1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் கடுங்குளிரில் மூழ்கி மாண்டனர்.
இது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ அகங்காரம் கொண்டோர் அவமானப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கொக்கரித்த சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், நீரை வரவழைப்பதே நான்தான் என்று எக்களித்த ஃபிர்அவ்ன் அந்த நீரிலேயே மூழ்கிப் போனான். செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார் தட்டிய காரூன் போன்றவர்கள் இறைத் தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர்.
பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவன் தன்னை ‘முதகப்பிர்‘ (பெருமைக்குரியவன்) என்று அழைக்கிறான். அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ் மட்டுமே முதகப்பிர். எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை என்பது அவனுக்கு மட்டுமே உடையது. ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
அவனுடைய படைப்பினங்கள் ஒன்றுக்கும் அந்த உரிமை இல்லை. ஒரு முஃமினின் அத்தியாவசிய பண்பு பணிவு. எவனது உள்ளத்தில் அனைத்துப் பெருமைகளுக்கும் உரிமை படைத்தவன் வல்ல அல்லாஹ் ஒருவன்தான் என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அவன் எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கு கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து வாழ்வான்.
பணிவு மனிதனை உயர்த்தும். ஆணவம் மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)
“நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே” என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: புகாரீ)
“பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனை நாம் புகழ்வதால் இறைவனுடைய தகுதி கிஞ்சிற்றும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நமது தகுதிதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயரும்.
நமக்கு எது கிடைத்தாலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நமக்குக் கிடைக்கும் எந்த வெற்றியும் நம்மால் ஆனது அல்ல, இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு பறந்து விடும்.
“எவரது உள்ளத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்’ என்று பெருமைக்கு விளக்கம் அளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் பணிவுடனேயே வாழ்ந்தார்கள். பணிவையே மக்களுக்கு போதித்தார்கள். அகங்காரம், பெருமை, கர்வம் போன்றவற்றைக் கொண்டு மக்களை எச்சரித்தார்கள். அவர்களின் பணிவு காரணமாக அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான்.
எனவேதான் பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் விதித்துள்ளது. பெருமைக்காரர்கைளையும், ஆணவக்காரர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மேலும் உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் எவரையும் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)