Wednesday, 19 October 2016

சோதனைகள் பலவிதம்!


சிறிதளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமை காப்போருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. (சூரா அல் பகரா 2:155)

அல்லாஹ் மனிதனின் வாழ்க்கை நியதியை இந்த வசனத்தில் எடுத்துரைக்கிறான். மனிதனை சோதனைகள் சூழவே இந்த உலகுக்கு அனுப்புகிறான். அவனை சோதனைகளுக்குட்படுத்தி பரீட்சித்துப் பார்க்கிறான்.

இன்னொரு வசனத்தில், “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும், உங்கள் (செயல்பாடுகள் குறித்த) செய்திகளைப் பரிசீலிக்கும் வரையிலும் உங்களை நாம் சோதிப்போம்” (47:31) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சோதனை என்பது பயம், பசி போன்ற துன்பங்களாலும் ஏற்படலாம். மகிழ்ச்சியாலும் ஏற்படலாம். இன்பத்திலும் சோதனை உண்டு. துன்பத்திலும் சோதனை உண்டு.

சோதனை என்பதற்கு நம்மில் பலரிடம் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. துன்பம் வந்தால் மட்டும்தான் சோதனை என்று எண்ணுகிறோம். உதாரணத்திற்கு வறுமையை எடுத்துக் கொள்ளலாம். வறுமை நீங்கி வளம் வந்துவிட்டால் எனக்குள்ள சோதனைகள் எல்லாம் நீங்கிவிட்டன என்று மனிதன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

அப்படியல்ல. அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகின்றது என்று அதற்கு அர்த்தம். அதாவது, எடுத்து சோதித்த இறைவன் இப்பொழுது கொடுத்து சோதிக்கிறான்.

ஒரு வகையில் சொல்லப்போனால் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் தோற்றுப் போகிறான். துன்பத்தில் உழலும்போது அல்லாஹ், அல்லாஹ் என்று கையேந்துவான். பொறுமை காப்பான். அப்படிப் பொறுமையுடையோருக்கு நல்ல செய்தியை - நன்மையை அல்லாஹ் அளிக்கிறான்.

ஆனால் இன்பத்தில் திளைக்கும்பொழுது அல்லாஹ் உட்பட எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (சூரா யூனுஸ் 10:12)

பணம், பதவி, புகழ் என்று வந்துவிட்டால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற மனநிலைக்கு மனிதன் மாறுகிறான். இவையும் சோதனைதான் என்பதை மறந்து விடுகிறான். ஆசாபாசங்களிலும், கேளிக்கை கூத்துகளிலும் ஈடுபடுகிறான். தன் பொருளாதாரச் செழிப்பைக் காட்ட ஆடம்பரமாக செலவழிக்கிறான். டாம்பீகமாக திருமணத்தை நடத்துகிறான். கோடிகள் செலவழித்து வீடுகளைக் கட்டுகிறான்.

ஏழைகளுக்கு உதவுவதில்லை. வறியவர்களுக்கு வாரி வழங்கவில்லையென்றாலும் கோரியதையாவது கொடுக்கலாம். அதுவும் செய்வதில்லை. பணம் சேரச் சேர அவன் உள்ளம் இறுகுகிறது. இறுமாப்பு கொள்கிறது. நன்மைகள் செய்வதில் நாட்டம் வருவதில்லை.

அதனால்தான் ஒரு வகையில் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் ஏமாந்து போகின்றான் என்று மேலே குறிப்பிட்டோம்.

வறுமையில் உழலும்பொழுது எப்படி பொறுமை காட்டுகிறானோ அதேபோன்று வசந்தம் வரும்பொழுது தியாகம் காட்டவேண்டும். அதனைத்தான் “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும்…” என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன் செல்வங்கள் தனக்குரியதல்ல, அவை இறைவன் தனக்களித்த சோதனைப் பொருட்கள் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்தச் செல்வங்களிலிருந்து அவனது தேவைகளை நடுநிலையாக நிறைவேற்றிவிட்டு, மீதியை தானதர்மங்களில் அவன் வாரி வழங்கிடவேண்டும். ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். வறுமையில் கல்வி கற்க முடியாத சிறார்களைத் தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஏழைக் குமர்களைக் கரை சேர்க்க வேண்டும். பசி, பட்டினியை சமுதாயத்திலிருந்து போக்குவதற்கு முயற்சிகள் புரிய வேண்டும்.

இவற்றையெல்லாம் மனிதன் செய்கிறானா என்று அல்லாஹ் சோதிக்கிறான். தன்னைப் பிரதிநிதியாக்கி அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு உதவ நாடுகிறான், அதற்காகத்தான் தனக்கு பொருள்களை வாரி வழங்குகிறான் என்று மனிதன் உணர வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (சூரா ஹூது 11:10)

புதிய விடியல்  ஜனவரி 2016 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment