Wednesday, 18 December 2013

எது சிறந்த சட்டம்?


தனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில்  நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது.

ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை.

ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஷரீஅத் பற்றி அவர்கள் இவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று.

அன்றொரு நாள் நான் பி.பி.சி. வானொலியைத் திருப்பினேன். ஓர் அமெரிக்கப் பேட்டியாளர் நேயர்கள் சிலரிடம் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.

அவர் அப்பொழுது கூறியதாவது: நான் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தும்பொழுது கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கெள்வி கேட்பேன். இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் என்றவுடனேயே உங்கள் மனதில் என்ன எண்ண அலைகள் ஊற்றெடுக்கின்றன என்று கெட்பேன்.

உடனே அவர்கள் “பயங்கரவாதம்” என்று கூறுவார்கள்.

ஆனால் பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அப்பாவி மக்களின் சொத்துகளைச் சூறையாடுவதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இஸ்லாத்திற்கும், பயங்கரவதத்திற்கும் இந்தப் பிணைப்பை ஏற்படுத்தியது யார்? நீங்கள் அதை ஆராயப் போவீர்களானால் முதல் குற்றவளியாகவும், முக்கியக் குற்றவாளியாகவும் மேற்குலக ஊடகங்களைத்தான் காணுவீர்கள்.

இந்த மேற்குலக மீடியாவின் கருத்துகளைத்தான் அதிகமான முஸ்லிம் நாடுகளும் எதிரொலிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடுகளில் இந்தத் தவறான கருத்துகளைப் பரப்புவது  யார்? இஸ்லாமியப் பெயர்களை வைத்துள்ள சில அறிவுஜீவிகள்தான் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.

இதுதான் ஷரீஅத்திற்கும் ஏற்பட்ட நிலைமை. சில வரங்களுக்கு முன்பு பி.பி.சி. வானொலியின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஷரீஅத் சட்டங்கள் குறித்த ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறதாம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்.

நான் எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டங்கள் குறித்து அந்த உரையாடல் நீண்டது.

இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து பொதுவாக மக்களின் மனங்களில் உள்ள குறுகிய எண்ணங்களையும், இஸ்லாமியச் சட்டங்களுக்கும், இவர்களுக்கும் இடையிலுள்ள நீண்ட இடைவெளியையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். அத்தோடு எங்கள் உரையாடல் நிறைவுற்றது.

இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்தது மாதிரியே நீங்கள் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.

அந்த நிகழ்ச்சியின் பொறுப்புதாரிகள் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்பவில்லையாம். அதாவது, அல்லாஹ் வகுத்து வழங்கிய குறைவில்லா ஷரீஅத் சட்டங்களைப் பற்றி மக்கள் வைத்துள்ள தவறான கருத்துகள் அப்படியே நிலைத்திருக்க வெண்டும். அது கலைந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

ஷரீஅத் சட்டம் என்றால் என்ன? இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஷரீஅத் என்ற பதத்திற்கு இஸ்லாம் என்றே பொருள் கொள்ளபபடும். ஆனால் மேற்குலக ஊடகங்களின் எழுத்தாளர்களையும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சில அறிவுஜீவிகளையும் அழைத்து ஷரீஅத் பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் உடனே அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும் - அது கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டது, அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்து வராதது.

ஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைக்கு மிகத் தூரமனது. இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, 7 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும், 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டுமானால் உறுதியான ஆதாரங்கள் வேண்டும். தகுந்த சாட்சிகள் வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களைக் குறை கூறுவோர் இது பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். அதிகமனோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.

உண்மையில் முஸ்லிம் உலகில் உள்ள சில அறிவுஜீவிகளுக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து உண்மை வடிவம் நன்றாகவே தெரியும். அவர்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்டால் உடனே அவர்கள் இந்தக் கடுமையான தண்டனைகளின் நன்மைகளைப் பற்றியே வாக்குவாதம் செய்வார்கள்.

இஸ்லாம் கடுமையான தண்டனைகளைப் பற்றி மட்டும்தான் சொல்வது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவார்கள். மாறாக, இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சிவில், சர்வதேசச் சட்டங்கள் எனத் தொடாத பகுதிகளே இல்லை.

இந்தச் சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையை அது கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இஸ்லாமியச் சட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

அதேபோல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

மிக முக்கியமாக சமூகத்தில் பலஹீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அந்த வகையில் பெண்களும், சிறுவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும், சிறுவர்களதும் உரிமைகளைப் பாதுகாக்க வெண்டும். இஸ்லாமியச் சட்டங்களை ஒழுங்காக அமுல்படுத்தாத சமூகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பெண்கள் புண்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. இன்று வரை இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இஸ்லாமியச் சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நிறைய விஷயங்களில் ஆண்களை விட அதிகமான பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.

வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், ஆரோக்கியம், சுயசார்பு நம்பிக்கை, அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள், வேலை செய்வதற்கான உரிமை, தனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ளும் உரிமை ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அங்கே வழங்கப்படுகின்றன.

குடும்பவியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வாரிசு சட்டத்தை அழகாக வகுத்து வழங்கியுள்ளான். இதனால் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது.

அவமரியாதை, ஒருபக்கச் சார்பு, அநீதி ஆகியவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது. திருமண உறவுகளை எடுத்துக் கொள்வோம். கணவன், மனைவி ஆகிய இரு பாலருக்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகள், இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்தச் சமூகத்திலும் நாம் காணக் கிடைக்காதவை.

அது இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களின் குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தால் போதும். இது இஸ்லாமியச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காவல்துறையினரின் உதவியில்லாமல் அதனை அமுலாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனைக் கெடுபிடிகள் தேவையில்லை.

இஸ்லாமியச் சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பவியல் சட்டங்களில் முஸ்லிம்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது. அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.

இந்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் மக்கள் தானாகவே அதனை அமுல்படுத்துவார்கள். யாரும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.

அனைத்தையும் அறிந்த அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான். ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிறுவப்பட்டு விட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்து விடும்.

இன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாமியச் சட்டத்தின்பால் திரும்புகின்றன. எப்பொழுதோ கைவிட்டிருந்த அதனைத் திரும்ப எடுத்து ஆரத் தழுவிக் கொள்கின்றனர். இது ஏன் என்று மேற்குலகம் வியந்து  தன்னையே கேட்டுக் கொள்கிறது. இந்தக் கேள்விக்கு விடை மிக எளிது - அவர்கள் காலனியாதிக்கவாதிகள்.

பாராளுமன்றங்கள், சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திப் பார்த்து விட்டார்கள். இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் விட மிகச் சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின் பால் திரும்பக் கூடாது? அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆதில் ஸலாஹி

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி  செப்டம்பர் 2001 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை.

Tuesday, 17 December 2013

நமக்கு சுவனம் வேண்டுமா? நரகம் வேண்டுமா?

விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் உரிமை என்ன?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “அவர்கள் உங்களது சுவர்க்கம். அவர்கள் உங்களது நரகம்.” (ஸுனன் இப்னுமாஜா)
இந்தப் பிரபலமான ஹதீஸின் மூன்றே மூன்று வார்த்தைகளில் (அரபியில் மூன்று வார்த்தைகள்தான் இடம் பெற்றுள்ளன) பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் உரிமை என்ன என்பது மட்டுமல்ல; ஏன் என்பதும் அடங்கியிருக்கிறது.

நம்மால் முடிந்த வரை நாம் நம் பெற்றோர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் இப்படிப்பட்ட பிள்ளைகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். அவர்களை சுவர்க்கத்திற்கு அனுப்புகிறான். மாறாக, பெற்றோர்களை அவமரியாதை செய்பவர்களும், கண்ணியக் குறைவாக நடத்துபவர்களும் நரகத்தின் கதவைத்தான் தட்ட வேண்டியிருக்கும்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் பெற்றோர்களைப் பேண வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். எந்த அளவுக்கு எனில், அல்லாஹ்வை நினைவு கூரும் இடங்களிலெல்லாம் பெற்றோர்களைப் பேணும் விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல் குர்ஆன் 31:14)

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல் குர்ஆன் 6:151)

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் குர்ஆன் 17:23-24)

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலுள்ள உறவு என்பது மற்ற மனித உறவுகளைக் காட்டிலும் வேறுபட்டது. ஈடியிணையில்லாதது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்து அவர்களைப் பேணி வளர்க்கிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோர் அன்பு என்பது உண்மையில் இறையன்புதான். பெற்றோர் அன்பு என்பது இவ்வளவு தியாகமும், தன்னலங்கருதாமையுமாய் இருக்கும் பொழுது நாம் எப்படி அதற்கு கைமாறு செய்யப் போகிறோம் என்பது நமது கையில் தான் இருக்கிறது.

நாம் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பாதையை, அவர்களுக்குக் கீழ்ப்படியும் பாதையைக் தேர்ந்தெடுக்கலாம். அல்லது இதற்கு மாறான பாதையையும் தேர்ந்தெடுக்கலாம். இது நம்பிக்கையில்தான் உள்ளது.

அதாவது, சுவர்க்கமா, நரகமா என்பது நம் கையில்தான் உள்ளது. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

நாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட்டோம் என்று ஒரு போதும் எண்ணக் கூடாது. இது மாதிரி எண்ணம்தான் இன்றைய காலம் கட்டத்தில் பரவலாக நிலவுகிறது.

ஓர் ஆங்கில அறிஞர் குடும்பத்தை பறவையின் கூட்டுக்கு ஒப்பிடுவார். பறவைக் குஞ்சுகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும். தாயின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கிடைக்கம். தாய்ப் பறவை பறந்து திரிந்து இரையைத் தேடி, தனது அலகில் அதனைப் பத்திரப்படுத்தி, கூட்டுக்கு வந்து, தனது குஞ்சுகளுக்கு உணவு புகட்டும்.

சிறிது காலம் கழியும். பறவைக் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் சக்தியைப் பெறும். சிறிது காலத்தில் அது கூட்டை விட்டுப் பறந்து சென்று விடும். அதன்பின் தன்னை உணவூட்டி வளர்த்த தாய்ப் பறவையை அது திரும்பிக் கூடப் பார்க்காது. பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, மாமாமார்கள், மாமிகள், இன்ன பிற உறவுகள் எதுவும் அதற்குத் தெரியாது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அது பறந்து சென்று விடும்.

இது பறவைகள் மாதிரி உயிரினங்களுக்குச் சரி. ஏனெனில் அவை ஒரு நாகரிகத்தைக் கட்டமைத்துக் கொள்ளவில்லை. ஒரு சமூக அமைப்பு அவற்றிற்கு இல்லை.

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆங்கில அறிஞர் நமது மேலைநாட்டுச் சூழலை மனதில் வைத்து, பறவைகளுடன் மேலைநாட்டுக் குடும்பங்களை  ஒப்பிடுகிறார்.

ஆம்! உண்மையில் மேலைநாட்டுக் குடும்ப அமைப்பு மேற்சொன்ன பறவையின் நிலைக்குத்தான் இன்று வந்துள்ளது.

இங்கு தந்தைதான் “வயதான மனிதர்.” அவரின் பிள்ளையின் போர்க்குரல் என்ன தெரியுமா? “என்னைச் சுதந்திரமாக விட்டு விடுங்கள். இது என் வாழ்க்கை!”

அங்குள்ள சட்ட அமைப்பும் இதனையே ஆதரிக்கின்றது. அங்குள்ள இலக்கியங்கள், மீடியா ஆகியவையும் அங்குள்ள அறிஞர்களும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

இதன் விளைவை இன்று மேலைநாடுகள் அனுபவித்து வருகின்றன. அங்கே குடும்பங்கள் கண்ணாடிச் சில்லுகளைப் போல் உடைந்து சிதறிக் கிடக்கின்றன. மனித உறவுகள் அறுந்து கிடக்கும் சங்கிலி போல் தொடரற்று கிடக்கின்றன.

வயதான மக்கள் முதியோர் இல்லங்களில் கனத்த இதயங்களுடன் காலத்தைத் தள்ளுகின்றனர். பெற்றோர்களைப் பேணுவதற்கான தியாகம், கடப்பாடு ஆகியவை அங்கு அந்நியக் கலாச்சாராமாகிவிட்டன; பத்தாம்பசலிகள் செய்யும் வேலையாகிவிட்டன.

இஸ்லாத்தைத் தழுவியுள்ள ஒரு அமெரிக்கர் கூறுகிறார்: “மேற்குலகில் ஒருவன் அல்லது ஒருத்திக்கு முழுமையான நம்பகமான ஆள் என்று ஒருவரும் இல்லை!” இப்படிப்பட்ட கோரமான நிலையே அங்கு நிலவுகிறது. மேற்குலகின் குடும்ப அமைப்பின் இந்தச் சோகமான, கனத்த சூழ்நிலையை முஸ்லிம் சமூக அமைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஆஹா...! அங்கே அருள் மழைகள் பொழிகின்றன. பாசங்கள், தியாகங்கள் அங்கு நிச்சயம். பொதுவாக, முஸ்லிம் சமூக அமைப்பு வீழ்ச்சியடைந்து வந்தாலும் அங்கு பாசத்திற்குக் குறைவில்லை; தியாகத்திற்குக் குறைவில்லை.

ஏன் முஸ்லிம் சமூகத்தில் வீழ்ச்சி? ஒரு முஸ்லிம் குடும்பம் அனைத்து திசைகளிலிருந்தும் கலாச்சாரத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது.

இந்தத் தாக்குதலில் முக்கிய இடத்தைப் பிடிப்பது குழந்தைகள் தான். ‘குழந்தைகளின் உரிமைகள்’ என்ற பெயரில் இந்தத் தாக்கம் உருவாகியிருக்கின்றது. அதாவது, பெற்றோர் சொல்லை மீறுவது, பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல் கலகம் செய்வது.

இந்தக் கலாச்சாரத்திலேயே ஊறிப் போய் வளர்ப்பவர்களுக்கு இஸ்லாம் சொல்லும் குடும்ப அமைப்பு அந்நியமாகவே படும். ஒரு நோயாளிக்கு சாதாரணமான, ஆரோக்கியமான, சுவையான உணவு எப்படி அந்நியமாக இருக்குமோ அது  மாதிரி, பெற்றோர்களைப் பிள்ளைகள் பேண வேண்டியவை பற்றி ஒரு சுருக்கத்தைக் கீழே காண்போம்.

1.  எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நமது பெற்றோர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்; மதிப்பளிக்க வேண்டும். இது அல்லாஹ்வால் நமக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. நம் பெற்றோர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் நாம் அவர்களுக்குக் கண்ணியம் கொடுத்தே ஆகவேண்டும்.

2. ஷரீஅத் சொல்கின்ற எல்லைக்குள் நாம் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும். இஸ்லாத்தில் முழுமையான கீழ்ப்படிதல் என்று யாருக்கும் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கு தவிர.

3.  கடந்த காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அநீதமாக நடந்து கொண்டாலும், பிள்ளைகள் அவர்களுக்குரிய கண்ணியத்தை ஷரீஅத் சொல்லும் எல்லைக்குள் நின்று அளித்தே ஆக வேண்டும்.

பெற்றோர்களிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்கிறோமோ அதே அளவு மரியாதையை உறவினர்களிடமும், நண்பர்களிடமும் காட்ட வேண்டும்.

நாம் மறுமையில் நற்கூலி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இதனைச் செய்ய வேண்டும். அதேபோல் நாம் பெற்றோர்களை எவ்வாறு நடத்துகிறோமோ, நல்ல விதமாகவோ, தீய விதமாகவோ, அதனுடைய பிரதிபலனை இந்த உலகிலும் மறுவுலகிலும் தெரிந்து கொள்ளலாம். பெற்றோர்களுக்கு எப்பொழுதும் கவலையை உண்டு பண்ணுகிறவர்கள் பிற்காலத்தில் கவலையிலேயே மூழ்கி வாழ்வார்கள். பெற்றோர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர்கள் பிற்காலத்தில் தாங்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இது தான் இஸ்லாம் கற்றுத் தந்த அற்புதம்!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

Monday, 16 December 2013

உயிரினும் மேலான உத்தம நபி!


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார். (சூரா அல் அஹ்ஸாப் 33:6)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு முறை உமர் (ரலி) தன் உயிருக்கு அடுத்தபடியாக அண்ணலாரை அதிகமதிகம் நேசிப்பதாகக் கூறினார். “நீர் உம் உயிரை விட அதிகமாக என்னை நேசித்தால்தான் உம்முடைய ஈமான் பூரணமடையும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), “நான் உங்களை என் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றார்கள். அண்ணலாரின் அருமைத் தோழர்கள் வெறும் வாய்மொழியுடன் நின்று விடாமல் அதனைச் செய்து காட்டினார்கள்.

ஹிஜ்ரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அண்ணலாரும், அபூபக்கர் (ரலி) அவர்களும் கஅபாவுக்கருகில் காஃபிர்களால் தாக்கப்பட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கிப் புடைத்தது. அவரின் தாய் அபூபக்கரின் நிலையைக் கண்டு கதறி அழுதார்.

அந்த நிலையிலும் அவர், “அண்ணலார் எப்படியிருக்கிறார்கள்?” என்றுதான் முனங்கிக்கொண்டிருந்தார். அண்ணலாரைப் பார்க்காமல் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கமாட்டேன் என்று தன் தாயிடம் கூறிவிட்டார். இறுதியில் அவரின் தாயாரும், இன்னொரு உறவினர் பெண்ணும் சேர்ந்து அண்ணலார் இருந்த வீட்டுக்கு அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். அண்ணலாரைச் சந்தித்த பின்தான் அவர் சமாதானம் அடைந்தார்.

ஹிஜ்ரத்துக்கு நபிகளார் புறப்பட்டபொழுது எதிரிகள் அண்ணலாரின் வீட்டைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அண்ணலார் தங்கள் படுக்கையில் அலீ (ரலி) அவர்களைப் போர்வையைப் போர்த்தி படுக்க வைத்தார்கள். எதிரிகள் அண்ணலாரின் படுக்கைக்குப் பாய்ந்து வெட்டுவதற்கான ஆபத்து அதிகமாக இருந்தும் அலீ (ரலி) எந்தத் தயக்கமும் இன்றி படுத்துக்கொண்டார். ஏனெனில் அவருக்கு அவரது உயிரை விட அண்ணலாரின் உயிர்தான் முக்கியம்.

அதேபோல் ஹிஜ்ரத்துக்காக நபிகளாரும், அபூபக்கரும் புறப்பட்டுச் சென்றபொழுது எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். எதிரிகளின் காலடிச் சப்தம் கேட்டவுடன் அபூபக்கர் (ரலி) பதறினார். எதிரிகள் கொஞ்சம் குனிந்து கீழே பார்த்தால் அவ்விருவரும் தெரிந்துவிடுவார்கள்.

அபூபக்கர் (ரலி) பதறியது தன் உயிர் போகும் என்பதற்காக அல்ல. அண்ணலாருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்றுதான் அஞ்சினார்.

குபைப் இப்னு அதீஃ (ரலி) இஸ்லாத்தின் எதிரிகளிடம் கைதியாகப் பிடிக்கப்பட்டபொழுது எதிரிகள் உயிர்ப் பிச்சை அளிக்க ஆசை வார்த்தை காட்டினார்கள். “உமது இடத்தில் முஹம்மதை வைத்து விட்டு, அதற்குப் பதிலாக நீர் விடுதலை அடைந்து உமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீரா?” என்று கேட்டார்கள் எதிரிகள்.

கொதித்துப் போனார் குபைப். “அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் ஆருயிர் அண்ணலார் அவர்களை இந்த இடத்தில் வைத்து விட்டு, நான் என் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பதா? அவர்களது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று முழங்கினார்கள்.

உஹதுப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். முஸ்லிம்களின் படை பனூ தீனார் என்ற கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் போரில் அந்தப் பெண்ணின் கணவர், சகோதரர், தந்தை ஆகியோர் கொல்லப்பட்டு விட்டனர். இந்தச் செய்தியைச் செவிமடுத்த அவர் கேட்ட கேள்வி இதுதான்: “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?”

அண்ணலாரை ஒடோடிச் சென்று நேரில் கண்ட பின் இவ்வாறு கூறினார்: “எந்தச் சோகமும் சோகமே அல்ல - உங்களைக் காணாததைத் தவிர!”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தங்கள் சொத்துகள், குடும்பத்தினரைக் காட்டிலும் என்னை ஒருவர் நேசத்திற்குரியவராகக் கருதாத வரை அவர் முழுமையான இறைநம்பிக்கையாளராக முடியாது.”

இந்த வாக்கை வாய்மைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்கள் அருமை நபித்தோழர்கள். எந்நிலையிலும் தங்களை விட அதிகமாக அல்லாஹ்வின் தூதரிடம் அன்பு பாராட்டினார்கள். அளவுக்கு அதிகமாக நேசித்தார்கள்.

அதனால்தான் அந்தச் சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற முடிந்தது. அகில உலகும் அன்றைய அரேபிய உலகை மரியாதையுடன் பார்த்தது. அவர்கள் செல்லுமிடமெல்லாம் இஸ்லாத்தின் செய்தி வேரூன்றியது. இஸ்லாம் இகமெங்கும் பரவியது.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (சூரா ஆல இம்ரான் 3:164)

MSAH

இது விடியல் வெள்ளி  டிசம்பர் 2013 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.

நல்ல செயல்கள் துவங்குவது எங்கிருந்து?

விடியல் வெள்ளி  ஜூலை 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


நிய்யத் என்ற எண்ணத்தைக் குறித்து வரும் நபிமொழி மிக முக்கியமானது. இஸ்லாமிய அறிவுறுத்தல்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நபிமொழியிலேயே அடங்கியுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த நபிமொழி முக்கியமானது. மேலும் இந்த நபிமொழி அதிகமாக அனைவராலும் நினைவுகூரக் கூடியதும், கோடிட்டுக் காட்டக் கூடியதுமாக இருக்கிறது.

இந்த நபிமொழியின் அரபி மூலவாக்கியத்தையே அனைவரும் கூறும் அளவுக்கு அது பிரபலமானது. ஏன், அரபி பேசாத முஸ்லிம்கள் கூட அரபி மூலவாக்கியத்துடன் இதனைக் குறிப்பிடுகின்றனர். இந்த நபிமொழியை அறியாத ஒரு முஸ்லிம் கூட உலகில் இருக்க மாட்டார் என்றே கூறலாம்.

இந்த நபிமொழியிலேயே அரபி மூலத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் உள்ளர்த்தத்தை, அது சுட்டும் நோக்கத்தை நாம் செயல்படுத்துகிறோமா? நிச்சயமாக இல்லை.

இஸ்லாமியப் பார்வையில் நமது செயல்பாடுகளை 3 வகைகளாகப் பிரிக்கலாம். நம்மில் ஒவ்வொருவரின் செயல்பாடும் இந்த 3 வகைகளில் ஏதாவது ஒன்றின் கீழ்தான் வரும். இதில் ஒவ்வொரு வகையினருக்கும் இந்த நபிமொழி ஒவ்வொரு பொருளைக் கொடுக்கும்.
முதல் வகையினர் மார்க்க வணக்கங்களை தாங்களாகவே விரும்பி முன் வந்து செய்வர். (தாங்களாகவே விரும்பித் தொழும் நஃபில் தொழுகை மாதிரி)

இரண்டாவது வகையினர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவைகளை செய்வர். உண்ணுதல், குடித்தல், உறங்குதல், சம்பாதித்தல், குடும்பத்தைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஹலாலைப் பேணுவர்.

மூன்றாவது வகையினர் இஸ்லாத்தால் தடுக்கப்பட்டவைகளைச் செய்வர்.

நிய்யத்தைக் குறித்த நபிமொழி முதல் வகையினருக்கு அப்படியே பொருந்தும். முதல் வகையினர் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக, அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காக தங்கள் வணக்கங்களைப் புரிவார்கள். இந்த எண்ணத்தில் ஒரு சிறு கரும் புள்ளி விழுந்தாலும் அவர்களது நோக்கங்கள் அழிந்து விடும்.

இஸ்லாத்தின் 5 தூண்கள் இந்த வணக்கங்களுக்கு நல்ல உதாரணங்களாகும்.  உதாரணத்திற்கு தொழுகையை எடுத்துக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் தன்னை எல்லோரும் “பக்திமானாகக்” கருத வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுதால், அவன் அந்தத் தொழுகையைப் பாழாக்கியது மட்டுமல்ல, அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத “ஷிர்க்” என்ற இணைவைப்பையும் (மன இச்சைக்கு அடிமைப்பட்டதால்) செய்து விட்டவன் ஆவான்.

இதே நிலைதான் ஹஜ், ஹிஜ்ரத், ஜிஹாத், தர்மம் போன்ற கிரியைகளிலும். திருக்குர்ஆன் இதனை ஓர் அழகிய உவமையைக் கொண்டு விளக்குகிறது.

இரண்டு மனிதர்கள் தர்மம் செய்கின்றார்கள். இரண்டு பேர்களின் தர்மங்களும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன. இரண்டு பேருமே ஏழைகளுக்கு உதவுகின்றார்கள். ஒருவர் அல்லாஹ்விடம் முழு திருப்தியை அடைவதற்காக இதனைச் செய்கின்றார். மற்றொருவர் பேரும், புகழும் அடைவதற்காக இதனைச் செய்கின்றார்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்)திலிருந்து யாதொரு பயனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2 : 264)

அல்லாஹ் - அவனைத் தவிர  (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை அரிதுயிலோ, உறக்கமே பீடிக்கா. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (அல்குர்ஆன் 2 : 255)

“ஸதக்கா” என்ற தர்மம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஸதக்கா என்பது நாம் பிறருக்குக் கொடுக்கும் தர்மம் என்பதால் அந்த மனிதர் நமக்கு நன்றி கூறலாம். நம்மைப் பெருமைப்படுத்தலாம். இந்தப் பாராட்டுதலை நாம் கொஞ்சம் கொஞ்சமாக விரும்ப ஆரம்பிக்கலாம். ஆதலால் தர்மம் கொடுக்கும் கிரியையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு பொதுக் காரியத்திற்கு பணம் சேர்ப்பதற்கு முஸ்லிம்கள் மாலை நேர விருந்தோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ வைக்கின்றனர். இஸ்லாத்தில் இப்பழக்கத்திற்கு இடம் இல்லை என்பது தெளிவு. தர்மத்தைக் கூட கைம்மாறோடு எதிர்பார்க்கும் ஒரு கலாச்சாரத்திடமிருந்து கடன் வாங்கியதுதான் இப்பழக்கம்.

உண்மையில் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கவும், அரசின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும்தான் இந்தக் கலாச்சாரத்தை உடையவர்கள் தங்கள் பணங்களை அள்ளி வீசுகின்றனர். முஸ்லிம்கள் இதனை மனதிற்கொள்ளாவிடினும், புகழுக்காகவும் செல்வாக்குக்காகவும் தர்மம் செய்யும்பொழுது அவர்களது நல்ல காரியங்கள் அனைத்தும் பாழாகி விடுகின்றன.

தேவையுடையவர்களுக்கு அல்லது நல்ல காரியங்களுக்கு ஒரு முஸ்லிம் உதவி செய்வது என்பது அல்லாஹ்வின் உவப்பைப் பெற்றுத் தரும். ஒரு முஸ்லிம் தர்மம் செய்யும்பொழுது அவனது உள்ளக் கிடக்கையிலுள்ள நேர்மையான எண்ணத்தைத்தான் அல்லாஹ் பார்க்கிரான். மாறாக, அவன் எவ்வளவு தர்மம் செய்கிறான் என்பதல்ல.

இது அவனுக்குத் தெரியும். இந்த நேர்மையான தூய்மையான எண்ணம்தான் அவனது முக்கியமான சொத்து ஆகும். வெறுமனே நல்ல எண்ணங்கள் மட்டும் நன்மையைத் தருவது இல்லை. எண்ணத்தில் தூய்மை என்பதுதான் இங்கு மிக முக்கியமானது.

இதனைத்தான் இந்தப் பிரபல நபிமொழி இப்படிக் கூறுகிறது: “இன்னமல் அஃமாலு பின்னிய்யாஹ்.”

பொருள்: “செயல்களனைத்தும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன!”

இஸ்லாத்தில் முடிவுகள் அது கடந்து வந்த பாதையை நியாயப்படுத்த முடியாது. அதுபோல் சுயமாக சிந்தித்துக்கொண்ட நல்லெண்ணம் தவறான செயலைச் சரி செய்ய முடியாது.

நம் தொழுகையையோ, குர்பானியையோ, ஹஜ்ஜையோ சரியாகச் செய்யாமல் இருந்தால், நல்லெண்ணங்கள் மட்டும் அதனைச் சரி செய்ய முடியாது.

அல்லாஹ்வின் பார்வையில் எது நல்லதோ அதுதான் நல்ல காரியம். நாமாக எதையும் முடிவெடுத்துக் கொள்ள முடியாது.

மேலே சொன்னபடி இரண்டாவது வகையினர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களைச் செய்வார்கள். நமது எண்ணங்களை நல்லவிதமாக அமைத்துக் கொண்டால் நமது ஒவ்வொரு அசைவையும் இறைவணக்கமாக மாற்றி விடலாம்.

ஆனால் நம்மில் பலர் இதனை அறிவதில்லை. ஆதலால்  நஷ்டத்திற்குள்ளாகின்றனர்.

உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று நேர்மையாக உழைக்கிறான். அவனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமுதாய நலனுக்காகவும் அவன் உள்ளபடியே உண்மையாக உழைக்கும்பொழுது அதுவும் இறைவணக்கமாக மாறி விடுகின்றது.

ஆனால் வெளிப்படையில் பார்க்கும்பொழுது அவன் சம்பாதிக்கப் போவது மட்டும்தான் தெரியும். அவன் நல்லெண்ணங்களை உள்ளத்தில் சுமந்து நேர்மையாக உழைக்கும்போழுது அது இறைவணக்கமாக மாறுகிறது என்பது வெளிப்படையாகத் தெரியாது.

தனது ஒவ்வொரு நிமிடத்தையும் இறைவணக்கமாக மாற்றியதற்காக அவனுக்கு நிரம்ப நற்கூலிகள் காத்துக் கிடக்கின்றன.

ஆம்! எண்ணத்தில் எற்படும் ஒரு சிரிய மாற்றம் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

Sunday, 15 December 2013

காலம் ஓர் ஆயுதம்!


'காலம் ஓர் ஆயுதம்' என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.

ஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

ஆயிஷா: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. உள்ளே வாருங்கள் ஆமினா. நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?

ஆமினா: அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம்.

ஆயிஷா: என்ன ஆமினா... நோன்பு வந்ததில் இருந்து இத்தனை நாளாக இங்கு வரவே இல்லையே ஏன்?

ஆமினா: என்ன செய்வது? எல்லாம் நேரப் பற்றாக்குறைதான். அல்லாஹ்வின் கிருபையால் அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்தது. அம்மாதத்தில் செய்யக்கூடிய நல்ல அமல்களுக்குண்டான கூலி பல மடங்காகும். அதைத் தவற விட்டால் நாளை மறுமையில் கைசேதப்பட்டவர்களாகி விடுவோம். அப்படிப்பட்ட மாதத்தில் இறைவணக்கம் புரிவதற்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதற்கும் நேரம் சாரியாக இருந்தது.

ஆயிஷா: (டி.வி சப்தத்தைக் குறைத்துக் கொண்டே) சரி ஆமினா... இப்போதாவது வந்தீர்களே... மிகவும் சந்தோஷம். என்ன சாப்பிடுறீங்க?

ஆமினா: அது இருக்கட்டும். நீங்க நோன்பு நோற்றீர்களா? இறைவணக்கமெல்லாம் எப்படி? ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு வைத்தீர்களா?

ஆயிஷா: அதை ஏன் கேட்கிறீங்க ஆமினா? எனக்கு தொழுகைக்கே நேரம் கிடைப்பதில்லை. எப்பொழுதும் வேலையும் குழந்தையுமாக இருக்கிறேன்.

ஆமினா: ஸுப்ஹானல்லாஹ். ஆயிஷா... உங்களிடமிருந்து இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஆயிஷா: ஒரு நிமிடம்... (செல்போனில் அழைப்பு) ஹலோ யாரு மர்யமா? என்ன 12.30 மணிக்கு சீரியல் பார்க்கவில்லையா? நான் எப்பாடு பட்டாவது பார்த்து விடுவேன். வீட்டுக்கு சகோதாரி ஆமினா வந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிறகு அந்த சீரியல் கதையை சொல்கிறேன். (செல்போனை அணைத்து விட்டு) சாரி... நீங்க சொல்லுங்க.

ஆமினா: ஆயிஷா... நீங்க மரியமிடம் பேசியதை நான் கவனித்தேன். நல்ல விஷயம் செய்ய நேரமில்லை என்று சொன்ன உங்களுக்கு டிவி பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா?

ஆயிஷா: வேலை பார்த்துக் கொண்டே டிவியும் பார்ப்பேன்.

ஆமினா: வேலை பார்க்கவும், டிவி பார்க்கவுமா வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்தான்? மனிதர்களாகிய நாம் ஒரு உன்னத நோக்கத்திற்காக படைக்கப் பட்டுள்ளோம். அந்த நோக்கம்தான் இறைவனை வணங்குவது.

ஆயிஷா: என்ன ஆமினா சொல்றீங்க? உலகில் பிறந்தோம், வாழ்கிறோம், வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாவோம்... இப்படித்தான் என்னுடைய நாட்கள் நகர்கிறது.

ஆமினா: ஆயிஷா... சாவோம் என்று சொல்கிறீர்களே. அது உங்களுக்கு எளிதாக உள்ளதா? மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு உண்டு என்று நம்பக்கூடிய உண்மை முஸ்லிம்கள் நாம். அதை மறந்து விடாதீர்கள்.

ஆயிஷா: எல்லாம் தொரியத்தான் செய்கிறது. தொழத்தான் நேரம் கிடைக்கவில்லை.

ஆமினா: ஆயிஷா... வல்ல ரஹ்மான் தன் திருமறையில் “இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)” என்று கூறுகிறான். நம்மை அவன் படைத்ததின் நோக்கமே அவனை வணங்கத்தான். நாம் அதையே மறந்து வாழ்ந்தால் என்ன அர்த்தம்?

ஆயிஷா: என்ன செய்வது? எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை நேரம் போக குழந்தையை கவனிப்பது. குழந்தை தூங்கினால் நானும் தூங்கிவிடுகின்றேன். பின் இன்டர்நெட்டில் ஈமெயில் பார்ப்பேன்.

ஆமினா: உங்களிடம் இறைவன் விசாரிக்கும் நாளைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. அமானிதம் என்றால் என்ன?

ஆயிஷா: எனக்குத் தொரிந்ததைச் சொல்கிறேன். பிறர் நம்மிடம் ஒப்படைக்கும் பொருளைப் பாதுகாத்து அவர்கள் கேட்கும்போது அதை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும். இதில் நம்முடைய நேர்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆமினா: நல்ல பதில்தான். இதே போன்றுதான் ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வாழ்நாள், அவனுக்கு இறைவன் வழங்கிய அமானிதம் ஆகும். அதைப் பற்றி இறைவன் நாளை மறுமையில் நம்மை கண்டிப்பாக கேள்வி கேட்பான்.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இறுதித் தீர்ப்பு நாளில் நான்கு விஷயங்களுக்கு பதில் சொல்லாதவரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது. அவன் தன் வாழ்நாளை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான், எப்படி பொருள் சம்பாதித்தான் - அதை எவ்வாறு செலவிட்டான், தன் அறிவை எப்படி செலவிட்டான்.”

ஆயிஷா: இவை அனைத்தும் காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதே! இப்படியுமா சொல்லியிருக்கிறான் அல்லாஹ்?

ஆமினா: இது மட்டுமா? வல்ல ரஹ்மான் தன் திருமறையில் காலத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பல இடங்களில் சொல்லியிருக்கிறான். நாம் எல்லோருக்கும் தொரிந்த சிறிய அத்தியாயமான சூரா அல் அஸ்ரை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டே துவக்குகிறான்.

ஆயிஷா: இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். ஆனால் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லையே.

ஆமினா: நல்ல காரியங்களை உடனே செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். “ஏழு பேரழிவுகளில் ஒன்று உங்களை பீடிக்கும் முன் நன்மைகளைச் சேகரியுங்கள். 1) பட்டினி - அது உங்களின் அறிவுக்கு அணை போடலாம். 2) வசதி - அது உங்களை வழிகெடுக்கலாம். 3) நோய் - அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்.  4) முதுமை - அது உங்கள் புலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கலாம். 5) திடீர் மரணம். 6) தஜ்ஜால். 7) உலக முடிவுநாள் - அது உண்மையிலேயே மிகவும் கடினமானதும், கசப்பானதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆயிஷா: இப்படிப்பட்ட நேரத்தை நான் எப்படியெல்லாம் வீணடித்து விட்டேன்! இனி நான் என்னுடைய நேரத்தை ஒதுக்கி ஐந்து வேளை தொழுகைகளையும் குறித்த நேரத்தில் தொழுவேன்.

ஆமினா: தொழுகையோடு சேர்த்து ஒரு நிமிடத்தில் கூட அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம்.

ஆயிஷா: என்ன? ஒரு நிமிடத்தில் அதிகமான நன்மைகளா? அதை எனக்கும் சொல்லித் தாருங்களேன்.

ஆமினா: கண்டிப்பாக சொல்லித் தருகிறேன். அதில் எனக்கும் நன்மை உண்டு. மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கேளுங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்கிறேன்.

1) ஒரு நிமிடத்தில் சூரா அல் ஃபாத்திஹாவை சாதாரணமாக ஓதினால் 3 தடவை ஓதலாம். ஒரு தடவை அல்·பாத்திஹா ஓதினால் 600 நன்மைகள் கிடைக்கும். ஆக, மூன்று தடவை ஓதினால் 1800 நன்மைகள் கிடைத்து விடும், அதுவும் ஒரு நிமிடத்தில்.
2) ஒரு நிமிடத்தில் சூரா அல் இஃக்லாஸை சாதாரணமான நடையில் ஓதினால் 20 தடவை ஓதலாம். இந்த சூராவை ஓதுவது முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்குச் சமம். நீங்கள் 20 தடவை ஓதினால் அது திருக்குர்ஆன் முழுவதையும் 7 தடவை ஓதுவதற்குச் சமமாகி விடும்.
3) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் ஒரு பக்கத்தை ஓதி விடலாம்.
4) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் சிறிய வசனத்தை மனப்பாடம் செய்து விடலாம்.
5) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று 20 தடவை ஓதி விடலாம்.
6) ஒரு நிமிடத்தில் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்' என்று 50 தடவை கூறலாம். இவை நாவுகளால் சொல்வதற்கு மிகவும் இனிமையானவை. அல்லாஹ்வின் தராசுத் தட்டில் மிக்க கனமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹா¡ரி,முஸ்லிம்)
7) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை 50 தடவை கூறலாம். இது தௌஹீத் எனும் ஏகத்துவம் பொதிந்த வார்த்தையாகும். ஒரு மனிதன் உயிர் விடும் போது கடைசி வார்த்தை இதுவாக இருந்தால் அவன் சுவனம் புகுவான் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
8) ஒரு நிமிடத்தில் ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று 100 தடவை கூறலாம்.
9) ஒரு நிமிடத்தில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் முகமாக 'அஸ்தஃபிருல்லாஹ்' என்னும் சொல்லை 100 தடவை கூறலாம்.
10) ஒரு நிமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். ஒரு ஸவாத்திற்கு அல்லாஹ் நம் மீது 10 அருள்களைப் பொழிகிறான். ஆக, 500 அருள்கள் நமக்குக் கிடைக்கிறது.
11) ஒரு நிமிடத்தில் எளிதில் புரிகின்ற நல்ல இஸ்லாமிய நூல் ஒன்றில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம்.
12) ஒரு நிமிடத்தில் நம் இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்யலாம்.
13) ஒரு நிமிடத்தில் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.
14) ஒரு நிமிடத்தில் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை - ஆக, 100 தடவை ஓதி இறைவனை அதிகம் நினைவு கூரலாம்.

ஆயிஷா: எல்லாம் புரிந்தது சகோதரி. நான் இரவில் அதிக நேரம் விழித்து விடுவதால் பகலில் சீக்கிரமாக விழிப்பதில்லை. என்ன செய்வது?

ஆமினா: “அல்லாஹ்வே... எனது சமுதாயம் அதிகாலையில் எழுவதற்கு அருள் புரிவாயாக!” என்று அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பிரார்த்திக்கும்போது கூறினார்கள் (அபூதாவூத்).

அதிகாலையில் எழுவதில் அல்லாஹ் தன் அருள்களைப் பொதிந்துள்ளான். அது வெற்றியின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லும். இரவு முன்கூட்டியே படுத்து அதிகாலை சீக்கிரமே எழும் பழக்கம் ஒரு மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக ஆக்கும். புத்திசாலியாக மாற்றும். வளத்தைக் கொண்டு சேர்க்கும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீங்கள் உறங்கும்போது ஷைத்தான் உங்கள் தலையின் பின்புறம் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது உறங்கு என்று சொல்லியே ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரையிடுகிறான். அதிகாலையில் நீங்கள் எழுந்து நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் முதல் முடிச்சு அவிழும். தொழுகைக்காக ஒழு செய்யும்போது இரண்டாவது முடிச்சு அவிழும். நீங்கள் தொழுதால் மூன்றாவது முடிச்சு ஆவிழும். அந்தக் காலைப் பொழுதில் உயிரோட்டத்தோடும் உள்ள சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படி இல்லையெனில் அந்தப் பொழுது உங்களுக்கு தீமையாகவும் சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.” (புகாரீ)

அதேபோல் அறிவியல் பூர்வமான உண்மையும் அதில் உண்டு. அதிகாலை வேளையில் வாயு மண்டலத்தில் 'ஓஸோன்' காற்று அதிகமாக இருக்குமாம். அதனை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு ஆயுள் நீடிக்குமாம். ஆயுள் நீடிக்கிறது என்றால் நம் உடலில் உள்ள நோய்களை ஓஸோன் காற்று குணப்படுத்துகிறது என்று தானே அர்த்தம்.

ஆயிஷா: ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். இனி அதிகாலையில் எழுந்து தொழுவதற்கு நானும் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

ஆமினா: மிக்க மகிழ்ச்சி. அத்தோடு டிவி பார்ப்பதையும் நீங்கள் குறைத்து விடுங்கள்.

ஆயிஷா: அது ஒரு சின்ன பொழுதுபோக்குதானே!

ஆமினா: நான் முதலில் சொன்னேனல்லவா... நம்முடைய பொழுதுபோக்கு நன்மையானதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கெட்டதைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம், கெட்டதைக் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கெட்டதைப் பேசுவது வாய் செய்யும் விபச்சாரம்.

வல்ல ரஹ்மான் நாளை மறுமையில் உன்னைக் கேள்வி கேட்கும்போது இப்படிப்பட்ட அருவருப்பான பதிலையா சொல்வாய்? கொஞ்சம் சிந்தித்துப் பார்.

ஆயிஷா: உங்களை சந்தித்து உங்கள் மூலம் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் நாடி இருக்கின்றான். நானும் இனி இறைவழி சொன்ன நேர நிவாகத்தைப் பேணி நடந்து கொள்கிறேன். எனக்காக நீங்களும் துஆச் செய்யுங்கள்.

ஆமினா: இன்ஷா அல்லாஹ் துஆச் செய்கிறேன். எனக்கும் மஃக்ரிப் தொழ நேரமாகி விட்டது. நான் வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆக்கம் : சகோதரி மன்ஸூரா

நன்றி : "அல் மர்ஜான்" (சவூதி அரேபியாவில் இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் பெண்கள் தமிழ் பிரிவு மூலம் வெளிவரும் காலாண்டிதழ்)