Wednesday, 23 April 2014

அரசியல் புரட்சியில் ஓர் அரிச்சுவடி!


வடசென்னையில் திருவிக நகரின் குறுகிய சந்துகளில் அந்த வீர உரை கேட்கிறது. கைதேர்ந்த பேச்சு. பேச்சு அத்தனையும் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. மாய வார்த்தை ஜாலங்கள்இல்லை. மயக்கும் வாக்குறுதிகள் இல்லை. பேச்சின் வீச்சு அங்கிருக்கும் சந்துகளில் அடர்ந்து வாழும் சேரி மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

அந்தப் பேச்சு ஏற்படுத்திய மாற்றம் அவர்களின் முகங்களில் தெரிகிறது. குறுகிய சந்து ஒன்றில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அவர் கைதேர்ந்த பொருளாதார நிபுணரைப் போல பொருளாதார தாராளமயக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைப் பற்றிப் பேசுகிறார். அம்பானிகளை அச்சுறுத்துகிறார். டாட்டாக்களுக்கு எச்சரிக்கை டாட்டா காட்டுகிறார். முதலாளித்துவத்தின் கோர முகங்கள்தாம் இந்த அம்பானி வகையறாக்கள் என்று அம்புகளைப் பாய்ச்சுகிறார்.

வடசென்னை தொகுதியின் நடுத்தர வகுப்பு மக்களின், ஏழைகளின் மோசமான நிலைக்கு அம்பானி வகையறாக்கள்தான் முக்கிய காரணம் என்று புள்ளிவிவரங்களுடன் புட்டுப் புட்டு வைக்கிறார். அந்த மேடை எஸ்டிபிஐயினுடையது. அதில் பேசியவர் எஸ்டிபிஐயின் சாதாரண ஒரு பொறுப்பில் உள்ளவர்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் அமைந்திருக்கும் ராயபுரத்திற்கு அருகிலுள்ள வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் ஒற்றுமைக்கான அழைப்பு எஸ்டிபிஐ மேடையிலிருந்து எதிரொலிக்கிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல என்று அவர்கள் ஏற்கனவே பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.


அந்த அழைப்புக்கு அடுத்தபடியாக நடுத்தர வகுப்பு மக்களின் நலனுக்காகப் பேசுகிறார்கள். ஏழை எளிய மக்களின் ஏற்றத்துக்கு உழைப்போம் என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலையை இல்லாமலாக்க பாடுபடுவோம். என்கிறார்கள். இப்படி எல்லோருக்குமான கட்சியாக மேடை தோறும் முழங்குகிறார்கள்.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவியாகட்டும், சாதாரண கட்சிப் பொறுப்பாளராகட்டும், மக்கள் கூட்டம் அலை மோதும் பொதுக்கூட்டங்களாகட்டும், சிறு சந்துமுனைக் கூட்டங்களாகட்டும் – ஒலிபெருக்கியில் கேட்பது அனைத்தும் மக்களின் அன்றாட பிரச்னைகள். அவற்றுக்கான தீர்வுகள் அவர்களின் உரைகளில் அனல்களாகத் தெறிக்கின்றன.

வண்ணாரப்பேட்டையின் லாலாகுண்டா பகுதியில் எஸ்டிபிஐ பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் வழிந்தோடுகிறது. மேடையில் எஸ்டிபிஐ வடசென்னை தொகுதி வேட்பாளர் நிஜாம் முஹைதீன் விஜயகாந்தை விமர்சித்துப் பேசுகிறார்.

நாட்டு மக்களைப் பற்றி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டு ஃபாசிச பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நரேந்திர மோடிக்கு காவடி தூக்கிக் கொண்டு அலையும் விஜயகாந்தின் மேல் அம்புக் கணைகளாக வந்து விழுகின்றன நிஜாம் முஹைதீனின் சரமாரியான கேள்விகள்.

அதே போல் நெல்லை தொகுதியில் போட்டியிடும் முபாரக்கின் பேச்சுகளும் அவர்கள் மக்களுக்கு செய்த சேவைகளை சுற்றியே வருகின்றன. பேச்சில் அலங்காரங்கள் இல்லை. அகங்காரங்கள் இல்லை. ஆனால் யதார்த்தம் இருக்கிறது. ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. மக்களுக்காக உழைக்கும் எண்ணம் தென்படுகிறது.

இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் டாக்டர் நூர் ஜியாவுதீன். இவர் ஒரு சித்த மருத்துவர். மக்கள் அனைவரையும் சந்திக்கிறார். இவரும், இவரது சகபாடிகளும், குறிப்பாக பெண்களும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதைக் கண்டு மற்ற கட்சியினர் கதி கலங்கி நிற்கிறார்கள்.

போட்டியிடும் மூன்று தொகுதிகளிலுமே அவர்களின் மகளிர் அணியினர் வெயிலென்றும் பாராமல் வீடு வீடாக, குடிசை குடிசையாக சென்று ஓட்டு கேட்டது அவர்களுக்கு பெரும் சாதகமாக அமைந்திருக்கிறது. ஆரம்பித்து 5 வருடங்களே ஆனாலும் தாங்கள் மக்களுக்காக செய்த சேவைகளை சொல்லி தைரியமாக ஒட்டு கேட்கிறார்கள். இந்த தைரியம் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இருக்கிறதா என்று நெஞ்சு நிமிர்த்தி கேட்கிறார் நெல்லை முபாரக்.

"எங்கள் கட்சிக்கு இங்கே 2009 முதல் நல்ல கட்டமைப்பு இருக்கிறது. வெறும் தேர்தலுக்காக மட்டும் நாங்கள் இங்கே  வரவில்லை. இங்குள்ள மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று twocircles என்ற ஆங்கில இணையதள ஊடக செய்தியாளரிடம் தெம்போடு கூறுகிறார் வடசென்னை வேட்பாளர் நிஜாம் மொஹைதீன்.

அதே மூச்சில் அவர் இன்னொன்றையும் சொல்கிறார்: "நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடவில்லை. எங்கள் கட்சி முஸ்லிம் கட்சியல்ல. ஒடுக்கப்பட்ட அதனை மக்களுக்கும் உள்ள கட்சிதான் எஸ்டிபிஐ. நான் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன். நல்ல சாலைகள் அமைத்திடவும், அனைவருக்கும் நல்ல கல்வி கிடைத்திடவும், சுத்தம், சுகாதாரம் கிடைத்திடவும் நாங்கள் பாடுபடுகிறோம்."

இவர்களின் துடிப்பில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்திய அரசியலில் இந்தக் கட்சி பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

MSAH

No comments:

Post a Comment