Tuesday, 9 May 2017

துபையில் சிறப்பாக நடைபெற்ற “துரோகி” புத்தக வெளியீட்டு விழா!குவாண்டனாமோ சிறையில் இராணுவ வீரராக பணியாற்றிய டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் எழுதிய THE TRAITOR என்ற புத்தகத்தை தமிழில் எழுத்தாளர் M.S. அப்துல் ஹமீது அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் அதன் தமிழாக்கமாக வெளியிட்டுள்ள “துரோகி” என்ற புத்தகம் EMIRATES INDIA FRATERNITY FORUM சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று 07/04/2017 அன்று PEARL CREEK ஹோட்டலில் சுமார் 7:30 மணி அளவில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியின் துவக்கமாக வலசை ஃபைஸல் வரவேற்புரை ஆற்றினார். பின்னர் EMIRATES INDIA FRATERNITY FORUM ஒருங்கிணைப்பாளர் அப்துல் கஃபூர் EIFF பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக WINSTAR நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அபுல் கலாம் ஆசாத் அவர்களும், ARISTO STAR GEN. TRADING நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களும் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

மேலும் எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களுமான ஜெஸீலா பானு, ஹுஸைனம்மா என்ற யூஸுஃபா ஆகியோர் புத்தக விமர்சன உரை நிகழ்த்தினார்கள்.

விமர்சன உரை நிகழ்த்திய ஜெஸீலா பானு அவர்கள் இஸ்லாத்தின் புனிதம் பற்றியும், சிறைவாசிகளாக இருந்த போதும் இஸ்லாத்தை துல்லியமாக பின்பற்றுவதை பார்த்து ஓர் இராணுவ வீரர் மனம் மாறியிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய ஹுசைனம்மா என்ற யூஸுஃபா அவர்கள் குவாண்டனாமோ சிறைவாசிகளின் நிலையோடு இந்திய,தமிழக சிறைவாசிகளின் நிலைமையையும், ஃபாசிசம் இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.

இறுதியில் நூலாசிரியர் M.S. அப்துல் ஹமீது அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த ஏற்புரையில் நான் ஏன் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்தேன், எப்படி எழுதினேன் என்று கூறும்பொழுது, அழகிய இலக்கியம் படைப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றும், இது போன்ற தஃவா தொடர்பான புத்தகங்களையும், சமூகப் பிரச்சினைகளை பேசக்கூடிய புத்தகங்களையும் எழுதுவதற்குத்தான் ஆட்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள் என்றும், அதனால்தான் நான் இம்மாதிரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறேன் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழக சிறைவாசிகள் குறித்தும், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் அனைவரும் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு சமூகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஃபாசிசத்தின் கோரப்பிடிகளில் மக்கள் சிக்கியிருக்கின்ற போதும் யாரும் நிராசையாகிவிட வேண்டாம் என்றும், இம்மாதிரியான பிரச்சினைகள்தான் நமது ஈமானை பலப்படுத்தி ஃபாசிஸ்டுகளை வெற்றி பெறச் செய்யும் என்றும் அவர்  கூறினார்.

நூலை வெளியிடும் முன் “துரோகி” நூல் குறித்து நெல்லை ஆதில் உருவாக்கிய 5 நிமிட காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய வலசை ஃபைஸல் நன்றியுரையும் நவின்றார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு, “துரோகி” நூலையும், இதர இலக்கியச்சோலை நூல்களையும் ஆர்வமாக வாங்கினர். இரவு உணவுடன் இனிதே நிறைவுற்றது நிகழ்ச்சி.

No comments:

Post a Comment