எதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.
காதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.
ஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான்! (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)
அதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...
ஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...
காந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...
கருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...
இப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.
செக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக "தூக்கிலிடுபவரின் குறிப்புகள்" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.
இரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...
# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.
# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.
# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.
# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.
# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை
ஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...
ஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....
தன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.
இலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.
அவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.
சிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, "முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
அந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.
அறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்!
#தோழமைக்கு_கிட்டாத_வாய்ப்பு
காஜா குதுப்தீன்
No comments:
Post a Comment