Thursday, 29 October 2026

அருள்மறைக் குர்ஆனை அன்றாடம் ஓதுவோம்!


அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

அலிஃப். லாம். மீம். இது வேதமாகும்; இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இது) இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாகும். (குர்ஆன் 2:1-2)

ஒரு கூட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் திருக்குர்ஆனைச் சுற்றியுள்ள ஒரு காட்சியைத் தம் தோழர்களுக்கு விவரித்தார்கள். அவர்கள் கூறினார்கள்:

"மறுமை நாளில் குர்ஆன் தன் தோழரைச் சந்திக்கும்... அது கூறும்: 'நான்தான் உம் தோழனான குர்ஆன் ஆவேன். நடுப்பகல் வெப்பத்தில் உன்னைத் தாகத்திலிருக்கச் செய்தேன்; இரவில் உன்னை விழித்திருக்கச் செய்தேன்.' ... பின்னர் அவரது வலது கையில் ஆட்சியதிகாரமும், இடது கையில் நித்திய வாழ்வும் வழங்கப்படும். அவரது தலையில் கண்ணியத்தின் கிரீடம் சூட்டப்படும், மேலும் இவ்வுலக மக்கள் மதிப்பிட முடியாத இரண்டு ஆடைகளால் அவருடைய பெற்றோர் அணிவிக்கப்படுவார்கள்." (அஹ்மத், முஸ்னத், 22950)

அதாவது, அந்த ஆடைகளின் மதிப்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் தெளிவான வேதமும் அவனது ஞானமான நினைவூட்டலுமாகும்:

அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (குர்ஆன் 41:42)

மகிமைக்குரிய அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டதை அறிவிக்குமாறு கட்டளையிட்டான்:

“இன்னும் குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்).” (குர்ஆன் 27:92)

எனவே அதனை ஓதுவது அருளாளனின் கட்டளையாகும். அதன் வசனங்களை ஓதுபவர் சுவனத்தின் பதவிகளில் உயர்ந்த நிலைகளை அடைவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"குர்ஆனின் தோழரிடம் கூறப்படும்: 'ஓதுங்கள், ஏறுங்கள், உலகில் நீங்கள் ஓதியது போல மெதுவான அக்கறையுடன் ஓதுங்கள். ஏனெனில் உங்கள் தங்குமிடம் நீங்கள் ஓதும் கடைசி வசனத்தில் இருக்கும்.'' (அபூ தாவூத், 1464; அல்-திர்மிதி, 2914)

ஆகவே திருக்குர்ஆனின் பக்கம் முழு மனதுடன் திரும்புங்கள்:

“எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.” (குர்ஆன் 50:37)

அதன் வசனங்களை உன்னிப்பான கவனத்துடன் கேளுங்கள்:

“குர்ஆன் ஓதப்பட்டால், அதைக் கேளுங்கள். மௌனமாக இருங்கள். இதனால் உங்களுக்கு அருள் புரியப்படும்.” (குர்ஆன் 7:204)

அருள்மறை குர்ஆனுடன் அருளும் பெரும்பேறும் இறங்குகின்றன. படைப்புகளில் சிறந்தவர்களான நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"எந்தவொரு சமூகத்தினரும் அல்லாஹ்வின் இல்லங்களில் ஒன்றில் கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, அதனைத் தங்களுக்குள் படித்துக் கொண்டால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை அருள் சூழ்ந்து கொள்கிறது. வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் அவர்களைப் பற்றி நினைவு கூர்கிறான்." (முஸ்லிம், 2699)

உங்கள் வீடுகளை திருக்குர்ஆன் ஓதுதலால் நிரப்புங்கள். அதை உங்கள் இதயங்களில் மதியுங்கள். மகிமைக்குரிய உங்கள் இறைவன் உங்களை அழைக்கிறான் என்பதை உணருங்கள். நேர்வழியில் சென்ற ஒருவர் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கியபோது இவ்வாறு கூறினார்:

"தன் அரியாசனத்திற்கு மேலிருக்கும் உண்மையாளரின் கூற்றைக் கேளுங்கள்." (மாலிக் இப்னு தினார், சியர் அலாம் அல்-நுபாலா, 5:363)

உங்கள் நேரத்தை அதனுடன் செலவழியுங்கள். உங்கள் அலைபேசிகள் உங்களை அதிலிருந்து திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள். மேலும் உங்கள் கூட்டங்களில் அதன் ஓதுதலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கவிஞர் அதைப் பின்வருமாறு அழகாக வர்ணித்தார்:

மிகச்சிறந்த தோழர், அவரின் பேச்சுகள் சோர்வடையச் செய்யாது!

அவை திரும்பத் திரும்பச் சொல்லப்பட அவற்றின் அழகு கூடிக்கொண்டே செல்லும்!

(இமாம் அல்-ஷாதிபி, *ஹிர்ஸ் அல்-அமானி*)

உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இதைவிடச் சிறந்த மதிப்பு கொண்ட தோழரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது.

திருக்குர்ஆன் மூலமாக உங்கள் ஆன்மாக்கள் உயர்ந்த நிலைகளுக்கு உயர்கின்றன. உங்கள் நற்பண்புகளும் செயல்களும் செம்மைப்படுத்தப்படுகின்றன. மேலும் உங்கள் நல்ல பெயர் நறுமணம் போல் பரவுகிறது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வர்ணித்தது போல் நீங்கள் ஆகிறீர்கள்:

"திருக்குர்ஆனை ஓதும் முஃமினின் உதாரணம் எலுமிச்சம்பழம் போன்றது. அதன் வாசனை நல்லது. அதன் சுவையும் நல்லது." (புகாரீ மற்றும் முஸ்லிம்)

அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பாருங்கள்:

“இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.” (குர்ஆன் 2:195)

எனவே, உங்கள் குடும்பத்தினரிடமும் சமூகத்தினரிடமும் நன்னடத்தையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பணியில் சிறந்து விளங்க முயலுங்கள். இதன் மூலம் உங்கள் இறைவனின் அன்பைப் பெறலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக்கொடுப்பதில் உங்கள் பங்கு மகத்தானது. மேன்மைமிகு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதன் மூலம் உங்களை ஊக்கப்படுத்தினார்கள்:

"உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக்கொள்பவரும், கற்பிப்பவருமாவார்." (அல்-புகாரீ, 5027)

உங்கள் குழந்தைகளின் மனதை ஒளிரச் செய்யவும், அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்தவும், சரியான பேச்சை வளர்க்கவும், அவர்களின் நற்பண்புகளைச் செம்மைப்படுத்தவும் உங்கள் இறைவனின் வேதத்தைக் கற்றுக்கொடுங்கள். மிக உயர்ந்த அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியைக் காட்டுகிறது.” (குர்ஆன் 17:9)

அதன் மூலம், அவர்கள் துன்பத்திலிருந்து பாதுகாக்கப்படலாம்:

“நீங்கள் சிரமப்படுவதற்காக நாம் குர்ஆனை உங்கள் மீது இறக்கவில்லை.” (குர்ஆன் 20:2)

அல்லாஹ் அதை மனப்பாடம் செய்வதையும் கற்றுக்கொள்வதையும் எளிதாக்கியுள்ளான்:

“நிச்சயமாக நாம் குர்ஆனை நினைவூட்டுவதற்காக எளிதாக்கியுள்ளோம்; எனவே படிப்பினை பெறுபவர் யாராவது இருக்கிறார்களா?” (குர்ஆன் 54:22)

உங்கள் குழந்தைகள் அருள்மறையை அக்கறையுடன் ஓதுவதைப் பார்ப்பதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும்?

Tuesday, 27 October 2026

கருணை - ஒரு வாழ்வியல் வழி


ஒரு நாள்,  நபி ﷺ அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் இறைவனுடைய கருணையின் மகத்துவத்தைப் பற்றிக் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் கருணையின் எல்லையை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் அதையே முழுமையாக நம்பியிருப்பீர்கள்."

நிச்சயமாக, இறைவனின் கருணை எல்லையற்றது. அவன் கூறவில்லையா: "என் கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது" (அல்-அஃராஃப்: 156)?

தன் படைப்புகளைப் படைப்பதற்கு முன்பே, தன் மீது "கருணையைக் கடமையாக்கிக் கொண்ட" (அல்-அன்ஆம்: 12) அவனது பெருங்கருணை எவ்வாறு குறைவாக இருக்க முடியும்? அவன் கருணையையே தனது படைப்பின் அடித்தளமாக ஆக்கினான்.

அவனது கருணையைப் பெறுவதற்கும், அவனது கிருபையைப் பெற்றவர்களில் ஒருவராக ஆவதற்கும் உள்ள வழிகளைப் பார்ப்போம்.

கருணையின் தூதராகிய நபி ﷺ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். அவர்களின் உள்ளம் மிகவும் இரக்கமுள்ளதாகவும், அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் அருகில் உள்ளவர்களிடமும் தொலைவில் உள்ளவர்களிடமும் மிகுந்த தயவைக் காட்டுவதாகவும் இருந்தன.

அல்லாஹ் கூறுகிறான்: "நாம் உம்மை அகிலத்தாருக்கு ஒரு பெருங்கருணையாகவே தவிர அனுப்பவில்லை." (அல்-அன்பியா: 107)

நமது கருணைக்கு மிகவும் தகுதியானவர்கள் நம் தாய், தந்தை ஆவர். அவர்கள் பலவீனமாக இருக்கும்போது அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் பலவீனமாக இருந்தபோது அவர்கள் உங்களிடம் காட்டிய அன்பைப் போல.

உங்களது புன்னகையையும், இதயத்தின் அரவணைப்பையும் அவர்களை உணரச் செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்:

"மேலும், அவர்கள் இருவருக்காகவும் இரக்கத்துடன், பணிவென்னும் இறக்கையைத் தாழ்த்துவீராக." (அல்-இஸ்ரா: 24)

அவர்களிடம் சினந்து பேசுவதையோ அல்லது கோபத்துடன் பார்ப்பதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் இத்தகைய நடத்தைகளைத் தடுத்து எச்சரித்துள்ளான். அவன் கூறுகிறான்:

"அவர்கள் இருவரையும் நோக்கி 'சீ' (உஃப்) என்று கூடச் சொல்லாதீர்! இன்னும் அவர்களை அதட்டாதீர்!" (அல்-இஸ்ரா: 23)

உங்களது திருமண வாழ்க்கையின் அரவணைப்பைக் கருணையின் மூலம் உயிர்ப்புடன் வைத்திருங்கள். அல்லாஹ் கூறுகிறான்:

"மேலும், உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான்." (அர்-ரூம்: 21)

கடுமையான சொற்களால் உங்களது திருமண அமைதியைக் குலைத்துவிடாதீர்கள். ஒரு வெற்று வார்த்தையால் எத்தனை இதயங்கள் உடைந்திருக்கின்றன. கொடூரமான நடத்தையால் எத்தனை குடும்பங்கள் சிதறிப் போயிருக்கின்றன!

உங்கள் குழந்தைகள் விடயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களை உங்களது அன்பால் அரவணைத்து, மென்மையுடன் நடத்துங்கள். வள்ளல் நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நம்மிடம் அவர்கள் கனிவான இதயத்தைக் காணட்டும்.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை விடக் குழந்தைகள் மீது அதிக இரக்கம் காட்டுபவர் யாரும் இலர்.

குடும்பத் தகராறுகளுக்கோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கோ உங்கள் குழந்தைகளைப் பலியாக்கி விடாதீர்கள். ஒரு தந்தை தன் மனைவியைப் பழிவாங்குவதற்காக குழந்தைகளுக்கு வழங்கும் பொருளாதார உதவியைக் குறைப்பதோ அல்லது பராமரிப்பை மறுப்பதோ கூடாது.

அதேபோல, ஒரு தாய் கணவனைப் பழிவாங்கக் குழந்தைகளைத் தண்டிக்கக் கூடாது. உங்களின் சொந்தச் செயல்களை ஆற்றுவதற்காகக் குழந்தைகளின் இதயங்களை ரணமாக்குவது கருணையல்ல.

உங்கள் சகோதர, சகோதரிகள் மற்றும் இதர உறவினர்களிடம் கருணை காட்டத் தவறாதீர்கள். அவர்களுடன் தொடர்பில் இருங்கள். உறவுமுறைகளைப் பேணுங்கள். ஏனெனில் அண்ணலார் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகிறார்கள்:

"நான்தான் அர்-ரஹ்மான் (அளவற்ற அருளாளன்). நான் 'ரஹீம்' (தொப்புள்கொடி உறவை) படைத்தேன், அதற்கான பெயரை எனது பெயரிலிருந்து பிரித்தெடுத்தேன். யார் உறவைப் பேணி வாழ்கிறாரோ, அவருடன் நான் தொடர்பு வைத்துக் கொள்வேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ, அவனுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்வேன்."

எஜமானர்கள் தங்களை நாடி வருவோருக்கு அவர்களின் தேவைகளை எளிதாக்கிக் கொடுப்பதன் மூலம் கருணை காட்டட்டும். சிரமங்களை உருவாக்க வேண்டாம். தங்களின் கீழ் வேலை செய்பவர்களை மரியாதையுடனும் கனிவுடனும் நடத்தட்டும், அவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தவோ, மனச்சோர்வடையச் செய்யவோ வேண்டாம்.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் கருணை காட்டட்டும். குறிப்பாகக் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் திறன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு ஆசிரியர்களின் கூடுதல் உழைப்பு, கவனம், ஊக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது. கடுமையான அணுகுமுறையால் அவர்களின் கல்வியை மேலும் கடினமாக்கிவிடக் கூடாது.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் என்னை மக்களைத் துன்புறுத்துபவனாகவோ அல்லது சிரமப்படுத்துபவனாகவோ அனுப்பவில்லை, மாறாக விடயங்களை எளிதாக்கும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்."

ஏழைகள் மற்றும் அநாதைகள் மீது கருணை காட்டுங்கள். ஒரு மனிதர் நபியவர்களிடம் தன் இதயத்தின் கடினத்தன்மையைப் பற்றி முறையிட்டபோது, நபியவர்கள் கூறினார்கள்:

"அநாதையின் தலையைத் தடவிக் கொடுங்கள். ஏழைக்கு உணவளியுங்கள்."

உங்களுக்குச் சேவை செய்பவர்கள் அல்லது உங்களிடம் பணிபுரிபவர்கள் விடயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவர்களின் ஊதியத்தை முழுமையாக வழங்குங்கள். அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்திடுங்கள்.

உங்களைச் சுற்றியுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளிடமும் உங்களது கருணையை நீட்டியுங்கள். ஏனெனில் "ஒவ்வோர் உயிருள்ள பிராணிக்குச் செய்யும் நன்மையிலும் நன்மைக்கான கூலி உண்டு."

இறுதித் தூதர் அவர்களின் இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் வையுங்கள்: "கருணை காட்டுபவர்கள் மீது அளவற்ற அருளாளன் கருணை காட்டுவான். பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். விண்ணில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்."

அவன் தன் கிருபையினாலும், எண்ணற்ற அருட்கொடைகளினாலும், மன்னிப்பினாலும் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.

கருணையால் நிறைந்த இதயம் பாக்கியம் பெற்றது; அது தேவையுடையோரை நெருங்குகிறது, பலவீனர்களையும் ஏழைகளையும் கனிவுடன் நடத்துகிறது, அவர்களின் துன்பங்களைத் துடைத்து, ஆதரவுக் கரங்களை நீட்டுகிறது.

கொடூர குணம் கொண்ட இதயம் எவ்வளவு கெடுவாய்ப்பு பெற்றது! அது பலவீனர்களுக்கு அநீதி இழைக்கிறது. ஏழைகளின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. இரக்கத்தை தங்களின் வழியாகவும், கனிவைத் தங்களின் பழக்கமாகவும் ஆக்கிக் கொள்பவர்களுக்கு அல்லாஹ்வின் கருணை மிக அருகில் இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லையா?

எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்:

"நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நன்மை செய்வோருக்கு மிக அருகில் இருக்கிறது." (அல்-அஃராஃப்: 56)

இம்மையிலும் மறுமையிலும் தன் இறைவனின் கருணையைப் பெற விரும்பும் எவரும், கருணையைத் தன் இதயத் துடிப்பாகவும், தன் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் வழிகாட்டியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

கருணை என்பது நாம் உண்மையான மனிதர்களாக வாழ்வதற்கான அடித்தளமாகும். அது இதயத்தை வெறுப்பு மற்றும் பொறாமையிலிருந்து விடுவிக்கிறது. சமூகத்திலிருந்து கடினத்தன்மையை நீக்குகிறது. மக்களிடையே அன்பைப் பரப்புகிறது.

ஒரு நாகரிகத்தின் பெருமை என்பது அங்கு வாழும் மக்களின் இதயங்களில் உள்ள கருணையின் அளவைக் கொண்டுதான் மதிப்பிடப்படுகிறது. எனவேதான், நம் இறைவன் சமூகத்தில் கருணையை ஒருவருக்கொருவர் போதிப்பதையும் பரப்புவதையும் வலதுகைத் தோழர்களின் (சொர்க்கவாசிகளின்) பண்பாக ஆக்கியுள்ளான்.

அகிலங்களின் இறைவன் கூறுகிறான்:

"பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையையும் (ஒருவருக்கொருவர்) அறிவுரை செய்து, கருணையையும் (ஒருவருக்கொருவர்) அறிவுரை செய்கிறார்களே அத்தகையோரில் அவரும் ஆகிவிடுவார். இவர்கள்தாம் வலப்பக்கத்துத் தோழர்கள் ஆவர்." (அல்-பலத்: 17-18)

அதாவது, அவர்கள் தங்கள் இறைவனிடம் சுவனத்தை அடைவார்கள்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஒருவருக்கொருவர் கருணை காட்டாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள்."

அப்போது தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாம் அனைவரும் கருணையுள்ளவர்கள்தான்" என்றனர். அதற்கு நபியவர்கள்: "இது உங்களில் ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் (தன்னலமுள்ள) கருணையல்ல. மாறாக, மனிதர்கள் அனைவருக்கும் காட்டும் பொதுவான கருணையாகும்; அனைத்து மக்கள் மீதுமான கருணையாகும்" என்றார்கள்.

இந்த நற்பண்பை நம் வாழ்விலும், நம் குழந்தைகளின் வாழ்விலும், நம் குடும்பங்களிலும், பள்ளிகளிலும் வலுப்படுத்தினால் நம் சமூகத்தின் பிணைப்பு எவ்வளவு பலமிக்கதாக மாறும்!

எந்தவொரு வாழ்க்கையும் கடினத்தன்மையால் மகிழ்ச்சியடைந்ததில்லை. மாறாக, ஆன்மாக்கள் கருணையால் செழிப்படைகின்றன. வாழ்க்கை அன்பினாலும் கனிவினாலும் மலர்கிறது.

Sunday, 25 October 2026

இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகளைக் கண்டு தளர்ந்து விட்டேன்: பில் கிளிண்டன்

சமீபத்தில் சர்வமத மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், திருக்குர்ஆனில் உள்ள சில வசனங்களை மேற்கோள் காட்டியதுடன், முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்புப் பரப்புரைகளைக் கண்டு தான் சோர்வடைந்துவிட்டதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன் மகள் திருக்குர்ஆனை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் பரப்புரையிலும், முன்பு நடந்த  தேர்தல் காலங்களில், டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களை இலக்காக வைத்து தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்தானி போன்ற தலைவர்கள் இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகளுக்கு அடிபணியாமல், மக்களின் உண்மையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அத்தகைய அரசியல் மாற்றங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவும், மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதை பில் கிளிண்டனின் இந்த பிரகடனம் காட்டுகிறது.

Friday, 23 October 2026

நல்லதையே பேசுவோம்! அல்லதை வீசுவோம்!


அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: “என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக: அவர்கள் சொற்களைச் செவிமடுத்து, அதில் மிகச் சிறந்ததைப் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டியுள்ளான்; அவர்களே அறிவுடையவர்கள்.” (குர்ஆன் 39:17–18)

நபி (ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றின் போது, ஒரு மனிதர் பின்தங்கி அவர்களுடன் சேரவில்லை. அண்ணலார் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர் அவரைப் பற்றித் தவறாகப் பேசினார்.

உடனே முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அவரைத் தடுத்து, அந்த மனிதரின் நல்ல குணங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்:

“நீங்கள் சொன்னது மிகவும் கெட்டது! அல்லாஹ்வின் மீதாணையாக, அல்லாஹ்வின் தூதரே, அவரிடம் நன்மையைத்  தவிர வேறு எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.” (அல்-புகாரி, ஸஹீஹ், எண் 4418; முஸ்லிம், ஸஹீஹ், எண் 2769அ).

மக்களின் நற்குணங்களையும் போற்றுதலுக்குரிய செயல்களையும் குறிப்பிடுவது, அவர்களின் புகழத்தக்க பண்புகளை வெளிப்படுத்துவது, அவர்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பது, அவர்களின் மேலான தன்மையை அங்கீகரிப்பது ஆகியவை எத்தகைய மகத்தான மதிப்பினைக் கொண்டவை! எத்தகைய உன்னதமான பண்பு!

உன்னத நபிகளாரின் உதாரணத்தை எண்ணிப் பாருங்கள். நற்குணங்களைப் பற்றி இவ்வளவு தாராளமாகப் புகழ்ந்தவரோ அல்லது நற்பண்பு உடையவர்களை இவ்வளவு கனிவாகப் பாராட்டியவரோ வேறு எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

அப்துல் கைஸின் அல்-அஷாஜ் (ரலி) அவர்களிடம் அவர் கூறினார்கள்: “உன்னிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உள்ளன: சகிப்புத்தன்மை மற்றும் நிதானம்.” (முஸ்லிம், ஸஹீஹ், எண் 17).

ஒரு மனிதனுக்கு அவனுள் இருக்கும் நன்மையை உணர்த்தி, அதனை அவன் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் செய்யும் பாராட்டை விடப் பெரிய ஊக்கமளிப்பது எதுவாக இருக்க முடியும்?

இரவு நேரத்தில் தொழுமாறு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை அண்ணலார் ஊக்கப்படுத்த விரும்பினார்கள். எனவே, அவரைப் பாராட்டி, அத்துடன் வழிகாட்டுதலையும் இணைத்து இப்படிச் சொன்னார்கள்:

“அப்துல்லாஹ் எத்தகைய சிறந்த மனிதர்! அவர் மட்டும் இரவில் நின்று தொழுபவராக இருந்தால் (எவ்வளவு நன்றாக இருக்கும்!)” (அல்-புகாரி, ஸஹீஹ், எண் 1122; முஸ்லிம், ஸஹீஹ், எண் 2479).

அதன் பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இரவில் மிகக் குறைவாகவே உறங்கினார். அவர் ஏற்கனவே சிறப்பாகச் செய்து வந்ததைச் சீர்மிகு நபிகளார் எவ்வாறு பாராட்டி, அதை விடச் சிறந்ததை நோக்கி வழிகாட்டினார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

நன்மையை உணர்ந்து அதைப் பாதுகாக்கும் இதயமும், கனிவைக் கண்டு அதைப் போற்றும் பார்வைகளும், அழகானதைக் பேசி அதை வெளிப்படுத்தும் நாக்கும் ஒரு மனிதனிடம் இருப்பது எத்தகைய அழகானது!

ஒரு நற்பண்பு உள்ளவர்தான் மற்றவர்களின் நற்பண்பை அறிவார். நற்குணம் கொண்டவர் மட்டுமே மற்றவர்களின் நன்மையைச் சாட்சி கூற முடியும். இது குணத்தின் உன்னதத்தையும் இதயத்தின் தூய்மையையும் குறிக்கிறது.

இது தூய்மையான இதயமுடையவரின் பண்பாகும், அவரைப் பற்றி அண்ணலார் இவ்வாறு வர்ணித்துள்ளார்கள்:

“இறையச்சமும் தூய்மையும் கொண்டவர்; எத்தகைய பாவமும், வரம்பு மீறலும், பகையும், பொறாமையும் அவரது இதயத்தில் இல்லை.” (சுனன் இப்னு மாஜா,  எண் 4216)

அத்தகைய மனிதர் ஒரு தேனீயைப் போன்றவர்: அது தூய்மையானவற்றின் மீது அமர்கிறது, தூய்மையானவற்றை உருவாக்குகிறது, நன்மையைப் பரப்புகிறது.

நோயுற்ற இதயமும் இழிவான இயல்பும் கொண்ட மனிதரைப் பொறுத்தவரை, அவரது உள்நிலையின் மற்றும் எண்ணத்தின் சீர்கேடு, மக்களின் நற்பண்புகளையும் நல்ல குணங்களையும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறது. அவர் அவர்களின் குறைகளையும் பிழைகளையும் மட்டுமே உற்று நோக்குகிறார். அவர் அவர்களின் நன்மைகளைக் குறிப்பிடுவதில்லை. அவர்களின் குறைகளை மறைப்பதும் இல்லை.

இப்படிப்பட்டவர் மலர்களைக் கடந்து சென்று குப்பையைத் தேடும் ஈயைப் போன்றவர்.

இது எத்தகைய ஆபத்தான பண்பும் அசிங்கமான குறையுமாகும். நபி (ஸல்) அவர்கள், பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளிருந்தும் கேட்கும் அளவிற்கு மேடையில் உரத்த குரலில் இதைக் குறிப்பிட்டார்கள்:

“நாவுகளால் நம்பிக்கை கொண்டு, ஈமான் இன்னும் தங்கள் இதயங்களில் நுழையாத மக்களே, முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள். எவர் தன் சகோதரனின் குறையைத் தேடுகிறாரோ, அவரது குறையை அல்லாஹ் தேடுவான். எவரது குறையை அல்லாஹ் தேடுகிறானோ, அவரை அவரது வீட்டிற்குள்ளேயே இழிவுபடுத்துவான்.” (சுனன் அபூ தாவூத், எண் 4880)

அறிஞர்களில் ஒருவர் கூறினார்:

“எவர் தன் சொந்தக் குறைகளை விடுத்து மக்களின் குறைகளில் மூழ்கி விடுகிறாரோ, அவரது இதயம் குருடாகிவிடும். அவரது உடல் சோர்வடைந்து விடும். தன்னுடைய சொந்தக் குறைகளைக் கைவிடுவது அவருக்குக் கடினமாகிவிடும்.” (இப்னு ஹிப்பான், ரவ்ழத்துல் உகலா வ நுஸ்ஹத்துல் புழலா, ப. 131)

மற்றவர்களின் குறைகளை மறைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் குறைகளை மறைக்க ஒருவரை அல்லாஹ் நியமிப்பான். இது உன்னத நபிகளாரின் கீழ்க்கண்ட கூற்றை உறுதிப்படுத்துகிறது:

“எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ, உலகத்திலும் மறுமையிலும் அவருடைய குறைகளை அல்லாஹ் மறைப்பான்.” (ஸஹீஹ் முஸ்லிம், எண் 2699)

இமாம் மாலிக் (அவர் மீது இறைவன் கருணை பொழியட்டும்) கூறினார்: “குறைகள் எதுவும் அறியப்படாத சிலரை நான் சந்தித்தேன், ஆனால் அவர்கள் மற்றவர்களின் குறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். எனவே மக்கள் அவர்கள் மீது குறைகளைக் கண்டனர். குறைகளைக் கொண்டிருந்த சிலரையும் நான் சந்தித்தேன். ஆனால் அவர்கள் மற்றவர்களின் குறைகளைப் பற்றி மௌனமாக இருந்தனர். எனவே மக்கள் அவர்கள் மீதும் மௌனமாக இருந்தனர்.”

இருப்பினும், குறைகளை மறைப்பது என்பது அநீதியைக் கண்டிக்காமல் மௌனமாக இருப்பதற்கோ அல்லது நேர்மையான பரஸ்பர அறிவுரைகளைக் கைவிடுவதற்கோ நம்மை அனுமதிக்கக் கூடாது.

மக்களின் நற்குணங்களைப் பற்றிப் பேசுவது என்பது கருத்துவேறுபாடுகளின் போது அதன் உண்மைத்தன்மை வெளிப்படும் மற்றும் கண்டனங்கள் எழும் போது அதன் உண்மையான மதிப்பு புலப்படும் ஓர் உன்னதமான பண்பாகும்.

ஒரு கண நேரத் தவறு பல ஆண்டு நாம் செய்த நன்மைகளை மறக்கடிக்கச் செய்ய வேண்டாம். ஒரு சிறிய தவறு ஏராளமான நற்பண்புகளை அழிக்கவும் விட வேண்டாம்.

பல ஆண்டுகளாக நன்மைகள் பல செய்த எத்தனை எத்தனையோ மனிதர்கள், ஒரே ஒரு தவறு செய்துவிட்டால், “நாங்கள் உங்களிடமிருந்து எந்த நன்மையையும் கண்டதில்லை” என்று கூறப்படுகிறார்கள்!

நற்பண்பு உடையவர்களின் தகுதியை ஏற்றுக்கொள்ளுங்கள். நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவதை உங்கள் வீடுகளிலும் கூட்டங்களிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் பேசும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறையின் ஒரு பகுதியாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் முன்னிலையில் யாரும் புறம் பேசுவதை அனுமதிக்காதீர்கள். சங்கை நபிகளாரின் கீழ்க்கண்ட சொல்படி செயல்படுங்கள்:

“எவர் தன் சகோதரனின் மானத்தைக் காப்பாற்றுகிறாரோ, மறுமை நாளில் அவரது முகத்திலிருந்து நரக நெருப்பை அல்லாஹ் காப்பாற்றுவான்.” (திர்மிதீ, எண் 1931).

இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் நற்பண்புகளை நினைவுகூர்வோம். அவர்களின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவோம்.

ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, மக்கள் அந்த இறந்தவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசினர். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எவரைப் பற்றி நீங்கள் நன்மைகளைப் பாராட்டினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்.” (புகாரீ, எண் 1367; முஸ்லிம், எண் 949).

தாஹா நபியவர்கள், தம்முடைய மனைவி கதீஜா (ரழி) அவர்கள் காலமான பிறகும் அடிக்கடி அவர்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பார்கள்.

“மக்கள் என்னை நிராகரித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் என்னைப் பொய்யர் என்று கூறியபோது அவர் என் உண்மையை உறுதிப்படுத்தினார். மக்கள் என்னை வஞ்சித்தபோது அவர் தன் செல்வத்தால் எனக்கு உதவினார்.” ( முஸ்னத் அஹ்மத், எண் 24864).

தன் அன்பு மனைவியாரின் மரணத்திற்குப் பிறகும், அவர் அவர்களுக்குச் செய்த நன்மைகளை அண்ணலார் மறக்கவில்லை. நமது சமூகம் நமக்குச் செய்ய வேண்டிய உரிமைகளில் ஒன்று, அதன் நன்மைகளை வெளிப்படுத்துவதும், அதன் மக்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பதும், அதன் குடிமக்களின் சாதனைகளைப் பாராட்டுவதும் ஆகும்.

தகுதியான எவருக்கும் கனிவான வார்த்தையைக் கூறத் தவறாதீர்கள். தூய உள்ளமும் நம்பிக்கையும் கொண்டவர்களுக்காக இறைவன் கற்றுத் தந்த துஆவைக் கேறங்கள்:

“எங்கள் இறைவனே, எங்களுக்கும் ஈமானில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக. நம்பிக்கை கொண்டவர்கள் மீது எங்கள் இதயங்களில் எந்தப் பகையையும் ஏற்படுத்த வேண்டாம். எங்கள் இறைவனே, நீயே மிக இரக்கமுள்ளவன், கருணைமிக்கவன்.” (குர்ஆன் 59:10).