“உங்களை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களும், உள்ளுக்குள் அடித்துக் கொள்பவர்களும் உலகில் யாராவது இருப்பார்களா? நீங்களா என்னை பயமுறுத்துகிறீர்கள்?”
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரதிநிதிகளிடம் பாரசீகச் சக்கரவர்த்தி இவ்வாறு கூறினார். எல்லையில் இஸ்லாமியப் படை முகாமிட்டிருந்தது. போரைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சக்கரவர்த்தியைக் காண வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை அதிக வெறுப்புடன் பார்த்தார் பாரசீகச் சக்கரவர்த்தி.
“வாழ்க்கைச் சிரமங்களும், கஷ்டங்களும் இருப்பதனால் ஏதாவது சாகசம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால் சொல்லுங்கள். நான் உங்களுக்கு உருப்படியான சில உதவிகளைச் செய்கிறேன். உங்கள் தலைவர்களுக்குப் போதுமான அளவுக்கு நல்ல பரிசுப் பொருட்களைத் தருகிறேன். உங்களது பிரச்னைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்கக் கூடிய நல்ல ஆட்சியாளரை உங்களுக்கு மேற்பார்வையாளராக நியமிக்கிறேன். தற்போது எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டோம் என்ற இறுமாப்பில் ஏமாந்து போகாதீர்கள். உங்களுடன் யுத்தம் செய்யும் அளவுக்கு பாரசீகர்களின் நிலை தாழ்ந்து போய்விடவில்லை. உங்களைத் தீர்த்துக் கட்டுவதற்கு எல்லையில் உள்ள எங்கள் கிராமத்தவரே போதும்.”
சக்கரவர்த்தி இவ்வாறு பேசி முடித்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிக் குழுவிலிருந்து முகீரா இப்னு ஷுக்பா உரையாற்ற ஆரம்பித்தார்.
“தாங்கள் உரையாற்றியதில் சில விளக்கங்களை நாங்கள் கூற வேண்டியுள்ளது. எங்களை விட மோசமான நிலை வேறு யாருக்கும் இல்லாமலிருந்தது. எங்களைப் போல் பட்டினி கிடந்தவர் வேறு யாருமில்லை. புழுக்களும், தேள்களும், பாம்புகளும் கூட எங்கள் உணவாக இருந்தது. பூமியின் மேற்பாகம்தான் எங்கள் வீடு. மிருகங்களின் தோல்தான் எங்கள் ஆடை. எங்களுக்குள் பரஸ்பரம் சண்டை போடுவதும், ரத்தம் சிந்துவதும்தான் எங்கள் வேலையாக இருந்தது. பெண் குழந்தைகளை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தோம்.”
முகீரா பேச்சை சிறிது நிறுத்தினார். சக்கரவர்த்திதன் பேச்சைக் கவனமாகக் கேட்கிறார் என்பதை உறுதிப்படுத்திய பின் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்.
“அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அல்லாஹ் எங்களிடையே உன்னதமான ஒரு மனிதரை நியமித்தான். அவர்களின் குடும்பமும், பரம்பரையும், வாழ்க்கையும் எல்லாம் நாங்கள் அறிந்தவை. அவர்கள் பிறந்த மண் நாங்கள் முன்பே ஆதரிக்கின்ற இடம். அவர்களது குடும்பம் மிகச் சிறந்த குடும்பம்.
அவர்களது பூர்வீகம் சிறப்புக்குரியது. தனிப்பட்ட முறையில் உன்னத குணத்தை வெளிப்படுத்துபவராகவும், வாய்மையாளராகவும், பொறுமையாளராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு காரியத்திற்கு எங்களை அழைத்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் அவர்களைப் புறக்கணித்தோம். அவர்கள் எங்களிடம் என்ன சொன்னாலும் நாங்கள் அவற்றை எதிர்த்தோம். அவர்களைக் குறை சொன்னோம். குற்றப்படுத்தினோம். ஆனால் அவர்கள் அறிவித்தவையெல்லாம் அப்படியே நடந்தேறியதை நாங்கள் கண்டோம். இறுதியில் நாங்கள் அவர்களை அங்கீகரித்தோம். எங்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இடையில் இறைத்தூதராக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அறிவித்த வசனங்கள் அனைத்தும் அல்லாஹ் அளித்த வசனங்களாகும். அவர்கள் எங்களுக்கு இட்ட கட்டளைகள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகளாகும்.
அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்: “உங்கள் இறைவன் உங்களிடம் கூறுகின்றான். அவன் ஏகன். இணை துணை இல்லாதவன். அவனுக்குப் பங்காளிகள் இல்லை. அண்ட சராசரங்கள் வருவதற்கு முன்பே இருப்பவன். அனைத்துப் பொருட்களையும் அவனே படைத்தான். அவனைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் அழிந்தும் போகும். அனைவரும் அவன் பக்கமே திரும்பவேண்டும். அவன் உங்களுக்கு அருள் பாலித்திருக்கின்றான். மரணத்திற்குப் பின்பே உங்களின் யதார்த்த வாழ்க்கை தொடங்கும். அந்த வாழ்க்கைக்கு அந்தமே இல்லை. அங்கே வெற்றி பெறுவதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வழி சொல்லித் தருகிறார்கள். அந்த வழியைப் பின்பற்றியவர்கள் அமைதியின் உலகத்தை அடைவார்கள்.”
முகீரா தொடர்ந்தார் : “நாங்கள் அவர்களை அங்கீகரித்தோம். அவர்கள் காட்டித் தந்த வழியில் எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.
அவர்களுக்குப் பின்பு அவர்களின் முதல் சிஷ்யர் எங்களுக்குத் தலைவரானார். அவர் மரணித்த பின்பு இப்பொழுது இரண்டாவது ஆட்சி நடக்கிறது. நாங்கள் தங்களிடம் வந்தது இந்தப் புனிதப் பாதையில் தங்களை அழைக்கவே! மாறாக, உங்களிடம் உதவி பெறுவதற்காக அல்ல. இந்த இறை மார்க்கத்தைப் பின்பற்றினால் இம்மையிலும், மறுமையிலும் தாங்கள் வெற்றி பெறலாம். உலக காரியங்களில் நாம் சமமான பங்காளிகளாக இருப்போம்.”
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பாரசீகச் சக்கரவர்த்திக்கு தாங்க முடியவில்லை. கண்கள் கனலைக் கக்கின. கோபம் கொப்பளிக்க, “இவற்றையெல்லாம் சொல்லி என்னை விரட்டுகிறாயா?” என்று அலறினார்.
அந்த அலறல் ஓர் ஆரம்பத்திற்கு அரிச்சுவடி இட்டது.
ஆம்! அது ஏகாதிபத்திய இழிவின் ஆரம்பம். சாம்ராஜ்யங்களின் சரிவின் ஆரம்பம்.
இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையா வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment