மகத்தான அருட்கொடைகளை வழங்கிய மறையோனாம் அல்லாஹ்வுக்கு நன்றியுணர்வுடன் இருப்பதும், அவனுடைய அருட்கொடைகளை நினைவுகூர்வதும் நமது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: "நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவுகூருங்கள்." (அல்குர்ஆன் 5:11)
நமது கண்ணியத்தையும் முன்னேற்றத்தையும் பாதுகாத்து, அதன் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டிய வல்ல இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
ஒற்றுமை என்பது வலிமை; இணக்கமும் அன்பும் கருணையாகும். பிளவும் பிரிவினையும் பலவீனத்தையும் இழிவையும் ஏற்படுத்தும்.
இதனால்தான் இறைவன் நம்மை ஒன்றிணைந்து வாழுமாறும், பிளவுகளையும் கருத்துவேறுபாடுகளையும் தவிர்க்குமாறும் கட்டளையிட்டுள்ளான்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
"நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவுகூருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்தபோது, உங்கள் இதயங்களை அவன் ஒன்றிணைத்தான்." (அல்குர்ஆன் 3:103)
கோமான் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக மூன்று விடயங்களை விரும்புகிறான். அவற்றில் ஒன்று, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதாகும்."
திருக்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். அது தனிமனிதர்களை மட்டும் விளித்துப் பேசவில்லை; ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைத்தே அழைக்கிறது.
"மனிதர்களே!" என்றும், "நம்பிக்கையாளர்களே!" என்றும் அழைத்து, நம்மிடையே ஒற்றுமையையும் கூட்டுப் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது.
மேலும், "தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தையும் வழங்குங்கள்" என்று கட்டளையிடுவதன் மூலம், இறைநம்பிக்கையின் அடிப்படையில் இதயங்களை ஒன்றிணைத்து, சமூகத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுகிறது.
இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் நமது இஸ்லாமியச் சமூகம் எனும் கப்பலைக் காண்கிறோம்.
அது உறுதியான அடித்தளத்துடனும், உயர்ந்த இலட்சியங்களுடனும், தெளிவான தொலைநோக்குப் பார்வையுடனும் முன்னேறிச் செல்கிறது. ஞானமிக்க தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலில், ஒருமித்த நோக்கத்துடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் அது பயணிக்கிறது.
ஒரு கட்டடம் எவ்வாறு அதன் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுக்கு ஆதரவாக நின்று உறுதியாகத் திகழ்கிறதோ, அதுபோல நமது சமூகமும் ஒன்றிணைந்து வலிமையுடன் திகழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு கட்டடத்தின் பகுதிகள் ஒன்றையொன்று பலப்படுத்துவதைப் போல, ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு ஆதரவாக இருக்கிறார்."
நெருக்கடிகளின் முன்னிலையில் நமது ஒற்றுமை ஒருபோதும் பலவீனமடையவில்லை. மாறாக, வெல்விளிகளை (சவால்களை) எதிர்கொள்ளும்போதெல்லாம் நமது உறுதியும் மனவலிமையும் மேலும் அதிகரித்தன.
அல்லாஹ் கூறுகிறான்:
"நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை இறக்கியவன் அவனே. அவர்கள் தங்களுடைய இறைநம்பிக்கையுடன் மேலும் இறைநம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்தான்." (அல்குர்ஆன் 48:4)
இந்த அருட்கொடைகளையும் மனநிம்மதியையும் நிலைநிறுத்துவதற்கான மிக முக்கியமான வழி, நமது ஒற்றுமையைப் பாதுகாப்பதாகும்.
நம்மில் ஒவ்வொருவரும் நமது சமூகக் கட்டமைப்பில் உறுதியான ஒரு செங்கல்லாகத் திகழ வேண்டும்.
அதற்காக நாம் விழிப்புணர்வுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய கடமைகளை உண்மையுடனும் கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்ற வேண்டும்.
நம்முடைய குடும்பங்களைச் சிறப்பாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளை நாட்டுப்பற்றுடனும் உயர்ந்த பண்புகளுடனும் வளர்க்க வேண்டும்.
நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். சமூக நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஆற்றும் நேர்மையான முயற்சிகளுக்கும் அல்லாஹ்விடம் நிச்சயமாக நற்பலன் உண்டு.
அல்லாஹ் கூறுகிறான்:
"உங்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் எவருடைய உழைப்பையும் நான் வீணாக்கமாட்டேன். உங்களில் ஒருவர் மற்றொருவரைச் சேர்ந்தவரே." (அல்குர்ஆன் 3:195)
இவ்வாறுதான் நமது சமூகம் வலிமையான அடித்தளத்தில் நிலைத்திருக்கும். நம்முடைய பிள்ளைகளின் தோள்களில் அது மேலும் வலிமை பெறும்.
ஒன்றிணைந்தால் நாம் வலிமை பெறுவோம்; பிரிந்தால் பலவீனமடைவோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
"நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் வலிமையும் குன்றிவிடும்." (அல்குர்ஆன் 8:46)
இதனை விளக்கும் ஓர் அழகிய நீதிக்கதையும் உண்டு.
ஒருவர் தம்முடைய பிள்ளைகளிடம் ஒரு கட்டுக் குச்சிகளைக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். ஒரே கட்டாக இருந்த அந்தக் கட்டுக் குச்சிகளை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனால் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்தபோது, ஒவ்வொரு குச்சியையும் அவர்களால் எளிதாக உடைக்க முடிந்தது.
இதுபோலத்தான் சமூகத்தின் நிலையும் உள்ளது. ஒன்றிணைந்திருந்தால் வலிமை பெறும்; பிரிந்திருந்தால் வீழ்ச்சியடையும்.
இதனைப் பின்வரும் கவிதை வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன:
ஈட்டிகள் ஒன்றிணைந்திருக்கும்போது அவற்றை உடைக்க முடியாது;
தனித்தனியாகப் பிரிந்துவிட்டால் ஒவ்வொன்றும் எளிதில் உடைந்துவிடும்!
எனவே, சமூக ஒற்றுமையையும் சமூகப் பிணைப்பையும் மேலும் வலுப்படுத்துவோம். இஸ்லாமிய மாண்பையும் பெருமையையும் பாதுகாத்திடுவோம். நம்முடைய பிள்ளைகளின் இதயங்களில் சன்மார்க்கப் பற்றையும், சமூகத்தின் மீதான மதிப்பையும் விதையுங்கள்.
நமது சமூக ஒற்றுமை என்பது நாம் நன்றி செலுத்திப் பாதுகாக்க வேண்டிய ஓர் அருட்கொடையாகும்.
அது வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படும் உணர்வாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக, அதைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியாகவும், உண்மையான மார்க்கப் பற்றாகவும், நேர்மையான செயல்பாடாகவும், பயனளிக்கும் ஒத்துழைப்பாகவும் அது வெளிப்பட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
"நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள்." (அல்குர்ஆன் 5:2)
நமது சமூக ஒற்றுமை என்பது நம் மீது இருக்கின்ற மிக முக்கியமான கடமைகளில் ஒன்று. நமது சமூகத்தின் முன்னோடிகளையும், வரலாற்று நாயகர்களையும், தியாகச் செம்மல்களையும், அவர்களின் மகத்தான பங்களிப்புகளையும் நன்றியுணர்வுடன் நாம் நினைவுகூர வேண்டும்.
அவர்களுடைய உழைப்புகளும் தியாகங்களும் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்:
"உங்கள் இதயங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களுக்கு அதைவிடச் சிறந்ததை வழங்குவான்." (அல்குர்ஆன் 8:70)
அவர்களுடைய தியாகங்களுக்காகவும் சேவைகளுக்காகவும் நாம் என்றும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கும் நன்றி செலுத்தியவராக மாட்டார்."
எனவே, நம்முடைய முன்னோடிகளின் சேவைகளை நினைவுகூர்ந்து, அவர்களுடைய தியாகங்களை மதித்து, நன்றியுணர்வுடனும் நம்பிக்கையுடனும் நாம் வாழ வேண்டும்.
சன்மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், அதன் கண்ணியத்தைக் காப்பதற்காகவும் தங்களுடைய உயிர்களையே அர்ப்பணித்த வீரத் தியாகிகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
தங்களுடைய இரத்தத்தால் இஸ்லாமிய வரலாற்றை எழுதியவர்கள் அவர்கள். தங்களுடைய உயிர்களை அர்ப்பணித்து மார்க்கத்தின் கண்ணியத்தைப் பாதுகாத்தவர்கள் அவர்கள்.
அல்லாஹ்வே! அவர்களை உனது சுவனத்தில் உயர்ந்த இடத்தில் அமர்த்துவாயாக! அவர்களுடைய தியாகங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பெரும் நற்கூலியை வழங்குவாயாக! நமது சமூகத்திற்கு என்றும் பாதுகாப்பையும் அமைதியையும் வழங்குவாயாக!

No comments:
Post a Comment