Monday, 28 September 2015

எது சிறந்த கல்வி?


அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அறிவு. அறிவைத் தேடுவது, அறிவு ஞானத்தை வளர்ப்பது, அதனை அடுத்தவருக்கு எத்தி வைப்பது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்பது போன்றவை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள சிறப்பு,

அறிவைத் தேடுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு கிரந்தம்தான் திருக்குர்ஆன். சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் அது தூண்டுகோலாக அமைகிறது.

"அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். எவர் ஞானம் கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடேயோர்தான் படிப்பினை பெறுவார்கள்."(அல்குர்ஆன் 2:269)

அத்தோடு அறிவைத் தேடுவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை கடமை என்று வலியுறுத்தினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அதனை அடிப்படையாக வைத்துதான் முன்வாழ்ந்த முஸ்லிம்கள் அறிவியலில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். பல விஞ்ஞான உண்மைகளைக் கண்டுபிடித்து உலகத்துக்கு தந்தார்கள். அறிவியலில் அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது.

நம்முடைய முன்னோர்களில் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் பலர் இருந்தார்கள். அடுத்த தலைமுறைக்கு தாங்கள் தேடிப் பெற்ற அறிவியல் உண்மைகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறுகளைப் படிக்கும்பொழுது நாம் இதனை நிதர்சனமாகக் காணலாம். அவிசென்னா என்றழைக்கப்படும் அலீ இப்னு சீனா மருத்துவ உலகில் ஒரு மாமேதையாக திகழ்ந்தார். “மருத்துவ உலகின் தந்தை” என்றறியப்பட்டார். இன்றைய தலைமுறையின் அநேக மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு இப்னு சீனாவின் மருத்துவ கண்டுபிடிப்புகளே அடிப்படை அம்சமாக அமைந்துள்ளது.

இப்னு சீனா போன்று இஸ்லாம் அனைத்துவித அறிவுகளையும், பல்வேறு துறைகளின் கல்வி ஞானத்தையும் பெறுவதற்கு மனிதனைத் தூண்டுகிறது. மனிதகுலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மாமறையின் முதல் வாசகமே “வாசிப்பீராக!” என்பதுதான். அதன் தொடர்ச்சியாக வரும் ஒரு சில வசனங்களும் கற்றல், கற்றுக் கொடுத்தல், எழுதுகோல் என்று அறிவு தேடுவது சம்பந்தமாகவே அமைந்துள்ளன.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கல்வி ஞானத்துக்கும், சுவனத்துக்கும் முடிச்சு போடுகிறார்கள். அவர்கள் அருளினார்கள்: “ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.” (முஸ்லிம்)

இப்படி அறிவைத் தேடுவதை ஒரு புனிதப் பணியாக இஸ்லாம் காண்கிறது. எல்லா துறைகளிலுமுள்ள அறிவையும் இஸ்லாம் தேடச் சொல்கிறது. அந்த அறிவுகளிலெல்லாம் தலைசிறந்தது எது என்றும் அது பறை சாற்றுகிறது. அதுதான் ‘‘லாஇலாஹ இல்லல்லாஹ்” என்பதைக் குறித்து உள்ள அறிவு.

இந்த அடிப்படை அம்சத்திலிருந்துதான் அனைத்து அறிவு ஞானங்களும் ஊற்றெடுக்கின்றன. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் எவ்வளவு பெரிய கல்வியைப் பெற்றாலும் அந்தக் கல்வியின் பின்னணியில் அவன் அடைவது தன்னைப் படைத்த இறைவனாக இருக்க வேண்டும். அதாவது, அவனது அடிப்படைக் கல்வியான “லாஇலாஹ இல்லல்லாஹ்” அவனிடமிருந்து மாறிப் போனால் அவன் நஷ்டவாளிகளில் ஒருவனாவான்.

அவன் பெறும் கல்வி அல்லாஹ்வின் ஆற்றலையும், மகத்துவத்தையும் அவனுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். அவனது ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக அமைய வேண்டும். அந்தக் கல்வியினூடாக அல்லாஹ்வின் மகா வல்லமையைக் கண்டு அவனுக்கு தன்னடக்கம் வரவேண்டும். அல்லாஹ்தான் அதிசக்தி படைத்தவன் என்றுணர்ந்து அவன் முன் சாஷ்டாங்கம் செய்பவனாக அவன் மாற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியைத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.

வானங்கள், பூமி, நட்சத்திரம், சந்திரன், மிருகங்கள், பறவைகள் என்று தொடங்கி ஈ வரை பரிசுத்த குர்ஆன் கலந்துரையாடுகின்றது. ஓர் ஈயை உதாரணமாகக் கூறுவதைக் கொண்டு தான் வெட்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வானியல் ஆராய்ச்சி செய்தாலும், புவியியல் பற்றிப் படித்தாலும், நட்சத்திரங்களைக் குறித்து அறிந்தாலும், உயிரினங்களைப் பற்றிப் பாடம் நடத்தினாலும் அவற்றைப் படைத்தது யார் என்பதை நாம் உணர வேண்டும்.

பின்தங்கிப் போயிருந்த நம் சமுதாயத்தினர் இன்று கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் நம் இளவல்கள் கற்கும் கல்வி ஈமானுக்கு வலு சேர்க்கிறதா? இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதை பெற்றோர்தான் உறுதி செய்ய வேண்டும்.

புதிய விடியல்  ஜூன் 2015 (மனதோடு மனதாய்...)

Sunday, 27 September 2015

ரேடியோ ஸலாம் மாறுமா?


ஐக்கிய அரபு அமீரகத்தில் 106.5 அலைவரிசையில் ரேடியோ ஸலாம் என்ற தமிழ் FM வானொலி இயங்கி வருவது அமீரக தமிழ் மக்கள் அறிந்ததே.

BJP, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இன்னும் ஆளே இல்லாத இந்து இயக்கங்களின் செய்திகளை தவறாமல் சொல்லும் இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் எவ்வளவு பெரிய போராட்டங்களாக இருந்தாலும் கண்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.

அந்தப் போராட்டங்களால் நாடே குலுங்கினாலும் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஜாதி மதம் பாராமல் விடுவிக்க வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்கள் போராடி வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்காதவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை விடுவித்தால் நாட்டின் அமைதி கெட்டு விடும் என்று பாஜக திருவாய் மலர்ந்துள்ளதை ஒரு செய்தியாக சொல்கிறார்கள். ஊரில்தான் ஊடகங்களில் பாரபட்சம் என்றால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முஸ்லிம் நாட்டிலுமா இப்படி?

இது குறித்து முகநூலில் பதிவிட்ட பொழுது நிறைய மக்களின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிய வந்தது.

முகநூலில் எனது பதிவின் பின்னூட்டமாக தனது கருத்தை ஒருவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“உண்மை, நீங்கள் மட்டுமல்ல. இது அமீரகத்தில் இருக்கும் எல்லோரும் தொடர்ந்து கவனித்து வரும் நிகழ்வு. இது ரேடியோ தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ சின்னச் சின்ன செய்தியானாலும் இந்துத்துவ ஃபாசிச செய்திகளாக இருந்தால் உடனே அதை பெரிய செய்தி போலவும், முஸ்லிம் எதிர்ப்பு செய்திகள் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னால் கூட அதை தலைப்புச் செய்தியாகவும் சொல்லி முக்கிய செய்தியாக்குவார்கள். இவர்கள் மோடிக்கு அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே தூக்கிய காவடிகள் கொஞ்சமல்ல.

இந்த ரேடியோவின் ஃபாசிசப் போக்கை பலரும் பல சந்திப்புகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை ரேடியோ சலாம் Radio Salaam 106.5fm திருத்திக்கொள்ள வேண்டும். இதை அமீரகத்தில் உள்ள எல்லா தரப்பும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள் மாறினால் அவர்களுக்கு நலம்.”

அமீரகத்தில் இயங்கி வரும் மலையாள பண்பலை வானொலிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ரேடியோ ஸலாம் முஸ்லிம்கள் குறித்து, அதுவும் தமிழ் முஸ்லிம்கள் குறித்து மிகக் குறைவான செய்திகளையே தருகின்றது. மலையாள வானொலிகள் அதிகமான செய்திகளைத் தருவதுடன், முஸ்லிம்கள் குறித்து ஓரளவு நடுநிலையான செய்திகளையே வெளியிடுகின்றன.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று இஸ்லாமிய உலகின் எதிர்மறையான செய்திகளை தவறாமல் ஒலிபரப்பும் ரேடியோ ஸலாம், முஸ்லிம்கள் குறித்த நேர்மறையான, ஆக்கபூர்வமான, நடுநிலையான செய்திகளை மிக அரிதாகவே சொல்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்பாக இங்கே பாஜகவுக்கான பிரச்சார பீரங்கி போல் செயல்பட்டது ரேடியோ ஸலாம். அது ஒலிபரப்பிய அனைத்து செய்திகளிலும் பாஜகவின் பெயர் வராமல் இருந்ததில்லை. மோடி புகழ் பாடாமல் ஒரு செய்தி கூட இருந்ததில்லை.

அமீரகத்திலுள்ள தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் இந்த வானொலி இங்குள்ள தமிழ் மக்களின் நிலையை, தமிழகத்தின் நிலையை, குறிப்பாக இங்கே அதிகமாக வாழும் தமிழ் முஸ்லிம்களின் நிலையை, அவர்களின் வாழ்வாதாரங்களை, அவர்களின் அவலங்களை, அவர்கள் தங்கள் வாழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை எடுத்துரைப்பது நல்லது. அதுதான் ஊடக தர்மம்.

அமீரக தமிழ் மக்களின் அவாவை ரேடியோ ஸலாம் நிறைவேற்றுமா? நடுநிலையோடு செய்திகளை வெளியிடுமா?