உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும்.
வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.
புராதன காலத்திலும் கூட வாசிப்பு அறிவுத் தேடலின் அடிப்படை வழியாகவே இருந்து வந்துள்ளது. எகிப்திய ஃபார்வோன்கள் தங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் உருவாக்கிய முதல் நூல் நிலையத்தில் "இங்கே ஆத்மாக்களுக்குரிய உணவும் சிந்தனைக்கு விருந்தும் உண்டு" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
வாசிப்பு மங்கி மறைந்து அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும்போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தரும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.
"அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்" என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ)
இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்க முடிகின்றது. வாழ்வும் சாவும் தங்கியிருப்பதே வாசிப்பில்தான் என்பதுதான் மேற்குறித்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் அர்த்தமாகும்.
இந்த மண்ணில் மிகக் குறுகிய காலப் பிரிவில் வெற்றிகரமான சமூக மாற்றத்தை தோற்றுவித்த இஸ்லாம் தனது தூதை “வாசப்பீராக” என்றே துவங்கியது. காரணம், சமூக மேம்பாட்டின் ஆணிவேர் வாசிப்பாகும்.
அந்த வகையில்தான் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் எனும் தேடலை மனித வாழ்வின் இலக்காக குறிப்பிட்டார்கள்.
கற்றலுக்கு அடிப்படை வாசிப்பு. வாசிப்பு இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றிக்கு வழிகோலும்.
வாசிப்பு அறிவின் வேராக இருந்தாலும் சமூக யதார்த்தத்தை பார்க்கும்போது கவலை தரும் வெளிப்பாடுகளையே காண முடிகிறது. வாசிப்பின் அடிப்படையில் எமது சமூத்தைப் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:
• வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிக்காதவர்கள்: வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் அல்லது நேரமின்மை காரணமாக வாசிக்காதவர்கள். உண்மையில் இவர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பவர்கள்.
• வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்: எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு பலதரப்பட்ட தொழில்களிலும் அமர்ந்து விடுபவர்கள். தூங்கும் இப்பிரிவினரை தட்டியெழுப்வுவது தார்மீகக் கடமையாகும்.
• வாசிக்கத் தெரிந்தவர்கள். வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்: மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களே. இவர்கள் உண்மையில் அருள் பாக்கியம் பெற்றவர்கள்.
• வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்: நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் அமைப்பில் இல்லை என்பது கசப்பான உண்மை. எனவே வளமான நூலகங்களை அமைத்துக் கொடுப்பதில் சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.
• வாசிக்கத் தெரியாதவர்கள். ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்: ஊர்களில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டம் எமக்கு உணர்த்துவது இதைத்தான். இயலாது என்று ஒன்றும் இல்ல. துணிந்தால் இவர்களும் நல்ல வாசகர்களாக மாறலாம்.
• வாசிக்கத் தெரியாதவர்கள். அதேசமயம் வாசிப்பின் முக்கியத்துவமும் அறியாதவர்கள்: இதற்கு ஏழ்மை, எழுத்தறிவின்மை, அறியாமை, யுத்தம், அகதி வாழ்வு போன்ற பலதரப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இவர்களுக்கு வாசிப்பு அதிசயமான ஒன்றாக தென்படும். சமூக மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதி இதுவே.
இந்நிலை மாற வேண்டுமாயின் வாசிப்பு ஏன், எதற்கு என்பது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் ஆக்கமும் அழிவும் எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருப்பது வாசிப்பின் அளவிற்கு எற்பவே.
அந்த வகையில் வாசிப்பு ஏன்? வாசிப்பின் முக்கியத்துவம், பயன்பாடுகள், வாசிப்பைத் தூண்டும் காரணிகள் யாவை என்பவற்றை சுருக்கமாக நோக்குவோம்.
வாசிப்பின் பயன்பாடுகள்
வாசிப்பு மனித வாழ்வின் ஆயுட்காலத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது என்பது அறிஞர் அப்பாஸ் அல்-அக்காதின் கூற்றாகும்.
எமது ஆயுட்காலத்துடன் நாம் வாசிக்கும் அறிஞர்களின், சிந்தனையாளர்களின் ஆயுட்காலமும் சேர்ந்தே எமது ஆயுட்காலம் என்பதையே அறிஞர் அக்காத் இங்கு குறிப்பிடுகிறார்.
வாசிப்பின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:
1) பொதுவாக வாசிப்பு அறிவின் திறவுகோல். அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகங்கள் தோன்றவே முடியாது.
2) மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கும், சரியான வழிபாட்டுக்கும் இறைக் கட்டுப்பாட்டிற்கும் உதவுவது பரந்த வாசிப்பே.
3) உலக வாழ்வில் மனித சுபிட்சத்திற்கும், சமூக எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் துணையாக இருப்பது வாசிப்பாகும்.
4) உலக அறிஞர்களின் கண்டுபிடிப்பிப்புகளுக்கு பின்னால் வாசிப்பு பெரும் துணை நின்றுள்ளது. உதாரணமாக, அறிஞர் பீலே பிரான்ஸ் வேர்த் டி.வி.யை கண்டுபிடித்தவர். அவருடைய தேடலுக்கு மூலகாரணியாக அமைந்தது அவருடைய வாசிப்பு பழக்கமாகும்.
5) அறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன:
“எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்." (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்)
“அறிஞனின் மையையும் ஷஹீதுகளின் இரத்தத்தையும் எடையிட்டால் அறிஞர்களின் மையே கனமாக இருக்கும்." (அல் ஹஸனுல் பஸரி)
(அறிவைப் பெறுவதற்கு வாசிப்பு அடிப்படை என்பதை கவனத்திற் கொள்க)
வாசிப்பு ஏன்?
• வாசிப்பு என்பது அறிவுக்கும் ஆன்மாவிற்கும் விருந்தாகவும் உள்ளத்திற்கு இன்பம் தரும் பொழுதுபோக்காவும் அமைகின்றது.
• ஆழான வாசிப்பு காலங்கள் மற்றும் இடங்களின் வேறுபாடுகளை நீக்கி விடுகிறது. ஒரு நல்ல வாசகன் எங்கிருந்தாலும், எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இரண்டற கலந்து உயிரோட்டத்துடன் பழகுவான்.
• வாசிப்பு மனிதனை குறுகிய உலக வாழ்வில் இருந்து விரிந்த சிந்தனை கொண்ட பரந்த உலகிற்கு கொண்டு செல்லும்.
• இறைத் தூதை புரிந்து கொள்வதற்கும் நபிகளாரின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கும் துணை நிற்பது வாசிப்பே.
• தான் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே.
வாசிப்பைத் தூண்டும் காரணிகள்
தூய்மையான எண்ணம் கொண்டு ஆரம்பித்தல்:
“படைத்த இறைவனது நாமத்தைக் கொண்டு வாசிப்பீராக" என்று அல்குர்ஆன் கூறுவதன் மூலம், அறிவும் ஆராய்ச்சியும் ஈமானின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எனவே இறைவனுக்காக என்ற தூய எண்ணம் வாசிப்பின் முதற்படி.
வாசிப்பு சூழல்
வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது. நல்ல வாசிப்பு பழக்கமுள்ள குடும்ப சூழல், நண்பர்கள் வட்டம் இங்கு கவனிக்கத்தக்கது.
வாசித்தல் இலக்கு
ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது என்பது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நூல்களை வாசிப்பது என்பது தொடர்பான இலக்கு ஒன்றையும் அமைத்துக் கொள்வது வாசிப்பைத் தூண்டக்கூடியது.
இந்த இலக்கானது ஒரு நாளில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குதல் என்பதாகவோ, மாதத்துக்கு ஒரு நூல் என்பதாகவோ அல்லது வாரம் ஒரு நூல் என்பதாகவோ இருக்கலாம். வாசிப்பை மேம்படுத்துவதற்கான முதலாவது படிநிலை இதுவே.
வாசிக்கும் இடம்
வாசிக்கும் இடத்தைத் திட்டமிடுதலும் வாசிப்பைத் தூண்டும் முக்கிய காரணியாகும். சிலருக்குப் படுக்கையில், பலருக்குக் காலைப் பொழுதில் காஃபி அருந்தும் நேரத்தில், இன்னும் சிலருக்கு மதியம் சாப்பிடுகையில், மற்றும் சிலருக்கு பேருந்து மற்றும் ரயில்கள் போன்றவையே வாசிக்கும் இடங்கள்.
வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. வாசிக்கும் நேரம். ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கில் குறித்த நேரத்தை அமைதியாக வாசிப்பதற்கு ஒதுக்குவது அவசியமாகும்.
வாசிக்கும் காலமானது தினமும் 10-15 நிமிடங்களாக இருக்கலாம். அல்லது கூடிய நேரமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாக அமையலாம்.
வளமான வாசிப்பு
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணி எதை வாசிப்பது என்பதுதான். இதில் துறை சார்ந்தோரின் வழிகாட்டல் இளைய தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.
தஃப்ஸீர், ஹதீஸ், நம்பிக்கை கோட்பாடு, சட்டம், வரலாறு போன்ற கலைகளில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், கலை இலக்கிய புத்தகங்கள் மற்றும் சமூக மாற்றத்தை தோற்றுவித்த அறிஞர்கள், வழிகாட்டிகளின் வாழ்க்கைச் சரிதங்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் இளைஞர்களுக்கு மிகப் பொருத்தமானவை.
அவ்வாறே இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயன்தரத் தக்கதாக அமையும்.
வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பது பழமொழி. ஆனால் வாசிப்பு அதை விட உயர்ந்த பணியை ஆற்றுகிறது. ஒரு சமூகத்தின் இருப்புக்கும், மேம்பாட்டிற்கும் ஆணிவேராக இருப்பதே வாசிப்பாகும். வாழ்வு உண்டு இல்லை என்பதை தீர்மானிப்பதே வாசிப்புத்தான்.
காரணம் - அறிவின் அடிடப்படை வாசிப்பாகும். எனவே வாசிப்போம் வளம் பெறுவோம்.
ஆக்கம்: முஹம்மத் பகீஹுத்தீன், இலங்கை
நன்றி: http://www.kayalnews.com
No comments:
Post a Comment