Wednesday, 15 February 2017

உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்பு!

விஞ்ஞானி அப்துல் கலாம் நாஸா மையத்தில் கண்ட ராக்கெட் விடும் திப்பு படையின் ஓவியம்

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்!

இந்தத் தருணத்தில் உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்புவையும், அவர் தந்தை ஹைதர் அலீயையும் நினைவு கூர்வோம்.



சொந்த மண்ணில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதி நினைவுகூர்வதை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் தனது ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் ஆச்சரியத்துடன் விவரித்திருப்பது வருமாறு:

''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப்ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஓர் ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படைவீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படைவீரர்கள் அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஓர் இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' (அக்னிச் சிறகுகள்)

சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால இராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்பு சுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



6000 படைவீரர்களைக் கொண்ட, 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் “நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தொட்டில்” எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதையும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

துரோகத்தால் மாவீரன் திப்பு வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

1 comment:

  1. https://en.wikipedia.org/wiki/Rocket
    .
    எங்கே துலுக்க பீப் சுல்தானை பற்றி எங்கேயாவது சொல்லி இருக்கின்றார்களா என்று காட்டு பார்ப்போம்
    பீப் சுல்தானுக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே சீனன் செய்திருக்கின்றான்
    படிச்சு பாரு

    ReplyDelete