நோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொன்னார்கள்.
நாம் சாதாரணமாக சிரித்துவிட்டுப் போகிறோம். ஆனால் ஒரு சிரிப்பினால் நம் உடலில் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?
ஆம்! நிறைய மாற்றங்கள் நம் உடலில் நடைபெறுவதற்கு தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதிர்ஷடவசமாக அந்த மாற்றங்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்துவது முதல் நம் ஆற்றல் அளவை (Energy Level) அதிகப்படுத்துவது வரை பல நல்ல மாற்றங்களை சிரிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் நம் மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை இலேசாக்குகிறது. நம் உடலிலுள்ள வலியைக் கூட சிரிப்பு குறைக்கிறது.
நன்றாக வயிறு வலிக்கச் சிரித்தால், அல்லது விழுந்து விழுந்து சிரித்தால் அடுத்த 45 நிமிடங்களுக்கு நம் உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம், படபடப்பு போன்றவை ஓடிப் போய் விடுகின்றன. நம் தசை நார்களின் இறுக்கம் குறைந்து இலேசாகிப் போகின்றன.
இது எப்படி நம் உடலில் நிகழ்கிறது? நாம் வாய் விட்டுச் சிரிக்கும்பொழுது “மகிழ்ச்சி’‘க்கான ஒரு வேதியியல் பொருள் சுரக்கும். அதுதான் என்டார்ஃபின். இந்த என்டார்ஃபின் சுரந்தால் நம் உடல் நல்ல நிலைக்கு வந்துவிடும்.
அதே சமயம் வேறு ஒரு செயலும் சிரிக்கும்பொழுது நடக்கிறது. மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது குறைக்கப்படுகிறது. ஒரு புறம் என்டார்ஃபின் என்ற மகிழ்ச்சிப் பொருள் சுரக்கிறது. மறுபுறம் மன அழுத்த ஹார்மோன்கள் சரப்பது மட்டுப்படுத்தப்படுகிறது.
அத்தோடு நாம் மேலே கூறியவாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது எப்படி?
சிரிக்கும்பொழுது நம் உடல் தூண்டப்பட்டு கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகள் உஷார் ஆக்கப்படுகின்றன. இவை உடனே செயலில் குதிக்கின்றன. இவை களத்தில் இறங்கினால் உடலில் நோய்க் கிருமிகளை அண்ட விடுமா?
ஆக, என்டார்ஃபின் சுரப்பு, மன அழுத்த ஹார்மோன்கள் மட்டுப்படுத்தப்படுதல், ஆண்டிபாடிகள் களத்தில் குதித்தல் – இந்த மூன்று நிகழ்வுகளால் நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கப்படுகிறது.
அனைத்தையும் நேர்மறையாக (Positive) எடுப்பவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் “சிரிப்பு யோகா” என்றொரு யோகா கற்றுத் தரப்படுகிறது.
அதாவது, சிரிப்புப் பயிற்சியும், சில யோகா முறை மூச்சுப் பயிற்சிகளும் இணைக்கப்படுவதுதான் இந்தச் சிரிப்பு யோகா என்பது. இதனுடைய முக்கிய நோக்கம் நம் உடலுக்குள் பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவை அதிகப்படுத்துவதுதான்.
குழந்தைகள் கள்ளங்கபடமில்லா உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சிரிப்பும் அப்படித்தான். குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் அதிகமதிகம் சிரிக்கிறோம். ஆனால் வயதாக, வயதாக நம் சிரிப்பு குறைந்துகொண்டே போகிறது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முதல் 400 தடவை சிரிக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் இதுவோ வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 15 தடவை என்று குறைந்துவிடுகிறது.
இதனை ஈடு கட்டுவதற்காக மனோதத்துவவியலாளர்கள் வலுக்கட்டாயச் சிரிப்பை ஊக்குவிக்கிறார்கள்.
“வலுக்கட்டாயச் சிரிப்பு சக்தி மிக்கது. எப்பொழுதும் கிடைக்கக் கூடியது. செலவே இல்லாதது. இதனை வயது வந்தவர்கள் செய்து வந்தால் அவர்களின் “மூடு” (மனப்போக்கு) நன்றாக மாறும். அதாவது அவர்கள் நல்ல மனநிலைக்கு வருவார்கள். மனோ ரீதியாக நல்ல விளைவு ஏற்படும்” என்று மனோதத்துவப் பேராசிரியர் சார்லஸ் ஷேஃபர் கூறுகிறார்.
இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஃபேர்லெய் டிக்கின்சன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் சிரிப்பு சம்பந்தமாக இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
ஷேஃபர் சில மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். அவர்களிடம் அவர்களின் மனப்போக்கை (மூடு) அறிவதற்காக தொடராக சில கேள்விகளைக் கேட்டார். பிறகு அவர்களை ஒரு நிமிடம் நன்றாகச் சிரிக்கச் சொன்னார். பிறகு அவர்களின் மனப்போக்கைப் பரிசோதித்தார்.
ஷேஃபர் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பதற்கு முன்பு மாணவர்கள் சொன்ன பதில்களை விட சிரிப்புக்குப் பின் அவர்கள் சொன்ன பதில்கள் மிகச் சிறப்பாக இருந்தன.
“மூளை சிரிக்க வேண்டும் என்று உடலுக்குக் கட்டளை பிறப்பித்தவுடன், நம் உடல் எதைப் பற்றியும் கவலைப்படாதாம். அது என்டார்ஃபின்களை உடனே சுரந்து தள்ளி விடும். மன அழுத்தம் குறைந்து விடும். சிரிப்பு என்ற உடல் சார்ந்த செயலுக்கு மனரீதியான செயல்தான் மனஅழுத்தக் குறைவு என்பது” என்கிறார் பேராசிரியர் ஷேஃபர்.
ஆக, சிரிப்பு என்பது ஆரோக்கியத்தின் முதலீடு.
சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.
சிரிப்பினால் ஏற்படும் இன்னொரு பலன், சிரிக்கும்பொழுது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்கக் காரணமாகிறது.
சிரிப்பதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வயிறு குலுங்கச் சிரிப்பது வயிற்றுக்குப் பயிற்சியாக மாறுகிறது. நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி எரிந்து விடும். அத்தோடு சிரிக்கும்பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இது உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.
சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசரமான நமது வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. டென்ஷன் நமது ஆயுளை வீழ்த்துகிறது. இங்கேதான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
நிராசையிலிருந்து சிரிப்பு நம்மை விடுவிக்கிறது. கவலைகளைக் காற்றில் பறக்க விட சிரிப்பால் மட்டுமே முடியும். சிரிப்பு கோபத்தின் தீயை அணைக்கிறது. சோகத்தை அகற்றி உள்ளத்தை கிளர்ச்சியடையச் செய்கிறது. இதயத் துடிப்பை சாதாரணை நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் உறுதியை சிரிப்பு தருகிறது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய கொடைதான் “ஹியூமர் சென்ஸ்” என அழைக்கப்படும் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவையான ஒரு செயலைக் கண்டாலோ அல்லது வார்த்தைகளைக் கேட்டாலோ சிரிக்க முடிவதே ஒரு பாக்கியம்தான்.
யாரைக் கண்டாலும் சிரிக்கும் நபர்கள் எங்கும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இரண்டு நபர்களுக்கு இடையேயான அகலத்தைக் குறைக்க சிரிப்பால் முடியும். சிரிக்காத நபர்களுடன் யாரும் எளிதில் நெருங்கமாட்டார்கள். அவர்களை சிடுமூஞ்சி என்றழைப்பார்கள்.
சிரிப்பவர்களால் எங்கும் நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் சமூகத்தில் விரைவில் பிரபலமாகி விடுவார்கள்.
சிறந்த ஆளுமையின் அடையாளமாக சிரிப்பு விளங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நேர்முகத் தேர்விற்குச் செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். “ஃபஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்’‘ எனக் கூறுவார்கள். அதாவது, முதலில் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும்.
இங்கே உங்களது கல்வித் தகுதிகளை விட உங்களது மிடுக்குத்தனத்திற்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். காரணம், ஒரே தகுதிகளைக் கொண்ட பலர் நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிறந்த நபரைத் தேர்வு செய்யும் அளவுகோலாக அவர்களின் ஆளுமைத்திறன் கவனத்தில் கொள்ளப்படும். ஆளுமைத்திறனுக்கு ஆக்கம் கூட்டும் சிரிப்பு உங்கள் முகத்தில் மலர்ந்தால் நீங்கள் மிடுக்கான நபர் என்பது நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு புரிந்து விடும். உங்களது ஒரு சிரிப்பில் அதிக மதிப்பெண்களை நீங்கள் தட்டிச் செல்லலாம்.
இஸ்லாம் சிரித்து மகிழ்ந்து இருப்பதற்குத் தடை ஏதும் விதிக்கவில்லை. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நகைச்சுவை இழையோடியது. சிரிப்பு இடம் பெற்றிருந்தது.
“உள்ளங்கள் சோர்வடைந்திருக்கும்பொழுது உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சியாக (ராஹத்தாக) வைத்திருங்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
எப்பொழுதும் ‘உர்’ என்று இறுக்கமாக இருக்க இஸ்லாம் இயம்பவில்லை. மனித மனம் இப்படியிருந்தால் மரத்துப் போய் விடும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு எவ்வளவு அவசியமோ அதே போல் மகிழ்ச்சியும் அவசியம்.
அல்லாஹ் அனுமதித்த வழியில் சிறிது நேரம் சிரித்து மகிழ்ந்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சிரிப்பே வாழ்க்கையாகி விடக் கூடாது. அது அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதாக ஆகி விடக்கூடாது.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அறிவிக்கின்றார்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். சில நேரம் ஜாஹிலிய்யாக் கால விஷயங்களைக் கூறிச் சிரிப்பார்கள். அதை அண்ணலார் ஒருபோதும் தடுத்ததில்லை.
கருணை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்துள்ளார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்.
கஅப் இப்னு மாலிக் (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்:
சங்கை நபி (ஸல்) அவர்களுக்கு சந்தோஷமேற்பட்டால் அவர்களது முகம் பிரகாசிக்கும். அது பௌர்ணமி நிலவின் துண்டு போல் ஜொலிக்கும். (புஹாரீ, முஸ்லிம்)
நானிலம் போற்றும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு இடையிலும் மிகப் பெரும் நகைச்சுவையாளராக விளங்கினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார்.
ஆயிஷா (ரலி) அறிவிப்பதைப் பாருங்கள்:
“ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஸவ்தாவும் இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவளின் முகத்தில் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் அவளுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.” (அபூயஃலா)
“நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை” என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) கூறுகின்றார். (திர்மிதி, அஹ்மத்)
“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான், திர்மிதி)
ஆக, சிரிப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. நோயைப் போக்குகிறது. மொத்த குணநலனையும் மாற்றிவிடுகிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நன்றாகச் சிரியுங்கள். அதேவேளையில் தனியாக அமர்ந்தோ, அளவுக்கதிகமாகவோ சிரித்து விடாதீர்கள். நம்மை தவறாகக் கருதிவிடுவார்கள்!
MSAH
விடியல் வெள்ளி பிப்ரவரி 2014