Monday, 30 September 2013

அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்!


ஹுனைன் யுத்தம் நடந்தபொழுது முஸ்லிம்களுக்கு நிறைய கனீமத் பொருட்கள் கிடைத்தன. அந்தப் பொருட்களைப் பங்கீடு செய்யாமல் அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு அண்ணலார் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாயிஃப் நோக்கி தங்கள் படையுடன் புறப்பட்டார்கள்.

திரும்பி வரும்பொழுது முஸ்லிம் படை ஜிஃரான் என்னும் இடத்தை அடைந்தது. போரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அங்கேதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பொருட்களைக் கணக்கெடுப்பதற்காக அண்ணலார் ஆளை நியமித்தார்கள்.

கணக்கெடுப்புக்குப் பின் அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பங்கின் உரிமை அண்ணலாருக்குரியது. தங்களுக்குக் கிடைத்த பங்கை அண்ணலார் அப்பொழுதே மக்களுக்கிடையில் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்று சொல்லொணா துயரங்களை அனுபவித்த ஏராளம் நபித்தோழர்கள் அண்ணலாருடன் இருந்தார்கள். பொருட்களைப் பங்கிடும் பொழுது தங்களுக்கு கணிசமான பங்குகள் கிடைக்கும் என்று நியாயமாக அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அண்ணலார் இந்தத் தடவை கருத்தில் கொண்டது அவர்களையல்ல. முஸ்லிம்களுடன் போர் செய்து தோற்று, அதிகாரம் அத்தனையும் இழந்து நிர்கதியான நிலையில் நிறைய பிரமுகர்கள் மக்காவில் இருந்தார்கள். அவர்களெல்லாம் பூரண மனதுடன் இஸ்லாத்திற்குள் வரவில்லை. அவர்களின் மனநிலையையும், எதிர்பார்ப்பையும் புரிந்து வைத்திருந்தார்கள் அண்ணலார்.

எனவே இந்தத் தடவை அவர்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். 100 ஒட்டகங்களும், நிறைய தங்கமும் அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தன. ஹகீம் இப்னு ஹுஸாம் (ரலி) என்பவருக்கும் அதே அளவில் அண்ணலார் வழங்கினார்கள். ஹகீம் திருப்தியடையவில்லை என்றறிந்த பொழுது இன்னும் கொடுத்தார்கள்.

அண்ணலார் அவரிடம் இவ்வாறு கூறினார்கள்: “பொருள் என்பது இருதயமும், இனிப்பும் போன்றது. நல்லெண்ணத்தோடு அதனை அணுகுகிறவர்களுக்கு அது அருளாக மாறும்.

பேராசைப்படுபவர்களுக்கு அது ஒருபோதும் திருப்தியளிக்காது. எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்காதவனைப் போல் அவன் இருப்பான். கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது.”

ஒரு கொட்டகை முழுவதும் ஒட்டகங்களும், ஆடுகளும் நிறைந்து நின்றிருந்தன. அதனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் ஸஃப்வான் இப்னு உமய்யா(ரலி). இதனைக் கவனித்த நபிகளார் (ஸல்) அவர்கள் அவரிடம் இவ்வாறு கேட்டார்கள்: “என்ன, உங்களுக்கு அது வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?”

அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவேயில்லை. ஸஃப்வான் விக்கித்து நின்றார். பின்னர் சொன்னார்: “நிச்சயமாக அதனை யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள்?”

ஸஃப்வான் சிறிதும் எதிர்பார்க்காத பதில் அண்ணலாரிடமிருந்து வந்தது: “அப்படியானால் அவை முழுவதையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.”
புதிய விசுவாசிகளிடம் அண்ணலார் இப்படி நடந்துகொண்ட விதத்தை அன்சாரிகள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருசிலர் இப்படிக் கூறினார்கள்: “இறைத்தூதர் இப்பொழுது அவர்களின் சொந்தக்காரர்களுக்கே அனைத்தையும் கொடுக்கிறார்கள்.”

இதனைக் கேட்ட ஸஅத் இப்னு உபாதா (ரலி) உடனே இறைத்தூதரிடம் இந்தச் செய்தியை அறிவித்தார்கள்.

“நீர் என்ன நினைக்கிறீர்?” என்று அண்ணலாரிடம் ஸஅதிடம் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வாறு பதில்பகர்ந்தார்: “நானும் என்னுடைய ஆட்களில் உள்ளவன்தானே…”

அன்சாரிகள் அனைவரையும் அழைத்து வருமாறு ஸஅதிடம் அண்ணலார் கூறினார்கள். ஒன்று கூடிய அன்சாரிகளிடம் அண்ணலார் இவ்வாறு உரையாற்ற ஆரம்பித்தார்கள்:

“அன்சாரிகளே, போரில் கிடைத்த பொருட்களைப் பங்கு பிரித்துக் கொடுத்த விஷயத்தில் உங்களுக்கு திருப்தியில்லை என்று நான் அறிந்தேன். அது நியாயம்தான். ஆனால் சில விஷயங்களை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் வழி தவறி வாழ்ந்த சமயத்தில்தான் நான் உங்களிடம் வந்தேன். என் மூலம் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி நல்கினான். வறியவர்களான உங்களை அல்லாஹ் வளப்படுத்தித் தந்தான். உங்களுக்குள் பகைவர்களாக இருந்தீர்கள். அல்லாஹ் என் மூலம் உங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தினான். சரிதானே…?”

அன்சாரிகள் கூறினார்கள்: “மிகச் சரி. நாங்கள் அதற்காக உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.”

அண்ணலார் தொடர்ந்தார்கள்: “நீங்கள் என்னிடம் கூறலாம். சொந்த மக்கள் உதறித் தள்ளிய உங்களை நாங்கள் அரவணைத்துக் கொண்டோமல்லவா…  எந்த உதவியும் இல்லாமல் வந்த உங்களுக்கு அபயம் அளித்தோமல்லவா… இப்படி நீங்கள் கேட்டால் அது மிகச் சரியே. நான் அதனைச் சம்மதிக்கிறேன். இருந்தாலும் அன்சார் சமூகமே, மக்கள் ஆடு, மாடுகளுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும் பொழுது, அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் ஆகியோருடன் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போவதை நீங்கள் விரும்பவில்லையா?”

அன்சாரிகள் ஒரே குரலாகச் சொன்னார்கள்: “எங்களுக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் போதும்.”

எம்பெருமானார்(ஸல்) அவர்களை எண்ணிப் பார்க்கும் இந்த வேளையில் அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும் மிகச் சிறப்பு வாய்ந்தது. பலத்தின் மொழியையும், பணத்தின் மொழியையும் மட்டுமே புரிகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்த உலகம் இந்தச் சம்பாஷணையை உட்கொள்ளுமா?


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

சாம்ராஜ்யங்களின் சரிவு!


“உங்களை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களும், உள்ளுக்குள் அடித்துக் கொள்பவர்களும் உலகில் யாராவது இருப்பார்களா? நீங்களா என்னை பயமுறுத்துகிறீர்கள்?”

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரதிநிதிகளிடம் பாரசீகச் சக்கரவர்த்தி இவ்வாறு கூறினார். எல்லையில் இஸ்லாமியப் படை முகாமிட்டிருந்தது. போரைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சக்கரவர்த்தியைக் காண வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை அதிக வெறுப்புடன் பார்த்தார் பாரசீகச் சக்கரவர்த்தி.

“வாழ்க்கைச் சிரமங்களும், கஷ்டங்களும் இருப்பதனால் ஏதாவது சாகசம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால் சொல்லுங்கள். நான் உங்களுக்கு உருப்படியான சில உதவிகளைச் செய்கிறேன். உங்கள் தலைவர்களுக்குப் போதுமான அளவுக்கு நல்ல பரிசுப் பொருட்களைத் தருகிறேன். உங்களது பிரச்னைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்கக் கூடிய நல்ல ஆட்சியாளரை உங்களுக்கு மேற்பார்வையாளராக நியமிக்கிறேன். தற்போது எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டோம் என்ற இறுமாப்பில் ஏமாந்து போகாதீர்கள். உங்களுடன் யுத்தம் செய்யும் அளவுக்கு பாரசீகர்களின் நிலை தாழ்ந்து போய்விடவில்லை. உங்களைத் தீர்த்துக் கட்டுவதற்கு எல்லையில் உள்ள எங்கள் கிராமத்தவரே போதும்.”

சக்கரவர்த்தி இவ்வாறு பேசி முடித்தவுடன் முஸ்லிம் பிரதிநிதிக் குழுவிலிருந்து முகீரா இப்னு ஷுக்பா உரையாற்ற ஆரம்பித்தார்.

“தாங்கள் உரையாற்றியதில் சில விளக்கங்களை நாங்கள் கூற வேண்டியுள்ளது. எங்களை விட மோசமான நிலை வேறு யாருக்கும் இல்லாமலிருந்தது. எங்களைப் போல் பட்டினி கிடந்தவர் வேறு யாருமில்லை. புழுக்களும், தேள்களும், பாம்புகளும் கூட எங்கள் உணவாக இருந்தது. பூமியின் மேற்பாகம்தான் எங்கள் வீடு. மிருகங்களின் தோல்தான் எங்கள் ஆடை. எங்களுக்குள் பரஸ்பரம் சண்டை போடுவதும், ரத்தம் சிந்துவதும்தான் எங்கள் வேலையாக இருந்தது. பெண் குழந்தைகளை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தோம்.”

முகீரா பேச்சை சிறிது நிறுத்தினார். சக்கரவர்த்திதன் பேச்சைக் கவனமாகக் கேட்கிறார் என்பதை உறுதிப்படுத்திய பின் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்.

“அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அல்லாஹ் எங்களிடையே உன்னதமான ஒரு மனிதரை நியமித்தான். அவர்களின் குடும்பமும், பரம்பரையும், வாழ்க்கையும் எல்லாம் நாங்கள் அறிந்தவை. அவர்கள் பிறந்த மண் நாங்கள் முன்பே ஆதரிக்கின்ற இடம். அவர்களது குடும்பம் மிகச் சிறந்த குடும்பம்.
அவர்களது பூர்வீகம் சிறப்புக்குரியது. தனிப்பட்ட முறையில் உன்னத குணத்தை வெளிப்படுத்துபவராகவும், வாய்மையாளராகவும், பொறுமையாளராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு காரியத்திற்கு எங்களை அழைத்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் அவர்களைப் புறக்கணித்தோம். அவர்கள் எங்களிடம் என்ன சொன்னாலும் நாங்கள் அவற்றை எதிர்த்தோம். அவர்களைக் குறை சொன்னோம். குற்றப்படுத்தினோம். ஆனால் அவர்கள் அறிவித்தவையெல்லாம் அப்படியே நடந்தேறியதை நாங்கள் கண்டோம். இறுதியில் நாங்கள் அவர்களை அங்கீகரித்தோம். எங்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இடையில் இறைத்தூதராக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அறிவித்த வசனங்கள் அனைத்தும் அல்லாஹ் அளித்த வசனங்களாகும். அவர்கள் எங்களுக்கு இட்ட கட்டளைகள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகளாகும்.

அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்: “உங்கள் இறைவன் உங்களிடம் கூறுகின்றான். அவன் ஏகன். இணை துணை இல்லாதவன். அவனுக்குப் பங்காளிகள் இல்லை. அண்ட சராசரங்கள் வருவதற்கு முன்பே இருப்பவன். அனைத்துப் பொருட்களையும் அவனே படைத்தான். அவனைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் அழிந்தும் போகும். அனைவரும் அவன் பக்கமே திரும்பவேண்டும். அவன் உங்களுக்கு அருள் பாலித்திருக்கின்றான். மரணத்திற்குப் பின்பே உங்களின் யதார்த்த வாழ்க்கை தொடங்கும். அந்த வாழ்க்கைக்கு அந்தமே இல்லை. அங்கே வெற்றி பெறுவதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வழி சொல்லித் தருகிறார்கள். அந்த வழியைப் பின்பற்றியவர்கள் அமைதியின் உலகத்தை அடைவார்கள்.”

முகீரா தொடர்ந்தார் : “நாங்கள் அவர்களை அங்கீகரித்தோம். அவர்கள் காட்டித் தந்த வழியில் எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.

அவர்களுக்குப் பின்பு அவர்களின் முதல் சிஷ்யர் எங்களுக்குத் தலைவரானார். அவர் மரணித்த பின்பு இப்பொழுது இரண்டாவது ஆட்சி நடக்கிறது. நாங்கள் தங்களிடம் வந்தது இந்தப் புனிதப் பாதையில் தங்களை அழைக்கவே! மாறாக, உங்களிடம் உதவி பெறுவதற்காக அல்ல. இந்த இறை மார்க்கத்தைப் பின்பற்றினால் இம்மையிலும், மறுமையிலும் தாங்கள் வெற்றி பெறலாம். உலக காரியங்களில் நாம் சமமான பங்காளிகளாக இருப்போம்.”

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பாரசீகச் சக்கரவர்த்திக்கு தாங்க முடியவில்லை. கண்கள் கனலைக் கக்கின. கோபம் கொப்பளிக்க, “இவற்றையெல்லாம் சொல்லி என்னை விரட்டுகிறாயா?” என்று அலறினார்.
அந்த அலறல் ஓர் ஆரம்பத்திற்கு அரிச்சுவடி இட்டது.

ஆம்! அது ஏகாதிபத்திய இழிவின் ஆரம்பம். சாம்ராஜ்யங்களின் சரிவின் ஆரம்பம்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையா வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

Sunday, 29 September 2013

நயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்!


அது ஒரு கடுமையான வெப்பக்காலம், உணவுப் பற்றாக்குறையும் நிலவியது.  மக்கள் அறுவடைக்காக காத்திருந்தனர். இந்த சமயத்தில் மிக நீண்டதூர பயணத்தை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அருமை நபிகள் (ஸல்) அவர்களிடமிருந்து இதோ கட்டளை வருகிறது : “எல்லோரும் தபூக் புறப்படத் தயாருங்கள்!”

மதீனாவை தாக்குவதற்காக தபூக்கில் எதிரிகள் படை திரண்டு கொண்டிருப்பதாக நபிகளாருக்குத் தகவல் கிட்டியதாலேயே இந்த உத்தரவு.
அன்றைய வல்லரசான, அதிக சக்தி படைத்த ரோமர்கள்தான் அங்கே எதிரிகள்.

கரடுமுரடான, கடினமான பாலைவனப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்தே தபூக்கை அடையவேண்டும். முஸ்லிம்கள் படை திரண்டு செல்வதற்கு சற்றும் சாதகமில்லாத சூழ்நிலையே இருந்தது. அப்பொழுது சூழ்நிலை சாதகமாகும் வரை காத்திருப்பது ஆபத்தில் முடியும் என்று கருணை நபியவர்கள் கருதியதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சாதாரணமாக செய்வது போலல்லாமல் இந்த யுத்தம் நடக்கப் போவதைப் பிரகடனப்படுத்தினார்கள் அண்ணலார்.

முடிந்தவரை அதிகம் பேரை படையில் சேர்ப்பதுதான் இதன் நோக்கம். அத்தோடு இந்த யுத்தச் செலவிற்காக தங்களால் முடிந்த அளவு நன்கொடைகளைத் தருமாறு அண்ணலார் அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

நபித்தோழர்களும் தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டு வந்து தந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அண்ணலார் (ஸல்) அவர்கள் குடும்பத்திற்காக என்ன விட்டு வந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்கள்.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் வாக்களித்த நன்மையையும் பிரதிபலனையும் அவர்களுக்காக விட்டு வைத்து வந்துள்ளேன் என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் பதில் பகர்ந்தார்கள்.

மண்டையைப் பிளக்கும் வெயிலின் உக்கிரத்தில் வறண்ட பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை நபித்தோழர்கள் செய்தார்கள். இந்த தடவை அவர்கள் சந்திக்கப் போகும் எதிரிப் படை மிகப் பலமுள்ளது.

பெர்சியர்களை வென்ற  தைரியத்திலும் தன்னம்பிககையிலும் திளைத்திருந்தது ரோமப்படை. அதனை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.
ஆனால் அண்ணலாரின் உத்தரவுக்கு அட்டியின்றி அடிபணியும் தோழர்கள் நாலாப் புறங்களிலிருந்ததும் யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக மதீனா நோக்கி வரத்தொடங்கினார்கள்.

வழக்கம் போல் நயவஞ்சகர்கள் இந்த தடவையும் தங்கள் வேலையை காட்டினர். சூழ்நிலைகள் கொஞ்சம் கூட சாதகமில்லாத காலக்கட்டத்தில் அண்ணலார் அவர்களின் இந்த கட்டளையை அவர்கள் விமர்சித்தார்கள்.

வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் மிக நீண்ட தூரம் பாலைவனத்தில் பயணம் செய்து போருக்குப் போவது முட்டாள்தனம் என்று மக்களிடம் அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.  அத்தோடு அங்கே நிலவி வந்த உணவு பற்றாக் குறையையும் ரோமர் படையின் மிருக பலத்தையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் பீதியைப் பரப்பினார்கள். இதற்கு அவர்கள் யூதர்களின் உதவியை நாடவும் தயங்கவில்லை. ஹீவைலிம் என்ற யூதனின் வீட்டில் சில நயவஞ்சகர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்வதாக நபிகளாருக்கு தகவல் கிடைத்தது.

மக்களை யுத்தத்திற்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கு என்னென்ன யுக்திகளைக் கையாளலாம் என்று அவர்கள் அங்கே ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

நபிகளார் இதனை இலேசாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, ஆழமாகக் கருத்தில் கொண்டார்கள். தல்ஹத்திப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அந்த வீட்டை நோக்கி அனுப்பி வைத்தார்கள்.

அந்த வீட்டையடைந்த அக்குழு,  அதற்கு தீ வைத்தது. அந்த வீட்டிலுள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஓடினார்கள்.  ஒரு ஆள் மட்டும் காலில் காயத்துடன் அந்த வீட்டின் பின்புறம் வழியாக தப்பித்தார். மீதி இருந்த அத்தனை பேரும் தீயில் கருகி இறந்தனர். யுத்தத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த இன்னபிற நயவஞ்சகர்களுக்கு இது ஒரு பயங்கர எச்சரிக்கை மணியாய் ஒலித்தது.  நயவஞ்சகர்களுக்கெதிரே கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அல்லாஹ்வின் அனுமதி கிடைத்திருந்தும் நபிகளார் அதனை நீட்டிப் போட்டே வந்தார்கள்.

முஹம்மத் (ஸல்) தனது சொந்த மக்களுக்கெதிராகவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று எதிரிகள் பிரச்சாரம் செய்வார்கள் என்ற ஒரே காரணம்தான் அதற்கு இருந்தது.

ஆனால் எதிரிகளின் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வீட்டில் யூதர்களுடன் சதியாலோசனை செய்யும் அளவுக்கு வந்து விட்டவுடன் அண்ணலார் அவர்கள் ஒன்றும் செய்யாமலிருக்கவில்லை. கடுமையான நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின் நயவஞ்சவகர்களுக்குத் தலையைத் தூக்குவதற்கு மட்டுமல்ல வெளியே தலைகாட்டுவதற்கே தைரியம் வரவில்லை.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

பெருமானார் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம்!


உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் கூட சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம்.மனதில் காயம் ஏற்பட்டால் எளிதில் குணப்படுத்த இயலுமா?

வார்த்தைகளுக்கும், பாரபட்சத்திற்கும் வாளை விடக் கூர்மையான சக்தி உண்டு. நஷ்டமடைந்த பொருளாதாரமும், இழந்த உரிமைகளும் திரும்பக் கிடைத்தாலும் பாரபட்சம் அல்லது புறக்கணிப்பு ஏற்படுத்திய மனக்காயம் அவ்வளவு எளிதாக ஆறாது.

பாரபட்சம் காட்டுவதன் நோக்கம் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல. அது ஒரு மானசீகமான போரும் ஆகும். பாரபட்சத்திற்கு இரையாக்கப்படும் சமூகம் தங்களுக்கு பாதிக்கப்படுவது உரிமைகள் மட்டும்தான் என்று எண்ணிவிடக் கூடாது. தொடர்ந்து பழிகள் சுமத்தப்பட்டு அடி மேல் அடி வாங்கும் ஒரு சமுதாயம் சமூக அடிமைத்தனத்திற்கு தள்ளப்படும் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

மதீனாவில் அன்சாரிகளுக்கு அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தாராளமாக பொருள்களை வினியோகம் செய்தார்கள். அதன் பிறகு அவர்களிடம் அண்ணலார் இவ்வாறு கூறினார்கள்:

“அன்சாரிகளே,இஸ்லாமிற்காக நீங்கள் செய்த அபரிமிதமான அளப்பரிய சேவைகளுக்கு அல்லாஹ் உங்களுக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக. நீங்கள் எனக்கு அறிமுகமாகிய நாள் முதல் உங்களை உதவி செய்யும் நற்குணமுடையவர்களாகவும், பொறுமையாளர்களாகவுமே நான் கண்டேன். எனது காலத்திற்குப் பிறகு உங்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாம். ஆனால் என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மிக்க உன்னதமான சுவர்க்கம் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.”

உபைத் இப்னு ஹுளைர் (ரலி) அந்தக் கூட்டத்தில் இருந்தார். இறுதித்தூதர் (ஸல்)அவர்களின் மறைவுக்குப் பிறகு நீண்ட நாட்கள் அவர் உயிர் வாழ்ந்தார். கலீஃபா உமர் (ரலி)அவர்களின் ஆட்சியின்பொழுது ஒருமுறை மதீனாவில் எல்லோருக்கும் ஆடை வினியோகிக்கப்பட்டது.அளவு குறைந்ததாக இருந்ததால் உபைத் அதனை உபயோகிக்கவில்லை.

இப்படியிருக்க ஒருமுறை மஸ்ஜிதில் ஒரு குறைஷி இளைஞரை உபைத் (ரலி) காண நேரிட்டது.தனக்கு வினியோகிக்கப்பட்ட அதே ஆடையை அவன் அணிந்திருந்தான். ஆனால் தனக்கு வழங்கப்பட்டதை விட அதிகளவில் அந்த ஆடை இருந்ததை உபைத் (ரலி) கவனித்தார். பாரபட்சத்தை உணர்ந்தார்.
அண்ணலார் அறிவித்த முன்னறிவிப்பு அவரது நினைவுக்கு வந்தது. அருகிலிருந்தவர்களிடம் உபைத் (ரலி) இவ்வாறு கூறினார்: “எனக்குப் பிறகு நீங்கள் பாரபட்சம் காட்டப்படுவீர்கள் என்று அண்ணலார் சொன்னது இதோ தொடங்கியிருக்கிறது.”

இது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காதுகளுக்கு எட்டியது. பாரபட்சம் குறித்து எள் முனையளவு கூட எண்ணம் கொண்டிராத உமர் (ரலி) அவர்கள் இதனை எப்படி சகித்துக்கொள்வார்கள்?அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.

மஸ்ஜிதுக்கு விரைந்தோடி வந்தார்கள். அப்பொழுது உபைத் (ரலி) தொழுதுகொண்டிருந்தார்.தொழுகை முடியும் வரை உமர் (ரலி) அவர்கள் காத்திருந்தார்கள். உபைத் (ரலி) தொழுது முடித்த பின் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்: “தாங்கள் என்ன சொன்னீர்கள்? இந்தக் குறைஷி இளைஞருக்கு நான் அதிகமான துணி கொடுத்துவிட்டேன் என்றா?”

உபைத் (ரலி) தனது தரப்பு விளக்கத்தைக் கூறினார்: “எனக்குக் கிடைத்த ஆடையின் அளவு அந்த இளைஞருக்குக் கொடுக்கப்பட்ட ஆடையின் அளவை விடக் குறைவாக இருந்தது”

இதனால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் உருவானது உண்மைதான் என்று உபைத் ஒப்புக்கொண்டார்.

உமர் (ரலி) அவர்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள்: “தங்களை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக.அந்த ஆடையைக் குறைஷி இளைஞருக்கு நான் கொடுக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அகபாவில் வைத்து உடன்படிக்கை செய்தவரும், அண்ணலாருடன் ஏராளமான யுத்தங்களில் கலந்துகொண்ட ஒரு சிறந்த அன்சாரிக்குத்தான் நான் அந்த ஆடையை அளித்தேன். இந்த இளைஞர் அந்த அன்சாரித் தோழரிடமிருந்து அதனை விலைக்கு வாங்கியுள்ளார்.”

உபைதுக்கு நடந்த நிகழ்வு புரிந்தது. உமர் (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்: “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம் என்னுடைய காலத்திலேயே வரும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?”

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டது ஒரு துணிதான். இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர் அதனை எளிதாக எடுத்துக்கொள்வில்லை. தனது ஆட்சியில் சாமானியர்கள் யாரும் பாரபட்சம் காட்டப்பட்டுவிட்டோம் என்று துளி கூட எண்ணி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

சமுதாயப் பாதுகாப்புக்கு கறுப்புச் சட்டங்களை விட மேலானது இந்தப் பேணுதல்தான் என்றால் அது மிகையல்ல.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

பால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு!


மதீனாவில் ஒரு காட்சி. கடைத் தெருவில் மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்து சில காலம்தான் ஆகியிருந்தது. ஆதலால் மக்களின் பேச்சு முழுவதும் அவர்களின் வருகையைச் சுற்றியே அமைந்திருந்தது.

கைஸ் இப்னு மதாதியா என்பவர் அந்த மக்களிடம் இவ்வாறு உரக்கக் கூறினார்: “அவ்ஸ் கோத்திரமும், கஸ்ரஜ் கோத்திரமும் இந்த மனிதருக்கு உதவி செய்வதற்குத் தீர்மானித்திருப்பது சரிதான். நாம் அதனைப் பின்பற்றவும் செய்வோம். மக்காவிலிருந்து அவர் கூட வந்தவர்களையும் நாம் ஆதரிப்போம்.

ஆனால் பாரசீகத்திலிருந்து வந்துள்ள ஸல்மானுக்கும், ரோமிலிருந்து வந்துள்ள ஸுஹைபுக்கும், அபிசீனியாவிலிருந்து வந்துள்ள பிலாலுக்கும் இங்கே என்ன வேலை?”

மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும், மதீனாவிலுள்ள அன்சாரிகளுக்கும் சகோதரத்துவம் வேர் பிடித்து வளர்ந்து வந்த காலகட்டம் அது. இரத்த பந்தத்தை வெல்லும் விதமாக இந்த இலட்சிய பந்தம் இறுகிப் படர்ந்து விரிந்து கொண்டிருந்தது.

மக்காவிலிருந்து வந்தவர்களை மதீனாவாசிகள் ஆரத் தழுவி வரவேற்றார்கள். தங்கள் குடும்பங்களில் ஓரங்கமாக ஆக்கினார்கள். வீடுகளையும், விவசாய நிலங்களையம், வியாபாரங்களையும் விருந்தினர்களுக்குப் பங்கு வைத்தார்கள்.தங்கள் சொத்துகளை வாகாய்ப் பிரித்துக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

இதனால் அந்தப் பிரதேசத்தின் முகச் சாயலே மாறி பிரகாசித்தது. யத்ரிப் நகரம் மறைத்தூதரின் மதீனாவானது.இதற்கிடையில்தான் இந்தப் பிரதேச வெறியின் விஷ வித்து தூவப்பட்டது. மக்காக்காரர்கள், மதீனாக்காரர்கள் என்ற வேறுபாடு மறைந்து விசுவாசிகளுக்கிடையில் உருவான புதிய பந்தத்தை தன்னுடைய குறுகிய கண் கொண்டு கைஸ் பார்த்தார்.

அரபுகளுக்கிடையில் உண்டான ஐக்கியமாக கைஸ் இதனைக் கண்டார். ஆனால் அரபியரல்லாத ஸல்மான் ஃபார்சியும்,ஸுஹைப் ரூமியும், பிலாலும் அவருடைய பார்வையில் இந்த ஐக்கிய வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டியவர்கள்.அதாவது பால் சுரக்கும் பசுவின் மடியிலும் கொசுவிற்கு விருப்பம் இரத்தம்தான் என்ற உதாரணத்திற்கு அவர் இலக்கானார்.

கோத்திர வெறியும், பிரதேசப் பித்தும் பொடிப் பொடியாய் நொறுங்கி விசாலமான சகோதரத்துவம் விந்தையாக வளர்ந்து வந்த பொழுது, அங்கே புதியதொரு பிரிவினைவாதத்தைக் கண்டுபிடித்து உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினார் கைஸ்.

மதீனாவாசியான முஆத் இப்னு ஜபலுக்கு (ரலி) இதனைக் கண்டு பொறுக்கவில்லை. கைஸைப் பிடித்திழுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார். கைஸின் கூற்றைக் கேட்டறிந்த அண்ணலாருக்கு விடயத்தின் விபரீதம் புரிந்தது. தொழுகைக்கு அழைப்பது போல் மக்களை மஸ்ஜிதுக்கு அழைக்குமாறு அண்ணலார் ஆணையிட்டார்கள். மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி அலை மோதியது.

அல்லாஹ்வின் அறுதித் தூதர் அஹமத் (ஸல்) அவர்கள் மக்களிடம் இவ்வாறு உரையாற்றினார்கள்:
“மக்களே, உங்களின் இறைவன் ஏகன். உங்களின் தந்தை ஒருவர். உங்களின் மார்க்கம் ஒன்று. நீங்கள் ஒன்றை நினைவு கூர வேண்டும். இந்த அரபி மொழி உங்களின் தந்தையோ, தாயோ அல்ல. அது ஒரு மொழி மட்டுமே. அரபி மொழி பேசுபவர்களை அரபிகள் என்றழைக்கின்றனர். அவ்வளவுதான்.”

“இறைவனின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஒரே இறைவனின் அடிமைகள். பிள்ளைகளின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஆதமின் பிள்ளைகள். மதத்தின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் அல்லாஹ்வின் ஒரே மார்க்கத்தின் அணியினர்.”
முஆத் இப்னு ஜபல் (ரலி) கேட்டார்: “இறைத்தூதரே, இந்த நயவஞ்சகனுடைய விடயத்தில் தாங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?”

அண்ணலார் கூறினார்கள்:
“நரகத்தின் பக்கம் செல்வதற்கு நீ அவரை விட்டு விடு.”
ஒரு பக்கம் இனிப்பு. மறு பக்கம் காரம். பிளவுபடுதலின் சுவையில் வித்தியாசம் உண்டு. குலம், தேசம், மொழி, குடும்பம்,கலாச்சாரம், நிறம் போன்று வேறுபாடுகளின் ஆயுதங்களை உயர்த்துபவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் பற்றையும்,மற்றவற்றில் வெறுப்பையும் காட்டுவார்கள். சகோதரத்துவத்தின் விசாலத்தை உட்கொள்ள அவர்களால் முடியாது.ஒற்றுமையின் மேடையில் சந்தேகங்களை அரங்கேற்ற இவர்கள் என்றும் தயாராக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் கபடத்தன்மை வெளியில் வரும்.

வேறுபாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்கள் எக்காலமும் சமுதாயத்தைச் சக்திப்படுத்துவதற்கு எதிராகவே இருப்பார்கள்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

பதவிகள் பறிக்கப்படும்பொழுது…


“நீங்கள் எனக்கு அமைத்துத் தந்த அதிகாரம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நீங்கள் என்னிடமிருந்து அந்த அதிகாரத்தைப் பறித்தெடுத்தது எனக்குத் துக்கத்தையும் தரவில்லை.”

காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்தது. படைத் தலைவர் பதவியிலிருந்து அவரை மாற்றியதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக வீட்டுக்கு வந்திருந்த கலீஃபாவிடம்தான் அவர் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக அங்கீகரிக்க ஆரம்ப கட்டத்தில் தயக்கம் காட்டினார் காலித் இப்னு ஸஈத். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் காலிதுக்கு எந்தப் பகையும் இல்லை.

ஆனால் அதிகாரத்தில் அல்லாஹ்வின் தூதருக்கு அடுத்தபடியாக வருவதற்கு ஹாஷிம் குலத்தில் யாரேனும் ஒருவர் பொருத்தமாக இருப்பார் என்று அவர் எண்ணினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்தபொழுது காலித் மதீனாவில் இல்லை.

ஆதலால் அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாகப் பொறுப்பேற்ற சூழ்நிலைகளை, காரண காரியங்களை அவர் நேரில் கண்டறியவில்லை. யமனில் கவர்னராக இருந்த காலித் வேறொரு நபரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மதீனா வர கொஞ்சம் காலதாமதம் ஆனது.

மதீனா வந்தடைந்ததும் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உடனே உடன்படிக்கை செய்துகொள்ள அவர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. கலீஃபா அவரை அதற்காக நிர்ப்பந்திக்கவும் இல்லை. இந்த விடயம் விவாதத்திற்கு வந்தபொழுது காலித் இப்னு ஸஈத் இஸ்லாத்திற்காகச் செய்த சேவைகளையும், அவரது நல்ல பல குணங்களையும் எடுத்துரைத்தார் கலீஃபா அவர்கள்.

கலீஃபா அவரைக் குறித்து எந்தவொரு தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. நிறைய நாட்கள் கழித்து காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆதரித்து அவர் கரம் பற்றி பைஅத் எனும் உடன்படிக்கையும் செய்து கொண்டார்.

பின்னர் ஷாம் நோக்கி படையெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அந்தப் படைக்குத் தலைமை தாங்குவதற்கு யாரை நியமிப்பது என்று கலீஃபா அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை. காலித் இப்னு ஸஈதுதான் அதற்குப் பொருத்தமான ஆள் என்று கலீஃபா அவர்கள் தீர்மானித்தார்.

படைக்கொடியை காலிதின் கைகளில் ஒப்படைத்தார் கலீஃபா. ஆனால் ஆட்சியில் இரண்டாவது நபராக இருந்த ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு காலிதை நியமித்ததில் கடுமையான கருத்துவேறுபாடு இருந்தது.

முதல் கலீஃபாவுக்கு பைஅத் எனும் உடன்படிக்கை செய்வதில் காலித் இப்னு ஸஈத் காலதாமதம் காண்பித்ததை கட்டுப்பாட்டை மீறிய செயலாக அந்தச் சமயத்திலும் உமர் (ரலி) கருத்தில் கொண்டார். காலிதை படைத்தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றவேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தினார்.

முதல் கலீஃபா வேறு வழியில்லாமல் அதனை ஏற்கவேண்டியதாயிற்று. அந்தப் பொறுப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக காலிதின் வீட்டிற்கு வந்த கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் காலித் சொன்ன வார்த்தைகளைத்தான் நாம் முதல் பத்தியில் பார்த்தோம்.

அதிகாரம் கையில் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கவில்லை. அதே காரணத்தால் அது கையை விட்டுப் போனபோது அவர் கவலைப்படவுமில்லை.இதுதான் முஸ்லிம் சமூகத்தின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

அப்துர் ரஹ்மான் இப்னு ஸமூரா (ரலி) என்ற நபித்தோழர் அண்ணலாரிடம் வந்து ஆட்சியதிகாரத்தில் ஏதேனும் பதவி இருந்தால் தனக்கு வழங்கிடுமாறு கோரினார்.

அதிகாரம் கேட்டு வருபவருக்கு நாம் அதனை வழங்குவதில்லை என்று கூறி அண்ணலார் அவரைத் திருப்பியனுப்பி விட்டார்கள். அந்தச் சமயத்தில் அண்ணலார் அவர்கள் இன்னொரு வார்த்தையையும் சொன்னார்கள்.

“ஆசைப்பட்டு அதிகாரம் கிடைத்தால் அதனை நிர்வகிக்கும் விடயத்தில் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது. விரும்பாமல் கிடைத்த பதவிக்குத்தான் இறையுதவி கிட்டும்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.

அதே நேரம் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தக் காலகட்டத்தில் நன்மையைக் கருத்திற்கொண்டு பதவியிலிருந்து விலகியிருப்பது நன்மையை விட தீமையையே அதிகமாக ஏற்படுத்தும். பதவிகள் பறித்துப் பிடுங்கப்படுவதற்கு ஏதுவாக எனக்கென்ன வந்தது என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல.

ஆனால் அதிகார மோகம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு சமூகத்தில் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அண்ணலாரின் அருமைத் தோழர்களின் வழக்கங்களிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும் வேண்டும்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

ஹுனைன் தந்த பாடம்!


வெற்றியை மனதில் உறுதிப்படுத்திக்கொண்டு முஸ்லிம் படை ஹுனைன் நோக்கிப் புறப்பட்டது. மொத்தம் 12,000 பேர் கொண்ட படை. மதீனாவிலிருந்து வந்த 10,000 பேரும், மக்காவில் வைத்து புதிதாக இணைந்த 2000 பேரும் அதில் இருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலான படை அகம்பாவத்திற்குக் காரணமானது. ஹுனைன்வாசிகளின் எதிர்த்தாக்குதலுக்கு முன்பு முஸ்லிம்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலை உச்சியிலிருந்து முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடைபெற்றது. அம்புகள் அணை கடந்த வெள்ளம் போல் முஸ்லிம்கள் மேல் பாய்ந்து வந்தன. முஸ்லிம்கள் சிதறியோடினர்.

அம்புகளைத் தொடர்ந்து காலாட்படைத் தாக்குதல் ஆரம்பமானது. என்ன நடக்கிறது என்று கூட முஸ்லிம்களுக்கு அறிய முடியவில்லை. ஒரே அல்லோலகல்லோலம்! முஸ்லிம்கள் திரும்பி ஓடினர்.

அதற்கு முந்திய நாள் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தவர்களும் முஸ்லிம் படையில் இருந்தனர். முஸ்லிம்கள் தோற்று ஓடுவதைப் பார்த்த அவர்களுக்கு அவர்களின் பழைய பகையுணர்வு மீண்டும் தலை தூக்கியது.

அண்ணலாரின் படைக்கு ஏற்பட்ட தோல்வி அபூஸுஃப்யானின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திற்று. களிப்புற்ற அவர் இவ்வாறு கத்தினார்: “இந்தப் புறமுதுகு ஓட்டம் கடலில் சென்றுதான் முடியும்!”

ஷைபா இப்னு உஸ்மான் அளவு கடந்து பேசினான். அவனது உள்ளத்திலிருந்தது வெளியே வந்தது இவ்வாறு இருந்தது: “இன்று நான் முஹம்மதைப் பழிக்குப் பழி வாங்குவேன்.”

இன்னொரு ஆள் சொன்னான்: “இன்று எல்லா மாயாஜாலங்களும் முடிவுக்கு வந்தன.”

சூழ்நிலை ஓட்டத்தை அனுசரித்து நிலைப்பாடு மாறுவது பொதுவாக உள்ளதுதானே… மக்காவில் சூழ்நிலை மறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக இருந்தபொழுது அவர்களுடன் ஒன்று கூடியவர்கள் அடுத்த நாளே ஹுனைனில் மாறிவிட்டனர். அவர்கள் உருவாக்கிய பீதி உறுதியான உற்ற தோழர்களையே தடுமாற வைத்தது. நம்பிக்கையான நபித்தோழர்களைக் கூட நடுங்க வைத்தது.

முஸ்லிம்கள் சிதறி ஓடியபொழுது பிடித்து நிற்க வேண்டும் என்ற உணர்வு சிறிய அளவு நபித்தோழர்களுக்கே உண்டானது.

அகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் உறுதியுடன் நின்றார்கள். அவர்களின் புனித நபித்துவப் பணி தொடங்கி 20 வருடங்களாயிற்று. இதுவரை எதிர் சக்திகளிடம் எந்தச் சமயத்திலும் அடிபணிந்ததில்லை. வெற்றி, அல்லது வீரமரணம்! அதுதான் நல்லது.
ஒரு கூட்டம் அன்சாரிகளும், சில முஹாஜிர்களும், ஒரு சில உறவினர்களும் அண்ணலாருடன் கூட நின்றார்கள்.

எதிரிகளின் பக்கம் ஹவாசின், ஸகீஃப் ஆகிய கோத்திரங்களின் படையினர் மலைக்குன்றுகளின் முகடுகளில் நின்று இறங்கி வந்தனர். கண்ணில் கண்ட முஸ்லிம்களையெல்லாம் வெட்டிக் கொன்றனர்.

கடுமையான, மிகக் கொடுமையான அந்தச் சூழ்நிலையிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனத்தில் உறுதியுடன் தளராமல் நின்றார்கள். ஒரு சமயம் எதிரிகளுக்கிடையில் பாய்ந்து தாக்க முனைந்தார்கள். அன்னாரின் ஒன்றுவிட்ட சகோதரர் அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரலி) அண்ணலாரைத் தடுத்து விட்டார்.

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அண்ணலாருடன் இருந்தார். முஸ்லிம்களைத் திரும்ப அழைக்குமாறு அப்பாஸிடம் அண்ணலார் சொன்னார்கள். அப்பாஸ் இவ்வாறு உரக்கக் கூறினார்:

“முஸ்லிம்களுக்கு அபயமும், உதவியும் நல்கிய அன்சாரித் தோழர்களே! மர நிழலில் உறுதிப் பிரமாணம் எடுத்த முஹாஜிர்களே! ஓடி வாருங்கள்! முஹம்மத் (ஸல்) அவர்கள் இதோ உயிருடன் இருக்கிறார்கள்.”

அப்பாஸின் சப்தம் அந்தப் பள்ளத்தாக்கெங்கும் ஒலித்தது. அப்பாஸ் இவ்வாறு மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை அழைத்துக்கொண்டேயிருந்தார்.
என்னே விந்தை! முஸ்லிம் அணியில் அந்த அழைப்பு அற்புதமான மாற்றத்தை உண்டாக்கிற்று.

அகபாவில் அண்ணலாரின் அருமைக் கரம் பற்றி உறுதிமொழி எடுத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். தங்களின் மக்களையும், செல்வத்தையும் பாதுகாப்பது போல் அண்ணலாரைப் பாதுகாப்போம் என்று அவர்கள் வாக்களித்திருந்தார்கள்.

ஹுதைபியாவில் உறுதிமொழி எடுத்தவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மரணம் வரை மஹ்மூது நபிகளாருடன் போராடுவோம் என்று அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

அப்பாஸின் சப்தம் அவர்களின் காதுகளிலல்ல, கல்புகளில் ஊடுருவி ஒலித்தது. மனங்கள் சாந்தமாயின. அவை ஒரே திசையை நோக்கித் திரும்பின. அண்ணலாரைச் சுற்றிலும் அருமைத் தோழர்கள் அணி அணியாய் திரள ஆரம்பித்தனர்.

அவர்களின் இதயங்களில் இப்பொழுது ஆள்கூட்டத்தின் அகம்பாவம் இல்லை, அதிவேகம் இல்லை. அல்லாஹ்வின் நம்பிக்கையும், திட உறுதியும் மட்டுமே குடிகொண்டிருந்தன.

முஸ்லிம்கள் அனைத்தையும் மறந்து போராடினார்கள். வெற்றி பெற்றார்கள்.
ஹுனைன் யுத்தம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிற்று: ஆள் கூட்டங்கள் தோல்வியைத் தழுவும். அல்லாஹ்வின் மேல் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

அபூபக்கரின் அறுதி நிலைப்பாடு!


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்திலிருந்து பலர் வெளியேறும் செய்திகள் நாலாபுறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. முஸைலமாவைப் போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று பிரகடனப்படுத்தி பிளவுகளை ஏற்படுத்த களம் இறங்கினார்கள்.
முதலாம் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய மிகக் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

உமர் (ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி) போன்ற பெரும் பெரும் நபித்தோழர்களை அழைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆலோசனை நடத்தினார். இஸ்லாத்திற்கு துரோகம் இழைப்பவர்களை சிறிது காலம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்பதாக இருந்தது அவர்களின் கருத்துகள்.

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்: “அல்லாஹ்வின் தூதரின் பிரதிநிதியாக இருக்கும் தாங்கள் மக்களுக்கெதிராக எதிர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம். அவர்களுடன் நல்ல உறவுகளை ஏற்படுத்துவது நல்லது.”

ஆனால் அபூபக்கர் (ரலி) அவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது:
“நான் தங்களின் உதவிகளை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இஸ்லாத்திற்கு முன்பு தீரராக இருந்த தாங்கள் இஸ்லாத்திற்குப் பின்னால் பலவீனராக ஆவதா? நான் யாருக்காக அஞ்சவேண்டும்? அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்து இட்டுக்கட்டப்பட்ட கவிதைகளையும், இலக்கியங்களையும் வைத்துக்கொண்டு நான் மக்களைக் கவர வேண்டும் என்றா கூறுகிறீர்கள்? ஒருபொழுதும் முடியாது. அல்லாஹ்வின் தூதர் விடை பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தி இங்கே நிலை பெற்று விட்டது. இறைச் சட்டங்களில் இனி மாற்றம் இல்லை. ஜக்காத்தின் பாகமாக அவர்கள் எனக்கு ஓர் ஒட்டகக் கயிறைத் தர மறுத்தால் கூட என் கைகளில் வாள் பிடிக்க சக்தியுள்ளவரை நான் அவர்களுடன் போராடுவேன்.”

அபூபக்கர் (ரலி) அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விவரித்து மக்களிடம் இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்:
“அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பிய சூழ்நிலையை நினைவுபடுத்திப் பாருங்கள். நாம் அன்று அறிவிலிகளாக இருந்தோம். அப்பொழுது இஸ்லாம் ஓர் அதிசயமாக நமக்குக் கிடைத்தது. இறைச்சட்டங்களை மக்கள் காற்றில் பறக்க விட்ட சமயத்தில்தான் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பினான். அரபிகளாகிய நாம் எழுத்தறிவும், மார்க்கமும் அற்றவர்களாக இருந்தோம். அல்லாஹ்வை நாம் வணங்கவில்லை. நமது வாழ்வு சீரழிந்து போயிருந்தது. நம்மில் சிலர் இறைத்தூதருடன் இணைந்தோம். அல்லாஹ் நம்மை அவனின் தூதரின் மூலமாக சக்திப்படுத்தி, ஒரு சமுதாயமாக உயர்த்தினான். எதிரிகளுக்கெதிராக நமக்கு வெற்றியையும் தந்தான்.

அரபிகளை எந்த வாகனத்திலிருந்து அல்லாஹ் கைப்பிடித்து இறக்கினானோ, அதே வாகனத்தில் ஷைத்தான் அவர்களைத் திருப்பி ஏற்றியிருக்கிறான். நம்மைச் சுற்றிலும் வாழும் அரபிகள் ஜக்காத் கொடுக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். பழைய வாழ்க்கைக்கு அவர்கள் மாறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் இஸ்லாத்தில் இருந்தபொழுதும் வழிதவறிய வாழ்க்கையோடு ஆர்வம் காட்டியிருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் அப்படியல்ல. அன்றும் இன்றும் நீங்கள் இஸ்லாத்துடன் இணைந்திருப்பவர்கள். அல்லாஹ்வின் தூதரின் இருப்பினால் ஏற்படும் நன்மையை நாம் இழந்துவிட்டாலும் அவர்கள் கொண்டு வந்த தீனில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். வழி தெரியாமலிருந்த இறைத்தூதருக்கு வழி காட்டியவன் அல்லாஹ். அல்லாஹ்தான் சத்தியம். அவனது மார்க்கத்தில் நான் தீமைக்கெதிராக போர் செய்வேன். அல்லாஹ்வின் வாக்கு முழுமையாகும் வரை போர் செய்வேன். அந்தப் போரில் மரணமடைந்தவர்கள் ஷஹீதுகள் என்ற ரத்த சாட்சிகள். அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தை வழங்குவான். எஞ்சியுள்ளவர்கள் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக நிலைநிற்பார்கள். ஒரு நாள் சத்தியம் வென்றே தீரும்.”

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்தச் சமயத்தில் இந்த உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையென்றால் இஸ்லாத்தின் எதிர்காலம் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அண்ணலாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியதனால்தான் அரபிகள் வெற்றிக் கனிகளைப் பறித்தார்கள். அண்ணலார் காட்டித் தந்த அழகிய வழிமுறை தவிர்த்து வேறு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அது அட்டியின்றி அழிவிலேயே முடியும்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com  இணையதளத்தில் வெளியானது.

Saturday, 28 September 2013

காயல்பட்டினத்தின் வேர்கள்!


ரூட்ஸ் (Roots) என்றோர் ஆங்கில நாவல். உலகிலேயே அதிகமாக விற்ற நாவல்களில் இதுவும் ஒன்று. ரூட்ஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு வேர்கள் என்று பொருள். இதனை எழுதியவர் அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர். இவர் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) முதல் பிளேபாய் (Playboy) வரை அத்தனை பிரபலமான பத்திரிகைகளிலும் தன் முத்திரை பதித்தவர்.

மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் என்பவரை நாமெல்லாம் அறிவோம் என்று நம்புகிறேன். அமெரிக்கக் கறுப்பராக இருந்து, இஸ்லாமை ஏற்று, அதனை அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர். பல கறுப்பர்கள் புனித இஸ்லாமைத் தழுவ காரணமாக இருந்தவர்.

மால்கம் X ன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி நியமிக்கப்படுகிறார். மால்கம் X கடுமையான இஸ்லாமியப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்ததால் அவரால் ஓர் இடத்தில் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை அலெக்ஸ் ஹேலியிடம் சொல்ல முடியவில்லை. ஆதலால் மால்கம் X தான் பிரச்சாரத்திற்காக செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியையும் அழைத்துச் சென்றார். வாகனத்தில் பயணித்துக்கொண்டே அவர் சொல்லச் சொல்ல, அலெக்ஸ் ஹேலி அதனைப் பதிவு செய்துகொள்வார்.

இப்படி எழுதப்பட்ட நூல்தான் ''அலெக்ஸ் ஹேலியிடம் சொல்லப்பட்ட மால்கம் X ன் வாழ்க்கை வரலாறு'' (The Life History of Malcolm X as told to Alex Haley) என்ற நூல். இது 1965ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

மால்கம் X பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று இஸ்லாம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். அந்தச் சொற்பொழிவுகளில் தவறாமல் ஒரு செய்தியைக் குறிப்பிடுவார். அதாவது, ‘‘அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள்; அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி.

சிறு வயதில் அறியாமல் செய்த தவறுகளுக்காக மால்கம் X சிறையில் இருந்தபொழுது சிறை நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்து விட்டார். அப்படி பலதரப்பட்ட நூல்களையும் படித்தபொழுதுதான் அவர் இந்த உண்மையைக் கண்டறிந்தார்.

மால்கம் X ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அவரது துப்பறியும் பத்திரிகையாளர் மூளை தூண்டிற்று.

அப்பொழுதுதான் அவருக்கு அவர்களின் மூதாதையர்கள் பற்றி அவருடைய குடும்பத்தார் நாட்டுப்புறப் பாடல் போல் பாடுவது நினைவுக்கு வந்தது. அதிலேயே அவரின் மூதாதையர்களின் பெயர்களெல்லாம் வந்து விடும். தன் மூதாதையர்கள் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்திட அவர் தன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை அடிக்கடி சந்தித்து பழைய வரலாறுகளையெல்லாம் கிளற ஆரம்பித்தார். நூலகத்தில் சென்று அன்றைய ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அன்றைய ஆப்ரிக்க - அமெரிக்க வாழ்விடங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கம் என்று அத்தனையையும் ஆராய ஆரம்பித்தார். இப்படியே 12 வருடங்கள் அவர் கடும் ஆராய்ச்சி செய்தார்.

இறுதியில் அந்த உண்மையைக் கண்டுபிடித்தார்!

ஆம்! அவரது முந்​தைய ஏழாவது தலைமுறை ஆப்பிரிக்காவில் காம்பியா என்ற நாட்டில் ஒரு மூலையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சென்று முடிந்தது. ஆயிற்று... மால்கம் X சொன்னது உண்மை என்பது நிரூபணமாயிற்று.

ஆப்ரிக்காவிலிருந்து அந்த முஸ்லிம் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டு, அங்கே அடிமையாக விற்கப்படுகிறார். அவரது வழித்தோன்றல் அடிமைத் தலைமுறையாக, கிறிஸ்தவத் தலைமுறையாக மாற்றப்படுகிறது.

தன் நீண்ட நாள் ஆராய்ச்சியை ஒரு நாவலாக வடிக்க முடிவு செய்தார் அலெக்ஸ் ஹேலி. அதுதான் ''ரூட்ஸ்'' என்ற நாவல். 1976ல் வெளிவந்த அதி அற்புதமான வரலாற்று நாவல் அது! பின்னர் அது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று.

நாவல் ஆப்ரிக்காவிலிருந்து ஆரம்பமாகும். கி.பி. 1750லிருந்து தொடங்கும் அந்த வரலாறு 1922ல் அமெரிக்காவில் முடிவடையும்.

இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டு பல கறுப்பர்கள் தங்கள் மூல மார்க்கம் இஸ்லாம் என்று அறிந்து இஸ்லாமைத் தழுவினர். படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வரலாறைத் தாங்கிய இந்த நூலை வாங்கி பைபிள் போல பட்டுத் துணியில் போர்த்திப் பாதுகாத்தனர்.

இதனைத் தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன். இது ''வேர்கள்'' என்ற பெயரில் (இலக்கியச்சோலை வெளியீடு) நூலாக வெளிவந்து இப்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது. தமிழில் வெளிவந்தது ஆங்கில மூலத்தின் சுருக்கமே.

இது இந்தக் கட்டுரையின் பீடிகைதான். இப்பொழுதுதான் விஷயத்திற்கு வருகிறேன்.

இதேபோல் காயல்பட்டினத்தின் வேர்களையும் கண்டுபிடிக்க எனக்கு ஆசை. “ரூட்ஸ்” போல் ஒரு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்று என்னுள் ஓர் எண்ணம் எழுந்துகொண்டே இருக்கிறது.

இது சாத்தியமாகுமா?

ஹிஜ்ரி 12ல், அதாவது கி.பி. 633ல் ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கா-மதீனாவிலிருந்து சிலர் காயல் நகரம் வந்து குடியேறியுள்ளனர். அப்படியானால் நமதூரில் வாழும் சில குடும்பங்கள் அவர்களின் வாரிசுகளாக கண்டிப்பாக இருப்பார்கள். இவர்களில் யாராவது ஒருவர் தன் பாட்டன், முப்பாட்டன் வழி தெரிந்தவர்கள் இருந்தால் நாம் அவர்களின் வேர்களைக் கண்டுபிடிக்க சாத்தியம் உண்டு. அது ஒருவேளை அண்ணலாரின் அருமைத் தோழர்களில் ஒருவரிடம் போய்ச் சேரலாம்.

அதேபோல் ஹிஜ்ரி 277ல், அதாவது கி.பி. 842ல் எகிப்திலிருந்து ஒரு குழுவினர் முஹம்மத் கல்ஜி என்பார் தலைமையில் காயல் வந்துள்ளதாக வரலாற்றில் படிக்கிறோம். இவர்களின் வாரிசுகள் நமதூரில் அதிகமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவர்களின் வேர்களைத் தொடுவது முந்தைய மக்கா-மதீனா வேர்களைத் தேடுவதை விட எளிதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

கி.பி. 1284ல் மூன்றாவது குடியேற்றம் நடந்துள்ளதாக நமதூர் வரலாறு கூறுகிறது. அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் 21வது நேரடி வாரிசான ஸுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் இந்தக் குடியேற்றம் நடந்துள்ளது. இவர்களின் வாரிசுகளும் நமதூரில் அதிகம் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேர்களைத் தேடுவது இன்னும் எளிதாக இருக்கும். ஏனெனில் கி.பி. 1284 என்பது நமக்கு மற்ற குடியேற்றங்களை ஒப்பிடும்போது குறைவான ஆண்டுகளே.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணி ஒரு பெருநாள் மலரை வெளியிட்டது. அதில் நமதூர் வரலாற்றைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதீனாவில் புனித மஸ்ஜிதுந் நபவியில் பணியாற்றி வந்த பணியாட்களிடம் கொடுங்கோன்மை ஆட்சி புரிந்து வந்த அன்றைய கலீஃபா வரி விதித்ததாகவும், அதனைச் செலுத்தவியலாமல் தவித்த அந்தப் பணியாட்கள் மதீனாவை விட்டு அகல முடிவு செய்ததாகவும், அவர்கள் 4,5 கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு வந்ததாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அந்தக் கப்பல்கள் காயல் பட்டணம், கீழக்கரை, அதிராம்பட்டினம், சென்னை பழவேற்காடு, கேரளாவில் தலச்சேரி, கர்நாடகாவில் பட்கல் ஆகிய கடற்கரைப் பட்டினங்களை அடைந்ததாக அக் கட்டுரை கூறுகின்றது. அதற்கு ஆதாரமாக இந்தப் பட்டினங்களில் நிலவும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களை அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

முதலாவது மேற்கண்ட பட்டினங்களுக்கு வந்த அனைவரும் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்துள்ளனர். அதனால்தான் மேற்கண்ட பட்டினங்களில் இன்றும் பெரும்பாலோர் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். கர்நாடகாவில் மொத்த மாநிலத்திலும் பெரும்பாலானோர் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்தபொழுதிலும் பட்கலில் உள்ளவர்கள் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கும் ஆச்சரியத்தை நாம் காண்கிறோம்.

நமதூரில் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை போவது போல் கீழக்கரை, அதிராம்பட்டினத்திலும் செல்வது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் கேரளாவில் தலச்சேரியில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இன்றும் பெண் வீட்டிற்குத்தான் போகிறார்கள் என்பது நமது புருவங்களை உயர்த்துகின்றது. அதேபோல் தலச்சேரிக்கு மிக அருகிலுள்ள கோழிக்கோட்டில் குட்டிச்சிரா என்ற பகுதியைச் சார்ந்த மக்களும் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கே செல்கின்றனர். ஒருவேளை அவர்கள் தலச்சேரியைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினராக இருக்கலாம்.

நமது வேர்களைத் தேடும்பொழுது இடையில் சில தலைமுறைகள் விடுபடலாம். இப்படித்தான் “ரூட்ஸ்” வரலாற்று நாவலை எழுதிய அலெக்ஸ் ஹேலிக்கும் சில தலைமுறைகளின் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சோர்ந்து இருந்து விடவில்லை. தகவல் இடைவெளி உள்ள அந்தக் காலகட்டத்தை அவர் ஆராய்கிறார். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலவி வந்த கலாச்சாரம், பண்பாடு, தொழில், உணவுமுறை, உடையலங்காரம், பழக்கவழக்கம் என்று அத்தனையையும் ஆராய்கிறார். அதற்காக பல நூலகங்களுக்கு ஏறி இறங்குகிறார்.

இறுதியில் கிடைத்த தகவல்களை வைத்து இப்படித்தான் நடந்திருக்கும் என்று கவனமாக யூகித்து கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து அந்த இடைவெளிகளை நிரப்புகிறார். இப்படித்தான் ஒரு சரித்திர நாவலை எழுத முடியும். அதனால்தான் நாம் அதனை சரித்திரம் என்றழைக்காமல் சரித்திர நாவல் என்றழைக்கிறோம்.

இப்படித்தான் நாமும் செய்ய வேண்டியிருக்கும். தகவல் இடைவெளிகளை இப்படித்தான் நாம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

ஆகவே காயல்வாசிகளே, உங்களில் முன் தலமுறைகளை அறிந்தவர்கள் யாரும் இருந்தால் நீங்களே உங்கள் வேர்களைத் தேடிச் செல்லலாம். முடிந்தால் ஒரு சரித்திர நாவல் வடிக்கலாம். (அனைத்துத் தலைமுறைகளும் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.)

அல்லது என்னிடம் தெரிவித்தால் நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று விழைகிறேன்.

இப்படி நமது வேர்களைத் தேடுவதில் பல நன்மைகள் நமக்குண்டு. நாம் ஏன் திருமணத்திற்குப் பின் பெண் வீட்டிற்குச் செல்கிறோம், ஏன் நமது பேச்சு வழக்கில் அதிகம் சுத்தத் தமிழ் கலந்திருக்கிறது, எப்படி நமது பேச்சு வழக்கில் அரபுப் பதங்கள் அதிகம் சேர்ந்தது, நமது உணவுமுறைகள், உடையலங்காரம்,... என்று நமது இன்றைய நடைமுறைகள் பலவற்றிற்கு நல்ல பல விடைகள் கிடைக்கும்.

“தன் வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது” என்று சொன்னார் மால்கம் X.

நமது வேர்களைத் தேடிச் சென்று நாமும் வரலாறு படைக்கலாமா?


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

கருத்துவேறுபாடுகளைக் களைய என்ன வழி?


“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கான காரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா
சிறையிலிருக்கும்பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்” – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மெளாலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69வது வயதில் இதைக் கூறிய அவர்கள் அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேயே காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர்கள்.

ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப் போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

அவர்கள் கூறினார்கள்: “நமது பிரச்னைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள்தாம்:

நாம் குர்ஆனைக் கை விட்டது.
நமக்குள் நடக்கும் உள் சண்டைகள்.”

இப்படிக் கூறிய மெளலானா அவர்கள் அதன் பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்த சொற்ப காலமும் இந்தக் காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்குக் கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடனப்படுத்துகிறது. உள் சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கின்றது.

நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும், எச்சரிக்கையையும் மறந்து விட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 120 கோடி முஸ்லிம்களும் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றோம்.

சில குறுகிய மனப்போக்குள்ள சுயநலக் காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.

இஸ்லாத்தைப் பயன்படுத்தி இந்தச் சண்டைகளை நாம் தீர்த்திருக்க இயலும். ஆனால் அந்தோ துரதிர்ஷ்டம்..! இஸ்லாத்தின் பெயராலேயே நாம் பிளவுபடுகிறோம். மேலும் மேலும் பிரச்னைகளை உண்டு பண்ணுகிறோம்.
சிக்கலுக்குள் சிக்கலை உருவாக்குகிறோம்.

சின்னச் சின்ன ஃபிக்ஹுப் பிரச்னைகளைப் பெரிதாக்குகிறோம். மார்க்க விஷயங்களை அர்த்தப்படுத்துவதில் சிறுசிறு வேறுபாடுகள் எழுவது இயல்பு.
இந்தச் சிறிய வேறுபாடுகளை, சிறிய சட்டப் பிரச்னைகளைப் பெரிய யுத்தகளமாக மாற்றி விடுகிறோம். ஆனால் மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்கள் அங்கு கை மீறிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இன்று இஸ்லாம் எல்லா திசைகளிலிருந்தும், எல்லா முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது. இப்படியிருக்கும் நிலையிலேயே நாம் நமக்குள்ளாலான சண்டைகளை நடத்துகிறோம்.

இஸ்லாத்தில் ஹராம் ஆக்கப்பட்டவை இன்று ஹலால் ஆக்கப்படுகின்றன. பல தெய்வக் கொள்கையுடையோரின் பழக்க வழக்கங்கள் இன்று மார்க்கத்தை அறியாத நம்மவர்களிடையே ஊடுருவுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையே பிரதானமாகக் கொள்ளும் ‘ஹீடனிஸம்’ எனும் கொள்கை நம்மவர்களை ஆக்கிரமிக்கிறது. வெட்கமின்மை வரவேற்கப்படுகின்றது. ஒழுக்கச் சீர்கேடுகள் நவநாகரிகக் கலாச்சாரமாக நம்பப்படுகின்றன.

நமது சமுதாயம் சினிமாப் படங்களாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், ஆபாச இலக்கியங்களாலும் சீரழிக்கப்படுகின்றது.
நமது சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களிடமும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாரிசுகள்தாமே நாம்..! இவைகளை அவர்கள் அனுமதித்தார்களா?

இவைகளுக்கெதிராக நமது கவனத்தைத் திருப்ப வேண்டாமா?

இத்தனைக் கொடுமைகளும், தீமைகளும் அரங்கேறி வரும் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும். மறுவுலகத்தில் நாம் எழுப்பப் படுவோம். இறைவன் அவன் முன் நிறுத்தி நம்மிடம் கேட்பான்: ”இந்தக் கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக நீ என்னப்பா செய்தாய்?”

”யா அல்லாஹ்! ‘ரஃபஅ யதைன்’ (தொழுகையில் சில இடங்களில் கைகளை உயர்த்துவது சம்பந்தமான பிரச்னை) என்ற நூலை எழுதினேன்” என்று நாம் பதிலுரைக்க முடியுமா? இறைவன் விட்டுவிடுவானா?

ஒரு தடவை நான் மெளலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி அவர்கள் மிகவும் கவலையாக இருக்கக் கண்டேன். என்னவென்று வினவினேன்.

“நான் எனது மொத்த வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டேன்” என்றார்கள்.
”உங்கள் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே செலவழித்திருக்கிறீர்கள். உங்கள் மாணவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று ஆலிம்களாக – அறிஞர் பெருமக்களாக உள்ளனர். அவர்களெல்லாம் இந்த இஸ்லாத்திற்காகச் சேவைகள் செய்கிறார்கள். இதைவிட வேறு என்ன கவலை உங்களுக்கு?” – நான்.

“பாருங்கள். நமது முயற்சிகள் அனைத்தின் முழு நோக்கமும் என்னவாக இருந்திருக்கிறது தெரியுமா? ஏன் ஹனஃபி மத்ஹப் பிற மத்ஹப்களை விடச் சிறந்தது என்பதை நிரூபிக்கத்தான். இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் இதற்குத் தேவையுடையவர்களாக இருக்கவில்லை. இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹமது இப்னு ஹம்பல் ஆகியோரும் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள்.

இன்று இஸ்லாத்தின் அடிப்படை வேர்களில் தாக்குதல் நடக்கிறது. ஆனால் நாம் அதன் கிளைகளைப் பற்றிக் கவலைப்படுகிறோம்” என்று மெளலானா அவர்கள் பதிலுரைத்தார்கள்.

மார்க்க விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதும், அதற்கான விவாதங்கள் நடப்பதும் தவறானதல்ல.

ஆனால் மார்க்க அறிவு அவ்வளவாக இல்லாத பல முஸ்லிம்கள் இந்த வேறுபாடுகளைக் கண்டு வேறு மாதிரியாகச் சிந்திக்கின்றனர். ஃபிக்ஹுடைய சட்டங்கள் அனைத்தையும் எடுத்து விட்டு வேறு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

இது சாத்தியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல.

அறிவும், நாணயமும் உள்ள மக்களிடத்தில் கருத்துவேறுபாடுகள் வருவது சகஜமே.

ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் வாய் பேச முடியாத ஊமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். அல்லது அவர்கள் நாணயமற்றவர்களாக இருக்க வேண்டும் – தங்களுக்குத் தவறு என்று தெரிவதையும் ஏற்றுக்கொள்வதற்கு.

நாம் அந்தக் கருத்துவேறுபாடுகளை மிகைப்படுத்தும்பொழுதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித் தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதேபோல் ‘இஜ்திஹாது’ செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்துவேறுபாடுகள் நிலவின.

ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர்களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்றவில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும், அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி போல் மின்னியது.

குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக எதனைத் தவறு என்று சொல்கின்றனவோ அவ்விஷயங்களில் எந்தக் கருத்துவேறுபாடும் கொள்ள முடியாது.

மார்க்க விஷயங்களை, கொள்கையை, நம்பிக்கையை விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமே இல்லை.

ஷரீஅத் எவைகளை ஹலால் என்று அனுமதிக்கிறதோ, எவைகளை ஹராம் என்று விலக்குகிறதோ அவ்விஷயங்களை மாற்றுவதற்கோ, கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் குர்ஆனும், ஹதீஸும் நேரடியாகக் குறிப்பிடாத விஷயங்களில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளை எடுக்கலாம் என்ற விஷயங்களில், முஜ்தஹிதீன்கள் ஷரீஅத்திற்கு நெருக்கமான தீர்வுகளை வடித்துத் தருகிறார்கள்.

இதில் அவர்கள் தங்கள் முழு திறனையும் பயன்படுத்துகின்றனர். இங்கு வேறுபாடுகளுக்கு சாத்தியமுண்டு.

இங்குதான் கருத்துவேறுபாடுகள் தோன்றுகின்றன. நான்கு இமாம்களைப்
போன்று நேர்மையாக, நியாயமாக, எல்லாவற்றிற்கும் மேலாக தக்வா எனும் இறையச்சத்துடன் முஜ்தஹிதீன்கள் இதைச் செய்யும் வரை அவர்களது மாறுபட்ட கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

சட்டவல்லுனர்களிடையே ஏற்படும் இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்துவேறுபாடுகளால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பிரச்னையின் பல கோணங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். இது பல நன்மைகளை விளைவிக்கும்.

ஆனால் பிரச்னைகளை மிகைப்படுத்தினால், எல்லா அறிவும் தங்களுக்கே இருப்பதுபோல் அடாவடியாக நடந்து கொண்டால், அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டால்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன.

இதே மாதிரியான நிலை இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான அமைப்பினர் தாங்கள் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறார்களோ அந்தந்தத் துறைகளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் வகையில் தங்களால் முடிந்த நல்ல பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இந்த அமைப்பினர் தங்களுக்குள்ளால் ஒரு ஒத்துழைப்பு எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரங்களை நீட்டி கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும். வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் இருப்பது இயல்பே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். இது நடந்தால் இவர்கள் இந்த உலகில் ஒரு தவிர்க்கவியலாத சக்தியாக மாறி விடுவார்கள்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் துறைகளையே, தாங்கள் செயல்படுத்தும் முறைமைகளையே சரியென்றும் எண்ணுவதுதான் துரதிர்ஷ்டம்!

ஒரு அமைப்பிலிருந்து ஒரு மனிதன் வெளியேறி இன்னொரு அமைப்பில் சேர்ந்துவிடுவாரானால் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டவர் என்று பேசப்படுகிறது. இதுதான் ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் கால குலவாதம்!

அடக்கமான, நல்ல மனிதர்கள் மறைந்து போய் விடவில்லை. நமது இப்போதைய தேவை அந்த நல்ல மனிதர்கள் நானிலத்தில் மறுமலர்ச்சி செய்ய வேண்டும்.

குறுகிய வட்டத்திற்குள்ளிருக்கும் இந்தச் சமுதாயத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த பூமிப் பந்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

காலித் பெய்க்


இக்கட்டுரை விடியல் வெள்ளி  பிப்ரவரி 2000 மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

குழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்!


"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…" - சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான்.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…

"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் மடக்கு மடக்குன்னு குடிக்கணும் என்ன…" – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.

"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான் (Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

டி.வி.எஸ். விக்டர் என்ற இரு சக்கர வாகனம் வந்த புதிதில், "நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வந்தது.

ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வந்தது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள்.

பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சிற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.

கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.

குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.

அதிகமாக ​தொ​லைக்காட்சி​யைப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளில் சிலவற்​றைத்தான்​ மே​லே கண்​டோம்.

​தொடர்ந்து ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்கும் குழந்​தைகளுக்கு ஒருமுகத்திறன் (Concentration Power) படு​வேகமாகக் கு​றைகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்தக் குழந்​தைகளால் வகுப்புகளில் ​தொடர்ந்து பாடங்க​ளைக் கவனிக்க முடியவில்​லை.

​குழந்​தைகள் அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் படங்க​ளைப் பார்ப்பதில் தவறில்​லை. ஆனால் ஒரு நா​ளைக்கு குறிப்பிட்ட மணித்துளிகள்தான் ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்க​ குழந்​தைக​ளை அனுமதிக்க​வேண்டும். இதில் ​​பெற்​றோர்கள் எப்​பொழுதும் மிகக் கண்டிப்பாக இருக்க ​வேண்டும்.

​பொது அறி​வை வளர்க்கக் கூடிய ​சேனல்க​ளையும், அறிவியல் ​சேனல்க​ளையும் பார்க்க குழந்​தைகளுக்கு ஆர்வம் ஊட்ட ​வேண்டும். கார்ட்டூன் க​தைக​ளை ​தொ​லைக்காட்சியில் பார்ப்ப​தை விட புத்தகமாகப் படிக்கக் ​கொடுத்தால் இன்னும் நல்லது. இது குழந்​தைகளின் வாசிப்புப் பழக்க​த்​தை அதிகரிக்கும்.

​தொ​லைக்காட்சி​யை அதிகமாகப் பார்க்கும் குழந்​தைகள் அதி​லே​யே மும்முரமாக ஒன்றிப்​ ​போய் விடுவ​தைப் பார்க்கி​றோம். அந்தச் சமயத்தில் ​வெளியிலிருந்து யாரும் வீட்டுக்கு வந்தாலும் குழந்​தைகள் அவர்களிடம் முகம்​​கொடுத்துப்​ பேசுவதில்​லை. ​வைத்த கண் வாங்காமல்​ தொ​லைக்காட்சி​யை​யே பார்த்துக்​ ​கொண்டிருக்கும்.

இப்படி பிறரிடம் முகம் ​கொடுத்துப் ​பேசாமல் வளரும் குழந்​தைகள் கூச்ச சுபாவம் உ​டையவர்களாகவும், தன்னம்பிக்​கை கு​றைந்தவர்களாகவும் பிற்காலத்தில் இருப்பார்கள் என்று கண்டறிந்துள்ளார்கள்.

இவர்களால் ஒரு கூட்டத்தி​லோ​ மே​டையி​லோ​ பேச​வே முடியாது. திருமணம் ​போன்ற மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் ஒதுங்கி​யே இருப்பார்கள். வி​ரைவில் அந்த இடத்​தை விட்டு அகல​வே முயல்வார்கள். எந்தக் காரியத்​தைச் ​செய்ய எண்ணினாலும் அவர்களுக்கு முதலில் வருவது தயக்கம்! இது தன்னம்பிக்​கைக் கு​றைவினால் ஏற்படுவது.

பிற்காலத்தில் குழந்​தைகள் இப்படி பாதிப்ப​டையாமல் இருக்க நாம் இப்​​பொழு​தே கவனமாக இருக்க ​வேண்டும். வீட்டுக்கு விருந்தாளி​க​ளோ​ தெரிந்தவர்க​ளோ வந்தால் அவ்வமயம் குழந்​தைகள்​ தொ​லைக்காட்சி​யைப் பார்த்துக் கொண்டிருந்தால் உட​னே நாம் ​செய்ய ​வேண்டியது - அத​​னை அ​ணைப்பதுதான்!

அத்​தோடு வீட்டுக்கு வந்தவர்களிடம் குழந்​தைக​ளை அ​ழைத்து அறிமுகப்படுத்த ​வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தும் ​பொழுது குழந்​தைக​ளிடம் உள்ள நல்ல குணங்க​ளையும், அவர்கள் ​செய்த நல்ல காரியங்க​ளையும் ​சொல்லிக் காட்ட ​வேண்டும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் ​நேரத்தில் சிறி​தை இப்படி குழந்​தைகளுக்காகவும் நாம் எடுத்துக்​ ​கொள்ள​ வேண்டும். இது குழந்​தைகளுக்கு உள்ளூற தன்னம்பிக்​கை​யை ஏற்படுத்தும். அத்​தோடு குழந்​தைகள் அந்நியர்களுடன் அளவளாவும் ​பொழுது அவர்களது கூச்ச சுபாவமும் ​மெல்ல​ மெல்ல ம​றையும்.

இந்தப் பழக்கம் குழந்​தைகளின் எதிர்காலத்​தை ஒளி மிக்கதாக ஆக்கும்!


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

Friday, 27 September 2013

நாமும் வெற்றி பெறலாம்!


முதல் காட்சி. அன்றைய மக்காவில் ஓர் அவை. கோத்திரத் தலைவர்களும், வியாபாரப் பிரமுகர்களும், தனவந்தர்களும், சமூகத்தில் முக்கியமானவர்கள் பலரும் அந்த அவையில் கூடியிருந்தனர்.

கூட்டத்திலிருந்து வலீத் இப்னு முகீரா எழுந்து நின்றார். அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தார். அன்றைய அரேபிய மண்ணில் மிகப் பிரபலமான கவிஞர் அவர். கூடியிருந்த அனைவரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். வலீத் இப்னு முகீரா உரையாற்ற ஆரம்பித்தார்:

“சமுதாயப் பிரமுகர்களே! தனவந்தர்களே! அது நீங்கள் சொல்வதைப்போல் ஒரு கவிதையோ, கற்பனையோ அல்ல. அதை நான் என் இரு காதுகளாலும் கேட்டேன்.”

கூட்டத்தில் சிறு சலசலப்பு. ஒருவர் எழுந்து, “அப்படியென்றால் அது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். கேட்டவரின் குரலில் படபடப்பு தெரிந்தது.

வலீத் இப்னு முகீரா மௌனமாக இருந்தார். என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணத்தில் அனைவரது கண்களும் அவரையே மொய்த்தன. வலீத் மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்:

“அது இனிமையானது. சுவையான தேனைப் போன்றது. உன்னதமான உரைநடை கொண்டது. அதன் மேற்பரப்பு மலையை விட உயரமானது. அதன் அடிப்பரப்பு கடலை விட ஆழமானது. ஆதலால் அது வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனை வெல்ல யாராலும் முடியாது.” (நூருல் யகீன், ஹாகிம், பைஹகீ)

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதுச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தவுடன், அந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக கவிதை இயற்ற, அந்தப் பிரச்சாரத்தை முடக்க இறைநிராகரிப்பாளர்கள் முனைந்தார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நபர்தான் வலீத் இப்னு முகீரா. அவரை விட சிறந்த கவிஞர் அன்றைய மக்கா புழுதியில் வேறு எவரும் இருந்திடவில்லை. எனவே அண்ணல் நபிகளாரின் அழகிய பிரச்சாரத்தை முடக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்தார்கள் மக்கா காஃபிர்கள்.

வலீத் இப்னு முகீரா நேரடியாக அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் சென்றார். அவ்வமயம் அண்ணலார் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக அதனைக் கேட்க ஆரம்பித்த வலீத் இப்னு முகீரா அதன் இனிமையிலும், கருத்தாழத்திலும் இலயித்துப் போனார். ஒன்றும் பேசாமல் திரும்பி வந்தவர் மக்கா பிரமுகர்களிடம் கூறிய வார்த்தைகள்தாம் நாம் மேலே கண்டவை.

அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அந்த வாக்குகளிலுள்ள வாய்மை புலப்படும்.

ஆம்! மலையை விட உயரமானதாகவும், கடலை விட ஆழமானதாகவும், சுவையான இனிமையும் கொண்ட அந்த இறைவேதம் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்!

காட்சி மாறுகிறது. இப்பொழுது இத்தாலிக்குச் செல்வோம்.

அன்றைய ரோம் நாட்டுச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் தன் பிரம்மாண்ட அரசவையில் வீற்றிருக்கிறார். அந்தச் சமயம் கடிதம் ஒன்று அவர் கையில் கொடுக்கப்படுகிறது.

திறந்து படிக்கிறார் மன்னர் ஹெர்குலிஸ். வளவள கொழகொழ வார்த்தைகள் அதில் இல்லை. நறுக்கென்று நான்கு வரிகளே இருந்தன.

“அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்…” என்று துவங்கி, இஸ்லாமை அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்கும் சில வார்த்தைகளே அதில் அடங்கியிருந்தன.

கடிதத்தைப் படித்த ஹெர்குலிஸ் சக்கரவர்த்தி அந்த இறைத்தூதரைப் பற்றி தகவல்கள் அறிந்த மக்கா தேசத்தைச் சேர்ந்த யாரும் தமது நாட்டில் இருந்தால் உடனே அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார்.

வியாபாரத்திற்காக ரோம் தேசம் வந்திருந்த அபூஸுஃப்யான் ஹெர்குலிஸ் மன்னர் முன் அழைத்து வரப்பட்டார். அன்று அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

ரோமச் சக்கரவர்த்தி நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளை அபூஸுஃப்யானுடன் சிறிது நேர உரையாடலுக்குப் பின் தெரிந்துகொண்டார். பின்னர் கூறினார்:

“நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனது கால் பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் வெற்றி கொள்வார்!” (புகாரீ)

மீண்டும் காட்சி மாறுகிறது. இப்பொழுது இங்கிலாந்துக்குச் செல்வோம்.

இங்கிலாந்து நாட்டின் 42வது பிரதமராக இருந்தவர் வில்லியம் ஈவார்ட் கிளாட்ஸ்டோன். இவர் 4 முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்க கொடுங்கால்கள் உலகம் முழுவதும் கொடுங்கோல் புரியப் பரவும்பொழுது எகிப்தில் மட்டும் அது எளிதில் சாத்தியமாகாமல் இருந்தது.

இதனைக் குறித்து 1882ம் ஆண்டு இங்கிலாந்த் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் விவாதம் நடந்தது. அப்பொழுது கிளாட்ஸ்டோன் அவரது கையில் உன்னதத் திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இவ்வாறு கூறினார்:

“எகிப்து முஸ்லிம்களின் கைகளில் இந்தக் குர்ஆன் இருக்கும் வரை நாம் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாது! ஏனெனில் அவர்களின் வாழ்வும் வாக்கும் குர்ஆனாகவே இருக்கிறது. இந்தக் குர்ஆன் அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிய தடை செய்கிறது.”

மக்காவில் வலீத் இப்னு முகீரா “இந்தத் திருக்குர்ஆன் வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும்” என்று கூறும்பொழுது அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.

ரோமச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸ் “எனது மண்ணையும் இஸ்லாம் வெற்றி கொள்ளும்!” என்று கூறும்பொழுது ஹிஜ்ரி 7ம் ஆண்டு. அவ்வமயம் மதீனாவில் அண்ணலாரும், அவர்களின் அருமைத் தோழர்களும் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தார்கள். மக்காவில் வலீத் இப்னு முகீரா, ரோமில் ஹெர்குலிஸ் மன்னர், இங்கிலாந்தில் பிரதமர் கிளாட்ஸ்டோன்… இவர்கள் அனைவரும் கூறியது ஒரே கருத்துதான்.

ஆம்! திருக்குர்ஆன் வெற்றியடைந்தே தீரும். வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களை யாராலும் வெல்ல முடியாது.

அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இன்று இஸ்லாத்தைக் கண்டு பயப்படுவதற்கு இதுதான் காரணம். திருக்குர்ஆனின் மகத்துவத்தை அறிந்த பிறகும் இஸ்லாமிய எதிரிகள் அதனை அணைத்துவிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் ஏன் திருக்குர்ஆனைக் கண்டு அஞ்சுகிறார்கள்? அதில் உள்ளது போன்றோ, அல்லது அதைவிட மேலான ஒரு வசனத்தை உருவாக்கியோ அவர்கள் இந்தக் குர்ஆனை வென்று காட்ட வேண்டியதுதானே! ஏன் இந்த நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமாகாமல் போகிறது? அவர்கள் முயற்சி செய்யாமலில்லை. மாந்தர்களுக்கு நன்மை செய்யும் என்று எண்ணி அவர்கள் உருவாக்கிய பல இஸங்களும், பல கொள்கைகளும் இன்று தோல்வியைத் தழுவி நிற்கின்றன. இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று விழி பிதுங்கி நிற்கும் அவர்களைப் பார்த்து திருக்குர்ஆன் சவால் விடுகின்றது.

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (சூரா அல் பகரா 2:23)

திருக்குர்ஆனுக்கு எதிராக ஒரு வசனத்தைக் கூட உருவாக்க முடியாமல் தோல்வியைத் தழுவியவர்கள் அடுத்த முடிவுக்கு வந்தார்கள். அதுதான் அந்தத் திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்களை அழிவுக்கு உள்ளாக்குவது. இப்படிச் செய்து திருக்குர்ஆனுடைய ஒளியை ஊதி அணைத்து விடலாம் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (சூரா ஸஃப் 61:8)

திருக்குர்ஆனின் ஒளியை அணைந்து விடாமல் பாதுகாப்பது நம் மீதும் கடமையாக இருக்கிறது. அந்தத் திருக்குர்ஆனோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்கிறது? சிந்திக்க வேண்டிய கேள்வி இது. இந்தத் திருக்குர்ஆனை யார் யாரெல்லாமோ வாசிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், உடனே இஸ்லாமைத் தழுவுகிறார்கள். நமக்கு என்ன நேர்ந்தது?

திருக்குர்ஆன் குறித்து நமக்கு ஆறு கடமைகள் உள்ளன. அவையாவன:

1. முழுமையாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
2. தினமும் பொருளறிந்து ஓத வேண்டும்.
3. சிந்திக்கவேண்டும்.
4. ஆராயவேண்டும்.
5. பின்பற்றவேண்டும்.
6. பிறருக்கு எடுத்து வைக்கவேண்டும்.

இந்தக் கடமைகளை நம்மில் எத்தனை பேர் நிறைவேற்றுகிறோம்? நம்மை நாமே கேள்வி கேட்டு திருக்குர்ஆனோடு நம் தொடர்புகளை வலுப்படுத்துவோம். வெற்றி பெறுவோம்.

இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

என் கேள்விக்கு இறைவனின் பதில்!


துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:
“அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.”

இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”

அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான்.

பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

“இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

“என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

“துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

“மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

1. நோன்பு துறக்கும்பொழுது.
2. லைலத்துல் கத்ர் இரவு.
3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).
4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.
5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.
6. அரஃபா தினத்தில்.
7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.
8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.
9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.

“உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. சேவல் கூவும் பொழுது.

“சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)
12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

“ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

“உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.

“யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,
2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,
3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

“அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

“உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக!


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்? - பாகம் 2


மனிதர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை

வலுவான தனி மனித உறவுகளும், சகோதரத்துவமும் பலப்பட்ட சமூக வாழ்க்கையைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. சத்திய விசுவாசிகள் பரஸ்பரம் சகோதரத்துவம் பேண வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவரை நேசிக்காதவரை நீங்கள் நம்பிக்கையாளராக முடியாது. நம்பிக்கையாளராகாதவரை சுவனத்தில் நுழைய முடியாது.” அல்லாஹ்விற்காக நேசிப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்.

1. அல்லாஹ்வின் அன்பு

ஹதீஸுல் குத்ஸீ ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான்: “என்னை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்துபவர்களூக்கும், சந்திப்பவர்களுக்கும், செலவு செய்பவர்களுக்கும் என்னுடைய அன்பு கிடைக்கும்.”

2. அல்லாஹ்வின் நிழல்

கியாமத் நாளில் அல்லாஹ் கூறுவான்: “என்னுடைய மகத்துவங்களை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்தியவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு நிழல் தருவேன் - என்னுடைய நிழல் இல்லாமல் வேறு நிழல் இல்லாத இந்நாளில்!”

பந்தமும் பாசமும் நிலைநிறுத்துவது

பரஸ்பரம் அன்பு செலுத்துவது எவ்வளவு முக்கியமானது என்றும், சுவனத்தில் பிரவேசிக்க நாம் சக மனிதர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் புரிந்து கொண்டோம். இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய - நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்தது போன்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் நம்மிடம் சில மாற்றங்களை, சில பண்புகளை உருவாக்க வேண்டும்.

1. அழகிய குணம்

தீன் என்றால் அழகிய குணத்தை உள்வாங்கியது என்று பொருள். அந்த தீனை உட்கொண்டுள்ள நாம் அழகிய குணங்களை வெளிப்படுத்த வேண்டும் - முஸ்லிம் தலைவர்களிடமும், முஸ்லிம் உம்மத்திடமும்.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நாம் நமது உரிமைகள் பாதூகாக்கப்பட வேண்டும் என்றும், நமது முன்னேற்றத்திற்கான பாதை ஏற்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றோம். இந்நிலை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்பட்டால்தான் நாம் உண்மையான முஃமின்களாக ஆக முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை மேலே பார்த்தோம்.

“உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

2. அடுத்தவருக்கு முன்னுரிமை

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கடும் பசியோடு ஒரு மனிதர் வந்தார். அவரை அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் விருந்தாளியாக செல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

அபூதல்ஹாவுடைய வீட்டில் ஒருவருக்கு மட்டுமே உண்ணும் அளவு உணவு இருந்தது. உடனே அபூதல்ஹா (ரலி) தன் குழந்தைகளைத் தூங்கச் செய்தார். விருந்தாளியுடன் சாப்பிட அமரும்போது விளக்கை அணைத்து விட்டார். அனைவரும் சாப்பிடுவது போல் விருந்தாளி நினைத்து வயிறாற சாப்பிட்டார். விருந்தாளியின் பசி அடங்கியது. இந்த நபித்தோழரைப் பாராட்டி அல்லாஹ் குர்ஆனில் வசனத்தை இறக்கினான்.

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 9)

ஏனையோருடன் அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. அவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் நட்பும் உறவும் சகோதரத்துவமும் மேலோங்கும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபியுடையவும், நபித்தோழர்களுடையவும் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் படிப்பினை இதுதான்.

யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல் தண்ணீர் தண்ணீர் என்று. முதலாமவர் தனது தண்ணீரை இரண்டாமவருக்குக் கொடுக்கச் சொல்கிறார். இரண்டாவது தோழரிடம் செல்லும்போது மூன்றாவதாக தண்ணீர் குரல். இரண்டாமவரும் அவ்வாறே கூறுகின்றார்.

இவ்வாறு ஆறு நபித்தோழர்கள் மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த சம்பவத்தைப் பார்க்க முடிகிறது.

உறவுகளை முறிக்கும் செயல்பாடுகள்

1. கெட்ட பேச்சுகள்

பேசும்போது தரக் குறைவான வார்த்தைகளைப் பேசுவது, பிறரை ஆட்சேபணை செய்வது, கெட்ட பெயர்களைக் கூறி அழைப்பது, இழிவு படுத்துவது போன்ற செயல்பாடுகள் உறவுகளை முறிக்கவும், பரஸ்பரம் சண்டையினை உருவாக்கவும் வழி வகுக்கும்.

2. கோபம்

கோபம் உறவுகளை முறிக்கும் செயல். கோபம் ஒருவருக்கு ஒவ்வொரு விதமாக உருவாகும். நாம் நமது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள ஏனையோருக்கும் முடியாமல் போய் விடும். இறையச்சமுடையவர்களின் பண்பு இவ்வாறு இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது:

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 134)

3. பிணக்கம் (சண்டை)

உண்மையான நம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் சண்டையிடக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருக்கக் கூடாது.”

எண்ணிப் பாருங்கள். நம்மிடையே ஆண்டாண்டு காலம் பேசாமல் எத்தனையோ சகோதரர்கள் இருக்கிறார்கள்.

4. ஏனையோரை அலட்சியப்படுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தன் சகோதரனை ஒரு முஸ்லிம் நிந்தனை செய்யக் கூடாது. நிந்திப்பது முஸ்லிமுக்கு இழிவை ஏற்படுத்தும். பிறரை நிந்தித்து விட்டால் அவருடன் உறவை மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படாமல் போய் விடும்.”

கொடுக்கல் வாங்கல்

ஒரு முஸ்லிமுடைய கொடுக்கல் வாங்கல் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதில் ஏற்படும் மனச் சிதைவுகள் பரஸ்பரம் உறவுகளை முறித்து விடும்.

இஸ்லாம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் எவ்வாறு கட்டளை இடுகின்றதோ அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். காரணம், அது ஈமானின் ஓர் அம்சமாகவும் இருக்கின்றது.

உறவுகளை சக்திப்படுத்தும் வாய்ப்புகள்

பரஸ்பரம் ஸலாம் கூறுதல், புன்னகைத்தல், முஸாபா செய்தல், பரஸ்பரம் சந்தித்தல், பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்தல், ஆலோசனை கூறுதல், பிரார்த்தனை செய்தல்.... போன்ற செயல்பாடுகளால் உறவுகளை சக்திப்படுத்தலாம்.

இப்படியாக பிற சகோதரர்களின் நலனில் அக்கறை கொண்டு, கருத்துவேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல், பெருந்தன்மையுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொண்டால் நல்லுறவுகள் மலரும். சமுதாயத்தில் சகோதரத்துவம் பிறக்கும். நானிலம் சிறக்கும்.


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

Thursday, 26 September 2013

எதிரிகள் எல்லை மீறும்பொழுது…


புனித கஅபா ஆலயத்தில் தொழுகையில் ஆழ்ந்திருந்தார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அபூஜஹ்லும், அவன் கூட்டாளிகளும் இதனைக் கண்டனர். மற்றவர்களின் விசுவாசத்தைக் கேள்வி கேட்கும் முஹம்மத் பொது இடத்தில் எந்தவித அச்சமுமில்லாமல் தொழுகை நடத்துவதைக் கண்டு அவர்களுக்குப் பொறுக்கவில்லை.

அபூஜஹ்ல் கூறினான்: “ஓர் ஒட்டகத்தின் குடலை எடுத்து வாருங்கள். அதைப் போட்டு முஹம்மதை நாம் மூட வேண்டும்.”

உக்பா இப்னு அபீ முஐத் வேகமாக எழுந்து ஓடினான். பயங்கர நாற்றம் கொண்ட ஒரு குடலைக் கொண்டு வந்தான். அண்ணலார் தொழுகையில் ஸுஜூதுக்குச் சென்றபொழுது அவர்களின் கழுத்தில் அவர்கள் அந்தக் குடலைப் போட்டனர். அண்ணலார் தலையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். களிப்பில் கூச்சல் போட்டார்கள்.

அசாதாரண சப்தம் கேட்டு கஅபாவுக்கு ஓடி வந்தார் ஃபாத்திமா (ரலி).  அங்கே தன் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  சிறிதும் தாமதிக்காமல் அந்தக் குடலை அகற்றினார் ஃபாத்திமா (ரலி). குறைஷிகளைக் கடும் வார்த்தைகளைக் கூறி ஆட்சேபித்தார்.

தொழுகையை முடித்த அண்ணலார் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா, உக்பா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணலார் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:  “அல்லாஹ்வே, இவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பாயாக.”

மேற்கண்டவர்கள் அனைவரும் பத்ரில் கொல்லப்பட்டார்கள் – ஒருவரைத் தவிர. அது உக்பா இப்னு அபீ முஐத். அவன் பத்ரில் கொல்லப்படாமல் தப்பித்தான். ஆனால் கைதியாகப் பிடிபட்டான். அவனைக் கொல்லுமாறு அண்ணலார் அருமைத் தோழர்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்கள்.

தாங்கள் பிரச்சாரம் செய்யும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களான இவர்களுக்கெதிராக இப்படியொரு நிலைப்பாடு எடுப்பதற்கு எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கிஞ்சிற்றும் தயக்கம் காட்டிடவில்லை.

பிரார்த்தனையை முடித்துவிட்டு அண்ணலார் ஃபாத்திமாவுடன் வீடு திரும்பினார்கள். வழியில் அபூ பக்திரி என்பார் அண்ணலாரையும், ஃபாத்திமாவையும் கண்டார். அவர்களின் முகபாவனையை வைத்து ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அபூ பக்திரி என்ன நடந்தது என்று கேட்டார்.

அண்ணலார் நடந்த சம்பவத்தை மறைப்பதற்கு முயன்றார்கள். ஒன்றும் இல்லை என்றார்கள். அபூ பக்திரி விடுவதாக இல்லை. “இல்லை. ஏதோ நடந்திருக்கிறது. நீங்கள் சொல்லாமல் உங்களைப் போக விடமாட்டேன்” என்றார்.
இவர் விட மாட்டார் என்றறிந்த எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள். இதனை சும்மா விடக்கூடாது என்பதாக இருந்தது அபூ பக்திரியின் நிலைப்பாடு. அப்படியே அண்ணலாரை வழிவிட அவருக்கு மனம் வரவில்லை.

அண்ணலாரை வலுக்கட்டாயப்படுத்தி மீண்டும் கஅபா ஆலயத்திற்கு அழைத்து வந்தார். அங்கே அபூஜஹ்லும், அவன் கூட்டாளிகளும் கூடியிருந்தனர். அபூ பக்திரி கேட்டார்: “அபுல் ஹிகம், முஹம்மதின் தலையில் குடலைப் போடுவதற்கு நீர் கூறினீரா?”

அபூஜஹ்லுக்கு அதனை மறுக்க முடியாத நிலை. “நான்தான் போடச் சொன்னேன்” என்றான். உடனே தன்னுடைய சாட்டையை உருவிய அபூ பக்திரி அபூஜஹ்லை அதனால் விளாச ஆரம்பித்தார். குறைஷிகளின் தலைவன் வலி தாங்க முடியாமல் அலறினான். அண்ணலார் அதனைத் தடுக்கவில்லை.

அபூஜஹ்ல் தாக்க முடியாத பரிசுத்தப் பசுவொன்றும் இல்லை என்று மக்களுக்கு விளங்கிற்று. மக்கள் இரு கூறுகளாகப் பிரிந்தார்கள். அபூ பக்திரிக்கு ஆதரவாக ஒரு கூட்டம். எதிராக ஒரு கூட்டம். இதனைக் கண்ட அபூஜஹ்ல் இவ்வாறு அலறினான்:

“உங்களுக்கு நாசம் உண்டாகட்டும். இதில் நீங்கள் பிளவு படாதீர்கள். நமக்கிடையே பிளவு உண்டானால் அது முஹம்மதுக்குச் சாதமாக மாறும்.”

இஸ்லாத்தின் எதிரிகள் எல்லை மீறும்பொழுது தகுந்த தண்டனைகள் அளிக்கப்படுவதற்கு அண்ணலார் சிறிதும் தயக்கம் காட்டிடவில்லை. இது எக்காலத்திற்கும் பொருந்தும்.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்

இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.