வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது.
தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.
தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு நிகழ்வு மாத்திரமல்ல. மதுவினால் ஏற்படும் கொடூரங்களுக்கு இது ஒரு பானைக்கு ஒரு சோறே!
மது இன்று பொது சமூகத்தில் மிகப் பெரிய விபத்தாக வளர்ந்திருக்கிறது. தினமும் மது அருந்துவது, பண்டிகைக் கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விசேஷ தினங்களின்போது மது அருந்துவது என்று மது அருந்துவது மிகச் சாதாரணமாக பரவலாகி வருகிறது.
மது விஷம் என்ற கருத்து போய் மதுவை அருந்துவது கண்ணியம் என்ற நிலை சமூகத்தில் வந்துள்ளது. விருந்து நிகழ்ச்சிகளில் மது அருந்தாதவர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கே இதற்குச் சான்று.
தமிழகத்தில் டாஸ்மாக் முதற்கொண்டு அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசுகளே மதுவை விற்கின்றன. அரசு மதுபானக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. வெளிநாட்டு மதுக்களுக்கு விற்பனை வரியை அதிகப்படுத்தி மாநில அரசுகள் அறிவிக்கின்றன. இதன் மூலம் மது பயன்பாட்டைக் குறைப்பதுதான் நோக்கம் என்று அரசுகள் கூறினாலும் அது அரசுகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் ஒரு வழியே என்பதுதான் நிதர்சனம்.
மது பயன்பாடு அதிகமாகி வருகிறது என்பதை விட கவலைக்குரியது அதிகமான இளைஞர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகி வருவது என்பதுதான். என் மருமகன் கோவையில் பொறியியற் கல்லூரியில் படிக்கிறான். அவனுடன் கூடப் படிக்கும் நல்ல மாணவர்களை இணைத்து ஒரு வீடு எடுத்து தங்கலாம் என்று முனையும்பொழுது, குடிக்காத ஒரு மாணவன் கூட கிடைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியானது.
அவனுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் குடிப்பார்களாம். கொஞ்சம் பணம் குறைவான குடும்பத்திலுள்ள மாணவன் சொன்னது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. “என் தந்தைதான் எனக்கு மது வாங்கித் தருவார். நான் குடிப்பேன்” என்றான் அந்த மாணவன்.
இப்படி கல்லூரிகளில் மது சர்வசாதாரணமாகப் புழங்கப்படுகிறது. அத்தோடு 10 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களும் இப்பொழுது மதுவைக் குடிக்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன.
வீடுகளில் பெற்றோர் மதுவை அருந்துவது அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மது இருப்பு, வெளியிலும் மது சாதாரணமாகக் கிடைப்பது, சினிமா, சீரியல் போன்றவற்றில் மது அருந்துவது சாதாரணமாகக் காட்டப்படுதல் போன்றவை மதுவின் மீது சிறுவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.
இது மட்டுமல்ல. போதை மருந்தும், கஞ்சாவும் மாணவர்களிடம் இப்பொழுது அதிகப் புழக்கத்தில் வந்துள்ளன. இவற்றை மாணவர்களிடம் விற்பதற்கு பெரும் மாஃபியா கும்பல்கள் அலைந்து கொண்டிருக்கின்றன.
18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை 21 வயதாக அதிகரிக்க ஆலோசனை உண்டு. அதனைச் செயல்படுத்தினால் கொஞ்சமாவது இந்தக் கொடுமை குறைய வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் அரசின் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்குவது செய்தியாக வந்திருந்தது. இளம் பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக்கொண்டிருக்கும் படங்கள் சமீபத்தில் முகநூலில் வந்திருந்தன.
குழந்தைகள் குற்றங்கள் புரிவதின் பின்னணியில் மதுவுக்கும், போதை மருந்துக்கும், கஞ்சாவுக்கும் பெரும் பங்குண்டு. சிறு வயதிலேயே கொலைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது.
இன்று இளையோர் சிறைகளில் (Juvenile Jails) அடைக்கப்படும் பெரும்பாலான சிறுவர்கள் செய்த குற்றங்கள் மேற்சொன்னவையே. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் மட்டும் 989 இளையோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கணக்கு 2013ல் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது 2013 செப்டம்பர் 30 வரையுள்ள கணக்குப்படி 1450 பேர் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கொலைக் குற்றத்திற்காகவும், 30 பேர் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகவும் பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடையிலுள்ளவர்களே.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் இது சம்பந்தமாக அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளிடம் நல்ல பழக்கவழங்களைப் புகுத்த பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாளைய இந்தியா நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.
MSAH
No comments:
Post a Comment