வீரத்தாய் ந. பியாரி பீபீ
நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். கரூரைச் சேர்ந்த தமிழச்சிதான் இவர். இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும் குறைந்தது அல்ல.
இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.
வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால் இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும்.
இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.
கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாஅத்திலிருந்து இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர். மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.
முஸ்லிம் பெண் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாத சில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலீசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது, அவர் மீது கற்களை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர். கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில் பங்கு பெற அனுமதித்தார் மனைவி.
ஸுரய்யா தியாப்ஜி
தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்.
நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!
வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி. ஆலோசனை தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி.
(பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..!)
இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!
அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 - 1906)
சர். ஆலன் அக்டேவியன் ஹியூம், சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமூக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர் W.C. பானர்ஜி.
1886ல், இ.தே.கா.-வின் இரண்டாம் தலைவர், பாரிஸ்டர். D. நவ்ரோஜி.
அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி.
இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர்.
இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!
ஸுரய்யா தியாப்ஜி கொடி வரைந்த வரலாறு
பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.
அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...!)
இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின் 'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!
ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)
முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..!
மேலே உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..! கவனியுங்கள்.
இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!
வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.
இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.
அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..!
கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.
மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத் தூரிகையாளர்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.
தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது...!
தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க இடம் நிச்சயமாக உண்டு..!
ஆதார ஆவணங்கள்:
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html (official site for national flag)
http://www.proprofs.com/quiz-school/story.php?title=quiz-on-indian-flag
http://flagstamps.blogspot.com/2010/07/quest-for-national-flag-for-india-part_22.html
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)
<http://aicc.org.in/new/past-president-detail.php?id=3>
பேகம் ஹஜ்ரத் மஹல்
1857ல் மாமன்னர் பகதுர்ஷா ஜஅஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சி ராணி லக்குமி பாய், மற்றொருவர் உத்திரப் பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.
பேகம் ஹஜ்ரத் மஹல் ஒளத் மாநிலத்தின் ராணி, நவாப் வஜீத் அலீ ஷாவின் மனைவியுமாவார். ஒளத் என்பது இப்போது உள்ள உத்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிட்டிஷ்காரர்களால் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமைத்தனத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.
பேகம் என்பது இவரது பெயர். “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நவாபாகிய அவரின் கணவரை பிரிட்டிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தைக் காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கி விட்டு, நாட்டைக் காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.
பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம், தேசாபிமானம், தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.
ஒளத் நவாபான வஜீத் அலீ ஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரின் புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரின் தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாதுர்யத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
1857ல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகையிட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.
பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும், ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப் பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள். (R.C. Agawal, Constitution Development of India and National Movement, P. 43, 53)
1858 மார்ச் 6ம் தேதி 30.000 துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்து நாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டு வெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.
இந்தியாவின் முதலாம் உலகப் போரின் போது முக்கிய தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரைச் சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்துப் பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஸை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.
பின்னர் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் ஆங்கிலேயர்கள் மீண்டும் அம்மாநிலத்தைக் கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னோவை மீண்டும் ஆங்கிலேயர்களே கைப்பற்றினர். இந்தச் சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆங்கிலேயர்களால் பின்வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கிருந்து இடம் பெயர்வது மேல் என்று முடிவு எடுத்தார்.
பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துகளையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.
அஜிஜன்
இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார் படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்டிஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புபவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.
பி அம்மா (அபாடி பேகம்)
இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலீ 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலீ வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாமின் மகன். அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒருவேளை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.
அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர். இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.
ஜுபைதா தாவூதி
இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷாருக்கு எதிராக “துணிச்சலை” தன் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும் துணிச்சலை வளர்க்க தன்னை முன்மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.
சதாத் பனோ கிச்லேவ்
இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.
1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர் கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டவுடன் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவால் நிறுவப்பட்ட “ஸ்வராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்திச் சென்ற பெருமையைக் கொண்டவர்.
ஜுலைகா பேகம்
இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார். மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதர் அபுல் கலாம் ஆசாத் 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
அதில், “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்திருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே. ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாஃபத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கிக் கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.
ரஜியா காத்தூன்
பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர். இதனால் அவர்களைக் கைது செய்து களப்பணி என்ற இடத்தில் அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.
மேலே குறிப்பட்டவர்களைத் தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, ஃபாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், ஃபாத்திமா இஸ்மாயீல், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் அடைக்கப்பட்டும், பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நாம் சுதந்திர இந்தியாவைக் காண முடிகிறது.
ஹஸன் மஹ்பர் பேகம்
பேகம் ஹஜ்ரத் மஹலின் சம காலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜூன் 18ல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜான்ஸியுடன் வீர மரணம் அடந்தார்.
அமாதுல் ஸலாம்
1938ல் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முஹம்மது அலீ ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில் காந்திஜி, “என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் மகிழ்ச்சியாகக் கொடுப்பாள்” என்று கூறியவர், தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.
ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள்
“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.
பேகம் சாஹிபா
திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஹைதர் அலீ அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீரா ரசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவரின் மனைவியும் ஹைதர் அலீயின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபாவுக்கு கி.பி.1772ல் குழந்தையைப் பெற்றெடுத்து ஏழாம் நாள் காலமானார்.
போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீரா ரசாலிக்கான் சாயபு தன் மனைவியை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்ன பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.
இளையான்குடியின் பீபியம்மாள்
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.
1922ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்தக் குடிநீர் தொட்டி அருகில் ஏ.எஸ்.டி. இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திரப் போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெரு வரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருது மொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924ம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பப்படி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணனூர் ராணி பீபி
கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளரான இவர், பிரிட்டீஷ் படைவீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர்.
1783ம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்தத் திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப் பகுதியை தாங்கள் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர்கள் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார்.
1784ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கிலேயரின் முகாம் செயல்படத் தொடங்கியது. மீண்டும் 1790ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதரவாக செயல்படப் போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.
உமர் பீபி
1919ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.இ.ஹெச். டயர் என்பவன் தலைமையில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர் பீபியும் பலியானார். இவர் 1864ம் ஆண்டு அமிர்தசரசில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன்.
மரியம் பீவி
திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.
பேகம் அயிஜாஸ் ரசூல்
உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909ம் ஆண்டு நவார் சர்ஜூல் பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1937ம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.
பியாரி பீவி
கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரின் மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேரும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920ம் ஆண்டிலிருந்து 1943ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரின் மனைவி பியாரி பீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.
ஆதார நூல்கள்:
1. மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்… மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை.
2. விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என். சாமி, மதுரை.
3. மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், சென்னை.