இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்
முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடைதான் அணிந்திருந்தார்.
குஞ்ஞாலி மரைக்காயர்
கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால் பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்ஞாலி மரைக்காயர்தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
சிராஜ்-உத்-தவ்ளா
ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தவ்ளா ஆவார்.
சிப்பாய்க் கலகம்
முதல் இந்திய போராட்டம் என்று அறியப்படும் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அதிகப்படியானோர் தங்கள் உயிரையும் இழந்தனர்.
ஜாஃபர் அலீ
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாஃபர் அலீ என்பவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப் பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும்படி ஜாஃபர் அலீயை சித்திரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாஃபர் அலீ ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
மிர் நிசார் அலீ
1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலீ வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
ஆதம் ஜவேரி சகோதரர்கள்
இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள், தன்னுடைய சுயசரிதையான சத்தியசோதனையில், விடுதலை போராட்டத்திற்கான ஆரம்பக்காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரி சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துகளை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இச்சகோதரர்கள்.
ஏ.ஆர். ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட்
தென் தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக இருந்தது. அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர். ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் ஆவார்.
நேதாஜி படையில் கணிசமான முஸ்லிம்கள்
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர்.
உலமாக்களின் மார்க்க ஃபத்வா
மௌலானா என்றழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சுதந்திர எண்ணங்களைத் தீவிரமாக விதைக்கும் வண்ணமாக, கதராடை அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) அளித்திருந்தனர்.
ஃபக்கீர்களின் பங்கு
ஃபக்கீர்கள் எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப் பாடி மக்களின் விடுதலை எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.
திருமதி ஃபத்ருதீன் தியாப்ஜி
இந்திய மண்ணின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தனர். சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் திருமதி ஃபத்ருதீன் தியாப்ஜி ஆவார்.
குஷ்வந்த் சிங்கின் கூற்று
இஸ்லாமியர்களின் இத்தகைய அர்ப்பணிப்பினாலேயே, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடும்போது எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பின்வருமாறு எழுதுகின்றார்: “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”. (இல்லஸ்டிரேட்டட் வீக்லி, 29-12-1975)
ஹாஜி ஷரீஅத்துல்லாஹ்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரீஅத்துல்லாஹ் 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
சையது அஹமது ஷஹீத்
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது ஷஹீத் என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரத்தைச் சுவாசிக்க வழி வகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனிதான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.
கான் சாஹிப் என்ற மருதநாயகம்
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான் சாஹிப். இவர் யூசுஃப் கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுஃப், கும்மந்தான், கம்மந்தான் சாஹிப் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுஃப் கான் சாஹிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார். ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஹைதர் அலீ
18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலீ. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலீயின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலீயின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலீயைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரைக் கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ஆம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார். 'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் ஃபைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து ஃபைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.
டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு.
இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
வழக்கறிஞர் மக்பூல் மாமூத்
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மனசாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
முஹம்மது அக்ரம்
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன்
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
அஷ்ஃபகுல்லாஹ் கான்
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்ஃபகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்ஃபகுல்லாஹ் கான் பாறை போல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர்.
அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்தில் தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அஷ்ஃபகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது.
முஹம்மது ஹசன்
ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்திரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
மக்கான் கான், மஹபூப்தீன்
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மஹபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.
கம்பம் பீர்முஹம்மது பாவலர்
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந. அப்துர் ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
காஜா மியான் ராவுத்தர்
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார்.
'மேடை முதலாளி' அப்துர் ரஹ்மான் சாகிப்
'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
அல்லாமா அப்துல் ஹமீத் பாக்கவி
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாக்கவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
முஹம்மது சாலியா
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீ`ப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது ஹுசைன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) வள்ளல் ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர். பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துகள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும் பணியாற்றினார்கள்.
காசிம் இஸ்மாயீல் மன்சூர்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915ஆம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப் படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயீல் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.
இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலீ, ரக்னுத்தீன்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலீ, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான்
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.
இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.
No comments:
Post a Comment