Thursday, 12 November 2026

நம்பகத்தன்மையின் மகத்துவம்!


ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையின் மீது ஏறி நின்று தம் சமூகத்தாரை அழைத்தார்கள். பின்னர் அவர்களிடம், “இந்தப் பள்ளத்தாக்கின் வழியாக உங்களைத் தாக்குவதற்காக ஒரு குதிரைப் படை வந்துகொண்டிருக்கிறது என்று நான் உங்களிடம் கூறினால், அதை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “ஆம்! நீங்கள் பொய் கூறி நாங்கள் ஒருபோதும் அறிந்ததில்லை. எப்போதும் உண்மையே பேசுபவராக உங்களை நாங்கள் கண்டிருக்கிறோம்” என்று பதிலளித்தார்கள். (புகாரீ)

எத்தகைய மகத்தான சாட்சி இது! எத்தகைய உயர்ந்த பாராட்டு இது!

கடந்த காலத்தில் அவர்கள் கண்டறிந்த நபியவர்களின் உண்மைத் தன்மை, எதிர்காலத்தில் அவர்கள் கூறப்போகும் செய்திகளையும் நம்புவதற்குக் காரணமாக அமைந்தது. ஏனெனில், அவர்களுடைய வாழ்க்கையே அவர்களின் உண்மைக்குத் தெளிவான சாட்சியாகவும், அவர்களுடைய செயல்களே அதற்கான வலிமையான ஆதாரமாகவும் திகழ்ந்தன.

இதுவே நம்பகத்தன்மை உருவாகும் விதம்.

நம்பகத்தன்மை என்பது உயர்ந்த பண்பும் உன்னதமான நற்பண்புமாகும். அது ஒருவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பையும், வாக்குறுதிகளுக்கு வலிமையையும் அளிக்கிறது. குடும்பங்களிலும் சமூகங்களிலும் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கிறது. உறவுகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் சீர்படுத்துகிறது.

இது வேறுவிதமாக எப்படி இருக்க முடியும்? ஏனெனில், வாக்குறுதியைக் காப்பது அதன் அடையாளம்; சொன்னதைச் செய்து முடிப்பது அதன் சான்று; உண்மை பேசுவதே அதன் அடித்தளம்!

நம்பகத்தன்மை என்பது ஒரே நாளில் உருவாகிவிடும் ஒன்றல்ல. உண்மையான சொற்கள், நேர்மையான செயல்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், சாதித்துக் காட்டிய செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் காலப்போக்கில் உருவாகும் அரிய செல்வம் அது. நாட்களும் ஆண்டுகளும் கடந்து செல்லச் செல்ல அது மேலும் வலுப்பெறுகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் தொடர்ந்து உண்மையே பேசிக்கொண்டும், உண்மையைக் கடைப்பிடிக்க முயன்று கொண்டும் இருந்தால், இறுதியில் அவர் அல்லாஹ்விடத்தில் மாபெரும் உண்மையாளர் (ஸித்தீக்) என்று பதிவு செய்யப்படுவார்.” (புகாரீ, முஸ்லிம்)

உண்மையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவருடைய நம்பகத்தன்மை உயர்கிறது. சொற்களைச் செயல்களாகவும், கொள்கைகளை நடைமுறைகளாகவும் மாற்றிக் காட்டும்போதுதான் அது முடியுமாகிறது.

தாம் கூறும் வார்த்தைகளுக்கு மாறாகச் செயல்படுபவர்களைக் குறித்து அல்லாஹ் எச்சரிப்பதை நீங்கள் அறியவில்லையா?

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ۝ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகுந்த வெறுப்புக்குரியதாக இருக்கிறது.” (அல்குர்ஆன் 61:2–3)

உண்மையில், உங்களுடைய அன்பிற்குரிய அண்ணலார் மக்களின் உள்ளங்களில் நம்பகத்தன்மையை ஆழமாகப் பதியச் செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள். அதற்கு முரணான எந்தவொரு நடத்தையையும், செயல்பாட்டையும் அவர்கள் திருத்தியமைத்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்ந்திருந்தார்கள். அப்போது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒன்றைத் தருகிறேன்’ என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு என்ன கொடுக்க நீங்கள் நாடினீர்கள்?’ என்று என் தாயாரிடம் கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘அவருக்குப் பேரீச்சம்பழம் கொடுக்க நாடினேன்’ என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவருக்கு எதையும் கொடுக்காமல் இருந்திருந்தால், உங்களுடைய கணக்கில் ஒரு பொய் எழுதப்பட்டிருக்கும்’ என்று கூறினார்கள்.” (அபூதாவூத்)

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேசும் வார்த்தைகளில் உண்மையைக் கடைப்பிடித்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய உள்ளங்களில் தங்களுக்கான நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறார்கள்.

குடும்ப வாழ்க்கையில் நம்பகத்தன்மையை நிலைநாட்டிய நபி (ஸல்) அவர்கள், வணிகத்திலும் கொடுக்கல் வாங்கல்களிலும் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு குவியலைக் கடந்து சென்றார்கள். அதில் தங்களுடைய கையை நுழைத்தபோது, விரல்களில் ஈரப்பதம் தென்பட்டது.

உடனே விற்பனையாளரிடம், “உணவுப் பொருட்களை விற்பவரே! இது என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மழை பெய்ததால் இது ஈரமாகிவிட்டது” என்று பதிலளித்தார்.

அப்போது படைப்பினங்களிலேயே சிறந்தவர்களான நபி (ஸல்) அவர்கள், “ஈரமான பகுதியை மக்கள் பார்க்கும் வகையில் ஏன் மேலே வைத்திருக்கக் கூடாது? எவர் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

பொருட்களின் குறைகளை மறைத்து, அவற்றின் சிறப்புகளை மட்டுமே மக்களிடம் வெளிப்படுத்தும்போதும், நிறைவேற்றும் எண்ணமின்றி வாக்குறுதிகளை அளிக்கும்போதும் நம்முடைய நம்பகத்தன்மை சிதைந்து போகிறது.

உண்மையில், “ஓர் இறைநம்பிக்கையாளரிடம் எத்தகைய பண்புகள் வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், மோசடியும் பொய்யும் அவரிடம் இருக்க முடியாது.” (அல் பஸ்ஸார்)

நீங்கள் தனிமையில் இருக்கும்போதும் உண்மையைக் கடைப்பிடியுங்கள். உங்களைப் பார்ப்பவர் யாருமில்லை; உங்கள் இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்ற நிலையிலும் நேர்மையாக இருங்கள். அதுவே உங்களுடைய உண்மைத்தன்மைக்கான மிகச் சிறந்த சோதனையாகும்.

இணையவழித் தகவல் பரிமாற்றங்களிலும் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுங்கள். தவறாக வழிநடத்தும் செய்திகளையோ, பின்னணியிலிருந்து துண்டிக்கப்பட்ட காணொளிகளையோ, அதிகப் பார்வைகளைப் பெறுவதற்காக உண்மையைத் திரித்துக் காட்டும் தலைப்புகளையோ பகிராதீர்கள்.

வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் உண்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதியாகக் கடைப்பிடியுங்கள். அப்போதுதான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையைப் பெறுவதோடு, மனநிம்மதியையும் பெற்றிட முடியும்.

ஏனெனில், “உண்மை மனநிம்மதியைத் தரும்.” (திர்மிதீ)

இதன் மூலம் இன்பம் நிறைந்த சுவனபதியையும் நீங்கள் அடையலாம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும்.” (புகாரீ, முஸ்லிம்)

நம்பகத்தன்மை என்பது விலைமதிப்பற்ற, கண்ணுக்குத் தெரியாத ஓர் அரிய செல்வமாகும். அது நீண்டகால உண்மையான செயல்பாடுகளால் உருவாகிறது; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا

“நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக, வாக்குறுதிகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும்.” (அல்குர்ஆன் 17:34)

அல்லாஹ் தன்னுடைய நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை எடுத்துரைக்கும்போது கூறுகிறான்:

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

“பிற்காலத் தலைமுறையினரிடையே எனக்கு உண்மையான நற்பெயரை ஏற்படுத்துவாயாக!” (அல்குர்ஆன் 26:84)

No comments:

Post a Comment