Saturday, 7 January 2017

துரோகி



“தேசியவாதமும் இஸ்லாமும்”, “இம்பாக்ட் பக்கம்”, “மனதோடு மனதாய்...”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” ஆகிய நூல்களுக்குப் பிறகு எனது அடுத்த  மொழிபெயர்ப்பு நூல் - “துரோகி”!

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்ற அமெரிக்க இராணுவ வீரர் எழுதிய Traitor என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.

ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.

எங்கே? குவாண்டனாமோ சிறையில்!

யார் மூலமாக? கைதிகள் மூலமாக!

விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!

ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.



நூலாசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் நம்மை வேறோர் உலகுக்கு கொண்டு செல்கிறார். அங்கே புற்பூண்டுகள் இல்லை. மரம் செடி கொடிகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக மனிதர்கள். தாடி வைத்த மனிதர்கள். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து தலை முதல் தோள் வரை சாக்குத் தொப்பி அணிவிக்கப்பட்டு சரக்குகள் ஏற்றும் விமானத்தில் விலங்கிட்டு தூக்கி வரப்பட்ட மனிதர்கள்.

இராட்சத சிலந்திகளும், பெருச்சாளிகளும் உலா வரும் அந்த இடத்தில், மனித சஞ்சாரமே கூடாத அந்த இடத்தில் மனிதத்தை மிதித்து உருவாக்கப்பட்ட இருண்ட கண்டம்.

அங்கே அன்பு இல்லை. அரவணைப்பு இல்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டு வரப்பட்ட சித்திரவதைக் கருவிகளும், சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிடுசிடு மூஞ்சிகளும் உள்ள கொடூரமான இடம்.



அங்கே கடுமைக்குப் பதில் கருணை பிறக்கிறது இந்நூலாசிரியருக்கு. இஸ்லாத்தின் மேல் வெறுப்புக்குப் பதில் விருப்பம் பிறக்கிறது. அதுவும் அந்த அப்பாவி கைதிகளின் அன்றாட நடவடிக்கை மூலமாக!

கல் நெஞ்சும் கரையும் சோகங்கள் ஒவ்வொரு கைதியிடமும். கைதிகளின் கதறல் கதைகளைச் சொல்கிறார். அவரும் கண்ணீர் வடிக்கிறார். நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார் இந்நூலில்.

கூடவே அமெரிக்கப் பட்டாளத்தின் சீழ் பிடித்த மனநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் படம் போட்டுக் காட்டுகிறார்.

இறுதியில் அவரது கண்ணீர் கண்ணியமிகு இஸ்லாத்தில் கொண்டு போய் அவரைச் சேர்க்கிறது.





2 comments:

  1. வாழ்த்துக்கள். எழுத்து பணி தொடரட்டும்.

    ReplyDelete
  2. இன்னும் பல உன் வழியில் தமிழுக்கு வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete