முன்னுரை
பேராசைப்பட்ட மனிதன் பணத்திற்கு பின்னால் ஓடுகிறான். மனோ இச்சைகளுக்கு அடிமையாகி தான்தோன்றித்தனமாக திரிகிறான். எந்த வழியிலாவது சம்பாதித்து எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்று துடிக்கிறான். இப்படிப்பட்ட மோசமான காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” (புகாரீ)
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அடிக்கின்ற அலையில் முஸ்லிம்களும் அடித்துச் செல்லப்படுகின்றனர். தங்களது உண்மையான இலட்சியங்களை மறந்து, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை எவை, தடுக்கப்பட்டவை எவை என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அதில் பட்டதுதான் கடன் வாங்குவதும், கடனில் மூழ்குவதும். இஸ்லாம் பொய், மோசடி, ஏமாற்றுதல், கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருத்தல், ஹராம், ஹலால் போன்றவற்றிற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை நாம் பார்க்கும்பொழுது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஒரு முஸ்லிம் தனது வருமானத்தின் வழிகளையும், செலவுகளின் வழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.
நமது வருமானம் ஹலாலான வழிகளில் இருக்கிறதா? செலவுகள் ஆடம்பரம், அனாச்சாரம் இல்லாத அனுமதிக்கப்பட்ட வழியில் இருக்கிறதா? நமது வாக்குறுதிகளை சரியாக பின்பற்றுகிறோமா? ஒப்புக்கொண்டபடி நாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறோமா?
இஸ்லாம் இவை குறித்து கூறியதைப் பார்ப்போம்.
திருக்குர்ஆன் கூறும் வணிக நெறிமுறைகள்
وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰواؕ
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்; வட்டியைத் தடை செய்திருக்கிறான். (2: 275)
வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் திருப்திப்பட்டு செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ
உங்களில் ஒருவருக்கொருவர் இசைந்து ஏற்படுத்திக் கொள்கிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! (சூரா அந் நிசா 4:29)
நேர்மையாக வியாபாரம் செய்யும் வியாபாரிக்குரிய அந்தஸ்து என்ன தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களுடனும் இருப்பார்.” (திர்மிதீ)
ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நல்லவன், அவன் நல்லவற்றையே ஏற்றுக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் எந்த விடயங்களை தூதர்களுக்கு ஏவினானோ அந்த விடயங்களையே முஃமின்களுக்கும் ஏவினான்.
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـاؕ
“தூதர்களே! நல்லவற்றைச் சாப்பிட்டு நல்லமல் புரியுங்கள்” (23:51) என்றும்,
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ
“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (2:172) என்றும் அல்லாஹ் கூறினான்.
பின்னர் நீண்ட பிரயாணத்தில் ஈடுபட்ட ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டு, அவன் உடலெங்கும் புழுதி படிந்த நிலையிலும், பரட்டைத் தலையுடனும், வானத்தின் பக்கம் தனது கைகளையுயர்த்தி, ‘என் இறைவனே! என் இறைவனே!’ என அழைக்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம், பானம் ஹராம், ஆடை ஹராம். ஹராமிலேயே அவன் போஷிக்கப்பட்டிருக்கின்றான். அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (அஹ்மத், முஸ்லிம், திர்மிதீ)
இந்த ஹதீஸ் “அல் தய்யிப்” என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தய்யிப் என்றால் தூய்மையானதும், நல்லதும். தூய்மையும், நல்லதும் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கடைப்பிடிக்கப்படவேண்டியவை. முஸ்லிம்கள் என்ற நிலையில், நாம் உணவிலும், உடையிலும் ஹலாலைப் பேண வேண்டும். நமது பேச்சு சுத்தமாக இருக்க வேண்டும். நமது எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும்.
4. நல்ல அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மேற்கண்ட ஹதீஸ் கூறும் அடுத்த அம்சம் ஏற்றுக்கொள்ளப்படுதல். அல்லாஹ் நல்லதிலிருந்தும், தூய்மையானவற்றிலிருந்தும் வந்ததை மட்டுமே ஏற்றுக்கொள்கிறான்.
ஒரு முறை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “ஸஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு 40 நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்: “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (மிஷ்காத்)
5. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் நரகத்திற்கே செல்வான்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமில் வளர்ந்த சதை சுவனம் செல்லாது. ஹராமில் வளர்ந்த சதை நரக நெருப்புக்கே உரித்தானதாகும்.” (அஹமத், தாரிமீ, பைஹகீ)
அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராம் புகட்டப்பட்ட உடல் சுவனத்தினுள் நுழையாது.” (பைஹகீ)
6. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
7. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
8. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
9. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
10. ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
எடுத்துக்காட்டாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) உருவாக்கிய உன்னத சமுதாயம்
நபி (ஸல்) அவர்களுடன் வழக்கமாக ஃபஜ்ர் தொழுகையில் ஒரு நபித்தோழர் கலந்துகொள்வார். அவர் சில தினங்களாக ஃபஜ்ர் ஜமாஅத் முடிந்தவுடனே வேகவேகமாக கிளம்பிச் செல்கிறார். இதனைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ஒருமுறை இதுகுறித்து கேட்டார்கள்.
அதற்கு அந்த நபித்தோழர் இவ்வாறு பதில் கூறினார்: “அல்லாஹ்வின் தூதரே, எனது வீட்டோடு இணைந்து ஒரு பேரீத்தம் பழத் தோட்டம் உள்ளது. அதில் ஒரு மரம் எனது வீட்டு முற்றத்தை நோக்கி சாய்ந்துள்ளது. அதன் மேல் பகுதியிலுள்ள பழுத்த பழம் என் வீட்டின் முற்றத்தில் விழும். என் குழந்தைகள் காலையில் தூங்கி கண் விழிக்கும்பொழுது இந்தப் பழத்தைக் கண்டால் அறியாமல் எடுத்து சாப்பிட்டு விடுவார்கள். ஆதலால் அவர்கள் கண் விழிக்கும் முன்பு நான் ஓடிச் சென்று அந்தப் பழங்களையெல்லாம் பொறுக்கி மாற்றி வைப்பேன். அதனால்தான் நான் ஜமாஅத் முடிந்தவுடன் எழுந்து ஓடோடிச் செல்கிறேன்.”
ஹலால், ஹராம் விடயத்தில் நபித்தோழர்கள் காட்டிய பேணுதலைப் பார்த்தீர்களா? ஆனால் நாம் நம்முடைய விடயத்தில், நம் குடும்பத்தினரின் விடயத்தில் இத்தகைய பேணுதலைக் காட்டுகிறோமா? நம்முடைய உடலிலோ, நம் குடும்பத்தினரின் உடலிலோ எள்ளளவும் ஹராம் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோமா?
நமது அன்றாட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு உள்ளன? நமது கொடுக்கல்-வாங்கல்களில், நமது வியாபாரங்களில் நாம் பொய் சொல்கிறோமா? பொருட்களை மிகைப்படுத்திக் கூறி விற்கிறோமா? பொருட்களின் குறைகளை மறைத்து விற்கிறேமா? கலப்படம் செய்கிறோமா?
நமது வருமானங்களின் வழிகளில் ஏமாற்று, மோசடி இருக்கின்றனவா? பிறரது பணம் நமது பொருளாதாரத்தோடு கலந்து கிடக்கிறதா? பைத்துல்மால், மஸ்ஜித், நிறுவனங்கள் போன்றவற்றின் பணங்கள் நம் கையில் புரளும்பொழுது மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறோமா?
அனாதைகளின் சொத்துகளுக்கு பாதுகாவலராக இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருக்கிறோமா? வாரிசு சொத்துகளை பாகப்பிரிவினை செய்யும்பொழுது நீதமுடன் நடந்துகொள்கிறோமா? நமது நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும்பொழுது நேர்மையாக நடந்துகொள்கிறோமா?
மத்யன்வாசிகளின் இழிநிலை
வரலாற்றில் ஒரு சமுதாயம் முழுமையாக அழிக்கப்பட்டது. எதற்காக? நம்பிக்கை மோசடி, பொருளாதார மோசடி செய்ததற்காக அந்தச் சமுதாயத்தை அல்லாஹ் தடம் தெரியாமல் அழித்தான். அதுதான் மத்யன்வாசிகள்.
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ
كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ؕ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْد
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தைக் கொண்டு நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக் கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! (11:94,95)
சினாய் மலைக்கு கிழக்கு பாகத்தில் வாழ்ந்தவர்கள்தாம் மத்யன்வாசிகள். ஷுஐப் (அலை) அவர்களை அல்லாஹ் இந்த மக்களுக்கு நபியாக அனுப்பினான்.
இந்த மக்கள் அளவையிலும், நிறுவையிலும் பிறரை ஏமாற்றி வாழ்ந்தார்கள். சிலை வணக்கம் புரிந்தார்கள். ஷுஐப் (அலை) அவர்கள் அந்த மக்களிடம் கொடுக்கல்-வாங்கல்களில் நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார். பல காலமாக அவர் செய்த உபதேசங்களை அவர்கள் உதாசீனப்படுத்தினார்கள்.
ஷுஐப் (அலை) அவர்கள் நீங்கள் மாறவே இல்லை என்றால் உங்கள் அழிவு நிச்சயம் என்று எச்சரிக்கலானார்கள். வரலாற்றிலிருந்து அதற்கான உதாரணங்களை எடுத்துக் கூறினார்கள். நூஹ் (அலை), ஹூத் (அலை), ஸாலிஹ் (அலை), லூத் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றிக் கூறினார்கள்.
அளவையிலும், நிறுவையிலும் அவர்கள் மோசடி செய்வதை நிறுத்தும்படியும், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரும்படியும் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
ஓர் இரவில் ஒரே ஒரு பேரிடி சப்தம். அவர்கள் தங்கள் வீடுகளில் வீழ்ந்தனர். மறுநாள் காலையில் கோரமாக அவர்கள் வாழ்ந்த இடம் காட்சியளித்தது. அப்படி ஒரு சமுதாயம் அங்கே வாழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போனது.
ஆனால், ஷுஐப் (அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் அல்லாஹ் அந்த பூகம்பத்திலிருந்து காப்பாற்றினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நம்பிக்கை மோசடி, ஏமாற்று அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நாம் இந்த அலைகளில் அடித்துச் செல்லாமல் எதிர்நீச்சல் போட்டு நேர்மையாக வாழ்ந்தால் அல்லாஹ் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றுவான் - ஷுஐப் நபியையும், அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றியதைப் போல.
கடன் குறித்த கடும் எச்சரிக்கை
நீங்கள் எவ்வளவு கடன் பிறருக்கு கொடுக்க வேண்டியுள்ளது?
திருப்பிக் கொடுக்கும் உண்மையான தேதியைக் கூறி கடன் வாங்கினீர்களா?
உங்களிடம் கடன் திருப்பிக் கொடுப்பதற்கான பணம் இருந்தும் தாமதப்படுத்துகிறீர்களா?
அப்படியானால் நாம் ஷஹாதத் என்ற உன்னதமான அந்தஸ்தை அடைந்தால் கூட நமது பாவங்கள் அழிக்கப்படாது.
இன்றைய காலகட்டத்தில், கடன் வாங்குவதும், வங்கிகளில் லோன்கள் எடுப்பதும், கடனாளியாகவே காலம் காலமாக இருந்து வருவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கும், புதிய கார்கள் வாங்குவதற்கும், ஃபர்னிச்சர்கள் வாங்குவதற்கும், இன்னபிற சொகுசு வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதற்கும் கடன் வாங்குவது என்பது சர்வ சகஜமாகி விட்டது.
ஆனால் இஸ்லாம் இதனை பயங்கரமாக பார்க்கிறது. கடன் குறித்து கடுமையாக எச்சரிக்கிறது. முடிந்தவரை கடன் இல்லாமல் வாழ அறிவுறுத்துகிறது. இருந்தும் முஸ்லிம்களின் கண்கள் திறக்கவில்லை.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு ஷஹீதின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும், கடனைத் தவிர.” (முஸ்லிம்)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விசுவாசியின் கடன் தீர்க்கப்படும் வரை அவரது ஆன்மா தொங்கிக் கொண்டிருக்கும்.” (அஹமத், திர்மிதீ, இப்னு மாஜா)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கையில் போதுமான பணம் இருந்தும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதில் தாமதம் காட்டுவது அநீதியாகும்.” (புகாரீ)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கடனிலிருந்து அடிக்கடி பாதுகாப்பு கோரியிருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி இந்தப் பிரார்த்தனையை செய்வார்கள்:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ
“யா அல்லாஹ், அனைத்து பாவங்களிலிருந்தும், கடன் படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.”
இதனைக் கவனித்த ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே, கடன் படுவதிலிருந்து அடிக்கடி தாங்கள் பாதுகாவல் தேடி துஆ செய்வதைப் பார்க்கிறேனே…” என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: “ஒரு மனிதன் கடன் பட்டால், அவன் பேசும்பொழுது பொய் பேசுவான். வாக்குறுதி கொடுத்தால் அதனைக் கடைப்பிடிக்க மாட்டான்.” (புகாரீ)
அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு அதிகமாக கடன் இருப்பதாக கவலையுடன் முறையிட்டார். அதற்கு அண்ணலார், ”உனது கவலைகளையும், கடன்களையும் தீர்க்கும் சில வாக்கியங்களை சொல்லித் தரட்டுமா?” என்று கேட்டார்கள்.
“அது என்ன வாக்கியங்கள்?” என்று அந்த நபித்தோழர் ஆர்வத்துடன் கேட்க, நபிகளார் கீழ்க்கண்ட துஆவை காலையிலும், மாலையிலும் ஓதுமாறு கூறினார்கள்:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
“யா அல்லாஹ், கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நம்பிக்கையின்மையிலிருந்தும், சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். அதிகரிக்கும் கடனிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.”
அந்த மனிதர் இந்தப் பிரார்த்தனையை காலையிலும், மாலையிலும் கேட்க ஆரம்பித்தார். அல்லாஹ் அவரது கவலைகளையும், கடன்களையும் போக்கி விட்டான். (அபூதாவூத்)
கடன் உள்ள மனிதர் அந்தக் கடன் திருப்பி செலுத்தப்படும் வரை சுவனத்தினுள் நுழைய மாட்டார்.
முஹம்மத் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடீரென்று தங்கள் கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பின்னர் தங்கள் நெற்றியில் தங்கள் உள்ளங்கையை வைத்து இவ்வாறு கூறினார்கள்: “ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான விடயம் எனக்கு இறக்கப்பட்டுள்ளது!” என்று கூறினார்கள்.
நாங்கள் அமைதி காத்தோம். அச்சமாகவும் இருந்தது. அடுத்த நாள் காலை நான் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே, என்ன கடுமையான விடயம் உங்களுக்கு இறக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அண்ணலார் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: “என் ஆன்மா எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, மீண்டும் அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, அவனுக்குக் கடன் இருக்குமானால், அவனது கடன் அடைக்கப்படும் வரை அவன் சுவர்க்கம் புக மாட்டான்.” (நஸயீ)
கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் சிலர் ஏமாற்றுவதால் கடன் கொடுப்பவர்கள் விரக்தியடைகின்றனர். இப்படி சிலர் செய்யும் தவறுகளால் உண்மையான தேவையுடையவர்களுக்கும் கடன் கிடைக்காமல் போகிறது.
தேவையற்ற கடன் என்பது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும். கடும் தண்டனைக்கு காரணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன்னிடம் போதிய வசதியிருந்தும் யார் மக்களிடம் பணம் கேட்கிறார்களோ அவர்கள் நரகத்தின் தீக்கனலைத் தவிர வேறொன்றையும் கேட்கவில்லை.”
நபித்தோழர்கள் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே, போதுமான வசதி என்றால் என்ன அளவு?” என்று கேட்டார்கள்.
அதற்கு அண்ணலார், “மதிய உணவும், இரவு உணவும் போதுமான அளவு இருப்பது” என்று பதிலளித்தார்கள். (அபூதாவூத்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன்னிடம் போதிய வசதியிருந்தும் யார் மக்களிடம் பணம் கேட்கிறார்களோ அவர்கள் மறுமை நாளில் தங்கள் முகங்களில் கீறல்களோடும், தழும்புகளோடும் வருவார்கள்.” (அஹமத்)
ஆக, அத்தியாவசியத் தேவை இல்லாமல் கடன் வாங்குவதை கடும் கண்டனத்திற்குரியதாக இஸ்லாம் பார்க்கிறது.
இந்த அடிப்படையில், கடன் வாங்குவதற்கு கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் உள்ளன:
1. கடனைத் திருப்பிக் கொடுப்பேன் என்ற திட உறுதி கொண்டிருக்க வேண்டும்.
2. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் தகுதியும், திறனும் அவரிடம் இருக்க வேண்டும்.
3. கடன் வாங்கும் நோக்கம் ஷரீஅத் அனுமதித்த காரியத்திற்காக இருக்க வேண்டும்.
தேவையிருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். அப்படி கடன் வாங்கி விட்டால் அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக திருப்பி செலுத்துவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஸ்டீஃபன் ஆர் கவே தனது “The 7 Habits of Highly Effective People” என்ற நூலில் வெற்றி பெற்ற மனிதர்களின் ஏழு குணாதிசயங்களைக் கூறுகிறார். அதில் அவர் கூறும் மூன்றாவது குணாதிசயம்தான் “Put First Things First”. அதாவது, முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்ய வேண்டும். இதுதான் வாழ்க்கை மேலாண்மை என்ற Life Management.
நாம் கடன் பட்டு விட்டால் அதனைத் திருப்பிக் கொடுப்பதுதான் நமது முதலும், முன்னுரிமையும் கொடுக்கும் விடயமாக மாற வேண்டும். அத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் குறித்து கற்றுத் தந்த துஆக்களை தொடர்ந்து ஓதி அல்லாஹ்விடம் கடனிலிருந்து மீள மன்றாடி வர வேண்டும்.
கடன் கொடுப்பதன் நன்மைகள்
கடன் வாங்குவதில் இவ்வளவு கடுமை காட்டும் இஸ்லாம், உண்மையான தேவையுடையோருக்கு கடன் கொடுப்பதற்கு ஊக்குவிக்கிறது. திருக்குர்ஆனின் மிக நீண்ட வசனம் கடன் கொடுக்கல்-வாங்கல் பற்றித்தான் அலசுகிறது. அந்த நீண்ட வசனத்தின் ஒரு பகுதிதான் இது:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ
“ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல்-வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.” (2: 282)
மேற்கண்ட வாசகத்துடன் தொடங்கும் இந்த நீண்ட வசனத்தில் கடன் கொடுக்கல்-வாங்கலில், அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரிய தொகையாக இருந்தாலும், அது பதிவு செய்யப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இந்தப் பணப் பரிமாற்றம் இரண்டு சாட்சிகளின் முன் நடத்தப்பட வேண்டும்.
தேவையுள்ள மனிதர்களுக்கு கடன் கொடுப்பது என்பது அதிகம் நன்மையைப் பெற்றுத் தரும் ஒரு செயல்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மிஃராஜ் பயணத்தின்போது நான் சுவனத்தின் வாசலில் ஒரு வாசகம் கண்டேன். அதாவது, “யார் தர்மம் கொடுக்கிறாரோ அவருக்கு 10 மடங்கு நன்மை வழங்கப்படும். யார் கடன் கொடுக்கிறாரோ அவருக்கு 18 மடங்கு நன்மை வழங்கப்படும்.”
நான் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “ஏன் கடன் கொடுப்பவருக்கு அதிக நன்மைகள் வழங்கப்படுகின்றன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “தர்மம் வாங்குபவர் ஏதாவது கொஞ்சம் கையில் வைத்திருப்பார். ஆனால் கடன் வாங்குபவரோ அவருக்கு ஒரு கடும் தேவை ஏற்படும்பொழுது மட்டுமே கடன் கேட்கிறார்” என்று கூறினார்.” (இப்னு மாஜா)
அதே சமயம், கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவரிடம் எதற்காக இந்தக் கடன் என்று விசாரிக்க வேண்டும். அது உண்மையிலேயே அவருக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே அவருக்கு கடனுதவி செய்ய வேண்டும்.
கடன் வாங்கும் நோக்கம் தேவையற்ற விடயத்திற்காகவோ, அல்லது சொகுசு வசதிக்காகவோ இருக்கும் என்றால் அவருக்கு கடன் கொடுக்காமல் இருப்பதோடு, அவர் மனதில் படும்படி அந்தக் கடனைத் தவிர்க்க உபதேசிக்கவும் வேண்டும்.
இப்படி அந்தச் சகோதரை கடன் வாங்காமல் ஆக்குவதுதான் அந்தச் சமயத்தில் அவருக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
“கர்ழே ஹஸனா” என்ற அழகிய கடன்
நம்மிடம் கடன் வாங்கியவர் உண்மையிலேயே அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுகிறார் என்றால், அது நமக்கு உண்மை என்று தெரிய வந்தால் நாம் அவருக்கு அந்தக் கடன் தொகையை தள்ளுபடி செய்தோ, அல்லது தரவேண்டிய தொகையைக் குறைத்தோ, அல்லது திருப்பித் தரவேண்டிய தேதியைத் தள்ளிப் போட்டோ சலுகைகள் வழங்கி உதவலாம்.
கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனையே அழகிய கடன் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.
மேலும் அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தால் அதை அல்லாஹ் இரட்டிப்பாக்குகிறான்.
مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ۚ
“அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான். மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.” (அல் குர்ஆன் 57:11)
اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ
“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும். (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.” (அல் குர்ஆன் 57:18)
உண்மையான தேவையுடையவர்களுக்கும், கடனை வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் அவர்கள் திருப்பித் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அழகிய கடன் கொடுத்து உதவுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை ஆக்கிரமிக்க மாட்டார் அல்லது எதிரியிடம் பிடித்துக் கொடுக்கவும் மாட்டார். யார் ஒருவர் தன் முஸ்லிம் சகோதரரின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கிறாரோ, அவருடைய தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து கொடுப்பான். யார் ஒருவர் தன் முஸ்லிம் சகோதரரின் கஷ்டத்தை நீக்குகிறாரோ, நானை மறுமையில் அல்லாஹ் அவரது கஷ்டத்தை நீக்கிக் கொடுப்பான்.” (அபூதாவூத்)
முடிவுரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் ஒருவர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்குகிறாரோ, அவருக்கு அந்தக் கடனை அல்லாஹ் திருப்பி அளிப்பான். யார் ஒருவர் அழித்து விட வேண்டும் (திருப்பிக் கொடுக்கவே கூடாது) என்ற எண்ணத்தில் கடன் வாங்குகிறாரோ, அவரை அல்லாஹ் அழித்து விடுவான்.” (புகாரீ)
கடன் குறித்து இவ்வளவு கடுமையான நிலைப்பாடை இஸ்லாம் எடுத்திருக்கிறது. எனவே முடிந்தவரை கடனிலிருந்து தவிர்ந்திருப்பதே நல்லது. நமது வருமானத்திற்கேற்ற செலவுகளைச் செய்வதே சாலச் சிறந்தது.
பேராசை கொள்வது, பிறரைக் கண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவது, தேவைகளை அதிகரித்துக் கொள்வது போன்றவையே கடன் வாங்கும் சூழ்நிலைக்கு மக்களை அதிகம் தள்ளுகின்றன.
இஸ்லாம் கூறிய எளிய வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது தேவைகளைக் குறைத்து உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.
நம் மனைவி, மக்களுக்கும் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உபதேசம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் மீறி நாம் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.
அப்பொழுது கடன் வாங்குபவரும், கடன் கொடுப்பவரும் கீழ்க்கண்ட இஸ்லாம் கூறிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. கடனை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்ய வேண்டும். (கடன் பத்திரம், எழுத்து, மின்னஞ்சல், வாட்ஸ் அப், ….)
2. இரண்டு சாட்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
3. திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையான உள்ளத்துடனும், திட உறுதியுடனும் கடன் வாங்க வேண்டும்.
4. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய முறையான திட்டம் (Plan) நம்மிடம் இருக்க வேண்டும்.
5. கடனைத் திருப்பிக் கொடுக்க முடிகிற உண்மையான தேதியைக் கூற வேண்டும்.
6. கடனை அடைப்பதையே நமது முதலும், முன்னுரிமையுமான செயலாக மாற்ற வேண்டும். (First Things First)
7. குறிப்பிட்ட தேதியில் எப்பாடு பட்டாவது கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும்.
அல்லாஹ் நம்மையெல்லாம் கடன் சுமையிலிருந்தும், நரகத்திலிருந்தும் பாதுகாத்து, சுவனத்தை அருள் புரிவானாக!
No comments:
Post a Comment