Saturday, 22 February 2014

மனிதகுலத்திற்கெதிரான மாபாதகத் தீர்ப்பு!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு!

அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அந்தத் தீர்ப்பு இதுதான்: ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது!’’

இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பின்போது நீதிபதிகள், ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின்படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்’’ என்று குறிப்பிட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டப்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.

கடந்த 148 ஆண்டு காலமாக இருந்த நடப்பை மாற்றி வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
அதனால்தான் தினமும் மலத்தைக் கொட்டும் பத்திரிகைகள் இதனைப் ‘புரட்சிகரத் தீர்ப்பு’ எனப் போற்றிப் புகழ்கின்றன.

உண்மையில் இது புரட்சிகரத் தீர்ப்பா, இல்லை புரட்டுத் தீர்ப்பா என்பதைச் சிறிது அலசுவோம்.

அறிவியல் பூர்வமாக அலசினோம் என்றால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாற்றமானது. உடலுறவு என்பது மனித வளர்ச்சியின் மூலதனம். ஆனால் ஓரினச் சேர்க்கை மனித வளர்ச்சியை மங்கச் செய்து விடும். மனித வளம் மண்ணோடு மண்ணாகி விடும். மழலைகளின் ஒலிகளுக்குப் பதிலாக மரண ஓலங்களே வீடுகளில் கேட்கும்.

தீர்ப்பளித்த நீதிபதிகள் இதனை எண்ணிப் பார்த்தார்களா?

அடுத்து மனோதத்துவ ரீதியாக அலசுவோம். மனோதத்துவவியலாளர்கள் ஓரினச்சேர்க்கையை ஓர் அசாதாரணமான நடவடிக்கை (Abnormal Behaviour) என்கின்றனர்.

1970கள் வரை அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோய் (Mental Illness) என்றே வகைப்படுத்தினர். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களின் கடும் எதிர்ப்பினால் பின்னர் அந்தக் கருத்து மாற்றப்பட்டது. (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 6, 31)

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களின் மூளைகளில் ஒரு சில பகுதிகளில் அந்தப் பழக்கத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 27, 248-249)

தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இவை தெரியுமா?

அடுத்து ஓரினச்சேர்க்கை சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் சமூகத்தில் பரவுகின்றன. பிரபல சமூகவியல் நிபுணர் மேசியோனிஸ் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளால் வருகிறது. ஓரினச்சேர்க்கையால் மலக்குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸ் கிருமி பரவுகிறது. இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது. அதிகமானவர்களுடன் உறவு கொள்ளும்பொழுது இந்நோய் பரவும் வாய்ப்பும் அதிகமாகிறது. எய்ட்ஸ் கிருமி தொற்றிக்கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களே!’’ (ஆதாரம் : மேசியோனிஸ் 545)

எய்ட்ஸ் நோய் பரவுவதால் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து மேசியோனிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு ஆளுக்கு 1,50,000 அமெரிக்க டாலருக்கும் மேல் (சுமார் 60 கோடி ரூபாய்!) செலவாகிறது. புதிய சிகிச்சைமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் இந்தச் செலவு இன்னும் கூடும்.’’ (மேசியோனிஸ் 545)

இந்தச் சமூக விளைவுகளை தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒரு கணமாவது சிந்தித்துப் பார்த்தார்களா?

இறுதியாக மத ரீதியாகப் பார்ப்போம்.

யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று பெரிய மதங்களும் ஓரினச்சேர்க்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

பைபிளின் பழைய ஏற்பாடும், திருக்குர்ஆனும் நபி லூத் (அலை...) அவர்களின் சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

லூத் நபியின் சமுதாயத்தினர் தங்கள் ஓரினச்சேர்க்கை பழக்கத்தாலும், அதற்கு மன்னிப்பு கேட்காமல் இருந்ததனாலும் அழிக்கப்பட்டார்கள் என்று பைபிள் பழைய ஏற்பாடு கூறுகின்றது. (ஜெனிசிஸ் அத்தியாயம் 13,14,18,19)

பைபிள் புதிய ஏற்பாட்டில், ரோமன்ஸ் புத்தகத்தில் புனித பால் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அவர்களில் பெண்கள் இயற்கைக்கு முரணானதை மாற்றிக்கொண்டார்கள். அதேபோல் ஆண்களும் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். ஆண்கள் ஆண்களிடமே இச்சை கொண்டனர். அவர்களுடன் வெட்கங்கெட்ட உறவை வைத்துக்கொண்டனர். இந்தக் குற்றத்திற்காக அவர்கள் கடும் தண்டனை பெற்றனர்.’’ (ரோமன்ஸ் 1 : 22-27)

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்). அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்? மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (அல் குர்ஆன் 7 : 80,81,84)

இந்த வசனங்களெல்லாம் தீர்ப்பளித்த நீதிபதிகளின் காதுகளில் விழுந்ததா?
இறையச்சமுள்ள நீதிபதிகளால் இவ்வாறு இயற்கைக்கெதிராக தீர்ப்பளிக்க முடியுமா? இயற்கை நெறிகளுக்கு மாற்றமாக எதனையும் ஊக்குவிக்காத இஸ்லாம் தழைத்தோங்கும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட தீர்ப்புகள் சாத்தியப்படுமா?

அஞ்ஞானம் வேரூன்றி இருள் மண்டிக் கிடந்த ஒரு சமுதாயத்தில் - அந்த இருளைக் கிழித்து ஒளியைப் பாய்ச்ச வந்தது இஸ்லாம். இந்த இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்போம். இப்படிப்பட்ட மடமைகளிலிருந்து சமூகத்தைக் காப்போம்.

MSAH

விடியல் வெள்ளி  ஆகஸ்ட் 2009 (தலையங்கம்)

No comments:

Post a Comment