மனிதனைச் சோதிப்பதற்கு அல்லாஹ் பயன்படுத்தும் மிகப் பெரிய ஆயுதம்தான் மனிதனின் மனம்.
“மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்” (4:28) என்ற இறைவசனத்திற்கேற்ப மனிதனின் மனம் பாவம் செய்யத் தூண்டக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளது. இதற்கு “நஃப்ஸே அம்மாரா” எனப்படும்.
அல்லாஹ் மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானைப் படைத்து அவனுக்கெதிராக நேர்வழி காட்டும் நபிமார்களைப் படைத்தது போன்று “நஃப்ஸே அம்மாரா” என்ற பாவம் செய்யத் தூண்டக்கூடிய மனதைப் படைத்து அதற்கெதிராக “நஃப்ஸே லவ்வாமா”வையும் படைத்துள்ளான்.
“நஃப்ஸே லவ்வாமா” என்றால் மனசாட்சி என்று தமிழில் பொருள் கொள்ளலாம். மனிதன் எந்தத் தீமையைச் செய்யும்பொழுதும் ஒரு மனஉறுத்தல் ஏற்படும். இந்த மனஉறுத்தலுக்கு மனசாட்சி என்று பெயர் கொடுத்தால் அதுதான் “நஃப்ஸே லவ்வாமா” எனப்படும்.
இதைத்தான் வல்ல இறைவன் “இடித்துரைக்கும் ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” (75:2) என்று கூறுகிறான். நன்மை, தீமையை உணர்த்.தும் இந்த உள்ளக்குடுக்கையைப் பற்றி இன்னும் ஏராளமான இறைவசனங்கள் விவரிக்கின்றன.
“நஃப்ஸே அம்மாரா” எல்லோரிடத்திலும் இருப்பது போன்று “நஃப்ஸே லவ்வாமா”வும் எல்லோரிடத்திலும் இருக்கும். “நஃப்ஸே லவ்வாமா”வைப் (மனசாட்சி) பயன்படுத்தி “நஃப்ஸே அம்மாரா”வை அடக்கினோம் என்றால் “நஃப்ஸே முத்மஇன்னா” என்ற நிலையை அடையலாம்.
இதனை “அமைதியடைந்த ஆத்மா” என்று பொருள் கொள்ளலாம். ஆக, மனிதனின் இலட்சியம் “நஃப்ஸே முத்மஇன்னா”வாக இருக்க வேண்டும். அதனை அடைவதில்தான் அவனது பயணம் அமைய வேண்டும்.
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன் மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (அல் ஃபஜ்ர் 89:27-30)
இந்த அமைதியடைந்த ஆத்மாவாக (நஃப்ஸே முத்மஇன்னா) நாம் மாறும்பொழுதுதான் சுவனத்தில் அல்லாஹ் நம்மை நுழைவிக்கச் செய்கிறான். நபிமார்களும், ஷுஹதாக்களும், ஸித்தீக்கீன்களும், ஸாலிஹான நல்லடியார்களும் நஃப்ஸே முத்மஇன்னாவைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
“ஹவா” என்ற மனோஇச்சை இலேசானது அல்ல. “ஹவா”வுக்குப் பலியான மனிதன் நிரந்தர வெற்றியை பெற்றதும் இல்லை. சர்வாதிகாரிகள் முதல் சாதாரண மனிதன் வரை இந்த “ஹவா” ஆட்டிப் படைக்கிறது. இந்த “ஹவா”வுக்கு அடிமையானவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையை (ஹவாவை) தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல் ஜாஸியா 45:23)
“லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லும் முஸ்லிம் கூட “லாஇலாஹ இல்லல் ஹவா” (வணக்கத்துக்குரிய நாயன் மனோஇச்சையைத் தவிர வேறு யாருமில்லை) என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறான் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அடியான் ஒரு தவறிழைத்து விட்டால் அவனது இதயத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. அதிலிருந்து அவன் கழன்று பாவமன்னிப்பு தேடி பாவமீட்சி பெற்றுக்கொண்டால் அவனது உள்ளம் தெளிவாகி விடுகிறது. அவ்வாறின்றி மீண்டும் தவறுகளையே செய்ய முற்பட்டால் அந்தக் கரும்புள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டு அவனது உள்ளத்தில் அது பற்றிப் படர்ந்து விடுகின்றன. இதைத்தான் “அப்படியல்ல. அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன” (83:14) என்று அல்லாஹ் கூறுகின்றான்.” (அபூஹுரைரா (ரலி), திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா)
இந்த எச்சரிக்கை மணி நம் காதுகளில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உள்ளங்களை இறைவழியில் புரட்டிப் போட்டிட வேண்டும். அப்பொழுதுதான் நாம் அமைதியடைந்த ஆத்மாக்களாக மாறுவோம். அவர்களுக்குத்தான் அறுதி வெற்றி காத்திருக்கிறது.
புதிய விடியல் அக்டோபர் 2015 (மனதோடு மனதாய்...)