முஸ்லிம்கள் ஷாம் தேசத்தில் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தபோது ரோமப் பேரரசர் ஹிராக்ளியஸ் தன் தளபதிகளை அழைத்து கேட்டார்:
“கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களே, புனித நீரின் புதல்வர்களே, நான் உங்களிடம் இந்த அரபுகள் குறித்து எச்சரித்திருந்தேன். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் மீதாணையாக, சத்திய பைபிளின் மீதாணையாக, எனது அரியணையின் கீழுள்ள அனைத்து நிலங்களையும் இந்த அரபுகள் ஆள்வார்கள். அழுவது பெண்களுக்குரியது. இந்தப் பூமிப் பந்தின் எந்தவொரு அரசனும் எதிர்கொள்ள முடியாத ஒரு படை வந்துள்ளது. நான் என் செல்வ வளத்தையும், மனித வளத்தையும் உங்களை, உங்கள் மதத்தை, உங்கள் பெண்களைக் காப்பதற்காக செலவிட்டுள்ளேன். உங்கள் பாவங்களை எண்ணி வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்பு கோருங்கள். உங்கள் ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களை அடக்கி ஒடுக்காதீர்கள். யுத்தங்களில் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கர்வத்தைக் கைவிடுங்கள். பொறாமையைப் பொசுக்கி விடுங்கள். இந்த இரண்டும் ஒரு தேசத்தை எதிரிகளின் முன்பு தலைகுனிய வைத்து விடும். நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.”
“என்ன வேண்டுமோ கேளுங்கள், சீசரே” என்று எல்லோரும் ஏகோபித்துக் கூறினார்கள்.
ஹிராக்ளியஸ் கேட்ட கேள்வி இதுதான்:
“உங்களுக்கு அரபுகளை விட படைபலமும், பணபலமும் அதிகம். பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்கள் படைபலத்தையும், போர் வீரியத்தையும் கண்டு அஞ்சுகின்ற வேளையில், ஏன் அரபுகளிடம் மட்டும் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள்? அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள்? அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது?”
ரோமர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. கிறிஸ்தவத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த ஒரு வயதான கிறிஸ்தவப் பாதிரி எழுந்தார். “நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்:
“சீசரே, நம் மக்கள் மதத்தை மாற்றிவிட்டனர். நிறைய புதுமைகளை உட்புகுத்தி விட்டனர். இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையில் மூழ்கி விட்டனர். ஒருவருக்கொருவர் அடக்கியாள்கின்றனர். நல்லதை யாருமே ஏவுவதில்லை. தீயதை யாருமே விலக்குவதில்லை. நீதியோ, நியாயமோ, நன்மையோ அதன் ஒரு சுவடு கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வழிபாட்டு நேரங்களை மாற்றி விட்டனர். வட்டியை விழுங்குகின்றனர். விபச்சாரத்தில் வித்தகம் புரிகின்றனர். கள்ள உறவுகள், கூடா ஒழுக்கங்களில் மூழ்கி விட்டனர். ஒவ்வொரு பாவமான காரியமும், வெட்ககரமான செயலும் அவர்களிடம் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதற்கு மாறாக, இந்த அரபுகள் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். மார்க்கத்தை மாசுமருவின்றி மார்போடு அணைக்கின்றனர். இரவு நேரங்களில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகற்பொழுதுகளில் படைத்தவனுக்காக பசித்திருக்கின்றனர். தங்கள் இறைவனை நினைவு கூராமல் ஒரு கணம் கூட அவர்களை விட்டுக் கடந்ததில்லை. தங்கள் தலைவர் முஹம்மதுக்கு வாழ்த்துகளை வழங்காமல் வார்த்தைகளைத் தொடர்ந்ததில்லை. அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வரம்பு மீறல்கள் முதலியன முஸ்லிம்களிடம் முகவரி தேடுகின்றன. அவர்கள் அகங்காரிகள் அல்லர். நம்மை அவர்கள் தாக்கினால் நம்மை தப்பிக்க விடமாட்டார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் நம்மை விட்டு தப்பித்து ஓட மாட்டார்கள். இந்த வையகம் தற்காலிகமானதுதான்; வரும் மறுவுலக வாழ்வே முடிவில்லாதது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. சென்ற இடமெல்லாம் செழிக்கிறது. வெற்றி கிடைக்கிறது.”
(இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” என்ற நூலிலிருந்து...)
No comments:
Post a Comment