Thursday, 27 February 2014

THE CHAMBER OF EMOTIONS!

10ம் வகுப்பு படிக்கும் என் மருமகள் நஜ்லா காதிரா
“இதயம்” பற்றி எழுதிய ஆங்கிலக்  கவிதை!



It's a chamber of  emotions
A juncture of thoughts
A piece of flesh
A lively soul
Which vibrates through & through
All the time
Along with each nerve
And with each pulse
Something called our HEART......!
Most of the time wandering about
Through a path of various emotions
Half of the time happy
Even though some resembles sorrows
Just like an egg
Half filled with yolk of excitement
And the other half with albumin of worries
Basically arrogant
And partly jelous too
Tough to control
When it fumes with anger
And difficult to handle
When it trembles with fear
Some times tensed
And some times cool
Some times jittery
And some times in tremor
Many of them spread out
With the fragrance of love
But some other's
Littered with a blood of hatred
Whatever the emotions are
It is the unit of human life
Until our last breath
It  goes on... on... & on...
Thumping...
Tic... tic... tic...!

N.A. Najla Qadira (10th Std.), My Neice

‘கோலா’க்களினால் ஏற்படும் கோளாறுகள்!


மனிதனைப் படைத்தான் இறைவன். அவன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தான். பூமியிலிருந்து தானியங்களை விளையச் செய்தான். வானிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். சுவாசிக்க சுத்தமான காற்றை வீசச் செய்தான்.

மனிதன் துவக்கத்தில் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தான். பழங்களும், காய்கறிகளும் மனிதனுக்கு உண்ண படைக்கப்பட்ட சில கால்நடைகளும் அவனுக்கு வேண்டிய சத்துகளை அளித்தன.

இளநீர், பால் போன்றவை அவனது நீர் ஆகாரத் தேவையை செவ்வனே பூர்த்தி செய்தன. சிறுகச் சிறுக மனிதனின் ருசியும், ரசனையும் மாறியது.

இயற்கை உணவுகளைப் புறந்தள்ளி விட்டு செயற்கை உணவுகளுக்குத் தாவினான் மனிதன். சத்தான, குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை நீர் ஆகாரங்களை அலட்சியப்படுத்திவிட்டு செயற்கை நீர் பானங்களில் இறங்கினான். இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான்.

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீ) வினையின் காரணமாகக் கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றிவிட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களின் (தீ) வினைகளில் சிலவற்றை, அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)

பெப்சி, கோக் ஆகியவை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய குளிர்பானக் கம்பெனிகள். இவை தயாரிக்கும் குளிர்பானங்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன.

மேலை நாட்டுக் கம்பெனிகளின் பானங்கள் என்ற கவர்ச்சி ஒரு புறம்... இந்தக் கம்பெனிகள் செய்யும் பிரம்மாண்டமான விளம்பரங்கள் இன்னொரு புறம்.

ஆம்! கடந்த 2000மாவது ஆண்டில் மட்டும், கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் விளம்பரத்திற்காக ரூபாய் 2,30,000 கோடி செலவிட்டுள்ளன!

ஒரு சிறய நாட்டின் ஒரு வருட வரவு-செலவுக் கணக்கின் தொகை இது. இதனை ஓராண்டுக்கு வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இந்நிறுவனங்கள் செலவிடுகின்றன.

இந்த இரு கம்பெனிகளும் அவற்றுக்கு இடையில் உள்ள போட்டியில் மொத்த உலக மக்களையும் பலி கொடுக்கின்றன.

ஆம்! இந்தக் குளிர்பானங்களில் உள்ள ‘காஃபின்’ என்னும் ஊக்கமூட்டும் பொருள் அனைவரையும் அதற்கு அடிமையாக்குகிறது. அது மட்டுமா? இந்தக் குளிர்பானங்களின் உள்ளே கேஸ் ஏற்றப்பட்டுள்ளது (கார்பனேட்டட்). எனவே இதனைத் தொடர்ந்து குடிப்பதால் வயிறு தொந்தியாகிறது. பல் சொத்தையாகிறது. ஊட்டச் சத்து குறைகிறது. வாஷிங்டனில் உள்ள ‘உலகக் கண்காணிப்பு நிறுவனம்’ என்ற அமைப்பின் அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

இன்றைக்கு உலகில் தேநீர், பாலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பருகப்படுவது இந்தக் குளிர்பானங்கள்தாம். அமெரிக்காவில் இது தயாரிக்கப்படுவதால் இதற்கு முதலில் பலியானவர்கள் அமெரிக்கர்கள்தான். உலக மக்கள்தொகையில் அமெரிக்க மக்கள் 5 சதவீதம்தான். ஆனால் இந்தக் கேஸ் ஏற்றப்பட்ட குளிர்பானங்களைக் குடிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள்.

உலகம் முழுவதும் குடிக்கப்பட்ட மொத்த குளிர்பானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குடித்துத் தீர்த்தவர்கள் அமெரிக்கர்கள். 1999ம் ஆண்டுக் கணக்குப்படி சராசரியாக ஆண்டுக்கு 211 லிட்டர் குளிர்பானத்தை அமெரிக்கர்கள் குடித்துள்ளனர்.

இதில் வேடிக்கையும் வேதனையும் என்ன தெரியுமா? அவர்கள் குடித்த தண்ணீரின் அளவு சராசரியாக 109 லிட்டர்தான். ஆனால் இந்த்க் குளிர்பானங்கள் 211 லிட்டர் குடித்துள்ளனர்.

வாழ்வதாராமான தண்ணீரை விட இந்தச் செயற்கைக் குளிர்பானங்களை இரு மடங்கு குடிக்கின்ற கேடுகெட்ட நிலையைப் பாரீர்!

மேலை நாடுகளோடு, அமெரிக்காவோடு இந்தச் சனியன் இருந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் உலகம் முழுவதுமல்லவா இது தொடர்ந்து பரவுகிறது...!

குறிப்பாக, அரபு நாடுகளிலும், இந்தியாவிலும், வளர்ந்து வரும் ஏழை நாடுகளிலும் இந்தக் குளிர்பானங்களைக் குடிப்பது அதிகரித்து வருகிறது. மெல்ல மெல்ல உலக மக்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். உலகின் மக்கள்தொகையில் 20 சதவீதம் பேரைக் கொண்ட சீனா, குளிர்பானம் குடிப்பதில் 4வது இடத்தில் உள்ளது.

பழச்சாறுகள், பால் போன்றவற்றில் வைட்டமின்கள், கால்சியம் போன்ற தாது உப்புகள் அதிகம் உள்ளன. இது நமது உடலுக்கு ஊட்டச்சத்தையும், ஊக்கத்தையும் தருகின்றன. ஆனால் கேஸ் ஏற்றப்பட்ட இந்தக் குளிர்பானங்களிலோ தண்ணீர், இனிப்புச் சுவை, தனி மணம் மற்றும் காஃபின் ஆகியவைதான் உள்ளன.

உடலுக்கு ஊக்கமூட்டும் செயலைச் செய்யும் ‘காஃபினை’ ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் வீதம் பயன்படுத்தினால், அதற்கு மனிதன் அடிமையாகிவிடுவான்.

கார்பனேட்டட் குளிர்பானத் துறையில் 10 பிராண்டுகள் உலகில் பிரபலமானவை. அவற்றில் 80 சதவீத பானங்களில் காஃபின் சேர்க்கப்பட்டுள்ளது. இது 1999ல் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது.

355 மில்லி லிட்டர் கோகோ கோலாவில் 35 மில்லி கிராம் காஃபின் உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுவதும் இந்தக் கம்பெனிகள் தங்களது கிளைகளைப் பரப்பி வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் இந்தக் கிளைகளை நிறுவி, அங்கேயே குளிர்பானத் தயாரிப்புகளைத் தொடங்கி விடுகின்றன. இதனால் சுற்றுச் சூழலும் கெடுகிறது.

அண்மையில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் கிராம மக்கள் கோகோ கோலா கம்பெனிக்கெதிராக போராட்டங்களை நடத்தினர். பிளச்சிமாடா என்ற கிராமத்தில் கோகோ கோலா கம்பெனி குளிர்பான ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. தனக்குத் தேவையான தண்ணீரை ஏரளாமான ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி எடுத்து வருகிறது இந்தக் கம்பெனி.

இதனால் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனம் பூமியிலிருந்து உறிஞ்சுகிறது என்று அந்தக் கிராமத்தினர் கூறுகின்றனர். (செய்தி ஆதாரம்: தினமணி 22.06.2002)

இப்படி, உலக மக்களில் பெரும்பாலானோர் அடிமையாக்குவது மட்டுமல்லாமல், பூமியிலிருந்து தேவைக்கதிகமாக நீரை உறிஞ்சி, சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன இந்தக் குளிர்பானக் கம்பெனிகள்.

அரபு நாடுகளில் இன்று இதன் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அராபியர்களின் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்தக் கோலாக்கள் இடம் பெறுகின்றன. இந்தக் குளிர்பானங்களை அருந்தாமல் ஒரு ரொட்டித் துண்டு கூட உள்ளே இறங்காது என்ற நிலைதான் அங்குள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தக் குளிர்பானங்களின்றி உணவே ஜீரணிக்காது என்ற நிலையே இன்று அங்குள்ளது.

ஏகாதிபத்தியவாதிகள் கத்தியின்றி, இரத்தமின்றி முஸ்லிம்களை இதன் மூலம் அடிமைப்படுத்தி வருகின்றனர். செல்வச் செழிப்பில் ஊறித் திளைக்கும் அரபு நாடுகளுக்கு இது புரியவா போகிறது?
தங்களது விலை மதிக்க முடியாத கறுப்புத் தங்கமான பெட்ரோலைத் தாரை வார்த்து, இந்தக் குளிர்பானங்களைத் தருவிக்கின்றன இந்த நாடுகள்.

இதில் இன்னொரு மிகப் பெரும் கொடுமையும் உண்டு. இந்தக் குளிர்பானக் கம்பெனிகளை நடத்துபவர்கள் யூத பணக்கார முதலைகள். இந்தக் குளிர்பானங்கள் மூலம் வரும் கொள்ளை லாபத்தில் ஒரு பெரும் பங்கை இவர்கள் அல்லும் பகலும் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு அனுப்புகின்றனர்.

இன்று ஃபலஸ்தீனில் சொந்த மண்ணின் மைந்தர்கள் வீடின்றி, வாசலின்றி அகதிகளாக்கப்படுகின்றனர். உலகிலேயே அகதிகளாக அதிகமாக வாழ்பவர்கள் ஃபலஸ்தீன முஸ்லிம்கள்தான். யூத பயங்கரவாதிகள் தினமும் முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றனர். நவீன ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த ஆயுதங்களை வாங்குவதற்குத்தான் இந்தக் குளிர்பானக் கம்பெனிகள் பெருமளவில் இஸ்ரேலுக்கு பொருளுதவி செய்து வருகின்றன. ஆதலால்தான் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களை அருந்தக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

“நீ ஒரு லிட்டர் கோலா வாங்கினால் ஒரு முஸ்லிமைக் கொல்ல ஒரு குண்டை வாங்குகிறாய் என்று அர்த்தம்!” என்று அறிவுறுத்தினார் அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு பொருளையும் இஸ்லாம் தடை செய்கின்றது. இந்தக் குளிர்பானங்கள் உடலுக்கு மட்டுமா தீங்கு விளைவிக்கின்றன? சுற்றுச் சூழலைச் சீர்கெடுக்கின்றன. ஒரு பெருங் கூட்டம் மக்களை அடிமையாக்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூக மக்களைக் கொன்றொழிப்பதற்கு உதவுகின்றன.

ஆதலால் முஸ்லிம்கள் இவற்றை விட்டும் தூரமாகிவிட வேண்டும். இதனை ஒரு பிராச்சாரப் பணியாக மேற்கொண்டு அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். விழிப்புணர்வூட்ட வேண்டும்.

MSAH

விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 2002 (இம்பாக்ட் பக்கம்)

Saturday, 22 February 2014

மனிதகுலத்திற்கெதிரான மாபாதகத் தீர்ப்பு!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு!

அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அந்தத் தீர்ப்பு இதுதான்: ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது!’’

இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பின்போது நீதிபதிகள், ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின்படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்’’ என்று குறிப்பிட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டப்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.

கடந்த 148 ஆண்டு காலமாக இருந்த நடப்பை மாற்றி வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
அதனால்தான் தினமும் மலத்தைக் கொட்டும் பத்திரிகைகள் இதனைப் ‘புரட்சிகரத் தீர்ப்பு’ எனப் போற்றிப் புகழ்கின்றன.

உண்மையில் இது புரட்சிகரத் தீர்ப்பா, இல்லை புரட்டுத் தீர்ப்பா என்பதைச் சிறிது அலசுவோம்.

அறிவியல் பூர்வமாக அலசினோம் என்றால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாற்றமானது. உடலுறவு என்பது மனித வளர்ச்சியின் மூலதனம். ஆனால் ஓரினச் சேர்க்கை மனித வளர்ச்சியை மங்கச் செய்து விடும். மனித வளம் மண்ணோடு மண்ணாகி விடும். மழலைகளின் ஒலிகளுக்குப் பதிலாக மரண ஓலங்களே வீடுகளில் கேட்கும்.

தீர்ப்பளித்த நீதிபதிகள் இதனை எண்ணிப் பார்த்தார்களா?

அடுத்து மனோதத்துவ ரீதியாக அலசுவோம். மனோதத்துவவியலாளர்கள் ஓரினச்சேர்க்கையை ஓர் அசாதாரணமான நடவடிக்கை (Abnormal Behaviour) என்கின்றனர்.

1970கள் வரை அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோய் (Mental Illness) என்றே வகைப்படுத்தினர். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களின் கடும் எதிர்ப்பினால் பின்னர் அந்தக் கருத்து மாற்றப்பட்டது. (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 6, 31)

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களின் மூளைகளில் ஒரு சில பகுதிகளில் அந்தப் பழக்கத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 27, 248-249)

தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இவை தெரியுமா?

அடுத்து ஓரினச்சேர்க்கை சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் சமூகத்தில் பரவுகின்றன. பிரபல சமூகவியல் நிபுணர் மேசியோனிஸ் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளால் வருகிறது. ஓரினச்சேர்க்கையால் மலக்குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸ் கிருமி பரவுகிறது. இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது. அதிகமானவர்களுடன் உறவு கொள்ளும்பொழுது இந்நோய் பரவும் வாய்ப்பும் அதிகமாகிறது. எய்ட்ஸ் கிருமி தொற்றிக்கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களே!’’ (ஆதாரம் : மேசியோனிஸ் 545)

எய்ட்ஸ் நோய் பரவுவதால் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து மேசியோனிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு ஆளுக்கு 1,50,000 அமெரிக்க டாலருக்கும் மேல் (சுமார் 60 கோடி ரூபாய்!) செலவாகிறது. புதிய சிகிச்சைமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் இந்தச் செலவு இன்னும் கூடும்.’’ (மேசியோனிஸ் 545)

இந்தச் சமூக விளைவுகளை தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒரு கணமாவது சிந்தித்துப் பார்த்தார்களா?

இறுதியாக மத ரீதியாகப் பார்ப்போம்.

யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று பெரிய மதங்களும் ஓரினச்சேர்க்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

பைபிளின் பழைய ஏற்பாடும், திருக்குர்ஆனும் நபி லூத் (அலை...) அவர்களின் சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

லூத் நபியின் சமுதாயத்தினர் தங்கள் ஓரினச்சேர்க்கை பழக்கத்தாலும், அதற்கு மன்னிப்பு கேட்காமல் இருந்ததனாலும் அழிக்கப்பட்டார்கள் என்று பைபிள் பழைய ஏற்பாடு கூறுகின்றது. (ஜெனிசிஸ் அத்தியாயம் 13,14,18,19)

பைபிள் புதிய ஏற்பாட்டில், ரோமன்ஸ் புத்தகத்தில் புனித பால் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அவர்களில் பெண்கள் இயற்கைக்கு முரணானதை மாற்றிக்கொண்டார்கள். அதேபோல் ஆண்களும் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். ஆண்கள் ஆண்களிடமே இச்சை கொண்டனர். அவர்களுடன் வெட்கங்கெட்ட உறவை வைத்துக்கொண்டனர். இந்தக் குற்றத்திற்காக அவர்கள் கடும் தண்டனை பெற்றனர்.’’ (ரோமன்ஸ் 1 : 22-27)

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்). அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்? மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (அல் குர்ஆன் 7 : 80,81,84)

இந்த வசனங்களெல்லாம் தீர்ப்பளித்த நீதிபதிகளின் காதுகளில் விழுந்ததா?
இறையச்சமுள்ள நீதிபதிகளால் இவ்வாறு இயற்கைக்கெதிராக தீர்ப்பளிக்க முடியுமா? இயற்கை நெறிகளுக்கு மாற்றமாக எதனையும் ஊக்குவிக்காத இஸ்லாம் தழைத்தோங்கும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட தீர்ப்புகள் சாத்தியப்படுமா?

அஞ்ஞானம் வேரூன்றி இருள் மண்டிக் கிடந்த ஒரு சமுதாயத்தில் - அந்த இருளைக் கிழித்து ஒளியைப் பாய்ச்ச வந்தது இஸ்லாம். இந்த இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்போம். இப்படிப்பட்ட மடமைகளிலிருந்து சமூகத்தைக் காப்போம்.

MSAH

விடியல் வெள்ளி  ஆகஸ்ட் 2009 (தலையங்கம்)

Tuesday, 18 February 2014

சுகமும், துக்கமும்!


வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணே... பொன்னே... என்று கவனித்துக்கொண்டனர்.

அவளுக்கு 18 வயது நிரம்பிய பொழுது அவளின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இத்தனை வருடம் தன் பெற்றோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த அந்த இளம் பெண்ணுக்கு திருமணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

முதலில் அவள் திருமணப் பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் தட்டிக் கழித்து வந்தாள். பெற்றோரும், உற்றாரும் தொடர்ந்து திருமணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி வலியுறுத்த, இறுதியில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

நல்ல மாப்பிள்ளை அமைந்தது. திருமணம் வெக சிறப்பாக நடந்தேறியது. சில நாட்களிலேயே அவளது வாழ்க்கையின் மகிழ்ச்சியின் அடையாளமாக அவள் கர்ப்பமானாள். இதற்கிடையில் அவளின் மாப்பிள்ளைக்கு கத்தரில் வேலை கிடைத்தது. விசா வந்ததும் மாப்பிள்ளை கத்தருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்ற ஒரு சில நாட்களிலேயே கத்தரிலிருந்து அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. மாப்பிள்ளை ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார்! அதிர்ச்சியில் ஆடிப் போனாள் அந்த அபலைப் பெண்.

கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாலும் ஈமானிய அடிப்படையில் வளர்ந்ததனால் இது அல்லாஹ்வின் கட்டளை என்று அழகிய பொறுமையை மேற்கொண்டாள். அடுத்த ஒரு சில மாதங்களில் அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள்.

இன்னும் சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் வலி வந்தது. மருத்துவரிடம் பரிசோதித்தபொழுது அடுத்த அதிர்ச்சி. அவளுக்குப் புற்று நோய் வந்து, முற்றிப் போயுள்ளது தெரிந்தது.
இதனால் ஏற்பட்ட இன்னல்கள் அனைத்தையும் இறைவனின் நாட்டமே என்று அவள் சகித்துக்கொண்டாள். அடுத்த ஒரு சில நாட்களில் அந்த அபலைப் பெண் மரணமடைந்தாள். தான் ஈன்றெடுத்த சிசுவை இருபது நாட்கள்தான் அவள் காண முடிந்தது. ஆம்! அவள் தன் குழந்தையை ஈன்றெடுத்த இருபதாவது தினத்தில் உயிரிழந்தாள்.

இதுதான் இந்த உலக வாழ்க்கை. கவலையே அறியாமல் வளர்ந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை சிறு வயதிலேயே, அதுவும் குறுகிய காலத்திலேயே பல மேடு பள்ளங்களைக் கண்டு அடங்கிப் போய் விட்டது. இப்படித்தான் பலரது வாழ்க்கையும் ஆடி அடங்குகிறது.

இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (திருக்குர்ஆன் 3:140)

நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (திருக்குர்ஆன் 94:5-6)

சுகமும், துக்கமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்துதான் வருகின்றன, அவை அவனது நாட்டப்படியே நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து இன்னல்களையும், நோய்களையும் சகித்துக்கொள்வார்கள். அந்தப் பக்குவம் அவர்களுக்கு வந்து விடும்.
ஆனால் நம்மில் பலரும் வாழ்க்கை என்றால் வாழ்வதற்கே, எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும், ஆதலால் அனுபவிக்க வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது இறைவன் மனிதனைப் படைத்த தத்துவத்திற்கே எதிரானது.

அதே சமயம் நம்மில் சிலருக்கு ஏதாவது துக்கம் ஏற்பட்டு விட்டாலோ அதிலேயே மூழ்கி தங்களை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறார்கள். இதுவும் கூடாது.

இரண்டையும் எதிர்பார்த்து இருக்க வேண்டும். கஷ்டத்திலும், கவலையிலும் இறைவனை நினைவு கூர வேண்டும். மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும் இறைவனை நினைவு கூர வேண்டும். அதே வேளையில் கவலையை விட்டும், துக்கத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு அடிக்கடி துஆ கேட்பார்கள்:
“இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.”( புகாரீ 2893)

MSAH

விடியல் வெள்ளி  ஜனவரி 2014 (மனதோடு மனதாய்...)

Monday, 17 February 2014

ஆம் ஆத்மியும், அரவிந்த் கெஜ்ரிவாலும்!


ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கமாகச் சொல்லப்பட்ட ஜன லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதால் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்று 49வது நாளில் ஆம் ஆத்மி அரசு பதவி இறங்கியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி பதவியேற்ற கெஜ்ரிவால், பிப்ரவரி 14ம் தேதி தனது இராஜினாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவிட்டார்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி, ஓட்டெடுப்பு நடந்தபொழுது இரு துருவங்களான காங்கிரசும், பாஜகவும் ஒரே துருவத்தில் இணைந்த அதிசயம் நிகழ்ந்தது. இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை எதிர்த்தன. இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக 27 ஒட்டுகளே விழுந்தன. மாறாக எதிர்த்து 42 ஓட்டுகள் விழுந்தன. ஆதலால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டப்படி இந்த மசோதா நிற்காது என்று அதற்கு அந்த இரண்டு கட்சிகளும் காரணங்கள் கூறின. அத்தோடு ஊழலுக்கெதிரான மசோதாவும், ஆம் ஆத்மி அரசும் முளையிலேயே கரிந்து போயின. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் எப்பேற்பட்ட எதிரியுடனும் இவர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்பதே!

அன்னா ஹசாரேயுடன் பணியாற்றும்பொழுதே அரவிந்த் கெஜ்ரிவால் ஜன லோக்பால் சட்டம்தான் தன்னுடைய இலட்சியம் என்று வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் அன்னா ஹசாரேயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்து ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த பொழுது ஜன லோக்பால் சட்ட இலக்கை இறுக்கிப் பிடித்தார் கெஜ்ரிவால்.

ஜனலோக்பால் சட்டம் இயற்ற இயலவில்லையெனில் தனது அரசு இராஜினாமா செய்யும் என்று கெஜ்ரிவால் பல முறை அறிவித்திருந்தார். அதன்படி இராஜினாமா செய்துவிட்டார்.

காங்கிரசை மண்ணைக் கவ்வ வைத்து, பாஜகவை பாடாய்ப் படுத்தி ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று 27 இடங்களில் வென்றது, அந்த இரு கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, டெல்லி வட்டாரத்தில் அவர்களின் இருப்பே கேள்விக்குறியானது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அவரை அச்சுறுத்துவதற்கும், அலைக்கழிப்பதற்கும் காங்கிரசும், பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன. இது ஏற்கனவே அவை வெளிப்படுத்தி வரும் சந்தர்ப்பவாதத்தின் இன்னொரு சான்று மாத்திரமே.

தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் உள்ள கட்டணங்கள் பாதி குறைக்கப்படும் என்று அறிவித்து, அதனை அமுலிலும் கொண்டு வந்த கெஜ்ரிவால், ஜனலோக்பால் சட்டமும் கொண்டு வந்து விட்டால் தாங்கள் டெல்லி வட்டாரத்தில் அரசியல் முகவரி இல்லாமல் அழிந்துவிடுவோம் என்று அஞ்சித்தான் காங்கிரசும், பாஜகவும்  இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தன.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் கெஜ்ரிவால் தூக்கிப் பிடித்தார். அது ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக இயற்கை எரிவாயுவின் விலையைக் கூட்டி, நாட்டிற்கு 54,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் உதவியுடன் இந்தத் தேசத்துரோக ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை இந்நாள் அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன் முன்னாள் இயக்குனர் வி.கே. சிபல் ஆகியோர் மீது ஊழல் எதிரப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தது மத்திய அரசையும், காங்கிரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த ஏப்ரலில் இயற்கை எரிவாயுவின் விலையை யூனிட்டுக்கு 7 டாலர் என்று அதிகப்படுத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பதுதான் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு. இதற்குப் பிறகுதான் காங்கிரஸ் ஜனலோக்பால் மசோதாவைக் காரணம் காட்டி ஆம் ஆத்மி அரசுக்கு தன் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்தது என்று கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதல்லாமல் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்றவுடனேயே இது அதிக நாட்கள் நீடித்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவால் தான் வாக்களித்த பல விஷயங்களை வாக்கு தவறாமல் நிறைவேற்றிக் காட்டினார் என்பதுதான் உண்மை.

அதிகாரத்தில் எப்படியாவது ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் மாதிரி அவர் எண்ணியிருந்தால் சில ‘அட்ஜஸ்ட்மெண்டுகளை’ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. தன் வாக்குறுதிகளை நிறேவேற்றிவிட்டே படி இறங்கியிருக்கிறார். இது பிற கட்சிகளுக்கு சவால்தான் என்பதில் சந்தேகமில்லை.

காலாகாலமாக ஊறித் திளைத்திருக்கும் ஊழலை இவரால் ஒழித்திட முடியும் என்று நாம் கருதவில்லை. அதேபோல் இந்த ஜன லோக்பால் சட்டத்தை வைத்தும் ஊழலை ஒழித்திட முடியும் என்று நாம் நம்பவில்லை.

நாட்டிலுள்ள ஊழல் பெருச்சாளிகள் எந்தப் பெரிய சட்டத்தையும் தூக்கிப் போட்டு வெளியே வந்து விடுவார்கள். இன்று பணமும், அதிகாரமும்தான் அனைத்தும் என்றாகிவிட்டது.

தொண்டர் அடிப்படையில் ஒரு இலட்சியத்தோடு வார்க்கப்பட்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் அடித்தட்டு மக்களுடன் கட்டியெழுப்பப்படுகிற கட்சிதான் நிலைத்து நிற்கும். அதுதான் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி மக்களோடு மக்களாக மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றிட முடியும். ஆம் ஆத்மி கட்சி மாதிரி உடனே ஆரம்பித்து, உடனே பதவிக்கும் வர முடியும் என்றால் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் நிலவிலுள்ள அமைப்பு அவ்வளவு உறுதியாக உள்ளது.

ஆனால் சிறு சலசலப்பை உண்டு பண்ண முடியும் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார். இதிலிருந்து அரசியலில் மாற்றம் கொண்டு வர விரும்புபவர்கள் பாடம் பயில வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளில் உள்ள குறைகளையும், ஆம் ஆத்மி கட்சி செய்த தவறுகளையும் இவர்கள் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

MSAH

Friday, 14 February 2014

காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு?


இன்று காதலர் தினம். இளம் ஆண், பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ளவும், ஏற்கனவே அறிவித்த காதலர்கள் கடற்கரை, பூங்கா, சினிமா என்று சுதந்திரமாகச் சுற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட தினம்தான் இந்தக் காதலர் தினம்.

இந்தக் கலாச்சாரம் இன்று முஸ்லிம்களிடமும் பரவியிருப்பதுதான் ஆச்சரியம். இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றில் இந்தக் காதலர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்பதுதான் இதன் மூலப் பெயர். அதனை அப்படியே மொழிபெயர்த்தால் ‘வேலன்டைன் தினம்’ என்றுதான் வரும். ஆனால் தங்கள் வசதிக்காக யாரோ காதலர் தினம் என்று வைத்துவிட்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தினம் எப்பொழுதோ செத்து மடிந்து விட்டது. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், இப்பொழுது ஆசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது.

யார் இந்த வேலன்டைன்?

வேலன்டைன் என்றால் யார்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? அதனை ஆராயப் போனால் பல கதைகள் பவனி வருகின்றன. அந்தக் கதைகளெல்லாம் என்னவோ சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

நான்காவது நூற்றாண்டின் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த ‘வேலன்டைன்’ கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளைக் கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல. இளம் பெண்ணுக்கான குலுக்கல். ஆம்! இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல்தான் இது.

எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும். அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை இடுப்பில் அணியப்படும் தோலினால் ஆன வாரால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக அணிந்திருப்பார்கள். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் இரத்தங்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சாட்டையடியை ‘புனிதமானதாக’ அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் ‘புனிதப் புருஷர்களாக’ மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல இல்லத்தரசிகளாக மாறுவார்களாம். அழகிய முறையில் குழந்தைகளை வளர்த்தெடுப்பார்களாம். இந்தக் கொடுமையான, மடத்தனமான கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ மதம் பல முயற்சிகளை எடுத்தது; வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தது.

குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனிதத் துறவிகளின் பெயர்களை வைத்தது. இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இதே தினம் வரைக்கும் அந்தத் துறவியை மாதிரி வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

‘லூப்பர்காலியா’ என்றழைக்கப்பட்ட இந்தக் கொண்டாட்டம் துறவி குலுக்கல் மாற்றத்திற்குப் பிறகு, சிறிது காலத்தில் ‘துறவி வேலன்டைன் தினம்’ என மாறியது.

கி.பி 496-ல் போப் கிலாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும், கிறிஸ்தவக் கதைகளில் 50 விதவிதமான வேலன்டைன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. ஒரு கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு ‘காதல் துறவி’யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக் காவலரின் மகளை இவர் காதலித்தார்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலை தூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி. 1776ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.

அதே 1776ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது. இங்கிலாந்தில் ‘புரித்தான்கள்’ என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு ஏனைய உலகுக்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி. 1840ல் எஸ்தர் A. ஹவ்லண்ட் என்பவரின் வியாபார மூளையில் ஒன்று உதித்தது. ஏன் இதனைக் காசாக்கக் கூடாது? மண்டையைக் கசக்கினார். அதில் முகிழ்ந்ததுதான் வேலண்டைன் அட்டைகள். அவர்தான் முதல் அமெரிக்க காதலர் தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது. (அன்று 5000 டாலர் என்பது மிகப் பெரிய தொகை!) இதன் பிறகு இந்த ‘வேலன்டைன் தினம்’ எனும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சி பெற்றது. அதாவது வேலன்டைன் தினம் என்பது வேலன்டைன் தொழிற்சாலை என்றாகிப் போனது.

இன்று கோடிக்கணக்கான ரூபாய் புரளும் தினமாக காதலர் தினம் மாறியிருக்கிறது. இன்றைய ஒரு தினத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்புப் பொருட்களும் விற்றுத் தீர்ந்து விடும். நாட்டுச் சரக்கு முதல் சீமைச் சரக்கு வரை அமோகமாக கல்லா களை கட்டும். ஆக, காதலர் தினத்தால் காதலர்களுக்குக் கொண்டாட்டமோ இல்லையோ வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். கொட்டோ கொட்டென்று பணம் கொட்டும் கொண்டாட்டம்.

இஸ்லாத்திற்கெதிரான இந்தக் கொண்டாட்டத்தை ஒரு முஸ்லிம் எப்படி சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

அறியாமைக்கால மடமைத்தனத்தை மண் தோண்டிப் புதைத்திடவே இஸ்லாம் இந்த அவனிக்கு வந்தது. அந்த மடமைத்தனம் எந்த உருவத்தில் வந்தாலும் இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்ளாது.

அறியாமைக்கால மடமைத்தனத்தின் சிறு அரிச்சுவடி முஸ்லிம்களிடம் இருந்தாலும் இஸ்லாம் அதனைக் கண்டு சகித்துக் கொள்ளாது. மேலும் இஸ்லாம் அதனைப் பின்பற்றும் விசுவாசிகளிடம் இஸ்லாம் என்ற தனித்த அடையாளத்தையும், தூய மார்க்கத்தைப் பின்பற்றும் தன்மையையும் மிகக் கவனமாக எதிர்பார்க்கிறது. இஸ்லாமியச் சட்டங்கள் இதனைத்தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

சூரியன் உதயமாகும்பொழுதும், நடு உச்சியில் இருக்கும்பொழுதும், மறையும் பொழுதும் தொழுகையை இஸ்லாம் தடை செய்துள்ளது ஏன்? சூரிய வழிபாடு என்பது பிற மதங்களில் உள்ளது. நாளடைவில் அந்த நேரங்களில் தொழும் தொழுகைகளும், இந்தச் சூரிய வழிபாடு என்னும் பிறமதச் சடங்கும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சமயங்களில் தொழுவதையே இஸ்லாம் முற்றிலும் தடை செய்கிறது.

முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்பது ஒரு நபிவழியாகும். யூதர்களும் இந்த முஹர்ரம் 10 அன்பு நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் முஹர்ரம் 9 அன்றோ அல்லது முஹர்ரம் 11 அன்றோ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்குமாறு அண்ணலார் பணித்தார்கள்.

அதேபோல் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதாரின் தோற்றம் மாதிரி தோற்றமளிக்கக்கூட இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுவதும் அவன் முஸ்லிமாகவே வாழ வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும், கொண்டாட்டங்களிலும், திண்டாட்டங்களிலும் நாம் ஒரே நேரான பாதையைத்தான் பின்பற்ற வேண்டும். பல பாதைகளை அல்ல.

இன்று ஜாஹில்லியாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் சிக்கிக் கிடக்கிறது. இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களை வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர். ஸாந்தா கிளாஸ் என்ற கொண்டாட்டத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். அன்னிய, அறியாமைக்கால சிறு கறை கூட நமது வாழ்வில் படியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்ப்பது.

MSAH

www.kayalpatnam.com

Tuesday, 11 February 2014

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?


ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது.

அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

“இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆய்ந்தறிந்து, ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு” என்று டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் யுவன் கூறியுள்ளார்.

சில கனவுகள் தனக்கு அவ்வப்பொழுது வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவை அடிக்கடி வந்ததாகவும், இஸ்லாத்தை அறிந்த பிறகுதான் அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தனக்குப் புரிந்ததாகவும், அதன்பிறகே இஸ்லாம் மார்க்கத்தைத் தான் தழுவியதாகவும் அவர் கூறுகிறார்.

முதல் மனைவி விவாகரத்து முடிந்து, இரண்டாவது மனைவியுடன் வாழ்க்கை. பின்னர் அதிலும் மனக்கசப்பு வரவே மனைவி பிரிந்து போனார். இந்த மனக்கஷடத்தில் இருந்தபொழுதுதான் இன்னொரு பேரிடி. அதுதான் அவருடைய அம்மாவின் மறைவு.

ஆறுதல் தந்த அம்மாவும் இறந்ததால் அமைதியற்று அலைந்த யுவனுக்கு ஆன்மீகத் தேட்டங்கள் அதிகமாகியிருக்கின்றது. மனஅமைதி தேடி மருகியவருக்கு மறையோனின் திருக்குர்ஆன் திசை காட்டியிருக்கிறது. உடனே எந்தத் தயக்கமும் இன்றி இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்.

ஊடகங்கள் வழக்கம் போல் சேற்றை வாரி வீசின. மலேசியா, சிங்கப்பூரில் யுவன் ஒரு முஸ்லிம் பெண்ணைப் பார்த்ததாகவும், அவரைப் பிடித்துப் போகவே, அவரை மூன்றாம் திருமணம் செய்துகொள்ளத்தான் யுவன் இஸ்லாத்தைத் தழுவினார் என்று அவர் இஸ்லாத்தை ஏற்றதைக் கொச்சைப்படுத்த முயற்சித்தன. இதனைத் தனது பேட்டியில் தெளிவாக மறுக்கிறார் யுவன்.

யுவன் இஸ்லாத்திற்கு வந்தது குறித்து முஸ்லிம்கள் தரப்பிலுள்ள மனோநிலையைப் பார்க்க வேண்டும். பலர் அவரை வரவேற்றாலும், எடுத்த எடுப்பிலேயே சிலர் இசை என்னும் ஹராமில் மூழ்கியிருக்கும் இவர் இஸ்லாத்திற்குள் வந்து என்ன பிரயோஜனம், இசையை இவர் விடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு மனிதர் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினார் என்றால் முதலில் அவரை ஆரத் தழுவி வரவேற்கவேண்டும். நரக நெருப்பிலிருந்து மீண்டு சுவர்க்கம் நோக்கி ஒரு ஜீவன் வந்துள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

இவர் வருகையால் இஸ்லாத்திற்குப் பெருமை ஒன்றும் இல்லை என்று வாதம் வேறு நடக்கிறது. யார் வருகையாலும் இஸ்லாத்திற்குப் பெருமை சேர்க்கவும் முடியாது. யார் சென்றாலும் இஸ்லாத்தை இழிவு படுத்தவும் முடியாது என்பதுதான் உண்மை.

இஸ்லாத்தை ஏற்று ஒரு சில நாட்களே ஆன ஒரு மனிதர் இஸ்லாத்தைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்திருப்பார்? இஸ்லாம் என்பது ஒரு கடல் போன்றது. ஆரம்பத்திலேயே யுவன் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

போகப் போக அவர் இஸ்லாத்தின் விவரங்களை அறிந்து கொள்வார். அது, இஸ்லாத்தின் மீதுள்ள அவரது பிடிப்பையும், ஆர்வத்தையும் பொறுத்தது.

இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை இவர் அறிந்துகொண்டு, அதில் உண்மையாக நடந்துகொள்வாரானால் தானாக அவர் பாவங்களிலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புண்டு. இது அவருக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் இதே அளவுகோல்தான்.

எடுத்த எடுப்பிலேயே அதனை எதிர்பார்ப்பதைத்தான் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி எதிர்மறையாக பிரதிபலிப்பதை விட்டு விட்டு நேர்மறையாக சிந்திக்கலாமே...

செய்தி மற்றும் மின்னணு ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வரும்பொழுது யுவனுக்கு ஆதரவாக கமெண்டுகள் இட வேண்டும். எதிரிகள் இதிலும் உஷாராக இருக்கிறார்கள். யுவன் குறித்து வரும் செய்திகள் அனைத்திலும் எதிர்மறை கமெண்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர்.

அந்த இடங்களிலெல்லாம் நாம் யுவனுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்லாத்திற்கு வரவேற்பளித்தும் கமெண்டுகள் இட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்படி ஆக்கபூர்வமாக செயல்பட்டால் அது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பலனுள்ளதாக அமையும்.

MSAH

Sunday, 9 February 2014

பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!


இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

இரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ் ஒரே போலவே கடமையை ஆக்கியிருக்கிறான். அதேபோல் நாளை மறுமையிலும் இரு பாலரையும் ஒரே போலவே அல்லாஹ் எழுப்புவான்; கேள்வி கேட்பான். அவரவர் செய்த செயல்களுக்குத் தக்க அவர்களுக்கு அல்லாஹ் கூலிகளை வழங்குவான். இதில் எந்தப் பேதத்தையும் அவன் கற்பிக்கப் போவதில்லை.

ஆண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, பெண்களுக்குத் தண்டனையைக் குறைக்கப் போவதில்லை. அதேபோல் பெண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, ஆண்களுக்குக் குறைக்கப் போவதில்லை.

திருக்குர்ஆன் முழுவதும் நாம் இந்த உண்மையைக் காணலாம். யாரெல்லாம் கீழே ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருக்கும் சுவனத்தினுள் நுழைவார்கள் என்று எங்கெல்லாம் சொல்கிறானோ அங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறான்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (சூரா அன்னிசா 4:124)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (சூரா அந்நஹ்ல் 16:97)

ஆக, நாளை மறுமையில் அவரவர் சுமையை அவரவர் சுமந்து வருவர். அவரவருக்கான கூலிகள் அங்கே ஆண், பெண் வித்தியாசமின்றி நீதமாக வழங்கப்படும்.

ஆன்மீக ரீதியாக ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தப் பேதமும் இல்லை என்று பறை சாற்றும் இஸ்லாம்தான் இன்னபிற கடமைகளில், உரிமைகளில் வித்தியாசங்களைப் போதிக்கிறது.

முஸ்லிம் ஆண்களை வெளியிடங்களுக்கு சென்று சம்பாதிக்கச் சொல்லும் இஸ்லாம், ஏன் பெண்களை வீட்டிலேயே இல்லத்தரசிகளாக இருக்க ஊக்குவிக்கிறது என்று முஸ்லிம்களில் சிலரும் கேட்கிறார்கள். முஸ்லிம் அல்லாதாரும் கேட்கிறார்கள்.

ஏன் ஒரு பெண் பர்தா அணிய வேண்டும், ஏன் ஒரு சகோதரனுக்கு சொத்தில் தன் சகோதரியை விட அதிக பங்கு கிடைக்கிறது, ஏன் ஒரு ஆண் ஆட்சியாளராக முடியும், ஏன் ஒரு முஸ்லிம் பெண் ஆட்சியாளராக முடியாது,... இப்படி பலர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, இஸ்லாம் பெண்களை தாழ்வாக மதிக்கிறது என்று அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.

சட்டங்களை முதலில் விளக்கிக் கூறாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஆணும், பெண்ணும் உடற்கூறு ரீதியாக முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ ரீதியாகவும் அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்மை விட ஆணையும், பெண்ணையும் படைத்த அல்லாஹ் இரு பாலருக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்தவன். ஆதலால்தான் ஒவ்வொரு பாலரும் அவர்கள் எவற்றை சிறப்பாக செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினான். இதனால் ஒரு பாலர் மறு பாலரை விட சிறந்தவர் என்று அர்த்தம் இல்லை.

மாறாக, ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் சமூகத்திற்கு அவர்கள் இரு பாலரின் பங்களிப்பும் இருக்கிறது. ஆக, யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்வது போல் மனிதர்களும் பல விதமாக இருக்கிறார்கள். பல குணங்களைக் கொண்ட, பல திறமைகளைக் கொண்ட, பல வல்லமைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் சகலகலாவல்லவர்களாக, சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.

எல்லோரும் அவரவர் பங்களிப்பை சமூகத்திற்கு செய்கிறார்கள். ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் வேறு வேறு பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்கின்றனர். ஆனால் இருவருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். இருவருமே தங்கள் துறைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஆணும், பெண்ணும் வேறு வேறு படைப்புகளாக இருந்தாலும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

பெண்கள் இஸ்லாத்தின் கண்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஒரு முறை கூறினார்கள்:
“இந்த உலகமும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை. உலகிலேயே எல்லாவற்றையும் விட அதிக முக்கியமான படைப்பு ஒரு நல்ல பெண்.” (அஹ்மத், முஸ்லிம்)

இந்த நல்ல பெண் யார் என்று இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள்:
“ஒரு மனிதன் கொண்டிருக்கும் நல்ல புதையல் எது என்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தன்னைப் பார்க்கும்பொழுது கணவனை மகிழ்விக்கிற, கணவனுக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுகிற, கணவன் இல்லாத பொழுது அவனது பொருட்களைப் பாதுகாக்கிற பெண்தான் அந்தப் புதையல்” என்று எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தாய்மை என்ற பெருமை

தாய்மை என்னும் பெரும் பேற்றை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது. ஆண்களுக்கு அந்தப் பாக்கியம் வழங்கப்படவில்லை.

ஒரு மனிதர் உத்தம நபியிடம் வந்து வினவினார்:
“அல்லாஹ்வின் தூதரே, வேறு யாரையும் விட என் மீது அன்பும், அரவணைப்பும் (கனிவும், கவனமும்) மிகச் சிறந்த முறையில் தருகிற நபர் யார்?” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் (ஸல்) கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தந்தை” என்றார்கள்.

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு அன்பிலும், அரவணைப்பிலும், அனைத்து வகையிலும் நெருங்கியிருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை இஸ்லாம் பெண்ணுக்கே கொடுத்திருக்கின்றது. இந்தப் பெரும் பேறு ஆணுக்குக் கிட்டவில்லை.

தாய்மையின் பெருமையை திருக்குர்ஆனும் இப்படி சிலாகித்துக் கூறுகின்றது: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (சூரா லுக்மான் 31:14)

ஒரு காலம் இருந்தது. பெண் பிள்ளைகள் பிறந்தாலே முகம் கருத்து, அவமானப்பட்டு, கூனிக் குறுகி அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அந்த மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்கு அவமானப்பட்டவர்கள் பெருமை கொண்டார்கள் அவர்களைப் பெற்றதற்காக.

பெண் பிள்ளைகளை சீரும் சிறப்போடும் வளர்ப்பதை இபாதத்தாக மாற்றிக் காட்டினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்கள் கூறினார்கள்: “யார் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்தும் வரை நல்ல முறையில் வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் (இரண்டு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்).” (முஸ்லிம், திர்மிதீ)

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறப்புகளைக் கொடுத்த மார்க்கம்தான் இஸ்லாம். ஆதலால் ஒரு முஸ்லிம் பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெண்ணைப் பெற்றெடுத்தால் பேருவகை கொள்ளலாம்.

MSAH

விடியல் வெள்ளி,  ஜனவரி 2014 (மங்கையர் பக்கம்)

Saturday, 8 February 2014

பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?


அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)

“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)

இறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எப்படி பிரார்த்தனை செய்வது, எதற்கு பிரார்த்திக்க வெண்டும் என்பதெல்லாம் அவரவர் கொண்டுள்ள கடவுள் கொள்கையைப் பொறுத்தது.

அன்றைய அரேபியாவின் இருண்டகால மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத்தான் மேலே உள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது.

நியூஸ்வீக் என்ற ஆங்கில வார ஏடு ஒர் ஆய்வை மேற்கொண்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் நிறைய பேர் தினமும் பிரார்த்திக்கிறார்ளாம். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், அன்புக்காகவும், மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பிரார்த்திக்கிறார்களாம்.

நேரான பாதைக்கு வழிகாட்டுதல், நரகத்திலிருந்து பாதுகாப்பு, மறுமையில் வெற்றி - இம்மாதிரி விஷயங்கள் அமெரிக்கர்களின் பிரார்த்தனையில் இடம் பெறவில்லை என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.

நியூஸ்வீக் அத்தோடு ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. அவர்கள் செய்யும் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகின்றானா என்பதே அந்த வாக்கெடுப்பு.

வானத்தில் சஞ்சாரமிடும் ஒரு புத்திசாலிக் கிழவன்தான் இறைவன் என்று இலக்கியங்கள் கூறும் ஒரு நாட்டில், மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனுக்குப் போடும் “மனுக்கள்” என்றும், அந்த மனுக்களைக் கவனித்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது இறைவனது “கடமை” என்றும் கருதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதலால் இந்த ஓட்டெடுப்பின் முடிவுகளைக் கண்டு நாம் வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை. 85 சதவிகித அமெரிக்கர்கள் தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றவில்லை என்றும், கடவுள் தோற்றுப் போய்விட்டார் என்றும் கூறினார்காள் என்பதே அந்த ஆய்வின் முடிவு.

ஆம்! கடவுள் அநீதமாக நடந்து கொள்கிறாரா? அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா? காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா? அவருக்கு அது தெரியாதா?”

அஞ்ஞான காலத்தில் அரேபியர்கள் வைத்திருந்த கடவுள்  நம்பிக்கையை விட மோசமான கடவுள் நம்பிக்கை இது.

விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேறி விட்டதன் அறிகுறி இதில் தெரிகிறது. உண்மையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு சிலர் பிரார்த்தனையின் “பயன்பாடுகள்” குறித்து ஒரு “சோதனையை” நிகழ்த்தினர்.

ஃபுளோரிடாவில் மூட்டுவலி சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நோயாளிகளை இரு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினருக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. அத்தோடு அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற்றது.

இன்னொரு பிரிவினருக்கு வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் குரூர மனங்களை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது.

பிரார்த்தனை என்பது நமது உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வழியல்ல. இறைவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான். அவனே நமக்கு அனைத்து அம்சங்களையும் தந்தான். இது அவனது நாட்டம். இது அவனது விருப்பம்.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமது ஆரோக்கியம் - சுகவீனம், செழிப்பு - வறுமை, மகிழ்ச்சி - துக்கம், வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம் இவையனைத்துமே சோதனைகள்தான்.

உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டே, அவன், வாழ்வையும் மரணத்தையும் படைத்திருக்கிறான். அவன் (யாவரையும்) மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன்.   (அல்குர்ஆன் 67:2)

மறுமையில் நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி என்பது இவ்வுலகில் விதவிதமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டோம்  என்பதைப் பொருத்தே அமையும்.

உண்மையிலேயே நமக்கு உதவி தேவைப்பட்டபொழுது. நாம் இறைவனது உதவியைக் கோரினோமா? அல்லது திமிர் பிடித்து உதவி கோராமல் இருந்தோமா?

நாம் நினைப்பது நடக்காமல் அவன் விரும்பியதே நடக்கும் பொழுது நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோமா? அவன் நமக்கு  செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா? அல்லது நாம் அடைந்த வெற்றிகளுக்கு நாம்தான் காரணம் என்று இறுமாப்போடு இருந்தோமா?

எல்லா சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவனது கட்டளைகளை ஏற்று நடந்தோமா? அல்லது நமது மனம் போன போக்கின்படி நடந்தோமா?

இறைநம்பிக்கையாளர்கள் இறைவனிடமே பிரார்த்திக்கிறார்கள். ஏன்? அவன் மட்டுமே கொடுக்க முடியும். அவன் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் அனைவரும் அவனுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.

அவனுக்கு அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. நமக்கோ ஓர் இம்மியளவு சக்தியும் இல்லை.

அவனது அறிவு அணை போட முடியாதது; எல்லையற்றது. நமது அறிவோ மிகக் குறுகியது.

அவனே பிரபு. அவனே அனைவருக்கும் மேலானவன். நாமெல்லாம் அவனது அடிமைகள். நமது பிரார்த்தனைகளை இம்மையில் அவன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நமது பிரார்த்தனைகளுக்கான கூலியை அவன் மறுமையில் தரலாம் அல்லது நாம் கோரியவற்றை விட நல்லதை அவன் இங்கு தரலாம்.

எப்படியிருந்தாலும் நாம் பிரார்த்தனை செய்தது வீண்  போகாது. பிரார்த்தனைதான் இறைவனை அடி பணிவதில் உயர்ந்த தரம்.

மெளலானா மன்ஸூர்  நுஃமானி அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இறைவனை அடிபணிவதில் மிகச் சிறந்தவராக இருந்தார்கள்.”

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்குச் சென்ற நாள். அன்னாரின் கசப்பான நாட்களில் ஒரு நாள்.

தாயிஃப் நகர்வாசிகள் ஏக இறைவனின் பால் அழைப்பு கொடுத்த அன்னாரின் அழைப்பை நிராகரித்தது மட்டுமல்ல, சிறுவர்களையும், தெருப் பொறுக்கிகளையும் ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தனர். அன்னாரது பாத அணிகள் முழுவதும் ரத்தத்தால் தோயும் அளவுக்கு கல்லால் அடித்தனர்.

உடல் வலியாலும், மன வலியாலும் சொர்வுற்ற நபிகளார் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தனது முகம் திருப்பி இப்படி கேட்டார்கள்: “யா அல்லாஹ்! உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய்? என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா? அல்லது என்னை மேலாதிக்கம் செய்யும் எதிரிகளிடத்திலா?

என் மீது உனக்கு கோபம் இல்லையெனில் நான் இதைப் பற்றியெல்லாம்  கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ எனக்கு உபகாரம் செய்தால் அது எனது பணிக்கும் எளிதாக இருக்கும். நான் உனது சமுகத்திலேயே எனது ஆதரவை வைக்கின்றேன். உனது ஆதரவில் அனைத்து இருள்களும் ஒளிமயமாகிவிடும். இம்மை, மறுமையில் நடக்கும் விஷயங்கள் அனத்தும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நான் உனது கோபத்திற்கு ஆளாகாமல் உன்னிடம் ஆதரவு வைக்கிறேன். கண்டிப்பதற்குள்ள உரிமை உன்னிடமே உள்ளது. தண்டிப்பதற்குள்ள உரிமையும் உன்னிடமே உள்ளது. உன்னிடமே தவிர வேறு ஆற்றல் இல்லை. வேறு பலம் இல்லை.”

என்னே அருமையான வார்த்தைகள்…! உள்ளத்தை ஊடுருவும் வார்த்தைகள்….!

ஆனால் 13 வருடங்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. அரேபியாவின் பெரும் பகுதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. அஞ்ஞானம் அறவே ஒழிக்கப்பட்டது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது அவர்களோடு 1,24,000 நபித்தோழர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினர். அரஃபாப் பெருவெளியில் அன்னார் கோரிய பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது:

“யா அல்லாஹ்! நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். என்னைப் பார்க்கின்றாய். நான் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் நீ அறிகின்றாய். எனது எந்த நடவடிக்கையும் உன்னிடமிருந்து மறைவதில்லை. நான் துயரத்தில் இருக்கும் ஒரு மனிதன். யாசகன். அச்சமுள்ள ஒரு மனிதன். எனது குறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்கமுள்ள, தேவையுள்ள ஒரு மனிதனாக நான் உன்னிடம் யாசிக்கிறேன். பெருஞ்சோதனயிலிருக்கும் ஒரு மனிதன், அவனது  தலை உன் பக்கம் சாய்ந்துள்ளது, அவன் உன் முன்னால் அழுகிறான், அவனது முழு உடலும் உன் முன்னால் வீழ்ந்து கிடக்கின்றது. அப்படிப்பட்ட மனிதனாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே… கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனே….!”

நல்ல நிலையிலும், மோசமான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாக, ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

அவர்களது இந்தப் பிரார்த்தனை ஒரு வாழும் அற்புதமாக திகழ்கிறது. திறந்த மனதுள்ள அனைத்து மக்களையும் அறிவொளியின் மூல ஊற்றின் பக்கம் அழைப்பதாக இருக்கிறது.

அவர்களது பிரார்த்தனைகள் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இந்தப் பிரார்த்தனைகளை அறிந்துகொள்ளாத  நம்மவர்கள் எவ்வளவு துர்ப்பாக்கியசாலிகள்!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

நன்றி : விடியல் வெள்ளி, ஜூலை 2002 (இம்பாக்ட் பக்கம்)