Sunday, 9 December 2018

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி!

பல்லாண்டு காலமாக பெரும் பகுதி மக்கள் இந்த இந்திய தேசத்தில் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். ஆரியர்களின் வருகைக்குப் பின் இந்திய தேசம் இந்த ஒடுக்குமுறைகளை மதத்தின் பெயரால் கண்டது.

ஜாதியப் பிளவுகளை ஏற்படுத்தி மனிதனைப் பிறப்பாலேயே பிரித்த மாபெரும் கொடுமை அரங்கேறியது. சொந்த மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வந்தேறிகளான ஆரியர்களின் ஆதிக்கம் ஆரம்பமானது.
ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து கிளர்ந்தெழுந்த புத்தர்களும், ஜைனர்களும் கழுவிலேற்றப்பட்டு கொல்லப்பட்டனர். புத்த விகார்களும், ஜைன கோவில்களும் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன.

இப்படி ஆரிய ஆதிக்கம் கோலோச்சிய பொழுது மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்ந்தனர்.

இஸ்லாம், கிறித்தவம் போன்ற பிற மதங்கள் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த பொழுது தீண்டாமைக் கொடுமையாலும், ஜாதிக் கொடுமைகளாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த மதங்களை தங்கள் விடுதலை மார்க்கங்களாக தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி அவ்வப்பொழுது ஏற்பட்டுத்தான் வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அது ஆரியத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டது.

ஆரிய ஆதிக்கத்திற்கெதிராக வரலாற்றில் தோன்றியவர்களில் முக்கியமானவர்கள் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்றவர்கள்.
தென்னிந்தியாவில் பல புரட்சியாளர்கள் தோன்றினாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாதிப்புகளை ஏற்படுத்தியவர் தந்தை.பெரியார்.

ஒடுக்கப்பட்டோர் எழுச்சி வரலாறு 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. 1777ல் சென்னையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று அதைப் பற்றி தலித் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அப்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலித் ஒருவரின் மரணத்துக்காக ஒரு விசாரணை நடைபெற்று, அதன்பின் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தலித் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ள.

அன்றிலிருந்து தொடர் போராட்டங்கள் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கபடாதது மாற்றம் வருவதற்கான வாய்ப்பை தடுத்துவிட்டது. 1840ல் ஆதிதிராவிடன் எனும் வார்த்தை "பூர்வகுடி திராவிடன்" எனும் பொருள் தரும் வகையில் அறிமுகம் ஆகிறது. 1880ல் ஆதி திராவிடர் மகாஜன சபையும், 1890ல் பறையர் மகாஜன சபையும், 1891ல் திராவிடர் மகாஜன சபையும் உருவாகின்றன. ஆக, 1880ல் இருந்து 1891க்குள் மூன்று முக்கிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றைய தலித் இயக்கங்கள் எல்லாமே இவற்றின் வாரிசுகள்தான்.

தந்தை பெரியாரின் ஆரிய ஆதிக்கத்திற்கெதிரான புரட்சி அறிஞர் அண்ணா மூலம் அரசியல் எழுச்சி கண்டது. 1939ல் திராவிடர் கழகம் பிறக்கிறது. அறிஞர் அண்ணாவின் முயற்சியால் 1949ல் திமுக பிறக்கிறது. அதன்பின் திராவிட இயக்கம் வலுவான அரசியல் சக்தியாக மாறுகிறது.

ஒடுக்கப்பட்டோருக்கு அரசியல் ஏன் அவசியம்?

ஒடுக்கப்பட்டோர் தங்கள் உரிமைப் போராட்டங்களை ஓர் எல்லை வரையே நகர்த்திச் செல்ல முடியும். அரசியல் அதிகாரம் கைவரப் பெறவில்லையெனில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை முழுமையாகப் பெற முடியாது.

அதிகாரம் படைத்தோரின் ஒரு கையெழுத்து ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றுகிறது. ஆக, அதிகாரம் மூலமே முழுமையான விடிவு சாத்தியப்படும்.

அதிகராம் பெற வேண்டுமெனில் அரசியலில் ஈடுபடவேண்டும். நேர்மையான அரசியல் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தேசம் விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று ஒடுக்கப்பட்டோரின் அரசியல் பங்களிப்பு என்பது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

விளிம்பு நிலை மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இந்த அரசியலைக் கையில் எடுக்க வேண்டும். அதுவும் பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்ற நேர்நிலை அரசியலைக் கையில் எடுக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அனைவருக்கும் நீதியும், சமத்துவமும் கிடைக்கும் ஒரு சமுதாயம் உருவாகும். ஒடுக்கப்பட்டோர் முழுமையாக அனைத்து உரிமைகளும் பெறும் நாள்தான் இந்தியா வல்லரசாகும் நாளின் துவக்கம் எனக் கூறலாம்.

ஆக, இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி பெற வேண்டும். அதன் அதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும்.

No comments:

Post a Comment