இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சூரா ஆல இம்ரான் 3 : 133)
இங்கே இறைவன் முதலில் மன்னிப்பின் பக்கம் விரைந்து வரச் சொல்கிறான். அதன் பின்னர் சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வரச் சொல்கிறான். ஏன் அப்படி?
அல்லாஹ் நம் பாவங்களை மன்னிக்காமல் நாம் சுவனம் செல்ல முடியாது என்பதை இங்கே இறைவன் உறுதிப்படுத்துகின்றான். ஒன்று அல்லாஹ் தன் கருணையால் நம்மை சுவனத்தில் நுழைவிப்பான். அல்லது நரகத்தில் புகுத்தி நம் பாவக் கறைகளை நீக்கி, பின்னர் சுவனம் நுழைவிப்பான்.
எப்பொழுதும் அல்லாஹ் திறந்து வைத்திருக்கும் வாசல் மன்னிப்பு. எல்லா நேரங்களிலும் தன் அடியார்கள் மன்னிப்பை கேட்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். நரகம் செல்லாமல் சுவனம் செல்ல வேண்டுமென்றால் மன்னிப்பின் பக்கம் நாம் திரும்ப வேண்டும். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்கத் தயாராக இருக்கிறான். மரணத்திற்கு முன்னால் பாவமன்னிப்பு தேடினால் மாபாவமான ஷிர்க் எனும் இணைவைப்பைக் கூட அல்லாஹ் மன்னிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பகலில் பாவம் செய்யக்கூடியவர்கள் பாவமன்னிப்பு பெறுவதற்காக இரவில் அல்லாஹ் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான். இரவில் பாவம் செய்யக்கூடியவர்கள் பாவமன்னிப்பு பெறுவதற்காக பகலில் அல்லாஹ் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான். இப்படி அல்லாஹ் மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் வரை (மறுமை நாள் வரை) தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான்.” (முஸ்லிம்)
இன்னும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்.” (திர்மிதீ)
பாவமன்னிப்பிற்கு பின்பு சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வருமாறு சொல்கிறான். எப்படிப்பட்ட சுவர்க்கம்? அல்லாஹ் சுவர்க்கத்தின் ஒரு தன்மையை இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். சுவர்க்கத்தின் அகலம் வானங்கள், பூமியைப் போன்றது என்கிறான்.
இந்த வசனம் இறக்கப்பட்டதற்குப் பிறகு யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் வந்து. “உமரே, அல்லாஹ் குர்ஆனில் வானங்கள், பூமி யாவும் சுவர்க்கம் வியாபித்திருக்கிறது என்று கூறுகின்றானே… அப்படியென்றால் நரகம் எங்கே இருக்கும்?” என்று குதர்க்கமாகக் கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு பதில் பகர்ந்தார்கள்: “பகல் வந்தால் இரவு எங்கே இருக்கும்? இரவு வந்தால் பகல் எங்கே இருக்கும்? அல்லாஹ் தான் நாடியதைச் செய்வான்.”
“சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வாருங்கள்” என்ற இந்த வசனத்தைக் கேட்டவுடன் நம் உள்ளங்களில் என்ன தோன்றியது? ஸஹாபாக்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது? இந்த அழைப்பு ஒரு நபித்தோழரின் உள்ளத்தில் ஊடுருவி என்ன விளைவை ஏற்படுத்தியது என்று பாருங்கள்.
பத்ருப் போர்க்களம். இக்கட்டான சூழ்நிலை. தோழர்களை அண்ணலார் உற்சாகப்படுத்துகிறார்கள். அப்பொழுது “சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வாருங்கள்” என்ற இதே வசனத்தைச் சுட்டிக்காட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்: “சுவர்க்கத்திற்காக எழுந்திருங்கள். சுவர்க்கத்தை நோக்கி விரைந்து வாருங்கள். அது வானங்கள், பூமியின் அகலத்தைப் போன்று விசாலமானது.”
இதனைக் கேட்ட உமைர் இப்னு ஹுமாம் (ரலி) என்ற அன்சாரித் தோழர் எழுந்தார். “அல்லாஹ்வின் தூதரே, சுவர்க்கம் வானங்கள், பூமியைப் போன்று விசாலமானதா?” என்று கேட்டார். அண்ணலார் “ஆம்” என்றார்கள். உடனே அவர் (ஆனந்தத்தை வெளிப்படுத்தும் முகமாக) “பஃக், பஃக்…” என்றார்.
அண்ணலார், “ஏன் பஃக், பஃக் என்கிறீர்?” என்றார்கள். “இல்லை அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக, அந்த சுவர்க்கத்தை அடையவேண்டும் என்ற ஆசையில்தான் (ஆனந்தத்தில்தான்) நான் அந்த வார்த்தையைச் சொன்னேன்” என்றார் உமைர்.
உடனே அண்ணலார், “நீங்களும் அதில் உள்ளவர்தான்” என்று நற்செய்தி கூறினார்கள். இந்த உரையாடலின்பொழுது உமைர் கையில் சில பேரீத்தம்பழங்களை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்த வார்த்தையைக் கேட்டதும் அவற்றை வீசிவிட்டு அந்தத் தோழர் இவ்வாறு சொன்னார்: “வானங்கள், பூமியின் அளவுக்கு விசாலமான இந்தச் சுவர்க்கத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்கு வாக்களித்த பிறகு, இந்தப் பேரீத்தம் பழங்களைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தைக் கூட நான் இந்த உலகில் தூரமாகக் கருதுகின்றேன். அதனை வெறுக்கிறேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு போர்க்களத்திற்குள் புகுந்தார். எதிரிகளை ஆவேசமாகத் தாக்கினார். தான் கொல்லப்படும் வரை போர் புரிந்தார். இறுதியில் ஷஹீதானார். அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: “இந்தத் தோழர் தனக்கு வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்.”
சுவர்க்கத்தில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் “நீங்கள் திருப்தி கொண்டீர்களா?” என்று கேட்பான். “யா அல்லாஹ்! நாங்கள் எப்படி திருப்தி கொள்ளாமல் இருக்க முடியும்?” என்று சுவனவாசிகள் வினவுவார்கள்.
அல்லாஹ் சொல்வான்: “இதை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு இன்று வழங்குகிறேன். அதுதான் என் திருப்பொருத்தம் (ரிழா). இன்றைய தினம் என்னுடைய திருப்பொருத்தத்தை நான் உங்களுக்கு விதிக்கிறேன். இதற்குப் பிறகு நான் உங்களிடம் ஒருபொழுதும் கோபம் கொள்ளமாட்டேன்.”
இதற்குப் பிறகு அல்லாஹ் “லிகா” என்னும் தன் புனித தரிசனத்தை வெளிக்காட்டுவான். இந்த அற்புத வாய்ப்புதான் சுவர்க்கத்தின் அத்தனை அருட்கொடைகளை விடவும் பெரியது. ஒருவருக்கு சுவர்க்கத்தின் அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்பட்டு, ஏன், முழு சுவர்க்கமே வழங்கப்பட்டாலும் அல்லாஹ்வின் “லிகா” கிடைத்து விட்டால் அந்த அருட்கொடைகள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
ஆதலால் நாம் சுவர்க்கத்தைத் தருமாறு பிரார்த்திக்கும்போழுது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், அவனது புனித தரிசனத்தையும் நமக்கு தருமாறு கேட்கவேண்டும்.
இந்த சுவர்க்கத்தை பெறுவதற்கு அருமையான ஒரு வாய்ப்பாகத்தான் அல்லாஹ் புனித ரமலானை ஏற்படுத்தியுள்ளான். அது நம்மை இதோ தழுவிச் சென்றுகொண்டிருக்கிறது. புனித ரமலான் என்றால் அது திருக்குர்ஆனின் மாதம். புனித ரமலான் என்றால் அது புண்ணியம் பூத்துக் குலுங்கும் மாதம். புனித ரமலான் என்றால் அது வணக்கங்களின் மாதம். புனித ரமலான் என்றால் அது பாவமன்னிப்பின் மாதம். புனித ரமலான் என்றால் அது சுவர்க்கத்தின் மாதம்.
விடியல் வெள்ளி ஜூலை 2014 (மனதோடு மனதாய்...)
No comments:
Post a Comment