‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி |
அழகிய மணம் கொண்ட, வண்ணமயமான மரத்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு மரம் வளர்ந்தால் அது மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிழல், பழம், மனம் கவரும் மணங்கள், கண் கவரும் வண்ணங்கள் போன்ற பல பலன்களைத் தருகிறது.
இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். இந்த மரம் ஒவ்வொரு முறை வளரும்பொழுதும் நசுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டால், அத்தோடு மக்களிடம் இந்த மரம் பெரும் தீங்கிழைக்கும் என்றும், கொடிய விஷமுள்ளது என்றும், இது வளர்ந்தால் அதன் விஷத்தன்மையால் பிறரை அழித்து விடும் என்றும், ஆதலால் இம்மரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
என்ன நடக்கும்? கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அந்த மரத்தை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். அதனை வெறுக்கத் தொடங்குவார்கள். அதன் அழகையும், அது தரும் பலனையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஒரு முறை அம்மரத்தை விட்டு விலகி விட்டார்களானால் இனி அந்த மரத்தின் பக்கமோ, அதன் அழகின் பக்கமோ அவர்கள் திரும்பவே மாட்டார்கள். ஆனால் ஹோல்ட்புரூக்ஸ் போன்ற ஒரு படைவீரர் இந்த மரத்தைப் பற்றி கேள்விப்படுகிறார். மரங்களோ, தாவரங்களோ ஒருபொழுதும் வளராத ஒரு இடத்தில் வைத்து, இடங்களிலெல்லாம் மிக மோசமான ஒரு இடத்தில் வைத்து அம்மரத்தின் பலன்களை அவர் கேள்விப்படுகிறார்.
ஆம்! அதுதான் குவாண்டனாமோ!
குவாண்டனாமோ என்ற அந்த இடத்தில் மக்களிடையே பகைமையும், வெறுப்புமே குடிகொண்டிருந்தன.
குவாண்டனாமோவில் சிறைவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்சு ஆடைகளும், அந்தச் சிறைவாசிகளை சித்திரவதைப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் கொடிய விலங்குகளும் ஹோல்ட்புரூக்ஸுக்கு சிறைவாசிகளை அணுகுவதற்கு தடையாக இருந்திடவில்லை. அவர் அவர்களைத் தயங்காமல் அணுகி இஸ்லாம் பற்றிப் பேசினார். அவரது அணுகுமுறைகளிலும், கேள்விகளிலும் அவர் மிகுந்த தைரியசாலியாகத் திகழ்ந்தார்.
அவரது சுதந்திரமான, வெளிப்படையான சிந்தனை கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளாலும், பாரபட்சங்களாலும் அவரது சிந்தனையில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.
சிறைவாசிகளிடம் காட்டப்படும் அதிகாரத்தின் மேலுள்ள மோகமும், திமிரும் அவரை என்றுமே மிகைத்ததில்லை. மற்ற படைவீரர்கள் அந்த அதிகார மோகத்தில் வீழ்ந்து கிடந்தனர். ஆனால் அவரோ சிறைவாசிகள் மேல் அவதூறாக வீசப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தார். ஏனெனில் அவர் மற்ற படைவீரர்கள் காணாததைக் கண்டார். மற்ற படைவீரர்கள் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தார்.
அத்தோடு அவர் தனது ஆய்வை, தனது தேடலை பிடிவாதமாக தொடர்ந்தார். அந்த மரத்தை அவர் நேசித்ததே அதற்குக் காரணம். அந்த மரம் ஏற்படுத்திய நல்ல பல விளைவுகளை அவர் அந்தச் சிறைவாசிகளிடம் கண்டார். அவர் அந்த மரத்தைத் தனதாக்க விரும்பினார். அதேபோன்று அந்த மரம் தன்னை உள்வாங்க வேண்டும் என்றும் விரும்பினார்.
பாவம் செய்த ஒரு பணியாள் மன்னிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் அன்பு நிறைந்த எஜமானனைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வானோ அதே மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.
அஹமத் அர்ராஷிதி (முன்னாள் சிறைவாசி 590)
No comments:
Post a Comment