அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இஸ்லாத்திலிருந்து பலர் வெளியேறும் செய்திகள் நாலாபுறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. முஸைலமாவைப் போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று பிரகடனப்படுத்தி பிளவுகளை ஏற்படுத்த களம் இறங்கினார்கள்.
முதலாம் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய மிகக் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உமர் (ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி) போன்ற பெரும் பெரும் நபித்தோழர்களை அழைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆலோசனை நடத்தினார். இஸ்லாத்திற்கு துரோகம் இழைப்பவர்களை சிறிது காலம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்பதாக இருந்தது அவர்களின் கருத்துகள்.
உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்: “அல்லாஹ்வின் தூதரின் பிரதிநிதியாக இருக்கும் தாங்கள் மக்களுக்கெதிராக எதிர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம். அவர்களுடன் நல்ல உறவுகளை ஏற்படுத்துவது நல்லது.”
ஆனால் அபூபக்கர் (ரலி) அவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது:
“நான் தங்களின் உதவிகளை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இஸ்லாத்திற்கு முன்பு தீரராக இருந்த தாங்கள் இஸ்லாத்திற்குப் பின்னால் பலவீனராக ஆவதா? நான் யாருக்காக அஞ்சவேண்டும்? அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்து இட்டுக்கட்டப்பட்ட கவிதைகளையும், இலக்கியங்களையும் வைத்துக்கொண்டு நான் மக்களைக் கவர வேண்டும் என்றா கூறுகிறீர்கள்? ஒருபொழுதும் முடியாது. அல்லாஹ்வின் தூதர் விடை பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தி இங்கே நிலை பெற்று விட்டது. இறைச் சட்டங்களில் இனி மாற்றம் இல்லை. ஜக்காத்தின் பாகமாக அவர்கள் எனக்கு ஓர் ஒட்டகக் கயிறைத் தர மறுத்தால் கூட என் கைகளில் வாள் பிடிக்க சக்தியுள்ளவரை நான் அவர்களுடன் போராடுவேன்.”
அபூபக்கர் (ரலி) அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விவரித்து மக்களிடம் இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்:
“அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பிய சூழ்நிலையை நினைவுபடுத்திப் பாருங்கள். நாம் அன்று அறிவிலிகளாக இருந்தோம். அப்பொழுது இஸ்லாம் ஓர் அதிசயமாக நமக்குக் கிடைத்தது. இறைச்சட்டங்களை மக்கள் காற்றில் பறக்க விட்ட சமயத்தில்தான் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பினான். அரபிகளாகிய நாம் எழுத்தறிவும், மார்க்கமும் அற்றவர்களாக இருந்தோம். அல்லாஹ்வை நாம் வணங்கவில்லை. நமது வாழ்வு சீரழிந்து போயிருந்தது. நம்மில் சிலர் இறைத்தூதருடன் இணைந்தோம். அல்லாஹ் நம்மை அவனின் தூதரின் மூலமாக சக்திப்படுத்தி, ஒரு சமுதாயமாக உயர்த்தினான். எதிரிகளுக்கெதிராக நமக்கு வெற்றியையும் தந்தான்.
அரபிகளை எந்த வாகனத்திலிருந்து அல்லாஹ் கைப்பிடித்து இறக்கினானோ, அதே வாகனத்தில் ஷைத்தான் அவர்களைத் திருப்பி ஏற்றியிருக்கிறான். நம்மைச் சுற்றிலும் வாழும் அரபிகள் ஜக்காத் கொடுக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். பழைய வாழ்க்கைக்கு அவர்கள் மாறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் இஸ்லாத்தில் இருந்தபொழுதும் வழிதவறிய வாழ்க்கையோடு ஆர்வம் காட்டியிருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் அப்படியல்ல. அன்றும் இன்றும் நீங்கள் இஸ்லாத்துடன் இணைந்திருப்பவர்கள். அல்லாஹ்வின் தூதரின் இருப்பினால் ஏற்படும் நன்மையை நாம் இழந்துவிட்டாலும் அவர்கள் கொண்டு வந்த தீனில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். வழி தெரியாமலிருந்த இறைத்தூதருக்கு வழி காட்டியவன் அல்லாஹ். அல்லாஹ்தான் சத்தியம். அவனது மார்க்கத்தில் நான் தீமைக்கெதிராக போர் செய்வேன். அல்லாஹ்வின் வாக்கு முழுமையாகும் வரை போர் செய்வேன். அந்தப் போரில் மரணமடைந்தவர்கள் ஷஹீதுகள் என்ற ரத்த சாட்சிகள். அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தை வழங்குவான். எஞ்சியுள்ளவர்கள் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக நிலைநிற்பார்கள். ஒரு நாள் சத்தியம் வென்றே தீரும்.”
ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்தச் சமயத்தில் இந்த உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையென்றால் இஸ்லாத்தின் எதிர்காலம் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அண்ணலாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியதனால்தான் அரபிகள் வெற்றிக் கனிகளைப் பறித்தார்கள். அண்ணலார் காட்டித் தந்த அழகிய வழிமுறை தவிர்த்து வேறு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அது அட்டியின்றி அழிவிலேயே முடியும்.
இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment