Sunday 5 November 2017

நூல் வலம் - ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 2017

நான் வாங்கிய நூல்கள்

நேற்று (04.11.2017) ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியைக் காண சென்றிருந்தேன். எப்பொழுதும் போல பிரம்மாண்டமான ஏற்பாடுகள். நேர்த்தியாக, கச்சிதமாக அனைத்தையும் செய்திருக்கிறார்கள். தொழுகைக்காக கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் பெரிய இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.



இலட்சக்கணக்கான புத்தகங்களை எப்படி பார்வையிடுவது என்ற மலைப்பில் நகர்ந்தேன். அனைத்து கடைகளையும் நம்மால் ஒரே மூச்சில் பார்த்து விட முடியாது.



இந்திய பதிப்பகங்களின் கடைகள் அடங்கியுள்ள Hall No. 7க்குச் சென்றேன். ஒவ்வொரு கடையாக ஏறி புத்தகங்களைப் பார்வையிட ஆரம்பித்தேன். திடீரென்று எதிரில் புக் லேண்ட் பதிப்பகம் தென்பட்டது. சகோதரி ஜெசீலா பானு அவர்கள் முகநூலில் எழுதியது நினைவுக்கு வந்தது. அவரது நூல் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்தார்.



அங்குள்ள பணியாளரிடம், “தமிழ் நூல்கள் எங்கே இருக்கின்றன?’‘ என்று கேட்டேன். “இங்கே தமிழ் நூல்கள் கிடையாது” என்றார். நான் ஜெசீலா பானு அவர்களின் நூல் விவரத்தைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அவர் இன்னொரு பணியாளரிடம் கேட்டார். அவர் உடனே அந்த நூலைக் காட்டித் தந்தார். “நம் நாயகம்” என்ற நூல். அதனை வாங்கி விட்டு அடுத்த கடைக்குள் நுழைந்தேன்.



தமிழ் நூல்கள் எங்காவது கண்ணுக்குத் தென்படுகிறதா என்றும் பார்த்துக்கொண்டே சென்றேன். எங்கும் தென்படுகிற மாதிரி தெரியவில்லை. லிபி பதிப்பகம் என்ற மலையாள நூல்கள் கடையில் எனக்குப் பிடித்த “இஸ்லாமும் நேர மேலாண்மையும்” என்ற மலையாள நூலை வாங்கினேன்.



அடுத்தடுத்த கடைகளுக்கு நகர்ந்தபொழுது தாருஸ்ஸலாம் பதிப்பகக் கடை (Darussalam International Islamic Bookshop - UAE) தென்பட்டது. இங்கே நல்ல நல்ல இஸ்லாமிய நூல்கள் கிடைக்குமே என்று உள்ளே நுழைந்தேன். அருமையான தலைப்புகளில் பல நூல்கள் அங்கே வீற்றிருந்தன. Strategies of Prophet Muhammad PBUH என்ற நூலை வாங்கினேன். அங்கே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஒரு பக்கத்தில் தமிழ் நூல்களை வைத்திருந்தார்கள்.



பின்னர் International Islamic Publishing House - Saudi Arabia கடைக்குள் நுழைந்தேன். அங்கும் அருமையான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆங்கில நூல்கள் விரவிக் கிடந்தன. Psychology from the Islamic Perspective என்ற நூலை வாங்கினேன். அங்கும் இதர மொழி நூல்களை பிரிவு பிரிவாக வைத்திருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே TAMIL என்ற பெயர்ப்பலகையின் கீழ் சில தமிழ் நூல்கள் இருந்தன.



மலையாள பதிப்பக உலகின் ஜாம்பவான் DC Books பல கடைகளைப் போட்டிருந்தார்கள். கூட்டம் அங்கே அலை மோதியது. அங்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவாம் என்று என் நண்பர் முஹம்மது ஆதில் சொன்னதை வைத்து அங்கு சென்று தமிழ் நூல்களைத் தேடினேன். ஒன்றும் இல்லை. அங்குள்ள பணியாளர்களிடம் விசாரித்தபொழுது தமிழ் நூல்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் ஏராளமான நூல்கள் அங்கே இருந்தன.



வழக்கம் போல் மலையாள பதிப்பகங்கள் அதிகம் பங்கேற்றிருந்தன. அங்கெல்லாம் மலையாளிகளின் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்து தங்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் நூல்களை பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே தமிழ் ஒலிகளும் கேட்டன. தமிழ் குடும்பங்களும் வந்திருந்தார்கள்.



‘மாத்யமம்’ மலையாள நாளிதழ் கடை போட்டு, அன்றைய நாளிதழை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதளின் கடையையும் கண்டேன். ‘மீடியா ஒன்’ மலையாள தொலைக்காட்சியும் கடை போட்டு, மலையாள இளவல்களை செய்தி வாசிக்க வைத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். மலையாள மக்கள் குதூகலத்துடன் அதனைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். மலையாள வானொலி பண்பலை Flowers FM கடையையும் காண நேர்ந்தது.



மலையாளிகளுக்கு வருடா வருடம் இது ஒரு பாக்கியமாகவே அமைந்துள்ளது. சொந்த நாட்டில் கூட அவர்கள் வாங்க முடியாத நூல்களையெல்லாம் அவர்கள் இங்கே சாதாரணமாக வாங்கலாம். கணிசமான மலையாள முஸ்லிம் பதிப்பக கடைகளும் காணக் கிடைத்தன. அமீரகத்திலுள்ள மலையாள வானொலி பண்பலைகளிலும் இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பரம் செய்யப்படுகிறது.



இதேபோன்று தமிழ் பதிப்பகக் கடைகள் எப்போது வரும் என்ற ஏக்கம் இதயத்துள் எழாமல் இல்லை. ‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் கடந்த வருடங்களில் ‘தேஜஸ்’ மலையாளப் பதிப்பகத்துடன் சேர்ந்து கடை போட்டிருந்தது. இந்த வருடம் சில காரணங்களால் ‘தேஜஸ்’ பதிப்பகம் கடை போடாததனால் ‘இலக்கியச்சோலை’ நூல்களும் இல்லாமல் போனது.



தமிழ் மக்கள் அதிகமாக இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிய வேண்டும். அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அவர்களின் அதீதமான வருகையும், வாசிப்புப் பழக்கமும் மட்டுமே இனி வருங்காலங்களில் தமிழ் பதிப்பகத்தாரை இங்கே கடைகள் எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்.



இந்த ஏக்கத்துடன் நேரமாகிவிட்டதால் விடைபெற மனமில்லாமல் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். புத்தகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறி நனைந்து வெளிவந்த உணர்வு.






No comments:

Post a Comment