Sunday, 23 October 2016

ஊடகப் புரட்சியாய் உதித்த விடியல்!


1996 பிப்ரவரி மாதம். ஏழு கிணறிலுள்ள பிடாரியம்மன் கோயில் தெருவில் ஒரு கட்டடத்தின் மாடியில் சிறிய வீடு. அங்குதான் விடியலின் பயணமும் துவங்கியது. அதுதான் அலுவலகம். அதுதான் தங்குமிடம்.

சொந்தமாக கணிணி இல்லை. இராயபுரத்திலுள்ள ஒரு DTP மையத்தில் கட்டுரையை எடுத்துக்கொண்டு காலையில் சென்றால் மாலையில் திரும்பும்பொழுது ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ டைப் செய்து தருவார்கள். அந்த DTP மையத்தில் அந்த அளவுக்கு பரபரப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் காத்திருக்கவேண்டும். இடையில் அவ்வப்பொழுது கிடைக்கும் இடைவெளியில் விடியலுக்கான கட்டுரைகள் தட்டச்சு செய்யப்படும்.

இப்படி மார்ச்சில் தொடங்கிய பயணம்… முதல் இதழின் பக்கங்கள் மெல்ல மெல்ல தட்டச்சு செய்யப்பட்டு, படங்களுக்கு இடைவெளி விட்டு பக்க வடிவமைப்பு (லே அவுட் செட்டிங்) செய்யப்பட்டு (அப்பொழுதெல்லாம் ஸ்கேன் செய்து படங்களை ஏற்றும் வசதியை நாம் கொண்டிருக்கவில்லை) ஒரு வழியாக 48 பக்கங்கள் தயாரானது ஏப்ரல் இறுதியில். பக்க வடிவமைப்பு எல்லாம் பக்காவாக வந்திருந்தது. தேவையான படங்கள் ஒட்டப்பட்டு ஃபிலிம் எடுக்கப்பட்டு அந்த DTP மையத்திலேயே இருந்த அச்சகத்தில் சிறிய ஆஃப் செட் இயந்திரத்தில் ஓட்டப்பட்டது.

2000 பிரதிகள் அச்சிடப்பட்டன. “யாரைத் தாக்க இந்த ஆயுதங்கள்?” - இதுதான் முதல் விடியலின் முதல் அட்டைப்படக் கட்டுரையின் தலைப்பு. அன்று புரூலியாவில் மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஆயுதங்கள் வந்து விழுந்தன. ‘புரூலியாவில் ஆயுத மழை’ என்று அதனை அழைத்தனர்.

அன்றைய தேதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி அது. அதன் ஆழ அகலத்தை கட்டுரை மிக அழகாக அலசியிருந்தது. இதர பகுதிகளும் மிக அழகாக வந்திருந்தன.

இப்படித்தான் 1996 மே மாதம் முதல் விடியல் முகிழ்ந்தது. முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அத்தியாயம் ஆரம்பமானது.

புரட்சி அத்தியாயம் என்று குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அட்டைப்படம் முதல் உள்ளடக்கம் வரை விடியல் செய்த புரட்சிகள் ஏராளம்.
விடியல் கையெழுத்துப் பிரதி

அதுவரை விடியல் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருந்தன. தட்டச்சு செய்து, சைக்ளோஸ்டைல் பிரதிகள் எடுத்து ஜும்ஆக்களில் விற்போம். அவற்றில் இடம் பெற்ற செய்திகளின் கனத்தைப் பார்த்து அதற்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருந்தது.

அந்த வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜும்ஆ விற்பனைக்கென்று முதல் விடியல் மாத இதழின் சில நூறு பிரதிகளை சில நகரங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

ஏற்கனவே சேர்த்திருந்த சில நூறு சந்தாக்களின் முகவரிகள் கையில் இருந்தன. ஒவ்வொரு இதழுக்கும் பிரவுன் நிற தாள் ஒட்டி, முகவரியைக் கையால் எழுதி, மறுநாள் காலையில் தபால் அலுவலகம் சென்று (தபால் பதிவு எண் பெற்றிராததால்) சாதாரண தபால் தலைகள் ஒட்டி அனுப்பி வைத்தோம். இப்படித்தான் முதல் விடியல் சந்தாதாரர்களைச் சந்தித்தது.

ஆனால் வந்த வரவேற்பு… அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மகத்தான வரவேற்பு. முதல் விடியலின் உள்ளடக்கமும், அட்டைப்படமும், அட்டைப்படக் கட்டுரையும், தலையங்கமும், இதர கட்டுரைகளும், பக்க வடிவமைப்பும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்ற இடங்களிலெல்லாம் அது சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. மேலும் பிரதிகள் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கொடுப்பதற்கு நம்மிடம் பிரதிகள் இல்லை.

முதல் இதழ் வெளிவந்த கையோடு நாம் பெரியமேடு பேரக்ஸ் சாலையில் அலுவலகம் எடுத்து மாறினோம். ஆனால் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு, கணிணி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் உள்ளூர் தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டும் என்றாலும் தெருக் கோடியிலுள்ள எஸ்டிடி பூத்தில் காத்திருக்க வேண்டும்.

முஸ்லிம் ஊடகப் புரட்சி

அன்றைய நாளில் முஸ்லிம் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் பூக்கள், பழங்கள், மஸ்ஜித்கள் போன்றவையே மொட்டையாக இடம் பெற்றிருக்கும். ஒரு தலைப்பு கூட இருக்காது. ஆனால் விடியல் அன்றைய ஆங்கில இதழ்களின் பாணியில் அட்டைப்படங்களைக் கொண்டு வந்தது.

ஃப்ரண்ட்லைன், அவுட்லுக் போன்ற முன்னணி ஆங்கில இதழ்களைப் போன்று ஆழமான அட்டைப்படக் கட்டுரைகளைக் கொண்டு வந்தது. விடியலின் வருகைக்குப் பிறகுதான் பிற முஸ்லிம் இதழ்கள் இதனைக் கவனத்தில் கொண்டன. அட்டைப்படங்களிலும், உள்ளடக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

தலையங்கம்

ஒரு பத்திரிகையின் முத்தாய்ப்பாக அமைவது அதில் இடம் பெறும் தலையங்கம்தான். இதிலும் விடியல் முத்திரை பதித்தது.

இஸ்லாத்தைத் தீர்வாகச் சொல்லிடும் தலையங்கங்களை விடியல் தீட்ட ஆரம்பித்ததும் சமுதாயத்தில் ஒரு புதிய பார்வை பிறந்தது. அழகிய சொற்றொடர்களை அமைத்து, அன்றைய முக்கிய நிகழ்வை மையப்படுத்தி, அதற்கு இஸ்லாம் இயம்பும் தீர்வை ஆணித்தரமாக கூறியது தலையங்கம். இதுவும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“இன்றைய பிரச்னைகளும் இஸ்லாம் வழங்கிடும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களில் இந்தத் தலையங்கங்களின் தொகுப்பு இலக்கியச்சோலை மூலம் நூலாகவும் வெளிவந்துள்ளது.

வளர்ச்சி வேகம்

விடியல் வளர்ந்து வந்த சமயத்தில் இடையில் சில பல நெருக்கடிகளால் நிறுத்தப்பட்டாலும், மீண்டும் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு கிடைத்தது. முறைப்படி தபால் துறையில் விடியல் பதிவு செய்யப்பட்டு தபால் பதிவு எண் கிடைத்தது. இப்படி ஒரு பத்திரிகைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அதிகரித்தன.

2000 பிரதிகளில் ஆரம்பித்த விடியல் பயணம் 3000, 5000, 8000, 10000 பிரதிகள் எனக் காலத்தின் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வளர ஆரம்பித்தது. அத்தோடு நல்ல உறுதியான வாசகர் வட்டம் ஒன்று உருவானது.
கணிணி, நகல் இயந்திரம், ஸ்கேன்னர் என்று DTP வசதிகளும் விடியல் அலுவலகத்தில் வந்தன.

பேர் சொல்லிய பேஜ் லேஅவுட்

விடியலின் உள்பக்க வடிவமைப்புகள் (பேஜ் லேஅவுட்கள்) பரவலாக பேசப்பட்டன. கச்சிதமான தலைப்புகளுடன், ஒவ்வொரு பக்கத்தையும் படங்களைக் கொண்டும், முக்கிய சொற்றொடர்களைக் கொண்டும் அலங்கரித்தது அனைவரையும் கவர்ந்தது.

ஒருமுறை தத்துவக் கவிஞர் இ. பதுருதீன் அவர்களை விடியலை அச்சிடும் ஆசியா கிராஃபிக்ஸ் அச்சகத்தில் சந்தித்தபொழுது விடியல் உள்ளடக்கம் குறித்து அவர் சிலாகித்துக் கூறினார். “எதைச் சொல்வது என்பதை விட எப்படிச் சொல்வது என்பது மிக முக்கியம். அதனை விடியல் அழகுறச் செய்கிறது. அதன் உள்பக்க வடிவமைப்புகள் மிக அழகாகவும், கருத்தாகவும் அமைந்திருக்கின்றன” என்று அவர் கூறினார்.

20 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அவர் அன்று விடியலைப் பாராட்டிக் கூறியது இன்றும் என் நினைவுகளில் நின்று நிழலாடுகின்றது.

பாபரி மஸ்ஜித் & கிலாஃபத் சிறப்பிதழ்

1999ம் வருடம் டிசம்பர் இதழை பாபரி மஸ்ஜித் சிறப்பிதழாக கொண்டு வந்தோம். முதன் முதலாக நால்வண்ணத்தில் அட்டைப்படம் வந்ததும் அந்த இதழில்தான். அதுவரை இரு வண்ணத்தில்தான் விடியலின் அட்டைப் படம் வந்துகொண்டிருந்தது.

இந்தச் சிறப்பிதழின் அட்டைப்படத்தில் இடிக்கப்படாத முழுமையான பாபரி மஸ்ஜித் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக நால்வண்ணத்தில் நின்றிருந்தது. பாபரி மஸ்ஜித் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக அந்தச் சிறப்பிதழ் இன்றும் திகழ்ந்து வருகின்றது. அந்தச் சிறப்பிதழின் மகுடமாக இடம் பெற்றது அயோத்தியா நேரடி களச் செய்தி.

அதுவரை தென்னிந்தியாவிலிருந்து யாரும் அயோத்தியா சென்று நேரடியாக களச் செய்தி எடுத்ததில்லை. அன்றைய சூழலில் அது சாத்தியமான செயலும் அல்ல. இருந்தாலும் நமது செய்தியாளர்கள் பல தடைகளைத் தாண்டி துணிச்சலுடன் அயோத்தியா சென்றார்கள். பல சிரமங்களுக்கிடையில் நேரடி களச் செய்தியைப் பதிவாக்கினர். அது அச்சிறப்பிதழில் வெளிவந்தவுடன் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

அதேபோன்று 2000ம் வருடம் அக்டோபர் மாத இதழை கிலாஃபத் சிறப்பிதழாகக் கொண்டு வந்தோம். அதுவும் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

உள்பக்கங்களில் நால்வண்ணப் புரட்சி

விடியல் சர்க்குலேஷன் 20,000 பிரதிகளை எட்டிய பொழுது இந்தியா டுடே அச்சகத்தை அணுகினோம். இந்தியா டுடே அச்சகத்திலுள்ள வெப் ஆஃப்செட்டைப் பொறுத்தவரை உள்பக்கங்களும் நால்வண்ணத்தில் அச்சிட வேண்டும். குறைந்தது 25,000 பிரதிகள் அச்சிட வேண்டும்.

அல்லாஹ் மேல் தவக்குல் வைத்து துணிந்து இறங்கினோம். இந்தியா டுடே அலுவலகத்தில் 25,000 பிரதிகள் அச்சிட்டோம். உள்பக்கங்கள் அனைத்தும் நால்வண்ணத்தில் பளபள தாள்களில் அச்சிடப்பட்டன. இதுவும் முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஏற்பட்ட அடுத்த புரட்சி.

அதுவரை முஸ்லிம் இதழ்கள் உள்பக்கங்களில் நால்வண்ணம் கொண்டு வந்ததில்லை. ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாக நம்மாலும் கொண்டு வர முடியும் என்று முஸ்லிம் ஊடக உலகுக்கு வழி காட்டியது விடியல். அன்றிலிருந்து முஸ்லிம் மாத இதழ்களில் அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகையாகவும் விடியல் மாறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

நடுப்பக்கக் கட்டுரை (இம்பாக்ட் பக்கம்)

இம்பாக்ட் இண்டர்நேஷனல் என்றொரு ஆங்கிலப் பத்திரிகை லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதனைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே First Things First என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.

இன்றைய பிரச்சினைகளை அலசி, அதற்கு இஸ்லாமியத் தீர்வை மிக அழகாகச் சொல்லியிருப்பார்கள் அந்தப் பக்கத்தில்.

அதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று அவா கொண்டோம். அதனால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை விடியலில் நடுப்பக்கக் கட்டுரையாகக் கொண்டு வந்தோம். அந்தப் பக்கத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைத்தோம்.

வாசகர்களிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாசகர்கள் இதனை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்று விழைந்தனர். ஆதலால் “தேசியவாதமும் இஸ்லாமும்” என்ற பெயரில் முதல் பாகமும், “இம்பாக்ட் பக்கம்” என்ற பெயரில் இரண்டாம் பாகமும் இலக்கியச்சோலை வெளியீடுகளாக வெளிவந்தன.

எல்லா இஸ்லாமியப் பத்திரிகைகளுக்கும் ஏற்படும் நெருக்கடி இம்பாக்ட் இண்டர்நேஷனல் பத்திரிகையையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் நிதி நெருக்கடி! நிதி நெருக்கடியினால் அந்தப் பத்திரிகையை நிறுத்தி விட்டனர். அத்தோடு நாமும் நடுப்பக்கக் கட்டுரையை நிறுத்தி விட்டோம்.

இப்படிப் பயணித்த விடியலின் வளர்ச்சியில் எண்ணற்ற சகோதரர்களின் தியாகங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களின் உழைப்பு, நேரம், முயற்சிகள் அனைத்தும் விடியலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றன.

புதிய விடியல்

தமிழகத்தில் விதையூன்றி, வேரிட்டு, கிளை பரப்பி வளர்ந்த விடியல் இன்று புதிய விடியலாக பரிணமித்திருக்கிறது. புதிய விடியல் புதிய ரத்தத்துடன் இன்னும் வீரியமாக தன் பயணத்தைத் தொடர்கின்றது.

வாசகர்களின் நீண்ட கால கோரிக்கையும் கனவும் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் முதல் நிறைவேற இருக்கிறது. ஆம்! புதிய விடியல் மாதமிரு இதழாக அக்டோபர் 2016 முதல் பயணிக்க இருக்கிறது.

இந்த வளர்ச்சியின் தூண்களாக அன்றும் இன்றும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்காக வாசகர்களின் வழித்துணையுடனும், நல்லாதரவுடனும் புதிய விடியல் இன்னும் பல புரட்சிகளைச் செய்யும் இன்ஷா அல்லாஹ்!

அதற்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பானாக!

புதிய விடியல்  செப்டம்பர் 2016 (21வது வருட சிறப்பிதழ்)

Saturday, 22 October 2016

சமூக மாற்றத்தில் பெண்கள்

அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் அருட்கொடைகளை அள்ளி வழங்கியிருக்கிறான். ஆனால் எல்லோருக்கும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அமையும் என்று சொல்ல முடியாது.

நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை வளமாகப் பயன்படுத்தி தனக்கும், சமூகத்திற்கும் அதன் பலன்களை அடையச் செய்ய வேண்டும். அந்த வகையில் சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது.

திருக்குர்ஆன் நமது கூட்டுப் பொறுப்பை இவ்வாறு கூறுகிறது:

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆல இம்ரான் 3:104)

இந்த வசனத்தில் மூன்று விடயங்கள் கூறப்படுகின்றன:

1. நன்மையின் பக்கம் அழைப்பது, தீமையை விட்டும் தடுப்பது என்ற பணி.
2. கூட்டாக செய்ய வேண்டிய பொறுப்பு.
3. இதன் மூலம் வெற்றி பெறுதல்.

இந்த வசனம் ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் அனைவரும் இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டுத்தான் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். எல்லா தொழுகைகளிலும் நாம் கூறும் ஒரு வசனம்தான் இது:

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அன்ஃபால் 8:162)

இதனை நபிமார்களும், அவர்களின் மனைவிமார்களும், ஸஹாபிகளும், ஸஹாபி பெண்மணிகளும் நிறைவேற்றி முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வோடுள்ள உறவு

தொழுகை, திக்ர், நோன்பு, ஸதக்கா போன்ற அமல்களின் மூலமாக அல்லாஹ்வோடுள்ள உறவைப் பலப்படுத்தலாம். இவற்றில் சுன்னத்தான அமல்கள் நிறைவேற்றுவதை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவற்றை பகிரங்கப்படுத்தும்பொழுது பெருமை வர வாய்ப்புண்டு.

நம்மிடம் தவறுகள் நிகழும்பொழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும். அத்தோடு தான தர்மங்கள் செய்தால் மனம் தூய்மைப்படுத்தப்படும். தீய சிந்தனைகளிலிருந்து நம் மனம் விடுபடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். இறைநினைவுக்குரிய உதாரணம் இதுதான்: ஒரு மனிதரை அவருடைய எதிரி துரத்துகிறான். அந்த மனிதர் ஓடிச் சென்று ஒரு பாதுகாப்பான கோட்டைக்குள் அபயம் தேடினார். இதேபோன்று அல்லாஹ்வின் நினைவில் அபயம் தேடாதவன் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேட முடியாது.”

அல்லாஹ்வின் நினைவை வளர்ப்பது எப்படி?

அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அறிவும், அவனது வல்லமைகள் குறித்த தெளிவான விளக்கமும் எந்த அளவு நம்மிடம் உள்ளதோ அந்த அளவு ஷைத்தானின் தீங்குகளிலிருந்தும், தீய சிந்தனைகளின் ஆதிக்கங்களிலிருந்தும் நாம் பாதுகாப்பு பெற முடியும்.

அல்லாஹ்வின் வல்லமைகள் குறித்து அறிவதற்கு அவனது  திருநாமங்கள் எனப்படும் அஸ்மாவுல் ஹுஸ்னா குறித்து அறிந்திருக்க வேண்டும்.

குணங்களும், இயல்புகளும்

நாம் மாற வேண்டியுள்ளது. நம்மை நாமே மாற்றிக் கொள்ளாமல் மற்றவை எல்லாம் தன்னால் மாறி விடும் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும்.

اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (13:11)

மாற்றம் நம்முடைய இயல்பில், ஆளுமையில், அறிவில் உருவாக வேண்டும். நம்மிடமுள்ள நன்மைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுத்து வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி செய்யும்பொழுது நாம் உன்னத ஆளுமையின் சொந்தக்காரர்களாக மாறுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் குணத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் என்னுடைய நேசத்துக்குரியவர்.”
அப்போது மட்டுமே மற்றவர்களில் இஸ்லாமிய ஆளுமையை உருவாக்கி எடுப்பதற்கு நமக்கு சாத்தியமாகும்.

வெட்கம்

வெட்கம் ஈமானின் ஒரு கிளை. வெட்கம் ஓர் உன்னத பண்பாகும். ஒரு பெண்ணிடம் இந்தப் பண்பு உருவாகும்பொழுது அவள் தவறிழைக்கும் வாய்ப்புகள் உண்டாகாது. தவறானவற்றைப் பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. அதன் காரணமாக அவளது ஆளுமையும், கற்பும் பாதுகாக்கப்படும்.

பெண்களைப் பொறுத்தவரையில் இந்தப் பண்பு அவர்களுக்கு அலங்காரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பண்பு அதிகமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா அணிந்த கன்னிப் பெண்களை விட வெட்கம் உடையவர்களாக இருந்தார்கள். (புகாரீ)

குடும்ப ஒத்துழைப்பு

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். (அத் தஹ்ரீம் 66:6)

சமூக மாற்றத்தின் முன்மாதிரி குடும்பத்திலிருந்துதான் துவங்க வேண்டும். குடும்பங்களின் கூட்டணியே சமூகம். ஒவ்வொரு குடும்பமும் இஸ்லாமியமயமாகும்பொழுது அது சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.

கணவன்-மனைவி உறவு

குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையிலான நம்பிக்கை மிக முக்கியமானது. ஒரு பெண் தன் கணவனின் ஒவ்வொரு விடயத்தையும் கவனிப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்குரிய மனைவி ஆக வேண்டும். இதில் நமக்கு அன்னை ஹாஜரா (அலை) அவர்களும், அன்னை கதீஜா (ரலி) அவர்களும் முன்மாதிரிகளாவர்.

هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் பகரா 2:187)

நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இருக்கும்பொழுதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக திகழும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உலகம் அனத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நற்குணமுடைய பெண். கணவன் அவளைப் பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். (இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்)”. (ஹாகிம்)

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்." (அந் நூர் 24:31)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌

"நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)." (அன்னிசா 4:34)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: "பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், "கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறு செய்யமாட்டாள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைப் பார்த்து கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஸுனனுத் திர்மிதீ)
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் குளித்து சுத்தமாகி உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது ஸலாம் சொல்லி, நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துகளுடன் அவரை வரவேற்று உபசரியுங்கள்.

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்.

மகிழ்ச்சிகரமான செய்தியை முதலில் தெரிவியுங்கள். கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள். (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள். கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும், குறிப்பாக மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள்.

தாம்பத்தியத்திற்காக கணவன் அழைக்கும்பொழுது மறுக்காமல் செல்லுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது." (புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், தாரமி)

இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியைப் பற்றியுமே பேசிக் கொண்டிருக்காமல் நல்லறங்களைப் பற்றி, நல்ல அமல்களைப் பற்றி பேசுங்கள். ஏனெனில்,

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏ 

பொருட்செல்வமும் பிள்ளைச் செல்வமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்று நன்றி செலுத்துதல் வேண்டும். கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்."

"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்‘ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானீ, அஹ்மத்)

"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, பைஹகீ)

"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

சமூக செயல்பாடுகளில் நம் குழந்தைகள்

நம்முடைய குழந்தைகள் நமக்கு அமானிதங்கள். அவர்களுக்கு மிகச் சிறந்த கல்வி அளித்து, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை அல்லாஹ்வின் நீதிமான்களான அடியார்களாக மாற்றுவது நம்முடைய பொறுப்பாகும்.

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏ 

இம்ரானின் மனைவி, “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார். (3:35)

நம் பிள்ளைகளின் செயல்பாடுகளும், கல்வியும் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும், அந்த அடிப்படையிலேயே அவர்களைப் பழக்கப்படுத்தி எடுக்க வேண்டும் என்பது ஒரு தாயின் மேற்பார்வையிலேயே நடக்க வேண்டும் என்பதை மேலே கூறப்பட்டுள்ள வசனத்தின் மூலமாக நாம் அறியலாம்.

நம்முடைய பிள்ளைகளிடம் சமூக செயல்பாடுகளில், சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஓர் உன்னத உதாரணம்தான் சமீபத்தில் மரணமடைந்த பாகிஸ்தானைச் சார்ந்த அப்துல் ஸத்தார் ஈதி.

வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்பராக இருந்த ஈதிக்கு மதிய உணவு கொடுத்து விடும்பொழுது அவருடைய தாய் இரண்டு பேருக்கான உணவைக் கொடுத்து விடுவார்களாம். தான் உண்ணும்பொழுது பசியில் வாடும் ஓர் ஏழைக்கும் அந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தாயின் நோக்கம்.

தனது சிறு வயதில் அந்தத் தாய் அளித்த இந்தத் தூண்டுதல் அப்துல் ஸத்தாரை சமூக சேவையில் ஒரு பெரிய புரட்சியே செய்ய காரணமாக அமைந்தது.

அவர் தனது ஈதி ஃபவுண்டேஷன் மூலமாக 20,000 ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்தார். 50,000 அனாதைகளை அரவணைத்தார். 40,000 நர்சுகளை நாடு முழுவதும் நியமித்தார். 380 ஆரோக்கிய மையங்களை நிறுவினார். 1500 ஆம்புலன்ஸ் வண்டிகளை மக்களுக்கு சேவகம் புரிய அர்ப்பணித்தார்.

இந்த ஃபவுண்டேஷனின் சேவைகள் பாகிஸ்தானில் மட்டும் குறுகி நிற்கவில்லை. மாறாக, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்கள் வரை அது பரந்து விரிந்தது.

இது ஒரு தாயின் தூண்டுதலின் பலனாகும். இதுபோன்று எல்லா தாய்மார்களும் செய்தால்…?

நம்முடைய குழந்தைகளை இந்த முறையில் பயிற்றுவித்து எடுத்தால் உலகத்தை நாமும் புரட்டிப் போடலாம்.

Wednesday, 19 October 2016

சோதனைகள் பலவிதம்!


சிறிதளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமை காப்போருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. (சூரா அல் பகரா 2:155)

அல்லாஹ் மனிதனின் வாழ்க்கை நியதியை இந்த வசனத்தில் எடுத்துரைக்கிறான். மனிதனை சோதனைகள் சூழவே இந்த உலகுக்கு அனுப்புகிறான். அவனை சோதனைகளுக்குட்படுத்தி பரீட்சித்துப் பார்க்கிறான்.

இன்னொரு வசனத்தில், “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும், உங்கள் (செயல்பாடுகள் குறித்த) செய்திகளைப் பரிசீலிக்கும் வரையிலும் உங்களை நாம் சோதிப்போம்” (47:31) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சோதனை என்பது பயம், பசி போன்ற துன்பங்களாலும் ஏற்படலாம். மகிழ்ச்சியாலும் ஏற்படலாம். இன்பத்திலும் சோதனை உண்டு. துன்பத்திலும் சோதனை உண்டு.

சோதனை என்பதற்கு நம்மில் பலரிடம் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. துன்பம் வந்தால் மட்டும்தான் சோதனை என்று எண்ணுகிறோம். உதாரணத்திற்கு வறுமையை எடுத்துக் கொள்ளலாம். வறுமை நீங்கி வளம் வந்துவிட்டால் எனக்குள்ள சோதனைகள் எல்லாம் நீங்கிவிட்டன என்று மனிதன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

அப்படியல்ல. அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகின்றது என்று அதற்கு அர்த்தம். அதாவது, எடுத்து சோதித்த இறைவன் இப்பொழுது கொடுத்து சோதிக்கிறான்.

ஒரு வகையில் சொல்லப்போனால் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் தோற்றுப் போகிறான். துன்பத்தில் உழலும்போது அல்லாஹ், அல்லாஹ் என்று கையேந்துவான். பொறுமை காப்பான். அப்படிப் பொறுமையுடையோருக்கு நல்ல செய்தியை - நன்மையை அல்லாஹ் அளிக்கிறான்.

ஆனால் இன்பத்தில் திளைக்கும்பொழுது அல்லாஹ் உட்பட எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (சூரா யூனுஸ் 10:12)

பணம், பதவி, புகழ் என்று வந்துவிட்டால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற மனநிலைக்கு மனிதன் மாறுகிறான். இவையும் சோதனைதான் என்பதை மறந்து விடுகிறான். ஆசாபாசங்களிலும், கேளிக்கை கூத்துகளிலும் ஈடுபடுகிறான். தன் பொருளாதாரச் செழிப்பைக் காட்ட ஆடம்பரமாக செலவழிக்கிறான். டாம்பீகமாக திருமணத்தை நடத்துகிறான். கோடிகள் செலவழித்து வீடுகளைக் கட்டுகிறான்.

ஏழைகளுக்கு உதவுவதில்லை. வறியவர்களுக்கு வாரி வழங்கவில்லையென்றாலும் கோரியதையாவது கொடுக்கலாம். அதுவும் செய்வதில்லை. பணம் சேரச் சேர அவன் உள்ளம் இறுகுகிறது. இறுமாப்பு கொள்கிறது. நன்மைகள் செய்வதில் நாட்டம் வருவதில்லை.

அதனால்தான் ஒரு வகையில் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் ஏமாந்து போகின்றான் என்று மேலே குறிப்பிட்டோம்.

வறுமையில் உழலும்பொழுது எப்படி பொறுமை காட்டுகிறானோ அதேபோன்று வசந்தம் வரும்பொழுது தியாகம் காட்டவேண்டும். அதனைத்தான் “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும்…” என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன் செல்வங்கள் தனக்குரியதல்ல, அவை இறைவன் தனக்களித்த சோதனைப் பொருட்கள் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்தச் செல்வங்களிலிருந்து அவனது தேவைகளை நடுநிலையாக நிறைவேற்றிவிட்டு, மீதியை தானதர்மங்களில் அவன் வாரி வழங்கிடவேண்டும். ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். வறுமையில் கல்வி கற்க முடியாத சிறார்களைத் தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஏழைக் குமர்களைக் கரை சேர்க்க வேண்டும். பசி, பட்டினியை சமுதாயத்திலிருந்து போக்குவதற்கு முயற்சிகள் புரிய வேண்டும்.

இவற்றையெல்லாம் மனிதன் செய்கிறானா என்று அல்லாஹ் சோதிக்கிறான். தன்னைப் பிரதிநிதியாக்கி அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு உதவ நாடுகிறான், அதற்காகத்தான் தனக்கு பொருள்களை வாரி வழங்குகிறான் என்று மனிதன் உணர வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (சூரா ஹூது 11:10)

புதிய விடியல்  ஜனவரி 2016 (மனதோடு மனதாய்...)

மனிதனின் பரிதாப நிலை!


புஸ்ர் பின் ஜஹ்ஹாஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தமது உள்ளங்கையில் உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். பிறகு அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

“ஆதமின் மகனே! (மனிதனே!) என்னை உன்னால் எப்படி தோற்கடிக்க முடியும்? இதை (உமிழ்நீரை)ப் போன்ற ஒன்றிலிருந்தே உன்னைப் படைத்துள்ளேன். இறுதியாக உன்னைச் சீராக்கிச் செம்மைப்படுத்தினேன். ஆனால் நீயோ இரண்டு மேலாடைகளை அணிந்துகொண்டு, சப்தம் வரும் அளவுக்கு பூமியை மிதித்து (மிடுக்கோடு) நடந்தாய். செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் நீ தானதர்மம் செய்வேன் என்கிறாய். அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?”

இவ்வாறு மனிதனின் நிலையை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஓர் உதாரணத்தைக் காட்டி அற்புதமாக விளக்கினார்கள்.

மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை தங்கள் உமிழ்நீரை உமிழ்ந்து உதாரணம் காட்டினார்கள். மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டு, பின்னர் பிறர் உதவியுடன் தத்தித் தத்தி வளர்கிறான். சொந்தக் காலில் நின்று, சுயபுத்தி வந்தவுடன் செருக்காகி விடுகிறான். தன்னை விட்டால் ஆளில்லை என்ற இறுமாப்பு அவனிடம் வந்து விடுகிறது. தனது வருமானமெல்லாம் தன் திறமையால் தனக்குக் கிடைத்தது என்று பெருமை கொள்கிறான்.

செருக்குடனும், செல்வச் செழிப்புடனும் பூமியில் மிடுக்காக நடக்கிறான். இதனைத்தான் “சப்தம் வரும் அளவுக்கு மனிதன் பூமியை மிதித்து மிடுக்கோடு நடந்தான்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூளினார்கள்.

பணம் பணம் என்று மனிதன் அலைகிறான். செல்வத்தை சேர்த்து சேர்த்து பூட்டி வைக்கிறான். ஆடம்பரமாக செலவழிக்கிறான். ஆனால் தானதர்மங்களில் ஈடுபடுவதில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

இதனைத்தான் “செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டான் மனிதன்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவழியை விட்டும் தவறிய வழியில் அவனது நேரங்கள் தொலைவதைப் பற்றி அவனுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை. பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தைக் கொல்வதற்குரிய நவீன மின்னணு சாதனங்களை வாங்குகிறான்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடையான காலத்தை வீணாக்குகிறான். காலம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிற மனிதன் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறான். நிறைய கால அவகாசம் உள்ளவன் நேரம்தான் இருக்கிறதே... பிறகு பார்ப்போம் என்று நேரங்களை வீணாக்கி விடுகிறான்.

“பிறகு”, “பிறகு” என்று தள்ளிப்போடும் மனப்பான்மை (Procrastination) உள்ளவன் நிகழ்காலத்தை நிராகரிக்கிறான். எதிர்காலத்தைப் பாழாக்குகிறான்.

“காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடியுங்கள்” என்று ஓர் அறிஞன் கூறினான்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலத்தை வீணான விஷயங்களில் வீணாக்கி விட்டு மரண வேளையில் எனக்கு காலம் கிடைக்காதா என்று மனிதன் தவிக்கிறான். இதனைத்தான் “உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் தானதர்மம் செய்வேன் என்கிறான் மனிதன், அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்பதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உத்தம நபியவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளங்கையில் உமிழ்ந்து காட்டி விளக்கிய மனிதனின் பரிதாப எதார்த்தத்தை அவன் புரிந்துகொள்வானா?

புதிய விடியல்  நவம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

Wednesday, 5 October 2016

முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!


நமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி. கடலை உருண்டை வடிவில் இருக்கும் அது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின். இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.

ஆம்! இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின் நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து ஃபஜ்ருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்.

ஆகவே இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம். எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.

அதே போன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆக, இரவு முற்கூட்டியே உறங்குவதால் மெலடோனின் கிடைக்கிறது. அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால் ஓஸோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள். அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்களது வாழ்க்கை முறை இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன்அதிகாலையில் தஹஜ்ஜுதுக்கு எழும் வழக்கம் உடையதாக இருந்தது.

ஸிக்ர் அல் கமிதி என்பவர் அறிவிக்கிறார்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், “அல்லாஹ்வே, என் சமுதாயம் அதிகாலை எழுவதில் அருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை புரிவார்கள். அவர்கள் ஒரு படையையோ, ஒரு குழுவையோ எங்கும் அனுப்பினால் அதனை அதிகாலையிலேயே புறப்படச் செய்வார்கள்.” (அபூதாவூத்)

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அதிகாலையில் எழும்பொழுது நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்.

ஒரு முஸ்லிமின் வாழ்வு அதிகாலையில் துவங்குகிறது. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எழுந்து இவ்வுலகை மாசு படுத்தும் முன் முஸ்லிம் எழுகிறான். அண்ணலார் பிரார்த்தித்தபடி அவன் அதிகாலையில் எழுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:

“ஷைத்தான் நீங்கள் உறங்கும்பொழுது மூன்று முடிச்சுகளை உங்கள் தலையின் பின்புறம் கட்டுகிறான். ‘உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது. அதனால் உறங்கு’ என்று சொல்லியே அவன் ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரை இடுகின்றான். அதிகாலையில் நீங்கள் எழுந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகைக்காக உளூ செய்தால் அடுத்த முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் மூன்றாவது முடிச்சும் அவிழும். அந்தக் காலைப்பொழுதில் நீங்கள் உயிரோட்டத்தோடும், உள்ளச் சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படியில்லையெனில், அந்தக் காலைப் பொழுது உங்களுக்குத் தீமையாகவும், சோம்பேறித்தனமாகவும் மாறிவிடும்.” (புகாரீ)

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும், அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும் ஒரு முஸ்லிம் முன் தூங்கி முன் எழ வேண்டும்.