புனித கஅபா ஆலயத்தில் தொழுகையில் ஆழ்ந்திருந்தார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அபூஜஹ்லும், அவன் கூட்டாளிகளும் இதனைக் கண்டனர். மற்றவர்களின் விசுவாசத்தைக் கேள்வி கேட்கும் முஹம்மத் பொது இடத்தில் எந்தவித அச்சமுமில்லாமல் தொழுகை நடத்துவதைக் கண்டு அவர்களுக்குப் பொறுக்கவில்லை.
அபூஜஹ்ல் கூறினான்: “ஓர் ஒட்டகத்தின் குடலை எடுத்து வாருங்கள். அதைப் போட்டு முஹம்மதை நாம் மூட வேண்டும்.”
உக்பா இப்னு அபீ முஐத் வேகமாக எழுந்து ஓடினான். பயங்கர நாற்றம் கொண்ட ஒரு குடலைக் கொண்டு வந்தான். அண்ணலார் தொழுகையில் ஸுஜூதுக்குச் சென்றபொழுது அவர்களின் கழுத்தில் அவர்கள் அந்தக் குடலைப் போட்டனர். அண்ணலார் தலையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். களிப்பில் கூச்சல் போட்டார்கள்.
அசாதாரண சப்தம் கேட்டு கஅபாவுக்கு ஓடி வந்தார் ஃபாத்திமா (ரலி). அங்கே தன் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிதும் தாமதிக்காமல் அந்தக் குடலை அகற்றினார் ஃபாத்திமா (ரலி). குறைஷிகளைக் கடும் வார்த்தைகளைக் கூறி ஆட்சேபித்தார்.
தொழுகையை முடித்த அண்ணலார் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா, உக்பா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணலார் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “அல்லாஹ்வே, இவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பாயாக.”
மேற்கண்டவர்கள் அனைவரும் பத்ரில் கொல்லப்பட்டார்கள் – ஒருவரைத் தவிர. அது உக்பா இப்னு அபீ முஐத். அவன் பத்ரில் கொல்லப்படாமல் தப்பித்தான். ஆனால் கைதியாகப் பிடிபட்டான். அவனைக் கொல்லுமாறு அண்ணலார் அருமைத் தோழர்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்கள்.
தாங்கள் பிரச்சாரம் செய்யும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களான இவர்களுக்கெதிராக இப்படியொரு நிலைப்பாடு எடுப்பதற்கு எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கிஞ்சிற்றும் தயக்கம் காட்டிடவில்லை.
பிரார்த்தனையை முடித்துவிட்டு அண்ணலார் ஃபாத்திமாவுடன் வீடு திரும்பினார்கள். வழியில் அபூ பக்திரி என்பார் அண்ணலாரையும், ஃபாத்திமாவையும் கண்டார். அவர்களின் முகபாவனையை வைத்து ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அபூ பக்திரி என்ன நடந்தது என்று கேட்டார்.
அண்ணலார் நடந்த சம்பவத்தை மறைப்பதற்கு முயன்றார்கள். ஒன்றும் இல்லை என்றார்கள். அபூ பக்திரி விடுவதாக இல்லை. “இல்லை. ஏதோ நடந்திருக்கிறது. நீங்கள் சொல்லாமல் உங்களைப் போக விடமாட்டேன்” என்றார்.
இவர் விட மாட்டார் என்றறிந்த எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள். இதனை சும்மா விடக்கூடாது என்பதாக இருந்தது அபூ பக்திரியின் நிலைப்பாடு. அப்படியே அண்ணலாரை வழிவிட அவருக்கு மனம் வரவில்லை.
அண்ணலாரை வலுக்கட்டாயப்படுத்தி மீண்டும் கஅபா ஆலயத்திற்கு அழைத்து வந்தார். அங்கே அபூஜஹ்லும், அவன் கூட்டாளிகளும் கூடியிருந்தனர். அபூ பக்திரி கேட்டார்: “அபுல் ஹிகம், முஹம்மதின் தலையில் குடலைப் போடுவதற்கு நீர் கூறினீரா?”
அபூஜஹ்லுக்கு அதனை மறுக்க முடியாத நிலை. “நான்தான் போடச் சொன்னேன்” என்றான். உடனே தன்னுடைய சாட்டையை உருவிய அபூ பக்திரி அபூஜஹ்லை அதனால் விளாச ஆரம்பித்தார். குறைஷிகளின் தலைவன் வலி தாங்க முடியாமல் அலறினான். அண்ணலார் அதனைத் தடுக்கவில்லை.
அபூஜஹ்ல் தாக்க முடியாத பரிசுத்தப் பசுவொன்றும் இல்லை என்று மக்களுக்கு விளங்கிற்று. மக்கள் இரு கூறுகளாகப் பிரிந்தார்கள். அபூ பக்திரிக்கு ஆதரவாக ஒரு கூட்டம். எதிராக ஒரு கூட்டம். இதனைக் கண்ட அபூஜஹ்ல் இவ்வாறு அலறினான்:
“உங்களுக்கு நாசம் உண்டாகட்டும். இதில் நீங்கள் பிளவு படாதீர்கள். நமக்கிடையே பிளவு உண்டானால் அது முஹம்மதுக்குச் சாதமாக மாறும்.”
இஸ்லாத்தின் எதிரிகள் எல்லை மீறும்பொழுது தகுந்த தண்டனைகள் அளிக்கப்படுவதற்கு அண்ணலார் சிறிதும் தயக்கம் காட்டிடவில்லை. இது எக்காலத்திற்கும் பொருந்தும்.
நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்
இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment