந்தையைப் பரிவுடன் பார்த்தான். அவனது கண்களில் கண்ணீர்! மன்னிக்க வேண்டும் என்று அவனது கண்கள் கெஞ்சின. தந்தையோ தன் மகனை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்.

குழந்தைகளைப் பெற்றோர் எப்படி பொறுமையாக, பேணிப் பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்தான் இது.

அக்டோபர் 1ம் தேதியை ‘உலக முதியோர் தினமாக’ இந்த உலகம் அனுசரிக்கிறது. முதியோர்கள் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும், அவர்களது கஷ்ட நஷ்டங்களை இந்த உலகுக்கு உணர்த்தவும், அவர்களை மகிழ்விக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் முதியவர்கள் தற்பொழுது நிம்மதியாக இருக்கிறார்களா? தங்கள் பிள்ளைகளை அனைத்துக் கஷ்டங்களும், நஷ்டங்களும் பட்டு, படிக்க வைத்து ஆளாக்குகிரார்கள் பெற்றோர்கள். பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்து சம்பாதிக்க ஆரம்பிக்கின்றனர். திருமணம் முடிக்கின்றனர். குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இனி அந்தப் பிள்ளைகளின் சிந்தனை முழுவதும் தன் மனைவி, தன் குழந்தைகள், தன் குடும்பம், தன் வீடு, தன் பொருளாதாரம் என்ற அளவில் சுருங்கி விடுகின்றது. இந்தச் சுயநல மனப்பான்மை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.

இந்தச் சமயத்தில்தான் ஒருவனின் பெற்றோர் அவனுக்குச் சுமையாகி விடுகின்றனர். தன் குடும்பத்திற்கு ‘வேண்டாத’ ஜீவன்களாகின்றனர். என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றான் அவன். தேடுகின்றான் முதியோர் இல்லத்தை. மாதப் பணம் கட்டி அங்கு சேர்த்து விடுகிறான் தன் பெற்றோர்களை.

இத்தோடு பெற்றோர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமை முடிந்து விட்டது என்று எண்ணுகிறான். மாதா மாதம் அவர்களுக்குப் பணம் அனுப்புவதையே பெற்றோருக்குத் தான் செய்யும் பெரும் கைம்மாறாக நினைக்கிறான்.

தான் வளர்த்து ஆளாக்கிய தன் பிள்ளை தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிடும் சோகத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டு, யாரோ முன் பின் தெரியாதவர்களோடு முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகின்றனர் இந்தப் பரிதாபப் பெற்றோர்கள். நகரங்களில் படித்த, நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் இதுதான் தற்போதைய நிலை!

தன் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்ற ஆசைக் கனவுகள் தகர்ந்து போய், முதியோர் இல்லங்களில் வாழும் சக மனிதர்களுடன் பழக முயற்சி செய்கின்றனர் இந்த முதிய வயது பெற்றோர்கள்.

பாசமில்லை; பந்தமில்லை. வாழ வேண்டிய நிர்பந்தம். அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனாலும் மனதில் ஒரு வெறுமை. இனம் புரியாத சோகம்.

மகன் தனக்குச் செய்தது துரோகமா, பாவமா என்ற புரியாத குழப்பம். எதிலும் ஒரு பிடிப்பின்மை. மொத்தத்தில் நடைபிணம். இது தான் இன்றைய முதியவர்களின் நிலை.

25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 5 முதியோர் இல்லங்கள்தான் இருந்தனவாம். ஆனால் இன்று சென்னையில் மட்டுமே 14 இல்லங்கள். பணவசதி உள்ளவர்கள் தங்குவதற்கோ 28 இல்லங்கள் இருக்கின்றனவாம்.

இந்த நிம்மதியற்ற சூழலில் வாழும் முதியோர்கள் காது கேளாமை, கண் மங்குதல், கண் புரை, மூட்டு வலி, கீழே விழுந்து எலும்பு முறிதல், சர்க்கரை வியாதி, சிறுநீர்க் கோளாறு, பாரிச வாதம், “அல் ஜைமா” எனச் சொல்லப்படும் மனநோய் எனப் பல்வேறு நோய்களினால் வேறு அவதிப்படுகின்றார்கள்.

வயது அதிகமானதினாலும், சொல்லாத சோகங்களை நெஞ்சில் போட்டு அமுக்கி வைத்திருப்பதாலும், நிறைய முதியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறுகின்றனர்.

இந்த நிலை நீடிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் இது முதியவர்களது சுய சார்புத்தன்மையைக் கூட்டும் என்றாலும், அவர்கள் வேண்டும் நிம்மதி இதில் கிடைக்கப் போவதில்லை.

முதியோருக்கென்று ஆலோசனை மையங்கள் திறக்க வேண்டுமாம். அங்கே முதியோர்களும், அவர்களின் பிள்ளைகளும் சந்தித்து, ஒருவருக்கொருவர் அளவளாவிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமாம்.

‘வேண்டாத’ ஜீவன்களாக, பெரிய சுமைகளாகக் கருதி வீட்டை விட்டு வெளியேற்றியவர்கள், அவ்வப்பொழுது வந்து சந்தித்தால் முதியவர்களுக்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் அவர்களது மனதில் ஆழப் பதிந்து விட்ட அந்தச் சோகக் காயம் ஆறாது.

சரி... அது இருக்கட்டும். இந்தப் பொல்லாத பரபரப்பான உலகில், ‘நவீன’ பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோர்களைச் சந்திக்க நேரம் கிடைக்குமா? தங்கள் மனைவி, குழந்தைகளோடு ‘அவுட்டிங்’ போக நேரமிருக்கும். தங்கள் மனைவி மக்களோடு ஒன்றாக டி.வி. பார்க்க நேரமிருக்கும். ஆனால் தங்கள் பெற்றோர்களைச் சந்திக்க இவர்களுக்கு நேரமிருக்காதே..!

அடுத்து ஓர் ஆலோசனை கூறப்படுகிறது. நோயுற்ற முதியோருக்கும், தனித்திருக்கும் முதியோருக்கும் பணி செய்யவும், உதவியாக இருக்கவும் ‘முதியோர் பணியாளர்களை’ (Care Givers) பயிற்சி கொடுத்து உருவாக்க வேண்டுமாம். இதனால் ஒரு சிலருக்கு வேலை கிடைக்கலாம். ஆனால் சொந்த மகன் செய்யாத பணிவிடையை எவனோ ஒருவன் செய்வதை எந்தப் பெற்ற மனம் சரி காணும்? அப்படியே இந்த ஏற்பாட்டைச் செய்தாலும் எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்? மாறாக, இஸ்லாம் சொல்லும் வழிமுறைகளை நடைமுறைபடுத்திக் காட்டினால்...

ஆம்! வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிய இஸ்லாம் இந்தச் சமுதாயத்தின் நடைமுறைத் திட்டமானால் இப்பிரச்னை ஒழியும்.

அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக வந்துதித்த அண்ணலெம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் பெற்றோர்களை எப்படியெல்லாம் பேண வேண்டும், அவர்களுக்கு என்னென்ன கடமைகள் ஆற்ற வேண்டும் என்று அழகுறச் சொல்லித் தந்துள்ளார்கள்.

உம் அதிபதி விதித்துள்ளான். அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும்  அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக! “என் இறைவனே! சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக! (அல் குர்ஆன் 17: 23, 24)

- என்று அல்லாஹ் கூறுவதை உற்று நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அல்லாஹ் சொல்லும் இந்தக் கட்டளைகளை நடைமுறைப்படுத்தினால் முதியோர் இல்லங்கள் தேவையில்லை. அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்... (அல் குர்ஆன் 4:36)

இணை வைப்பது என்பது மிகப் பெரிய பாவம். அதனைச் செய்யாதீர்கள் என்று கூறும் இடத்திலும் அல்லாஹ், அதற்கடுத்ததாகவே பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் என்று கூறுகின்றான். இதற்கு இவ்வளவு முக்கியத்துவத்தை அல்லாஹ் அளிக்கின்றான்.

ஒருமுறை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் எந்தக் காரியம் மிகச் சிறந்தது?” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் பகர்ந்தார்கள்: “குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது!”

மீண்டும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கேட்டார்கள்: “அதற்குப் பிறகு மிகச் சிறந்த காரியம் எது?” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்: “பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது!” மீண்டும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “அதற்குப் பிறகு எது சிறந்த காரியம்?” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் (ஜிஹாத்) புரிவது!” (புகாரீ)

அல்லாஹ்விடம் மிகச் சிறந்த காரியங்களில் இரண்டாவதாக, ஜிஹாதிற்கு முன்பாக இருப்பது பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடப்பதுதான் என்பதே நபிகளாரின் கூற்று!

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பெரிய பாவங்களில் மிகப் பெரியதை நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” (உடனே கூடியிருந்த தோழர்கள்) கூறினார்கள்: “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, ஒருவர் தனது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருப்பது!” (அறிவிப்பாளர்: பிஷ்ர் (ரலி), புகாரீ (ஹதீஸின் ஒரு பகுதி))

பெற்றோர்களைப் பேணுவதில் இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை இந்த உலகம் ஏற்குமானால், முதியோர் இல்லங்களை முழுவதுமாக மூடி விடலாம். மிக முக்கியமாக முதியவர்கள் மன நிம்மதியுடன் வாழலாம்.

MSAH

விடியல் வெள்ளி  நவம்பர் 2001 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை.

Monday, 23 December 2013

இஸ்லாம் ஒன்றே தீர்வு!

விடியல் வெள்ளி அக்டோபர்  2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர்தான் “மூன்றாவது உலகம்” என்ற பதம் உருவாகிறது. இரண்டாம் உலகப் போர் என்பது காலனியாதிக்க நாடுகளிலிருந்து உருவான நேச நாடுகளைக் குறிக்கும்.

காலனியாதிக்கக் காலத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு என்பது ஏகாதிபத்தியமாகவும், சுரண்டல் அமைப்பைக் கொண்டதாகவுமே இருந்தன.

அந்தச் சுரண்டல் அமைப்பில் வளங்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்பட்டன. பணக்கார நாடுகள் மேலும் வளம் கொழிக்கும் நாடுகளாயின. ஏழை நாடுகள் இன்னும் ஏழ்மையாகிப் போயின.

1820ல் பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் உள்ள பொருளாதார வளங்களிள் வேற்றுமை விகிதாச்சாரம் 3.1 என்ற அளவில் இருந்தது. அதாவது, மொத்த உலகின் பொருளாதார வளங்களில் இரண்டு பகுதி பணக்கார நாடுகளிடமும், ஒரு பகுதி எழை நாடுகளிடமும் இருந்தது.

1992ல் இந்தப் பொளுளாதார வளங்களின் வேற்றுமை விகிதாச்சாரம் 721 ஆக மாறியது.

இப்பொழுது நாம் இந்த விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் அது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி உலக நாடுகளைச் சுரண்டி தங்களை வளமாக மாற்றிக் கொண்ட இந்தச் சுரண்டல் பேர்வழி நாடுகள் இன்று “மரியாதைக்குரிய” நாடுகளாக விளங்குகின்றன. ஆனால் சுரண்டப்பட்ட நாடுகளை இந்த உலம் இகழ்கிறது; அலட்சியப்படுத்துகிறது.

“மூன்றாம் உலகம்” என்ற பதம் வந்ததே மூன்றாந்தர, மூன்றாம் வகுப்பு நாடுகள் என்று எழை நாடுகளை இழிவாகக் குறிப்பிடத்தான்.

சுரண்டுவதையெல்லாம் சுரண்டிவிட்டு, தங்களை வளமாக்கி உலகத்தின் ஒரு பகுதி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளி, பசி பட்டினியில் உழல விட்டுள்ள மேலை நாடுகள் தங்கள் தகிடுதத்தங்களை மறைப்பதற்கு இவ்வாறு கூறுகின்றன:

“இந்த நாடுகள் முன்னேறாமைக்குக் காரணம் அவை தங்களது பழைய மரபுகளைப் பின்பற்றுவதுதான். தங்கள் மரபுகளைப் பின்பற்றுவதில் பிடிவாதம் காட்டாமல் இந்த ஏழை நாடுகள் மேலை நாடுகளைப் போன்று “முன்னேற்றப் பாதையைத்” தேர்ந்தெடுக்க வேண்டும்.”

இப்படிச் சொல்லி இதுதான் ஏழை நாடுகள் முன்னோறாமைக்குக் காரணம் என்று இந்த மேலை நாடுகள் பழி போடுகின்றன; பலரை நம்ப வைத்துள்ளன.

தங்களது ‘மரபுகளைப்’ பின்பற்றாமல்’ நவீனத்துவத்திற்கு வாருங்கள் என்று அழைக்கின்றன.
எல்லா முஸ்லிம் நாடுகளும் இந்த ‘மூன்றாவது உலகத்’ தரத்தில்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை.

பல ‘படித்த’ முஸ்லிம் பரம்பரையினர் இந்த மேலை நாடுகளின் சொற்களைத்தான் நம்பியுள்ளனர். நமது நாடுகள் முன்னேற வேண்டுமென்றால் நவீனத்துவம் வேண்டும் என்கின்றார்கள் இவர்கள். அதாவது, நவீனத்துவம் என்றால் மேலைநாட்டு மயமாக்கம் என்று பொருள்.

அதனால் இந்த முஸ்லிம் நாடுகளின் படித்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மேலை நாடுகளின் உதவிகளையும் வழிகாட்டுதல்களையுமே நாடுகின்றனர்.

அவர்கள் தங்கள் சொந்த சமுதாயங்களையே தவறிய, குற்றமிழைத்த சமுதாயமாகப் பார்க்கின்றனர். மரபுகளைப் பின்பற்றுவதாலும் மதத்தோடு பிணைந்திருப்பதாலும்தான் இந்த அளவுக்குப் பின்தங்கிப் போயுள்ளோம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் இந்தச் சிந்தனையில்தான் இருக்கின்றார்கள்.

இந்த நயவஞ்சகத்தனத்தைக் கைவிட்டு, தங்களது சமூகங்களை நல்ல கண்ணோட்டத்தோடு அவர்கள் பார்ப்பதற்கு நாம் அழைப்பு கொடுக்க வேண்டிய தருணம் இது.

அவர்கள் அப்படி நல்ல கண்ணோட்டத்தோடு தங்கள் சமூகங்களைப் பார்க்க ஆரம்பித்தால், தங்கள் சமூகங்களுக்கு நல்லவை இஸ்லாத்திலிருந்து வருவதையும், நயவஞ்சகத்தனத்திலிருந்தும் இஸ்லாத்தைப் பின்பற்றாமையிலிருந்தும் தீயவை வருவதையும் அவர் கண்டு கொள்வார்கள்.

இஸ்லாம் இந்த உலக பலாபலன்களை நோக்கமாகக் கொண்டு வாழ்வதைச் சொல்லவில்லை. மாறாக, இந்த உலகின் ஒவ்வொரு மணித் துளியையும் இறப்பிற்குப் பின்வரும் மறுமையில் நற்கூலி கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இஸ்லாம் முஸ்லிம்களை நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது. காலத்தை வீணாக்குவதைக் கண்டிக்கிறது. அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறது.

இந்தப் பரந்து விரிந்த முஸ்லிம் உலகில் குறித்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்யப்படுவது ‘அதான்’ எனும் தொழுகைக்கான அழைப்பு. பெரிய நகரங்களாயினும் சிறிய கிராமங்களானாலும், ஒரு நாளைக்கு ஐந்து தடவை, தவறாமல் இந்த அழைப்பொலி கேட்டுக் கோண்டே இருக்கும், இந்த அழைப்பொலியைக் கேட்டவுடன் மக்கள் பள்ளிக்கு வந்து குறித்த நேரத்தில் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவர் இந்த புனிதக் கடமையிலிருந்து அவர்களைத் தடுப்பது எதுவும் இல்லை

இந்த நேரத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் எந்த அரசாலும் கட்டுப்படுத்தப்படவில்லை எந்தப் பெரிய வியாபாரங்களாலும் முறைப்படுத்தப்படவில்லை

அதிகமான மக்கள் தங்கள் படுக்கையில் கிடக்கும்பொழுது அவர்களுக்கு அருகிலிருக்கும் பள்ளியிலுள்ள முஅத்தின் தொழுகைக்கான  அழைப்பொலியை விடுத்து அவர்களை எழுப்புவார். “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்” - “தூக்கத்தை விட தொழுகை மேலானது “ என்று அவர் அறைகூவல் விடுவார்.

ஒரு முஅத்தினும் கொஞ்சம் மக்களும் கூட்டுத் தொழுகைக்கு வந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அனைத்து மக்களும் இந்தக் கடமையைச் செய்தால்…

கற்பனை பண்ணிப் பாருங்கள். அனைவரும் இந்தக் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்தால் அவர்களது பொறுப்புணர்வு இந்தக் கடமையான தொழுகைகளுக்கு அப்பால் சென்று உயர்ந்து நிற்கும். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அந்தப் பொறுப்புணர்வு மிளிர்ந்து நிற்கும்.

இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சமுகத் தீமைகளை ஒழிப்பதற்கு ஈடு இணையற்ற இஸ்லாத்தின் சக்தியால் மட்டுமே இயலும்!

ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் இன்று வரை தீமை எனும் மகா சமுத்திரத்தில் நன்மை எனும் தீவுகளாக விளங்குவது முஸ்லிம் நாடுகள்தான்.

மதுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 250 கோடி டாலர்கள் மதுப் பழக்கத்திலும், போதைப் பழக்கத்திலும் புரளுகின்றன. இத்தோடு இது சமுகத்தின் அறநெறியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறு.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவில் ஒரு முயற்சி நடந்தது. 1917ல் அமெரிக்க காங்கிரஸ் 18வது சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றி மதுவைத் தடை செய்தது.

அங்கே இந்த மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கு ஒரு நூற்றாண்டு முயற்சி தேவைப்பட்டது. அடிமட்ட அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள், மதுவிலக்குப் பிரச்சாரங்கள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் என்று ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இது அமுலுக்கு வந்தது.

அமெரிக்க காங்கிரஸ் இந்த மதுவிலக்கை அமுல்படுத்தி மதுப் பழக்கமில்லாத நாட்டை உருவாக்குவதற்காக 50 லட்சம் டாலர்களை ஒதுக்கியது. சில வருடங்கள் கழித்து இத்தொகை 300 லட்சம் டாலர்கள் ஆனது.

13 வருடங்கள் கழித்து இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு மாறாக, 14 நூற்றண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதுவைத் தடை செய்தது. மதுவிலேயே மூழ்கியிருந்த ஒரு சமுதாயத்தில் சில வருடங்களில் மூன்று கட்டங்களாக மது தடை செய்யப்பட்டது. அதன்பின் முஸ்லிம்கள் அந்தப் பழக்கத்தை முற்றாக மறந்து போயினர்.

இதேபோல் ஆஃப்கானிஸ்தானில் ஒரு சம்பவம். அபின் செடிகள் அங்கே பயிரிடப்பட்டிருந்தன. அங்குள்ள தாலிபான் அமீரின் ஒரு கட்டளையால் அங்கே அந்தச் செடிகளைப் பயிரிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கான அறிஞர்களோ, இலட்சக்கணக்கான டாலர்களோ செய்ய முடியாததை ஓர் அமீரின் கட்டளை நிறைவேற்றியுள்ளது. (மேலை நாடுகளின் ஆதரவோடு இங்கும் வடக்கு கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள சில பகுதிகளில் மட்டும் இன்றும் அபின் செடிகள் பயிரிடப்படுகின்றன.)

விபச்சாரத்தின் அடிப்படையில் பெண்களைக் கொடுமை செய்யும் மிகப் பெரிய குற்றம் “முதல் உலகத்தில்” அரங்கேற்றப்பட்டது. மனித இனத்திற்கெதிரான, ஒழுக்கத்திற்கெதிரான இந்தக் கொடுமை, அது சட்டப் பூர்வமானதோ, இல்லையோ முதல் உலக நாடுகள் சென்ற இடங்களிலெல்லாம் நடந்தேறியது.

முதல் உலக நாடுகளின் இராணுவப் படையினர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்தத் தீமையை நடைமுறையாக்கினார்கள்.

முஸ்லிம் உலகம் இதிலும் விதிவிலக்கு பெறுகிறது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்னால் அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களின் போதனைகளை இந்த உலகம் மறந்திருந்தது. அல்லது சிதைத்திருந்தது. அதனால் மொத்த உலகமுமே இருளில் தத்தளித்தது.

எம்பெருமானார் முஹம்மது (ஸல) அவர்கள் இந்த உலகத்திற்கு ஒளியைப் பாய்ச்சினார்கள். “தவ்ஹீத்” என்னும் ஏக இறைக் கொள்கை, உலக சகோதரத்துவம், அன்பு, கருணை, சமத்துவம், நீதி, இறையச்ச உணர்வு, அறநெறிகள் ஆகியவற்றை அவர்கள் மக்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
முஸ்லிம்கள் என்று இவைகளை மறந்தார்களோ அன்றிலிருந்து மிண்டும் இவ்வையகத்தை இருள் கவ்வத் தொடங்கியது. முதலாம், இரண்டாம், மூன்றாம் உலகங்களாக இந்தப் பூமி பிரிக்கப்பட்டது.

அராஜகங்களும், அறியாமையும் மீண்டும் அரங்கேறி விட்டன. நாம் மீண்டும் இஸ்லாத்தைக் கையில் ஏந்தினால் இவ்வுலகுக்கு ஓளி பாய்ச்சலாம். சரியான இடங்களை நோக்கி நமது பார்வைகளைத் திருப்பினால், நாம் விடைகளைக் கண்டறியலாம்.

ஆம்! இஸ்லாம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

Sunday, 22 December 2013

இஸ்லாம் இயம்பும் உடல்நலம்!

விடியல் வெள்ளி  டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை


ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்கவேண்டும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு. இஸ்லாம் ஆரோக்கியத்திற்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கிறது. 

ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும்.நம் தலைவர் தாஹா நபி (ஸல்) அவர்கள் உடல்நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். வலிமையானவர்களாக வாழ்ந்துள்ளார்கள். சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்கள்.

அன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)

உடலை வலுவாக வைத்துக்கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான். இஸ்லாமிய ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள். மதீனாவில் மஸ்ஜிதின் வளாகத்திலேயே ஓட்டப் பந்தயம், அம்பெறிதல் போன்ற போட்டிகளை நடத்தியிருக்கின்றார்கள்.

தங்கள் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:“ஒரு தடவை நானும், அண்ணலாரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். இதில் நான் வெற்றி பெற்றேன். சிறிது காலத்திற்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் சதை போட்ட பிறகு மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது அண்ணலார் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு அண்ணலார் சொன்னார்கள்: “அதற்கு இது சரியாகிவிட்டது.” (புகாரீ)

அதேபோல் நீச்சல், குதிரையேற்றம், அம்பெறிதல் ஆகியவற்றிற்கு அண்ணலார் அதிகமதிகம் ஊக்கமளித்துள்ளார்கள்.

நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்பொழுது கூட அங்கே உல்லாசமாகச் செலவிடும் நேரத்தில் சிறிது பகுதியை விளையாட்டுக்கு ஒதுக்கலாம். இறகுப் பந்து போன்ற விளையாட்டுகளை நம் பிள்ளைகளுடன் விளையாடலாம். இது உடலுக்கும் நலன் தரும். உள்ளத்துக்கும் உவகை தரும். பிள்ளைகள் நம்முடன் விளையாடும்பொழுது குதூகலம் அடைவார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அல்லாஹ் பலமான முஃமினையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் நாம் நம்முடைய உடல்நலத்தைப் பேண வேண்டும். உடல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இஸ்லாம் முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டது. அது மனிதனுக்கு ஆன்மீகத் துறையில் மட்டுமின்றி அவனது உடல், உள்ளம், சிந்தனை, உணர்வு என சகல துறைகளிலும் முழுமையான சிறந்த வழிமுறைகளைக் காட்டியுள்ளது. 

இதனடிப்படையில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாடாகவும் வைத்திருப்பதற்கான பயனுள்ள இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட உடற்பயிற்சிகளை அது அனுமதித்துள்ளது.

உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார்கள். அதனையே விரும்பியுள்ளார்கள். அடிக்கடி சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்பும் தேடியுள்ளார்கள். நம்மையும் அப்படிப் பாதுகாப்பு கேட்க தூண்டியுள்ளார்கள்.

அண்ணலார் எப்பொழுதும் விறுவிறுவென்று வேகமாக நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)

நீச்சல், ஈட்டி எறிதல் போன்ற கலைகளைப் பயிலும்படி பல ஹதீஸ்களில் ஏவப்பட்டுள்ளதன் மூலம் உடற்பயிற்சிக் கலைகளில் இஸ்லாம் எந்தளவு ஆர்வமூட்டியுள்ளது என்பது புலனாகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்:
“உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், அம்பெறிதல், குதிரையேற்றம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)

எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள்ளேயே ஈட்டி எறிதல் விளையாட்டை அனுமதித்துள்ளார்கள். ஒரு தடவை அபிசீனியர்கள் மஸ்ஜிதுக்குள் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபட்டபொழுது தங்கள் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை அதனைக் காண அனுமதித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலாரின் தோளில் சாய்ந்து அந்த வீர விளையாட்டை தான் சோர்வடையும் வரை பார்த்தார்கள்.

அம்பெறிதலில் அண்ணலார் (ஸல்) அவர்கள் அலாதிப் பிரியம் வைத்திருந்ததாக ஷமீம் அலீம் என்பவர் தனது “இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும் : ஒரு சமூகப் பார்வை” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களை அதிகமாக உழைத்திடவும், சுறுசுறுப்பாக இருந்திடவும், அதிகாலையில் எழுந்திடவும் ஊக்குவித்தார்கள். இவையெல்லாம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவிடுபவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
“அல்லாஹ்வே, என் உம்மத்திற்கு அதிகாலைப் பொழுதை அருள் நிறைந்ததாக ஆக்கி வைப்பாயாக.” (இமாம் அஹமத்)

இந்த அடிப்படையில் அதிகாலையில் எழுந்து ஃபஜ்ர் தொழுதுவிட்டு நாம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

குறைந்த அமலானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் அமல்களையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்புகின்றார்கள். அதுபோல் குறைந்த நேரமானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிதான் உடலுக்கு நல்லது என்று இன்றைய மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாம் வலியுறுத்தியுள்ள மிக முக்கிய வணக்கமாகிய தொழுகையின் அசைவுகளிலும், அதன் வெவ்வேறு நிலைகளிலும் மனித உடலுக்கு சிறந்த பயன்கள் ஏற்படுகின்றன என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. எனவே தொழுகையை நிதானமாக, அதன் ஒவ்வொரு இருப்பையும் முழுமையாகச் செய்தால் அதுவே நல்ல உடற்பயிற்சியாக அமையும்.

அத்தோடு இஸ்லாம் அனுமதித்த, ஆர்வமூட்டிய வழிகளில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே நமது உடலுக்குப் பாதுகாப்பானதாகும்.

ஒரு காலகட்டத்தில் உலகத்திற்கே தன் அறிவையும், ஆற்றலையும் வாரி வழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெறுவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள்ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம்.

உலக முஸ்லிம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட் பார்ப்போமானால் அவர்களுக்கெதிரான அநீதிகளும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப்பிரகடனங்களும் கண்கூடாகத் தெரியும்.

முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும், 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.''

அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?''

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.''

அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே! 'வஹ்ன்' என்றால் என்ன?''
அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ''இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.''

வெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்துவிதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.

MSAH