Tuesday, 21 March 2023

“இன்றைய திருமணங்கள் விரைவில் விவாகரத்து நோக்கிச் செல்வது ஏன்? அதற்கான தீர்வு என்ன?

“இயற்கை அறம் நலக்கட்டளை, இராமநாதபுரம்” நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை.
பரிசு பெற்றவர்: M.S. செய்யிது மரியம், காயல் பட்டினம்
கட்டுரையின் தலைப்பு: “இன்றைய திருமணங்கள் விரைவில் விவாகரத்து நோக்கிச் செல்வது ஏன்? அதற்கான தீர்வு என்ன?’‘



“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற தத்துவத்தில் வாழ்ந்த அறியாமைக் காலம் கடந்து சென்று விட்டது. ஆனால் கணவன் ஏதோ ஒரு நேரத்தில், கோபத்தில் “மயிரு” என்ற வார்த்தையைச் சொல்லி விட்டால் கூட அவரை மயிராய் கிள்ளி எறிந்து விடுகிறார்கள் இன்றைய பெண்கள்.
அன்று பணம், படிப்பறிவு இல்லாவிட்டாலும் பொறுமை, இரக்கம், மனிதநேயம், நீதி, நியாயம், நல்லொழுக்கம், நற்பண்பு, நன்னடத்தை, நம்பிக்கை, நிதானம் போன்ற நல்ல குணங்கள் மனிதர்களிடம் சிறந்தோம்பியிருந்தன.
ஆனால் இன்றோ படிப்பறிவு இருந்தும் மனித வாழ்வில் தெரிந்திருக்க வேண்டிய ‘புனிதம்’ இல்லாமற்போனதால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமண வாழ்விலும் அவசர முடிவு எடுத்து விவாகரத்துதான் இதற்கு முழுமையான தீர்வு என்று தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், இதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போம்.
மண வாழ்வின் காலக்கட்டங்கள்:
1. தேனிலவுக் காலம் (Honeymoon Period)
கணவன்-மனைவியின் அன்பான காலக்கட்டம் என்று இதனைச் சொல்லலாம். இந்தக் காலக்கட்டத்தில் தம்பதியர், கோபம், வெறுப்பு, அதிகாரம், அகங்காரம், பொய் சொல்வது… போன்ற தங்களின் கெட்ட குணங்களை அடக்கிப் பிடித்து
அருமையாக
அன்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
இந்த அன்பு வாழ்க்கை, வாழ்க்கை முழுவதும் அப்படியே நிலைத்து நிற்கும் என்று நினைத்துக் கொள்வார்கள். சினிமா, கதை நூல்களின் கண்டதும் இப்படித்தான் என்பதால், அதுதான் நிதர்சனம் என்று எண்ணி நம்பிக்கை கொள்வார்கள்.
ஆனால் இந்த அன்பு, பாசம் எல்லாம் கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள்தாம் நிலைத்திருக்கும்.
மகிழ்ச்சியான நேரங்களில் என்டோர்ஃபின் (Endorphine) என்னும் ஹார்மோன் சுரப்பி மனித உடலில் சுரப்பதால், அது மூளையைச் சிறப்பாக இயங்க வைப்பதால் தம்பதியருக்கிடையே தவறான பேச்சுகள், செயல்கள் இருந்தபோதிலும் அவற்றைக் குற்றங்குறைகளாகக் கருதாமல் மனம் அதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ளும்.
இப்படிப்பட்ட காலக்கட்டங்களில் தம்பதிகள் தங்களுக்குள் நடந்த கடந்த கால அனுபவங்கள், மகிழ்ச்சிகள், துக்கங்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த அன்பான நிலை நீடித்திருக்கும் என்றே எண்ணி ஆனந்தமாய் மகிழ்வார்கள். ஆனால் இந்த நிலை மாறி அடுத்த காலம் வரும்.
2. போராடும் காலம் (Struggling Period)
இதுதான் மணமக்களின் தன்னியல்புகள் வெளிவரத் தொடங்கும் காலம். எல்லா காலமும் இயல்பை மறைத்து வாழ்வது சாத்தியமில்லை. எனவே உண்மை முகம் வெளிவரத் தொடங்கும். அப்போதுதான், ‘இவ்வளவு நாள் இப்படியில்லையே… ஆள் மாறிப் போய்விட்டாரே… நாம் தவறான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ… இப்பொழுது என்ன செய்வது?” என்று மனம் புலம்ப ஆரம்பிக்கும்.
‘ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன?’ என்று மனம் அங்கலாய்க்கும். அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும். இந்தத் தருணத்தில்தான் மனம் தளர்ந்து துணையை ஏற்க மறுக்கும்.
இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இந்தப் போராட்டக் காலக்கட்டத்தில்தான் நிதானம் இழந்த மனம் இறுகி, வாடி நிற்கும். ஷைத்தானும் மனத்தைக் குழப்பி வில்லங்கத்தை ஏற்படுத்துவான்.
இந்த நேரத்தில்தான் பலரும் விவாகரத்தைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையை நல்ல விதத்தில் ஓட்ட முடிவதில்லை.
ஆனால் நிதானம், பொறுமை உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் இயல்பு வேறுபாட்டை அறிந்து, உள் மனத்தை அறிந்து, விட்டுக் கொடுத்து வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துவார்கள்.
அவசர புத்தியுள்ளவர்கள் அலசி ஆராயாமல், உரிய கால அவகாசம் அளிக்காமல் அவசரமாக விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்க்கையை வெற்றியோடு முன் கொண்டு செல்லலாம்.
இதற்கு அடுத்து வருவதுதான் புரிதல் காலம்.
3. புரிதல் காலம் (Understanding Period)
தம்பதியர் இரு பிரிவினரும் இரு தரப்பட்ட குணங்களையுடைவர்களாகத்தானே இருக்க முடியும்! எல்லோரும் ஒரே குணமுடையவர்களாக இருப்பதில்லையே… எனவே பல்வேறு கருத்துவேறுபாடுகள் வரத்தான் செய்யும். இரண்டு பேருமே முழுமையடைந்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் தங்களின் குறைகளைக் கண்டு கொள்ளாமல் அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு விட்டுக் கொடுத்துச் சென்றால், புரிந்துணர்வோடு செயல்பட்டால் இனி வரும் காலம் உண்மையான வாழ்க்கையாக மாறி வாழ்க்கை நல்ல விதமாக உருண்டோட ஆரம்பிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் பிரச்சினைகள் வராமலிருப்பதற்கும் கவனத்திற்கொள்ள வேண்டிய சில அம்சங்கள்:
1. உணர்ச்சிகளை மதிப்பதும் மனம் திறந்து பேசுவதும்: குடும்ப அன்புக்குப் பெரும் தூணாக இருப்பது மனம் திறந்து பேசுவதுதான். நேரமில்லை என்று பணத்தின் பின்னால் ஓடும் மனிதர்கள் மன அமைதி கிடைக்காமல் அலைகின்றனர். துணைக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதும் மனம் திறந்து பேசுதலும் வேண்டும்.
2. துணையை நண்பராகப் பார்ப்பதும் கலந்தாலோசித்தலும்: நண்பனிடம் நட்பாய் உறவாடுவது போல் துணையிடமும் நட்பாகப் பழகினால் அந்த உறவு மனப்பூர்வமானதாக அமையும். அன்பு என்பது சில காலம்தான் நிற்கும். ஆனால் நட்பு என்பது கடல் அளவு நீளும். அதனால் நட்பாய் பாசத்தைக் காட்ட வேண்டும்.
சிறிதோ பெரிதோ எந்த விவகாரமானாலும் அதனைத் தன்னிடம் பங்கு வைக்க வேண்டும் என்று விருப்பப்படுபவள்தான் பெண். வீட்டு விவகாரங்கள் மட்டுமல்ல, சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையானாலும் அலசி ஆராய்ந்து தீர்வுகளைத் தந்த இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
3. முகபாவனை: குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் பராமரிப்புக்குமாக வெளியில் சென்று வேலை செய்து விட்டு வீடு திரும்பும் கணவனை மனைவியின் புன்சிரிப்பும் இன்முகமும் உற்சாகப்படுத்தும். அவனுடைய சோர்வை அகற்றும்.
வீட்டையும் குடும்பத்தையும் நல்வழிப்படுத்தும் மனைவிக்கு கணவனின் உதவியும் ஒத்துழைப்பும் முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.
4. வெளிப்படைத்தன்மை கொண்ட உறவு: மணவாழ்க்கையில் பொய்கள் கூடாது. வாழ்க்கைத் துணைக்கு முன்னால் நடிப்புக்குக் கொஞ்சம் கூட இடம் கிடையாது. அதனால் திருமண உறவில் முழுமையான நம்பிக்கையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும்.
5. பிரச்சினைகளை உடனே தீர்த்தல்: கருத்துவேறுபாடுகளும் திருப்தியற்ற தருணங்களும் வாழ்க்கையில் சாதாரணமானதுதான். ஆனால் இவற்றை மனத்தில் போட்டு புகை மூட்டுவதை விட முரண்பாடுகளை வெளிப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
6. பிரார்த்தனை: திருமண வாழ்க்கை இன்பமடையவும் குடும்பம் கண் குளிர்ச்சியடையவும் இறைவனின் அருள் கிடைத்தாக வேண்டும். கருணையுள்ள இறைவன் கற்றுத் தந்த கீழ்க்கண்ட பிரார்த்தனையை அதிகமாகக் கேட்க வேண்டும்:
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும் எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" (சூரா அல் ஃபுர்கான் 25:74)
இன்னும் இறைத்தூதர் அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளையும் எப்போதும் கேட்க வேண்டும்.
7. பிள்ளைகளை மார்க்க ரீதியாக வளர்த்தல்: பெண்கள் வீட்டு விளக்காகச் செயல்படுபவர்கள். அவர்கள் தங்கள் மக்களை மார்க்க ரீதியாக, தீனைப் புகட்டி வளர்க்க வேண்டும். தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், சாதாரணமாக வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றைச் சமாளிக்கும் திறமை படைத்தவர்களாக அவர்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
கருணை, அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டியவை:
1. மனைவி கணவனுக்குக் கட்டளை பிறப்பித்தல் கூடாது. அது அகங்காரமாக (Egoவாக) மாறும்.
2. மனைவி கணவனிடம், “நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்றால் இப்படிச் செய்திருப்பீர்கள்” என்று சொல்வது கூடாது. ஏனெனில் கணவனுக்கு, “அப்படியானால் நான் நல்ல கணவன் இல்லையோ?” என்ற கேள்வி உருவாகி, அது பிரச்சினையாக உருவெடுக்கும்.
3. மனைவி கணவனிடம், “நீங்கள் இப்படிப்பட்ட கணவனாக இருப்பதால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்” என்று சொல்லக் கூடாது. அது அவனது ஆத்திரத்தைக் கிளப்பி, ஆழமாக வடுவாக மாறும்.
மனைவியை மகிழ்ச்சிப்படுத்துபவை:
1. “நான் உனக்கு எல்லா நேரங்களிலும் கூட இருக்கிறேன்” என்ற கணவனின் ஒரு சொல் போதும். மனைவி மீதமுள்ள அனைத்து வேலைகளையும் அழகாக முடித்து விடுவாள்.
2. அவளைப் பாராட்டி வாழ்த்துகின்ற ஒரு சின்ன வார்த்தை போதும். ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவள் அனைத்திலும் முன்னேறுவாள்.
3. அவளுடைய பேச்சை நேரம் கொடுத்து, சளைக்காமல் கேட்டால் விவரிக்க முடியாத அளவுக்கு அவள்
அருமையான
துணைவியாக மாறுவாள்.
4. அவளுக்கு ஆதரவும் அங்கீகாரமும் அளித்தால், அவள் ஆன்மாவாகவும் அன்பானவளாகவும் மாறுவாள்.
திருக்குர்ஆனும் திருநபிமொழிகளும்:
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (சூரா அர் ரூம் 30:21)
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (சூரா அல் பகரா 2:187)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்: “பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண், விலா எலும்பிலிருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புஃகாரீ)
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்: “உங்களில் அழகிய குணமிக்கவர்தான் இறைவிசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர். உங்களில் சிறந்தவர், மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்பவரே!” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ)
“நான்கு விடயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, அவளது குலச் சிறப்புக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப் பற்றுக்காக. நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்களையே மணந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நலம் உண்டாகட்டும்” என்று நபிகளார் நவின்றார்கள்.
அண்ணல் நபிகளார் நவின்றதாக உம்மு சலமா (ரலி) அறிவிக்கிறார்கள்: “எப்பெண்மணி தன் கணவன் அவள் மீது திருப்தியாக இருக்கும் நிலையில் மரணமடைகிறாளோ அவள் சுவனம் புகுவாள்.” (திர்மிதீ)

“இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கைகொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1469)
“ஓர் ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளை காணும்போது அவனுக்கு அவள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள். கட்டளையிடும்போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாதபோது அவன் (சொத்தைப்) பாதுகாப்பாள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), (அபூதாவூத் 1417)
முடிவுரை
கணவன், மனைவி இருவரும் நாணயத்தின் இரு புறங்களாகச் செயல்பட வேண்டும். திருமணம் என்பது உலக வாழ்வில் இன்பம் பெறவும் தவறுகள் செய்யாமல் இருக்கவும் வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்த வழியில் தாம்பத்திய வாழ்விலும் வாழ்வின் எல்லா செயல்பாடுகளிலும் நடந்து கொண்டால் நம்முடைய இம்மை வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதோடு மறுமை வாழ்வில் சுவனம் கிடைக்க வழி வகுக்கும். அல்லாஹ்வின் அருளும் கருணையும் கிடைக்கும்.
விவாகரத்து என்னும் அவசரத் தீர்வு இனி வாழ்க்கையில் யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலாத நிலை வர எல்லோரும் பாடுபட வேண்டும்.
ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்து ஒன்றிணைந்து செய்வோமென்றால், அதற்கு அல்லாஹ்வும் துணை நிற்பான். அதில் ஐயம் எதுவும் இல்லை.

No comments:

Post a Comment