கஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:
‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்!’’
எப்படியிருக்கும் கஃபூருக்கு?
(ஒரு பேச்சுக்குத்தான்! மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)
இனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.
அவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார்? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
நகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா? நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா? நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன செய்வார்?
சப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்!
எங்கும் அல்லாஹ்! எதிலும் அல்லாஹ்!!
அவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.
ஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.
இப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.
ஆம்! கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா? நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.
அதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.
‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்!’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.
‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.
(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)