தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.
மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.
இன்னொரு நாளும் அதே போன்று கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக அவர் வெளிவந்தார். இத்தவணை அவரது தர்மம் சென்றடைந்தது ஒரு விபச்சாரியிடம். அன்று போல் இன்றும் மக்கள் புருவத்தை உயர்த்தினர். பலவாறாகப் பேசிக் கொண்டனர். அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் தான் செய்தது குறித்து மிக்க திருப்தியடைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.
அதற்கடுத்த நாளும் அவர் கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக வெளிவந்தார். இத்தவணை அவர் தர்மம் கொடுப்பதற்காக தேர்ந்தெடுத்தது ஒரு பணக்காரரை!
அந்தப் பணக்காரர் கஞ்சனிலும் மகா கஞ்சன். பணக்காரனுக்கு தான தர்மம் நல்கிய கொடை வள்ளல் என்று மக்கள் அவரைக் கேலி பேசிக் கிண்டலடித்தனர். ஆனால், அவரோ இப்பேற்பட்ட ஒரு பணக்காரருக்கு தர்மம் வழங்கிட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கு நன்றி நவின்று பூரண திருப்தியுடன் புளகாங்கிதம் அடைந்தார்.
திருடனுக்கும், விபச்சாரிக்கும் தர்மம் அளித்தது அவர்களது தவறான தொழில்களிலிருந்து அவர்களைத் திருத்த உதவும் என்று மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். அதனாலேயே அவர்களுக்கு தர்மம் அளித்தார். தர்மம் பெற்ற பணக்காரர் அதிலிருந்து மிகப் பெரும் பாடம் பெற்று தன் கஞ்சத்தனத்தை விட்டொழித்து பிறருக்கு தன் பொருளிலிருந்து தான தர்மம் வழங்க தொடங்குவார் என்று இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாலேயே அவருக்கு தர்மம் வழங்கினார்.
எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறிய ஓர் அனுபவக் கதைதான் இது.
தூய்மையான எண்ணம்தான் எந்தவொரு செயலுக்கும் பூரணத்துவத்தை அளிக்கிறது. வெளியில் பார்க்கும்பொழுது முட்டாள்தனமாக தெரியும் எல்லா செயல்களும் உண்மையில் முட்டாள்தனங்களல்ல. அதில் பலவற்றில் பல நல்ல நோக்கங்கள் ஒளிந்து கிடக்கும்.
அதே போன்று, வெளியில் நல்லதாக தெரியும் எல்லா செயல்களும் நல்ல செயல்களல்ல. மாசு படிந்த உள்ளங்களுடன் செய்யப்படும் நல்ல காரியங்கள் அதன் பூரணத்துவத்தை இழந்து விடுகின்றன. இந்த நல்ல செயல்களால் பெரிதாக பலன் எதுவும் ஏற்பட்டுவிடாது.
பண்டைய காலம் தொட்டே ஹஜ்ஜுக்கு வருவோருக்கு சேவை புரிவதும், மிருக பலி கொடுப்பதும், இன்னபிற சேவைகளும் அரபிகளுடைய பழக்கமாக இருந்தது. அது அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. இந்தச் சேவைகள் மூலம் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை விட அவர்களுக்கு தங்கள் குலப் பெருமையையும், தலைமைப் பதவியையும் உயர்த்திப் பிடிப்பதுதான் இலட்சியமாக இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மல்லுக்கு நின்றபொழுதும், யுத்தங்கள் புரிந்தபொழுதும் குறைஷிகள்தான் மக்காவில் இறையில்ல சேவகர்களாக இருந்தனர். அவர்கள் அதில் மிக்க அபிமானம் கொண்டிருந்தனர்.
இந்தச் சேவைகள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவிகள் புரிந்து கரையேற்றி விடுவான் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு அல்லாஹ் இவ்வாறு பதில் அளித்தான்:
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவோரையும் கஅபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்கு சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அத்தவ்பா 9:19)
நல்ல செயல்கள் நல்ல உள்ளங்களிலிருந்து புறப்பட வேண்டும். அதுவே அறுதி வெற்றியை ஈட்டித் தரும்.
புதிய விடியல் மே 2015