Monday, 17 February 2014

ஆம் ஆத்மியும், அரவிந்த் கெஜ்ரிவாலும்!


ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கமாகச் சொல்லப்பட்ட ஜன லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதால் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்று 49வது நாளில் ஆம் ஆத்மி அரசு பதவி இறங்கியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி பதவியேற்ற கெஜ்ரிவால், பிப்ரவரி 14ம் தேதி தனது இராஜினாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவிட்டார்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி, ஓட்டெடுப்பு நடந்தபொழுது இரு துருவங்களான காங்கிரசும், பாஜகவும் ஒரே துருவத்தில் இணைந்த அதிசயம் நிகழ்ந்தது. இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை எதிர்த்தன. இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக 27 ஒட்டுகளே விழுந்தன. மாறாக எதிர்த்து 42 ஓட்டுகள் விழுந்தன. ஆதலால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டப்படி இந்த மசோதா நிற்காது என்று அதற்கு அந்த இரண்டு கட்சிகளும் காரணங்கள் கூறின. அத்தோடு ஊழலுக்கெதிரான மசோதாவும், ஆம் ஆத்மி அரசும் முளையிலேயே கரிந்து போயின. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் எப்பேற்பட்ட எதிரியுடனும் இவர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்பதே!

அன்னா ஹசாரேயுடன் பணியாற்றும்பொழுதே அரவிந்த் கெஜ்ரிவால் ஜன லோக்பால் சட்டம்தான் தன்னுடைய இலட்சியம் என்று வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் அன்னா ஹசாரேயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்து ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த பொழுது ஜன லோக்பால் சட்ட இலக்கை இறுக்கிப் பிடித்தார் கெஜ்ரிவால்.

ஜனலோக்பால் சட்டம் இயற்ற இயலவில்லையெனில் தனது அரசு இராஜினாமா செய்யும் என்று கெஜ்ரிவால் பல முறை அறிவித்திருந்தார். அதன்படி இராஜினாமா செய்துவிட்டார்.

காங்கிரசை மண்ணைக் கவ்வ வைத்து, பாஜகவை பாடாய்ப் படுத்தி ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று 27 இடங்களில் வென்றது, அந்த இரு கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, டெல்லி வட்டாரத்தில் அவர்களின் இருப்பே கேள்விக்குறியானது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அவரை அச்சுறுத்துவதற்கும், அலைக்கழிப்பதற்கும் காங்கிரசும், பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன. இது ஏற்கனவே அவை வெளிப்படுத்தி வரும் சந்தர்ப்பவாதத்தின் இன்னொரு சான்று மாத்திரமே.

தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் உள்ள கட்டணங்கள் பாதி குறைக்கப்படும் என்று அறிவித்து, அதனை அமுலிலும் கொண்டு வந்த கெஜ்ரிவால், ஜனலோக்பால் சட்டமும் கொண்டு வந்து விட்டால் தாங்கள் டெல்லி வட்டாரத்தில் அரசியல் முகவரி இல்லாமல் அழிந்துவிடுவோம் என்று அஞ்சித்தான் காங்கிரசும், பாஜகவும்  இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தன.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் கெஜ்ரிவால் தூக்கிப் பிடித்தார். அது ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக இயற்கை எரிவாயுவின் விலையைக் கூட்டி, நாட்டிற்கு 54,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் உதவியுடன் இந்தத் தேசத்துரோக ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை இந்நாள் அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன் முன்னாள் இயக்குனர் வி.கே. சிபல் ஆகியோர் மீது ஊழல் எதிரப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தது மத்திய அரசையும், காங்கிரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த ஏப்ரலில் இயற்கை எரிவாயுவின் விலையை யூனிட்டுக்கு 7 டாலர் என்று அதிகப்படுத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பதுதான் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு. இதற்குப் பிறகுதான் காங்கிரஸ் ஜனலோக்பால் மசோதாவைக் காரணம் காட்டி ஆம் ஆத்மி அரசுக்கு தன் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்தது என்று கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதல்லாமல் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்றவுடனேயே இது அதிக நாட்கள் நீடித்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவால் தான் வாக்களித்த பல விஷயங்களை வாக்கு தவறாமல் நிறைவேற்றிக் காட்டினார் என்பதுதான் உண்மை.

அதிகாரத்தில் எப்படியாவது ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் மாதிரி அவர் எண்ணியிருந்தால் சில ‘அட்ஜஸ்ட்மெண்டுகளை’ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. தன் வாக்குறுதிகளை நிறேவேற்றிவிட்டே படி இறங்கியிருக்கிறார். இது பிற கட்சிகளுக்கு சவால்தான் என்பதில் சந்தேகமில்லை.

காலாகாலமாக ஊறித் திளைத்திருக்கும் ஊழலை இவரால் ஒழித்திட முடியும் என்று நாம் கருதவில்லை. அதேபோல் இந்த ஜன லோக்பால் சட்டத்தை வைத்தும் ஊழலை ஒழித்திட முடியும் என்று நாம் நம்பவில்லை.

நாட்டிலுள்ள ஊழல் பெருச்சாளிகள் எந்தப் பெரிய சட்டத்தையும் தூக்கிப் போட்டு வெளியே வந்து விடுவார்கள். இன்று பணமும், அதிகாரமும்தான் அனைத்தும் என்றாகிவிட்டது.

தொண்டர் அடிப்படையில் ஒரு இலட்சியத்தோடு வார்க்கப்பட்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் அடித்தட்டு மக்களுடன் கட்டியெழுப்பப்படுகிற கட்சிதான் நிலைத்து நிற்கும். அதுதான் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி மக்களோடு மக்களாக மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றிட முடியும். ஆம் ஆத்மி கட்சி மாதிரி உடனே ஆரம்பித்து, உடனே பதவிக்கும் வர முடியும் என்றால் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் நிலவிலுள்ள அமைப்பு அவ்வளவு உறுதியாக உள்ளது.

ஆனால் சிறு சலசலப்பை உண்டு பண்ண முடியும் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார். இதிலிருந்து அரசியலில் மாற்றம் கொண்டு வர விரும்புபவர்கள் பாடம் பயில வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளில் உள்ள குறைகளையும், ஆம் ஆத்மி கட்சி செய்த தவறுகளையும் இவர்கள் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

MSAH

No comments:

Post a Comment