புனிதத் தலமான அல் அக்ஸா மஸ்ஜிதின் முக்கியத்துவம்!
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் சூரா பனீ இஸ்ராயீல் என்ற அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
سُبْحٰنَ
الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى
الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا ؕ
اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஅபத்துல்லாஹ்விலிருந்து
தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில்
அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை
நாம் பரக்கத் செய்திருக்கின்றோம். நம்முடைய
அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும்
இருக்கின்றான்.
முதல் இறையில்லமான கஅபத்துல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக பூமியில்
கட்டப்பட்ட இரண்டாவது இறையில்லம்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பைத்துல் முகத்தஸ்.
எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“மூன்று மஸ்ஜித்களுக்கு நன்மையை நாடிப் பயணம் செய்யலாம். ஒன்று
– மஸ்ஜிதுல் ஹராம். இரண்டாவது – மஸ்ஜிதுந் நபவி. மூன்றாவது – மஸ்ஜிதுல் அக்ஸா.”
மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்:
“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுபவருக்கு ஒரு லட்சம் மடங்கு
நன்மைகள் கிடைக்கும். மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுபவருக்கு ஆயிரம் மடங்கு
நன்மைகள் கிடைக்கும். ஜெரூசலமிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுபவருக்கு 500 மடங்கு நன்மைகள்
கிடைக்கும்.”
முஸ்லிம்களின் முதல் கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் திகழ்ந்தது!
ஆம்! முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து
வந்த பிறகு 16 அல்லது 17 மாதங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொழுது வந்தார்கள்.
அண்ணலார் அவர்கள் ஒரு முறை மதீனாவிலுள்ள ஒரு மஸ்ஜிதில் அஸ்ர்
தொழுது கொண்டிருந்த பொழுது அல்லாஹ்வின் கட்டளைப் படி தனது முகத்தை கஅபத்துல்லாஹ்வை
நோக்கித் திருப்பினார்கள்.
இதனை இறைமறையில் அல் பகரா அத்தியாயத்தில் 144ஆவது வசனத்தில்
இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
قَدْ
نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً
تَرْضٰٮهَا
فَوَلِّ
وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا
وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை
நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம்
உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது
(மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும்.
(முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள்
முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.
இதனால் அந்த மஸ்ஜிதுக்கு “மஸ்ஜிதுல் கிப்லத்தைன்” என்று பெயர்
வந்தது. அதாவது, இரண்டு கிப்லாக்களைச் சந்தித்த மஸ்ஜித் என்று பொருள்.
இவ்வாறுதான் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்குப் புனிதத் தலமானது.
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு மாநபிகளார் நடத்திய ஒரு பயணத்தின் மூலம்
அடுத்த கண்ணியம் கிடைத்தது. அதுதான் “இஸ்ரா“ பயணம்!
அதாவது, மதீனாவிலிருந்து பைத்துல் முகத்தஸுக்குச் சென்ற பயணத்திற்குத்தான்
இஸ்ரா பயணம் என்று பெயர்.
அதன் பிறகு நடந்ததுதான் மிஃராஜ் பயணம்.
ஆம்! வல்ல இறைவன் தனது வலிமையைப் பறை சாற்றும் முகமாக தன் நேசத்திற்குரிய
இறைத்தூதர் அவர்களை ஒரே இரவில் விண்ணுலகுக்கு அழைத்து, பின்னர் தொழுகையை அன்பளிப்பாக
அளித்து அந்த இரவிலேயே திருப்பி அனுப்பிய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய பயணம்தான்
மிஃராஜ் பயணம்.
வானவர்களின் தலைவர் ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை
‘புராக்’ என்ற வாகனத்தில் முதலில் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்றார்.
இதனைத்தான் நான் முதலில் குறிப்பிட்ட பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின்
முதல் வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.
அடுத்து அல்லாஹ் “அதன் சுற்றெல்லைகளை
பரக்கத் செய்திருக்கின்றோம்” என்று அதே வசனத்தில்
கூறுகிறான்.
ஆம்! அல்லாஹ்வின் வாக்கு பொய்யாகாது. அல்லாஹ் அதனை பரக்கத் ஆக்கியே
வைத்திருக்கின்றான்.
பலரும் எண்ணுவது போன்று பைத்துல் முகத்தஸ் என்பது ஒரே ஒரு மஸ்ஜிதன்று.
அது சுமார் 27 ஏக்கர் சுற்றளவு கொண்ட ஒரு புனிதப் பகுதி. இதனுள் ஐந்து மஸ்ஜித்கள் இருக்கின்றன.
பைத்துல் முகத்தஸ் என்றதும் பரவலாக நாம் பார்க்கின்ற ஒரு படமுள்ள
மஸ்ஜிதுக்குப் பெயர் “குப்பத் அல் ஸிஹ்ரா’‘. இதனை ஆங்கிலத்தில் Dome of the Rock என்றழைப்பார்கள்.
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரிலுள்ள ஒரு மஸ்ஜிதும்
இங்கே உள்ளது. விண்ணுலகப் பயணம் மேற்கொள்வதற்கு முன் முத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு அல்லாஹ் இன்னொரு கண்ணியத்தையும் அளித்தான். அதுதான் அல் அக்ஸாவில் அவர்கள்
அத்தனை நபிமார்களுக்கும் தொழ வைத்தது!
ஆம்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே
1,24,000 நபிமார்களுக்கும் தலைமையேற்று தொழுகையை நடத்தினார்கள்.
பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் தூய நபிகளார் தொழ வைத்த இடம் என்று
சொல்லப்படுகிற மிஹ்ராப் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஹஸ்ரத் ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை ஏற்றிச் சென்ற புராக் வாகனத்கைக் கட்டிப் போட்டார்கள்
என்று சொல்லப்படுகின்ற இடத்தையும் அங்கே செல்பவர்கள் காணலாம்.
அல் அக்ஸா மஸ்ஜித் பழைய ஜெரூசலம் நகரின் மையப்
பகுதியில் அமைந்துள்ளது. இது காலப்போக்கில்
பலமுறை அழிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அல் அக்ஸா மஸ்ஜித் கண்டிப்பாக முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும். இது ஏந்தல்
நபிகளாரின் ஏற்றமிகு முன்னறிவிப்பாகும். இதனை புஃகாரீ ஹதீஸ் கிரந்தத்தில் அவ்ஃப்
இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம்.
அவர் கூறுகிறார்:
“தபூக்
போரின் போது நபியவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல்
கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், ‘மறுமை
ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக் கொள்
என்று கூறிவிட்டு,
எனது மரணம், பைதுல்
முகத்தஸ் வெற்றி‘ எனக் கூறினார்கள்.”
ஏந்தல் நபிகளாரின் ஏற்றமிகு இந்த
முன்னறிவிப்பு உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது.
ஆம்! இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு, அதாவது கி.பி. 636ஆம்
ஆண்டு முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றினர்.
இந்த முன்னறிவிப்பு தூய நபிகளாரின் தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல்
முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய மஸ்ஜித் என்பதையும்
உறுதி செய்கின்றது.
உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களின் காலத்திற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டின் இறுதி வரை அது முஸ்லிம்களின்
வசமே இருந்தது. அது பிறகு எதிரிகளின் கைகளில் சிக்கியது. சிலுவைப் போரின்பொழுது சிலுவைக்காரர்கள்
அதனைக் கைப்பற்றி சுமார் 88 ஆண்டுகள் அவர்கள் வசம் வைத்திருந்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் அல் அக்ஸாவை மீட்டெடுக்க மாபெரும்
வீரர் ஒருவர் உருவானார். அவர்தான் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி!
சிலுவைக்காரர்களின் கைகளில் கட்டுண்டு கிடந்த நம்முடைய புனித பூமிகளை மீட்டெடுப்பதையே ஸுல்தான்
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் தனது வாழ்வின் இலட்சியமாகக்
கொண்டிருந்தார். அதற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். அதே
சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார்.
"மஸ்ஜிதுல்
அக்ஸா சிலுவைக்காரர்களின் பிடியில் இருக்க நான் எப்படி சிரிக்க
முடியும்? நான் எப்படி
உணவையும் பானங்களையும் சுவைக்க முடியும்?"
என்று அவர் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
இறுதியில் அவர் தனது இலட்சியத்தை அடைந்தார்!
ஆம்! கிபி 1187ல் நடந்த
ஹத்தீன் போரில் அவர் சிலுவைக்காரர்களைத் தோற்கடித்து மாபெரும் வெற்றி
கண்டு குத்ஸை மீட்டெடுத்தார்.
இதனால் 88 ஆண்டுகளாக இஸ்லாமிய எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பைத்துல் முகத்தஸ்
முஸ்லிம்களின் வசமானது.
88
ஆண்டுகள் சிலுவைக்காரர்களிடமிருந்த புனித பைத்துல் முகத்தஸை அவர்களிடமிருந்து
மீட்டெடுத்து உலக முஸ்லிம்களின் உள்ளங்கவர்ந்த உலக நாயகன் ஆனார் ஸுல்தான்
ஸலாஹுத்தீன் அய்யூபி.
அதன்
பிறகு உதுமானிய கிலாஃபத் ஆட்சி முழுவதும் அது முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது.
1924ஆம்
ஆண்டு கடைசி கலீஃபா அப்துல் ஹமீது அவர்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றப்படும் வரை
அது முஸ்லிம்களின் வசமே இருந்தது. கிலாஃபத் ஆட்சி உடைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு ஒரு
தலைமை இல்லாமல் ஆன பிறகே அதனை எதிரிகள் கைப்பற்றினர்.
இன்று யூதர்களின் கைகளில் சிக்கிக் கிடக்கும் பைத்துல் முகத்தஸையும் ஃபலஸ்தீனையும்
மீட்டெடுப்பதற்கு ஸலாஹுத்தீன் அய்யூபிகள் தேவைப்படுகிறார்கள். அல் அக்ஸா மஸ்ஜிதை
இஸ்ரேலியர்களிடமிருந்து மீட்டெடுப்பது ஃபலஸ்தீன மக்களுக்கு மட்டும் கடமை இல்லை. அது ஒட்டுமொத்த
உலக முஸ்லிம்களுடைய கடமை!
உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல்
அக்ஸாவும், ஃபலஸ்தீன்
புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி صلى الله عليه وسلم அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
ஃபலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால்
தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய
யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
“முஸ்லிம்கள்
யூதர்களுடன் போர் செய்வார்கள். யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும்
பின்னால் மறைந்திருப்பார்கள். அந்தக் கற்களும் மரங்களும் ‘முஸ்லிமே!
அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து
அவனைக் கொன்று விடு’ எனக் கூறும் நாள் வரும் வரை உலகம்
அழியாது என நபி صلى الله
عليه وسلم அவர்கள் கூறினார்கள்.”
முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள இந்த நபிமொழியை
அபூ ஹுரைரா ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்.
அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும்
முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முஸ்லிம்கள்
சந்திக்கும் இழப்புகள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும்.
அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப்
போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில நேரங்களில்
முஸ்லிம்களும் சில நேரங்களில் எதிரிகளும் வெற்றியையும் தோல்வியையும்
சந்திக்கலாம்.
ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!