Monday, 28 July 2014

துபையில் மகிழ்ச்சியாகக் கழிந்த ஈகைத் திருநாள் கொண்டாட்டம்!


காலை 4 மணிக்கு எழுந்து குளித்து மஸ்ஜிதுக்குச் சென்று ஸுப்ஹு தொழுதேன். அப்பொழுதே புழுக்கம் அதிகமாக இருந்தது. மக்களால் மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் வெளியில்தான் தொழ வேண்டியதாயிற்று. அப்பொழுதே வியர்வை கொட்ட ஆரம்பித்துவிட்டது.


எப்படி ஈத்கா திடல் சென்று தொழப்போகிறோம் என்று எண்ணினேன். மலைப்பாக இருந்தது. பின்னர் ரூம் வந்து புத்தாடைகள் அணிந்து விட்டு ஈத்கா திடல் நோக்கி நண்பர்களுடன் சென்றேன்.


வழி நெடுக புர்கா அணிந்த பெண்களும், பிஞ்சுக் குழந்தைகளும் கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு யாசகம் கேட்டது நெஞ்சை வருடியது. சிலர் நாங்கள் ஃபலஸ்தீனிகள் என்றார்கள்.


ஃபலஸ்தீனில் இஸ்ரேலிய அரக்கர்களால் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் பிஞ்சுக் குழந்தைகள் மனக்கண் முன் வந்து போயினர். மனம் கனத்தது. இவர்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். இருப்பதைக் கொடுத்து இடத்தைக் காலி பண்ணினோம்.


ஈத்கா மைதானத்தில் ஓரளவுக்கு வெப்பம் இருந்தது. காற்று வீசாமல் கமுக்கமாக இருந்ததால் அத்தனை புத்தாடைகளும் வியர்வையில் தத்தளித்தன. அந்த அதிகாலையிலேயே வெப்பம் 35 டிகிரியைத் தொட்டிருந்தது. நல்ல வேளை. வெயில் அடிக்கவில்லை.


அந்த வெப்பத்திலும், வியர்வையிலும்  மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் போட்டோ, வீடியோ எடுப்பதை மட்டும் விடவில்லை. சிலர் எழுந்தும், பலர் அமர்ந்தும் காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் காலத்தின் மாற்றம் இது.


முன்பெல்லாம் போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்றால் இதற்கென்று கேமராவை எடுத்துக் கட்டிக்கொண்டு வரவேண்டும். இப்பொழுது ஸ்மார்ட் போன்கள் வந்தபின் கேமராவை யார் கையிலும் பார்க்க முடியவில்லை. கேமராவுக்கு அஸ்தமன காலம் வந்துவிட்டதையே இது உணர்த்தியது.


இனி பத்திரிகையாளர்கள், தொழில்முறை போட்டோகிராஃபர்கள், வீடியோகிராஃபர்களிடம் மட்டும்தான் நவீன வசதிகளைக் கொண்ட கேமராக்களை பார்க்க முடியும்.


சிறிது நேரத்தில் கொஞ்சம் காற்றும் வீசியதால் ஆசுவாசமாக இருந்தது. சரியாக 6.05 மணிக்கு தொழுகை ஆரம்பமானது. தொழுகை முடிந்ததும் குத்பா பிரசங்கம். வழக்கம் போல் அரபியில் நடப்பதால் யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாதி பேர் வெப்பம் தாளாமல் எழுந்து நின்றார்கள். கொஞ்சம் பேர் மைதானத்தை விட்டு குத்பா முடியும் முன்பே எஸ்கேப் ஆனார்கள்.


ஒரு வழியாக குத்பா முடிந்து, எம் மக்களை சந்திக்கும் ஆவலில் ஈத்கா திடலுக்கு பின்பக்கம் வந்தோம். என் நண்பர்கள், காயல்வாசிகள், கீழக்கரைவாசிகள், நெல்லை ஏர்வாடிவாசிகள் என்று எனக்கு தெரிந்த அத்தனை பேருக்கும் முடிந்தவரை ஸலாமும், பெருநாள் வாழ்த்துகளையும் சொல்லி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டேன்.


ஷார்ஜாவிலிருந்தும், துபையின் வெளிப்பகுதிகளிலிருந்தும் நண்பர்கள் அதிகமாக வரவில்லை. வெப்பம் காரணமாக இருக்கலாம்.


பின்னர் ரூம் திரும்பினோம். பாயசம், வட்டிலப்பம் தயாராக இருந்தது. அதனை ஒரு பிடி பிடித்தோம். பின்னர் ரூம் நண்பர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கலை நிகழ்ச்சியை நடத்தினோம்.


கலை நிகழ்ச்சி என்றால் பெரிதாக ஒன்றும் எண்ணிவிடாதீர்கள். ஆளுக்கொரு தெரிந்த இஸ்லாமியப் பாடலைப் பாடினோம். நன்றாக இருந்தது. அனைவரது திறமைகளும் வெளிப்பட்டன.


பின்னர் இடியாப்பம், புரோட்டா, இறைச்சி சாப்பாடு. ஒரு பிடி பிடித்தோம். பின்னர் தூக்கம், ளுஹர் தொழுகை. தொழுகைக்குப் பின் மட்டன் பிரியாணி சாப்பாடு.


பெருநாள் தினத்துக்கு இது போதுமல்லவா!No comments:

Post a Comment